"*எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே*"
கோயிலும், சினிமா தியேட்டரும் அருகருகே உள்ளன.
சாயங்காலம் 6.30க்கு கோவிலில் திருப்பலி, தியேட்டரில் படம்.
சாயங்காலம் 5.45 மணிக்கு மக்கள் ரோடு வழியே சாரை சாரையாக நடந்து போகின்றனர்.
திருப்பலிக்கு போகிறவர்களும் சினிமாவிற்கு போகின்ற அவர்களும் கலந்து ரோடு வழியாக நடந்தே செல்கின்றனர்.
அவர்களுடைய நடையை
வைத்தே யார் எங்கே போகின்றார்கள் என்பதை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
வேகமாக, ஓட்டமும் நடையுமாகப் போகின்றவர்கள் சினிமாவுக்குப் போகின்றனர்.
சாதாரணமாகப் போகின்றவர்கள் திருப்பலிக்குப்
போகின்றனர்.
முழுப் படத்தையும் பார்த்து விட வேண்டுமென்று படப் பிரியர்களிடம் இருக்கும் ஆவல்,
முழுத் திருப்பலியிலும் கலந்து கொள்ள வேண்டிய
நம்மவரிடம் இல்லை.
உலகியல் காரியங்களில் உலகோருக்கு இருக்கும் ஆர்வம்
ஆன்மீக காரியங்களில் ஆன்மீக வாதிகளிடம் இல்லை.
ஞாயிறு திருப்பலி காணாமல் வியாபாரம் செய்யச் சென்றால் ஒரு இலட்சம் இலாபம் வரும் என்று யாராவது சொன்னால்,
திருப்பலியை மட்டுமல்ல, ஆண்டவரையே விட்டுவிட ரெடியாக இருக்கும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.
கொள்கை அளவில் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.
இயேசுவை என்று வாழ்கிறோமோ,
அன்றுதான் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட தகுதி உள்ளவர்கள் ஆவோம்.
உண்மையான விசுவாசி சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்தவனாக
வாழ்வான்.
உலகத்தவர்கள் வாயளவில், யாரைத் தலைவராத ஏற்றுக் கொண்டாலும்,
சிந்தனையிலும், செயலிலும் தங்களைத் தாங்களே தலைவராக ஏற்றுக் கொண்டு,
தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாயளவுத் தலைவர்கள் தலையில் அணியும் குல்லா மாதிரி.
அப்பப்போ மாற்றிக் கொள்வார்கள்.
தங்களை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
நாம் கிறிஸ்துவையே நமது அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும்.
அப்படியானால் நாம் வாழவேண்டியது கிறிஸ்துவுக்காக மட்டும் தான், இம்மியளவுகூட நமக்காக அல்ல.
நமது வாழ்க்கை அனுபவங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கை அனுபவங்களாக இருக்க வேண்டும்.
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் கிறிஸ்துவாக வாழ வேண்டும்.
கிறிஸ்து நமது அரசர்.
ஆனால் அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று.
இன்றைய ஜனநாயகத்திலும்கூட
அரசு என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன?
சட்டங்களை இயற்ற ஒரு சட்டமன்றம், (Legislature)
அவற்றை அமுல்படுத்த ஒரு அரசு இயந்திரம், (Executive)
சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்க நீதிமன்றம். (Judiciary)
உலக அரசில் முக்கியத்துவம் பெறுவது சட்டம், ஒழுங்கு.
ஆனால் இயேசுவின் இறையரசில் முக்கியத்துவம் பெறுவது அன்பு, அன்பு மட்டுமே.
மீட்பு அன்பிற்குக் கிடைக்கும் பரிசு.
இயேசுவின் அரசில் அன்பு மட்டும்தான் சட்டம்.
இயேசுவின் அன்பு மன்னிக்கும்,
தீர்ப்பிடாது.
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3:17)
"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்." (அரு. 12:47)
இயேசுவின் அரசில் வாழும் நாம் அன்பு செய்வதிலும், மன்னிப்பதிலும் இயேசுவாக வாழ வேண்டும்.
இயேசு இறைவன், அளவில்லாமல் அன்பு செய்பவர்.
நம்மால் அவரைப்போல் அளவில்லாமல் அன்பு செய்ய முடியாது.
ஆனால் நமது அன்பிற்கும், மன்னிப்புக்கும் நாம் எல்கை போடாமல் வாழலாமே.
நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் அன்பின் அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டும்.
தேவைப்படுவோருக்கு உதவி செய்வது,
கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுவது,
வெற்றி பெற்றவரைப் பாராட்டுவது,
தவறு செய்பவர்களை மன்னிப்பது
போன்றவை நமது வாழ்வின் அனுபவங்களாக இருக்கவேண்டும்.
அன்பே உருவான நமது இயேசு ஆண்டவரின் வாழ்நாள் அனுபவங்கள் எல்லாம் அன்பின் அனுபவங்களே.
அவை நமது வாழ்விலும் நிகழும் போது நாம் இயேசுவாக வாழ்கிறோம் என்று மகிழ்ச்சியோடு கூறலாம்.
இவையெல்லாம் நமது விண்ணக பயணத்தின் போது நமக்கு ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள்.
இத்தகைய அனுபவங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது விண்ணக வாழ்வின் நித்திய அனுபவம் பேரின்ப மயமாக இருக்கும்.
இவ்வுலக அரசர்கள்,
ஜனநாயகத்தில் ஆள்பவர்கள்,
நம்மை நேரடியாக ஆள்வதில்லை.
தாங்கள் இயற்றும் சட்டங்களின் மூலமாக ஆள்கின்றார்கள்.
உண்மையில் தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் யார் என்று நம்மை ஆள்பவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் ஆளக்கூடிய நாட்டில் நாம் வாழ்வதால்தான் நம்மை ஆள்வதாகக் கூறுகிறோம்.
ஆனால் நம்மை நேரடியாக அறிந்து அவர்கள் ஆள்வது இல்லை.
ஆனால் நமது அரசர் இயேசு சட்டங்களின் மூலம் நம்மை ஆள்வதில்லை.
தானே நேரடியாக நம்மை ஆள்கிறார்.
ஆன்மீக வாழ்வின் சட்டம் அன்பு ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
அதே சமயத்தில் அந்த அன்பு இயேசுதான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
அதாவது இயேசு என்னும் அன்பு நமது வாழ்வில் சட்டம்.
ஆகவேதான் இயேசு நம்மை நேரடியாக ஆள்வதாக கூறுகிறோம்.
அரண்மனையில் தனியாக அமர்ந்து கொண்டு அல்ல,
நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அமர்ந்து கொண்டு,
நம்மில் வாழ்வதன் மூலம் நம்மை ஆள்கிறார்.
அவர் நம்மில் வாழ்வதும், ஆள்வதும் ஒரே செயல்தான்.
அவர்தான் நமது வாழ்க்கை.
Jesus is our life.
அவர்தான் நமது வாழ்க்கைப் பாதை.
Jesus is our way.
அவர்தான் நமக்கு எல்லாம்.
Jesus is our all.
"எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே"
என்ற பாடல் வரிகள் நமது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இயேசு அரசரை உலக அரசர்களோடு ஒப்பிட முடியாது.
அவர் தனித்துவமானவர்.
He is unique.
உலக அரசர்கள் வேறு, அவர்கள் ஆளும் நாடு வேறு.
அவர்கள் ஆள்வதற்காக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.
ஆனால் இயேசு தான் ஆளவேண்டிய குடிமக்களை அவரே படைத்தார்.
அவர்களை முழுச் சுதந்தரத்தோடு படைத்தார்.
அதாவது, அவரை அரசராக ஏற்றுக் கொள்வதற்கான முழுச்சுதந்தரத்தையும் அவரால் படைக்கப்பட்ட மக்களிடமே விட்டு விட்டார்.
சர்வவல்லவரான கடவுளையே நாம் நம்மை ஆளும் அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
உலக அரசர்கள் தங்களால்
கைப்பற்றப்பட்ட மக்களை அடக்கி ஆள்கின்றார்கள்.
இயேசு அரசரோ நம்மை அவரது சொந்த சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவரை அரசராக ஏற்றுக்கொண்ட நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நாம் அதிகாரத்தினால் இணைக்கப்பட்டவர்கள் அல்ல, அன்பினால் இணைக்கப் பட்டவர்கள்.
சர்வ வல்லவராகிய நம் அரசர் நம்மோடு மட்டுமல்ல , நாமாகவே வாழ்கிறார்.
நாமாக வாழ்வதற்காக கடவுளாகிய அவர் நம்மைப் போல் மனிதனாகப் பிறந்தது மட்டுமல்ல,
தன்னையே நமக்கு உணவாகத் தந்து, நம்மோடு ஒன்றித்து வாழ்கிறார்.
அவரையே நமது ஆன்மீக உணவாக நாம் உண்பதால்
அவரது உணர்வுகளும், நமது உணர்வுகளும் ஒன்றித்து விட்டன.
அவரையே உணவாக உட்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய உணர்வுகளோடுதான் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இவ்வுணர்வு வெளிப்பட வேண்டும்.
சுயநலம் கருதாமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
இயேசுவைப் போலவே நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment