Saturday, November 7, 2020

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்."(லூக்.16:8)

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்."
(லூக்.16:8)
                       ********

ஒளியின் மக்கள் இறைவனுக்காக வாழ்பவர்கள்.

இவ்வுலகின் மக்கள் தங்களுக்காக வாழ்பவர்கள்.


அநீத கண்காணிப்பாளன் உவமையில் ஆண்டவர் சொல்கிறார்,

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள்

மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்."

ஆண்டவர் அநீத கண்காணிப்பாளனைப் புகழவில்லை.


இவ்வுலகில் தங்களுக்காக வாழ்பவர்களிடம் உள்ள விவேகம் இறைவனுக்காக வாழ்பவர்களிடம் இல்லையே என்று வருந்துகிறார்.

உலகம் அழியக் கூடியது. உலகில் உள்ள எல்லா பொருட்களும் அழியக்கூடியவை.


இவ்வுலகோர்

 அழியக்கூடிய உலகப் பொருட்களை ஈட்டுவதற்காக 

அழியாத தங்கள் ஆன்மாவைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அதற்காகத் தங்கள் திறமைகள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்டவருக்காக வாழ்பவர்கள் தங்கள கிறிஸ்தவ வாழ்விற்காக தங்கள் திறமைகளில் எதையும் பயன்படுத்துவதுமில்லை

  எதையும் இழக்கவும் தயாராக இல்லை.
 
 தங்களுக்காக வாழக்கூடியவர்களிடம் காணப்படும் விவேகம், உற்சாகம், சாமர்த்தியம் ஆகியவை 

இறைவனுக்காக வாழ்பவர்களிடம்  காணப்படுவது இல்லை.

ஏன்?

அழியக்கூடிய உலக சிற்றின்பத்திற்காக வாழக்கூடிய
மக்களிடம் உள்ள ஆர்வமும் உற்சாகமும் 

ஏன்

 அழியாத நித்திய  பேரின்பத்திற்காக வாழக்கூடிய மக்களிடம்  இல்லை?

உலகம் நமது கண்ணின் முன் இருக்கிறது.

 உலக இன்பங்களை நம்முடைய உடல் நேரடியாக அனுபவிக்க முடிகிறது.

 நாம் ஈட்டும் பொருள்   நம் கையில் இருக்கிறது. 

அதை இப்போதே அனுபவிக்க முடிகிறது.

ஆனால் நாம் செல்லவிருக்கும் நித்திய பேரின்ப வீடு தற்போது நமது விசுவாசத்தில் மட்டுமே இருக்கிறது. 

அதன் பேரின்பத்தை நாம் மரணம் அடைந்த பின்பே அனுபவிக்க முடியும். 

நாம் நமது ஜப தப வாழ்வால் ஈட்டும்  இறை அருள் நமது இதயத்தில் இருக்கிறது, கையில் இல்லை.

 உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது.


நாளை கிடைக்கவிருக்கும் பலாப் பழத்தை விட 

இப்போது கையில் இருக்கும் நெல்லிக்கனியே

 நமக்கு சிறந்ததாகத்  தெரிகிறது.

ஆனால் நன்கு சிந்தித்து உணர்ந்தால் உண்மை புலப்படும்.

நம் கண்முன் இருக்கும் உலகம் ஒரு நாள் காணாமல் போகும்.

நாம் அவ்வப்போது அனுபவிக்கும் சிற்றின்பங்கள் அதுபவித்து முடிந்தவுடன் இல்லாமல் போகும்.

கையில் இருக்கும் பொருள் காணாமல் போக வெகுநாள் ஆகாது,


இப்போதே அனுபவிக்கும் பொருள் எப்போதும் நம்மோடு தங்காது.


ஆனால் நமது விசுவாசத்தில் மட்டும் இருக்கும் பேரின்ப வீட்டிற்கு நாம் ஒரு நாள் உறுதியாக செல்வோம்.

சென்ற பின்  அங்கேயே நித்தியமாக தங்குவோம்.

விசுவாசத்தால் ஈட்டிய நித்திய வீடு என்றென்றும் நமதாகவே இருக்கும்.

மரணம் ஒரே ஒரு வினாடி தான், ஆனால், அதன்பின் நாம் அனுபவிக்க இருக்கும் பேரின்பம் நித்தியமானது.

இறையருளை கண்ணால் பார்க்க முடியாது.

 ஆனால் அதுதான் நம்மை நித்திய பேரின்ப வீட்டிற்கு அழைத்துச் செல்லும்.


கையில் இருக்கும் ஒரு நெல்லி கனிக்காக 

கணக்கற்ற சுளைகள் அடங்கிய பலா பழத்தை இழக்க நினைப்பது அறிவீனம்.


உலகப்  பொருளை ஈட்டவும்   கஷ்டப்படத்தான் வேண்டும்.

அதே கஷ்டத்தை நித்திய பேரின்பத்தை ஈட்டுவதற்காகப் படலாமே!

வியாபாரம் செய்து பணம் ஈட்டுவதற்காக பயணம் செய்பவர்கள் எத்தனை இரவுகளை தூக்கம் இல்லாமல்  செலவழிக்கிறார்கள்!

எத்தனை நாட்கள் ஒழுங்காக சாப்பிடாமல் சுற்றுகிறார்கள்!

உடல் நலத்தையும் கவனிக்காமல் பணம் ஒன்றையே குறியாக வைத்து உழைக்கிறார்கள்!

ஆனால் நித்திய பேரின்பத்திற் காக வாழும் நம்மால் திருப்பலிக்கு முன் ஒரு வேளை சாப்பாட்டைத்  தியாகம் செய்யவே கஷ்டமாக இருக்கிறது!


முன்பெல்லாம் நடுச்சாமம் துவக்கி நன்மை  வாங்கு மட்டும் ஒன்றும் சாப்பிடாமலும் குடியாமலும் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கை  அந்தக்கால மக்கள் ஒழுங்காய் கடைபிடித்து வந்தார்கள்.

இப்போ சாப்பிடாமல் இருக்க வேண்டியது ஒரு மணி நேரம்தான்.

அதுவும் அநேகருக்கு பெரும் கஷ்டமாக தெரிகிறது.

காபியை குடித்துக்கொண்டே பூசைக்கு வரும் ஆட்களும் இருக்கிறார்கள்.

திருப்பலியின் போது சுவாமியார் பிரசங்கத்தை கொஞ்சம் நீட்டி விட்டால் கூட சிலரால் தாங்க முடியவில்லை.

ஆனால் ரேஷன் கடையில் இரண்டு கிலோ அரிசி வாங்க இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருப்பார்கள்!

ஒரு வேலை வாங்குவதற்காக இலட்சக்கணக்காய் வட்டிக்குக் கடன் வாங்கி லஞ்சமாகக் கொடுப்பார்கள்.

ஆனால் ஒரு ஏழைக்கு உதவி செய்ய 100 ரூபாய் கொடுக்கத்  தயங்குவார்கள். 

லஞ்சம் கொடுத்தால் இவ்வுலகில் வேலை மட்டும் கிடைக்கும்.

 ஆனால் ஏழைக்கு உதவும்போது நாம் இயேசுவுக்கு உதவுகிறோம்.

 அதற்காக அவர் தரும் சன்மானம் நித்திய பேரின்பம்.

கஷ்டப்படாமல் வாழமுடியாது.

 படும் கஷ்டத்தை ஆண்டவருக்காகப் படுவோம்.

ஆண்டவருக்காகப் படும் கஷ்டம் நித்திய பேரின்பமாக மாறும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment