*இந்த ஏழைக்கைம்பெண் மற்றெல்லாரையும்விட அதிகம் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
(லூக்.21:3)
பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் திறமையை அவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்.
அவர்களது உண்மையான திறமை நமக்குத் தெரியாது.
சமூகத்தில் ஒருவருடைய மதிப்பை அவருடைய வருடாந்திர வருமானத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம்.
உண்மையான குணத்தை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஆனால் உண்மையான குணம் உள்ளத்தை சார்ந்திருப்பதாலும்,
உள்ளத்தை நம்மால் அறிய முடியாததாலும் நம்மால் உண்மையான மதிப்பீடு செய்ய முடியாது.
அரசியலில் ஒருவருடைய செல்வாக்கை தேர்தலின்போது அவர் பெரும் ஓட்டுக்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்.
இத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் தவறானவை என்று நமக்கும் தெரியும்.
தெரிந்தும் அதே தவறைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இதே மதிப்பீட்டு முறையை ஆன்மிகத்திலும் நாம் பயன்படுத்துவதுதான் கவலையை அளிக்கிறது.
ஒரு திருத்தலத்தின் பெருமையை அங்கு திருவிழாவிற்கு வரும் ஆட்களின் கூட்டம், பிரியும் காணிக்கை இவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம்.
வந்தவர்களில் எத்தனை பேர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, ஆன்மாவை தூய்மை செய்து, ஆன்மீக பலன் அடைந்தார்கள் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
ஒருவர் கோவில் காரியங்களுக்காக கொடுக்கும் நன்கொடை அளவை வைத்து சபையில் அவருடைய பெருமையை மதிப்பீடு செய்கிறோம்.
அதிகமான தொகையை நன்கொடையை கொடுப்பவர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்படும் என்று சொல்லும்போது
நாம் நமது பெருமையை காட்டிக் கொள்வதற்காகவே அதிகமான தொகையை நன்கொடையாக கொடுக்கிறோம்.
இதுவும் தவறாக மதிப்பீடு தான்.
நமது ஊர் திருவிழாவின் சிறப்பை
பிரிக்கப்படும் வரி,
கோவிலில் செய்யப்படும் அலங்காரம்,
இழுக்கப்படும் தேர்,
போடப்படும் வான வேடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம்.
பணத்தின் அடிப்படையில் செய்யப்படும் எந்த மதிப்பீடும் தவறானதே.
கோவிலில் பணக்காரர் போட்ட காணிக்கைகளை விட,
ஏழைக் கைம்பெண் போட்ட இரண்டு செப்புக்காசு காணிக்கையே அதிகமானது என்று இயேசு சொல்லுகிறார்.
போடப்படும் காணிக்கையின் சிறப்பு தொகையின் அளவில் அல்ல, மனதின் தன்மையில் தான் அடங்கியிருக்கிறது.
மனதில் உள்ள இறை அன்பில் விளைவாக, உள்ளத் தூய்மையோடு போடப்படும் காணிக்கை
குறைந்த தொகையாக இருந்தாலும்,
அதுதான் ஆண்டவருக்கு மிக பிடித்தமான காணிக்கை.
உண்மையில் காணிக்க என்பது நமது மனம்தான்.
மனம்தான் சிந்தனைகளின் பிறப்பிடம்.
சிந்தனைகள் தான் நமது சொற்களாகவும், செயல்களாகவும் உரு எடுக்கின்றன.
ஆகவே நாம் மனதை காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும்போது,
நமது சிந்தனை சொல் செயல் யாவற்றையும்,
அதாவது, நம்மை முழுவதுமாக ஒப்புக் கொடுக்கிறோம்.
பணம் என்பது வெளி அடையாளம்தான்.
உலகியல் வளர்ச்சியை பணத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது உலகம்.
அது போல் ஆன்மீக வளர்ச்சியை பணத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாது.
ஆன்மீக வளர்ச்சி நமது கண்ணால் பார்க்க முடியாத உள்ளத்திற்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தின் அளவைப் பொறுத்தது.
இறைவனுக்கும் உள்ளத்திற்கும் மட்டுமே தெரியக் கூடியது,
வெளி உலகிற்கு தெரியாதது.
ஒருவன் பணக்காரனா இல்லையா என்பதை அவனிடம் உள்ள சொத்தின் அளவை வைத்து கண்டு கொள்ளலாம்.
ஆனால் நல்லவனா இல்லையா என்பதை வெளி
அடையாளங்களால் கண்டுபிடிக்க முடியாது.
சாத்தான் கூட சம்மனசு வேஷம் போடும்.
மனதில் கெட்டதை வைத்துக்கொண்டு நல்லவன் போல் வேஷம் போடும் வேடதாரிகள் உலகில் உள்ளனர்.
மறைநூல் அறிஞரையும்,, பரிசேயரையும் வெளிவேடக்காரர்கள் என்று இயேசுவே அழைத்திருக்கிறார்.
( மத். 23:13)
ஆகவே யாரையும்
நல்லவரா, கெட்டவரா,
நல்லவரென்றால் எவ்வளவு நல்லவர்
என்றெல்லாம் மதிப்பீடு செய்ய மனிதரால் முடியாது.
ஆகவேதான் யாரையும் பற்றி தீர்ப்பு சொல்ல நமக்கு இறைவன் உரிமை அளிக்க வில்லை.
God has not given us the right to judge anybody.
நாம் கோவிலில் இயேசு நின்ற இடத்தில் நின்றிருந்தால், ஏழை கைம்பெண் இரண்டு செப்புக் காசு காணிக்கையாக போடுவதை பார்த்து என்ன நினைத்திருப்போம்?
போடப்படும் காணிக்கையின் அளவை வைத்து அவளை மதிப்பீடு செய்திருப்போம்.
அதிகம் காணிக்கை போட்டவர்களை தாராள மனது உள்ளவர்கள் என்றும்,
குறைவாகப் போட்ட பெண்ணுக்கு தாராள மனது இல்லை என்றும் தீர்மானித்திருப்போம்.
ஆனால் இயேசு காணிக்கையை போட்டவர்களின் நிலையிலிருந்து காணிக்கையைப் பார்க்கிறார்.
அவருக்கு போட்டவர்களின் உண்மை நிலையும் தெரியும், உள்ளத்தின் நிலையும் தெரியும்.
நமக்கு வெளியே நடப்பது மட்டும்தான் தெரியும்.
மற்றவர்களின் உண்மையான நிலையை பற்றி நம்மால் அறிய இயலாது.
ஆகவே அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்வதை விட்டுவிட்டு நம்மை நாமே மதிப்பீடு செய்வோம்.
நமது சிந்தனைகளும், சொற்களும் ,செயல்களும் ஒன்றோடு ஒன்று ஒத்திருக்கின்றனவா என்று சுயபரிசோதனை செய்வோம்.
நம்மை நாமே அறிந்து நம்மை திருத்திக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment