Wednesday, November 25, 2020

*இனிமையான வேலை.*(தொடர்ச்சி)

*இனிமையான வேலை.*
(தொடர்ச்சி)


"ஹலோ! சார். வணக்கம்."

"வணக்கம். வாங்க. உட்காருங்க."

"உலகிலேயே மிக இனிமையான வேலை எது?

 என்று நீங்களே கேள்வி  கேட்டுக்கொண்டு 

"நேசிப்பது, அன்பு செய்வது."

நீங்களே பதிலும் சொல்லி இருக்கிறீர்கள்.

 எப்போதாவது யாரையாவது நேசித்திருக்கிறீர்களா?"

"ஏன் இந்த சந்தேகம்?"

"யாரையாவது நேசித்திருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்.

நான் ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவளை திருமணம் செய்ய நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்."


"ஹலோ! நீங்கள் பட்டபாடு உங்களுக்குத்தான் தெரியும் இதில் அதிசயம் என்ன இருக்கிறது?"


"நான் எனது பெற்றோரை மிகவும் நேசிக்கிறேன்.

 இப்பொழுது என்னுடைய மனைவியிடமிருந்து அவர்களை காப்பாற்ற 

நான் படும் பாடு எனக்கு மட்டுமே தெரியும்!"

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

"நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. 

நேசிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை 

நேசிப்பவர்களால்தான்   புரிந்து கொள்ள முடியும்."

"நேசிப்பதால் கஷ்டங்கள் வராது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே!

 நேசிப்பது எளியது, இனிமையானது என்று மட்டும் தானே சொன்னேன்."

"கஷ்டங்கள் எப்படி சார் இனிமையாக இருக்க முடியும்?"


"ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்" என்ற சொற்றொடரை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"வள்ளுவர் சொன்னது."

"பொருள்?"

"முழுக் குரளுக்கும் பொருள் சொல்கிறேன்.

தாய் தனது குழந்தையைப் பெறும்போது பெற்ற இன்பத்தை விட 

அவனை சான்றோன் என்று மற்றவர்கள் சொல்லும்போது அதிக இன்பம் அடைவாள்." 

"முதல் பாதியைச் சொல்லுங்கள்."

"தாய் தனது குழந்தையை பெறும்போது பெற்ற இன்பத்தை விட "

"பேருகால வேதனையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"எனது  மனைவி பட்ட வேதனையை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்."

"வள்ளுவர் என்ன சொன்னார்?"

"தாய் தனது குழந்தையை பெறும்போது பெற்ற இன்பத்தை விட."

"நீங்கள் உங்கள் மனைவி குழந்தை பெறும்போது வேதனைப் பட்டதாக சொல்கிறீர்கள்.

 ஆனால் வள்ளுவர் குழந்தையை பெறும்போது தாய் இன்பம்  அடைவதாக சொல்கிறார். வள்ளுவர் சொல்வது பொய்யா?"

"வள்ளுவர் கூறுவதும் உண்மை. நான் கூறுவதும் உண்மை."

"அப்படியானால் வேதனையில் இன்பம் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறீர்களா?"

"என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"கடவுள் தனது அளவற்ற அன்பின் காரணமாக நம்மை படைத்தார்.

தன்னை அன்பு செய்யவும்,

 அதன் பயனாக தன்னோடு நித்திய பேரின்பத்தில் பங்கு கொள்ளவும் நம்மை படைத்தார்.

ஆனால் நாம் அவரை மறந்து அவருக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக அவரே மனிதனாக பிறந்து, பாடுகள் பட்டு, நமக்காக மரித்து நமது பாவத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்."

"நானும் அதைத்தானே சொல்கிறேன். 

அவர் பட்ட பாடுகளுக்கும், வேதனைகளுக்கும் ,
அவரது மரணத்துக்கும் காரணமானது அவருடைய அன்பு தானே!

அன்பு செய்கிறவர்கள் படும்பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்."

" சொல்லி முடிக்கும் முன் இடையில் பாயக் கூடாது.

இயேசு துன்பங்களை அவராக ஏற்றுக் கொண்டாரா?

 அல்லது வேறு வழியில்லாமல் பட்டாரா?"

"அவராக ஏற்றுக் கொண்டார்."

"எதற்காக  அவராக ஏற்றுக் கொண்டார்?"

"நமக்கு நித்திய பேரின்பத்தை பெற்றுத்தர."

"உங்கள்  மனைவி ஏன் பேறுகால வேதனையை ஏற்றுக்கொண்டார்கள்?"

".குழந்தை என்ற இன்பத்தை பெற."

"அதாவது இன்பத்தைப் பெற வேதனை.

அதாவது வேதனை இல்லாவிட்டால் இன்பம் இல்லை.

அதாவது வேதனைப்  பட்டால் இன்பம் கிடைக்கும்.

அதாவது வேதனை தான் இன்பம்.


அதாவது அன்பின் நிமித்தம் படும் வேதனை தான் இன்பம்.

Very simple logic."

".இப்போ புரிகிறது."


"என்ன புரிகிறது?"

"இறைவன் மீது கொண்டுள்ள அன்பிற்காக நாம் என்ன துன்பப் பட்டாலும் அது இன்பம் தான்."

"Correct. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இறை அன்பு இருந்தால் 

நமது அன்பை செயல்படுத்தும்போது 

என்ன துன்பங்கள் வந்தாலும்

 அவை நமக்கு நித்திய பேரின்பத்தை ஈட்டித் தருவதால்

 அவற்றை ஆசீர்வாதமாக மகிழ்ச்சியோடு  ஏற்றுக் கொள்வோம்.

It is a blessing to suffer for the love of God."

"உண்மைதான்.  அன்பின் நிமித்தம் நாம் படும் கஷ்டங்கள் கஷ்டங்களாகவே தெரியாது.

எனது மனைவி சுத்தமான மஞ்சள் பாறைக் கருவாட்டிற்கு ஆசைப்பட்டாள்.

அதற்காக 25 + 25 கி.மீ சைக்கிளிலேயே போய் வாங்கிவந்தேன்."

"Very good. இயேசுவின் மீது கொண்ட அன்பின் காரணமாக எத்தனை மறைசாட்சிகள் மகிழ்ச்சியுடன் தங்களது இரத்தத்தைச் சிந்தி உயிரையும் கொடுத்திருக்கிறார்கள்! 

அன்பு இனிமையானது. 

அதன் இனிமையை சுவைப்பதற்காக 

எவ்வளவு கசப்பான அனுபவங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்கள்தான்

 இறைவனை உண்மையாகவே அன்பு செய்கிறவர்கள்."

"ஒரு சிறு சந்தேகம்.

 பணத்தை நேசிப்பவர்களும் அதை ஈட்டுவதற்காக என்ன சங்கடம் வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்களே.

 பணம் வந்ததும் அதை எண்ணி பார்ப்பதிலேயே இன்பம் காண்கிறார்களே.


அவர்கள் வாழும் வசதியான வாழ்க்கையிலும் இன்பம் காண்கிறார்களே.

 அவர்களைப் பொறுத்தமட்டிலும் கூட வேதனை என்பது இன்பம் தானே."

"உண்மைதான். 

பாலைவனத்தில் நடப்பவன் தண்ணீரைக் கண்டு மகிழ்வதற்கும்,

 கானல் நீரைக் கண்டு மகிழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தண்ணீர் உண்மையான நீர்.
 தாகம் தணிக்க உதவும்.

கானல் நீர் தண்ணீரைப் போல் தோன்றும், ஆனால் தண்ணீர் அல்ல.

ஆன்மீக இன்பம்தான் உண்மையான இன்பம். ஏனெனில் அது நிரந்தரமானது.

உலக இன்பம் நிரந்தரமானது அல்ல. உலக சிற்றின்பத்தின்   எதிர்கால விளைவு நிரந்தர துன்பம்.

  ஆன்மீகத்தில் பேரின்பத்தை அடைவதற்காக இவ்வுலகில் துன்பப்படுகிறோம்.

ஆனால் உலகியலில் நித்திய பேரிடரை அடைவதற்காக இவ்வுலகில் சிற்றின்பத்தை அனுபவிக்கிறார்கள்.


நிரந்தரமில்லாத துன்பத்திலிருந்து நிரந்தரமான பேரின்பம் பிறப்பது ஆன்மீகம்.


நிரந்தரமில்லாத சிற்றின்பத்தில் இருந்து நிரந்தரமான பெரும் துன்பம் பிறப்பது லௌகீகம்.


முடிவில்லாத காலம்  இன்பம் அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் துன்பப் படலாம்.

 ஆனால்

முடிவில்லாத காலம்  துன்பம் அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் இன்பம் அனுபவித்து என்ன பயன்?"

"அன்பு செயல் வடிவம் பெற வேண்டும் என்றால் அது மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தானே முடியும்?

கையில் பணம் இல்லாதவர்களை விட நிறைய பணம் வைத்திருப்பவர்கள் தானே பிறருக்கு தாராளமாக உதவி செய்ய முடியும்.


ஒரு கோவில் கட்டுவதாக இருந்தால் கூட பணம் வைத்திருப்பவர்கள் தானே நிறைய கொடுக்கிறார்கள்.

முழுமையான ஆன்மீகவாதிகள் பணத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்?"

"கடவுள் அளவைப் (Quantity) பார்ப்பதில்லை.

தரத்தைப் (Quality) பார்க்கிறார்.

உலகப் பார்வையில் அதிகமாகக் கொடுப்போர் பாராட்டுக்கு உரியவர்கள்.


ஆனால் கடவுள் பார்வையில் உதவி செய்பவர்களிடம் உள்ள அன்பின் அளவுதான் உதவியின் தரத்தைத் தீர்மானிக்கிறது.

நம்மால் இயன்ற அளவு மிகுந்த அன்போடு செய்யும் உதவிதான் இறைவனின் பாராட்டுக்கு உரியது.

அள்ளி அள்ளி காணிக்கை போட்ட பணக்காரர்களைப் பாராட்டாமல்,

 பக்தி மிகுதியால்    இரண்டு செப்பு காசு காணிக்கை போட்ட  ஏழை விதவையைத்தான் இயேசு பாராட்டினார்."

"இயேசு நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய *அன்புச் செயல்களை* தான்.

அன்புச் செயல்களால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரமுடியும்.

ஏனெனில் அன்பு இனியது.

அன்பிற்காகப் படும் பாடுகளும் இனிமையானவையே."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment