******** ******** ******** ********
அற்ப விசுவாசத்திற்கு பேர் போனவர்கள் பன்னிரண்டு பேர் சொல்லுங்க என்று கேட்டால்
கண்ணை மூடிக்கொண்டு 12 அப்போஸ்தலர்கள் பெயர்களையும் சொல்லிவிடலாம்!
கடலில் வீசிய புயலைக் கண்டு பயந்த அப்போஸ்தலர்கள் ஐ நோக்கி இயேசு:
'ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"
என்று இயேசுவே கேட்டார்.
அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே,
இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
அவர் செய்த புதுமையை பார்த்த பின்னும்,
"இவர் யாராயிருக்கலாம்?"
என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அளவிற்கு அவர்களுடைய விசுவாசத்தின் ஆழம் இருந்தது!
தான் படவிருக்கும் பாடுகளைப் பற்றியும்,
தன்னுடைய மரணத்தைப் பற்றியும்,
மூன்றாம் நாளில் உயிர்க்க போவது பற்றியும்
பல முறை அவர்களுக்கு ஆண்டவர் சொல்லி இருந்தாலும்
இயேசுவின் பாடுகளின் போது அப்போஸ்தலர்கள் தங்கள் விசுவாசத்தை பயன்படுத்தியதாக தெரியவில்லை.
யூதாஸ் அவரை காட்டிக் கொடுத்தான்.
இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.
அருளப்பர் சிலுவை அடியில் மட்டும் நின்றார்.
மற்றவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை!
அவர் உயிர்த்த பின்பும் அதை விசுவசிக்க யாரும் தயாராக இருந்ததாக தெரியவில்லை.
மதலேன்மரியாளும், அருளம்மாளும், இயாகப்பரின் தாய் மரியாளும் இயேசு உயிர்த்த செய்தியை அப்போஸ்தலர்களிடம் சொன்ன போது
பெண்கள் கூறியது வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் அவர்கள் நம்பவில்லை!
(என்னே விசுவாசம்!)
இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார்.
இயேசு உயிர்த்ததைக் கேள்விப் பட்ட பின்பும் ஏன் கல்லறைக்கு ஓடவேண்டும்.
விசுவாசமின்மை!
இயேசு, அவர்கள் நடுவே தோன்றி,
"உங்களுக்குச் சமாதானம்" என்றபோதும்
அவர்கள் திடுக்கிட்டு, அச்சம்கொண்டு
ஏதோ ஆவியைக் காண்பதாக எண்ணினர்!
இயேசு தன்னை அறிமுகப்படுத்திய பின்னும்.
அவர்கள் மகிழ்ச்சி மிகுதியால் இன்னும் நம்பாமல் வியந்துகொண்டிருந்தார்கள்!
மற்றச் சீடர்கள் தோமையாரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு
அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து,
ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, :
அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய
விசுவசிக்கமாட்டேன்" என்றார்.
இது தோமையாரின் விசுவாசம்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் கற்ற பின்
அவர்களுடைய கல்வி நிலை இப்படி இருந்தால்
.
அவர்களை fail mark போட்டு வீட்டுக்கு அனுப்பி இருப்போம்.
ஆனால் இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களை அப்படி செய்யவில்லை.
தான் விண்ணகம் எய்து முன் அவர்களிடம்,
"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது,
அவரது வல்லமையைப் பெற்று
யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும்,
மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்"
என்றார்.
அவர்களை பரிசுத்த ஆவியின் ஒப்படைக்கிறார்.
அப்போஸ்தலர்கள் தங்களுடைய திறமையினால் அல்ல,
பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்
மண்ணுலகின் இறுதி எல்லை வரை நற்செய்தியை அறிவித்தார்கள்.
இன்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்
கத்தோலிக்க திருச்சபை
எதிரிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் அஞ்சாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்போஸ்தலர்களிடம் இருந்த போதிய விசுவாசம் இன்மைதான் இன்றும் நம்மிடையேயும் இருக்கிறது.
படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது,
இயேசு தங்களுடன் இருந்தபோதும் கூட
புயலினால் ஏற்பட்ட கடல் அலைகளால்
தாங்கள் எங்கே மூழ்கி விடுவோமோ என்று பயந்தார்கள்.
நம்முடனே இயேசு எப்போதும் இருக்கிறார் என்று நாம் விசுவசிக்கிறோம்.
ஆனால் துன்பம் என்ற புயல் நம் வாழ்வில் வீசும்போது பயப்படுகிறோம்.
விசுவாசம் இருக்கும் இடத்தில் பயம் வரக்கூடாது.
கொரானா என்று சொன்ன உடனே முதலில் வருவது பயம் தான்.
காரணம் நம்மிடம் விசுவாசம் பெயரளவில்தான் இருக்கிறது..
உறுதியாக இல்லை.
கடுகில் ஆயிரத்தில் ஒரு பங்கு விசுவாசம் நம்மிடம் இருக்குமானால்
.
நாம் எதற்கும் பயப்படமாட்டோம்.
கடவுள் ஒவ்வொரு வினாடியும் பராமரித்துக் கொண்டிருக்கிறார்,
என்ற உறுதியான விசுவாசம் நம்மிடம் இருக்குமானால் ,
நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்போம்.
நமது ஆன்மீக வாழ்வின் உயிர் விசுவாசம் தான்.
விசுவாசம் இல்லாதவர்கள் உலகில் உயிர் வாழ்ந்தாலும் ஆன்மீக ரீதியாக மரித்தவர்கள் தான்.
எவ்வளவுக்கு எவ்வளவு நமது விசுவாசம் உறுதியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய ஆன்மீக வாழ்வு சிறப்புடையதாக இருக்கும்.
உயிர் உள்ளவன் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பான்.
இயக்கம் நின்று விட்டால் உயிர் இல்லை என்று பொருள்.
அதேபோன்று விசுவாசம் உள்ளவன் ஆன்மீக வாழ்வில் இயங்கிக் கொண்டே இருப்பான்.
உள்ளத்தில் உள்ள விசுவாசம் சொற்கள் ஓலமும் செயல்கள் மூலமும் இயங்கிக் கொண்டே இருக்கும்.
அவனுடைய வார்த்தைகளும், செயல்களும் விசுவாசத்தை வெளிப்படுத்திய வண்ணம் ஆயிருக்கும்.
நாம் நற்செயல்கள்தான், அதாவது, பிறரன்பு செயல்கள்தான் நாம் ஆன்மீக ரீதியாக உயிரோடு இருப்பதை வெளிக்காட்டும்.
ஆகவேதான் செயல்கள் இல்லாத விசுவாசத்தை செத்த விசுவாசம் என்கிறோம்.
அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதையும் பிறரன்பு செயல்களுக்காகவே அர்ப்பணித்தார்.
தெருக்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த தொழு நோயாளிகளை கையால் தொட்டு எடுத்து சுமந்து அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள்.
தொழுநோய் புண்களை தொட்டு கழுவி அவற்றுக்கு மருந்து இட்டாள்.
தொழுநோய் ஒரு தொற்று நோய் என்பது அவளுக்கு தெரியும்.
ஆனாலும் தொற்று நோயாளிகளிலும் அவள் இயேசுவை கண்டதால்,
இயேசுவுக்கு செய்யக்கூடிய சேவையை அவர்களுக்கும் செய்தார்.
ஒவ்வொரு அயலானிலும்,
அவன் எத்தகையவனாய் இருந்தாலும்,
இயேசுவைக் காணச் செய்தது அவளுடைய விசுவாசம்.
இயேசு மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாளோ அதே அன்பை ஒவ்வொரு அயலான் மீதும் வைத்திருந்தாள்.
நம் அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை இயேசுவுக்கே செய்கிறோம் என்பது அவளது ஆழமான விசுவாசம்.
அவனுடைய நோய் நம்மை தொற்றிக் கொள்ளுமோ என்று அவள் பயப்படவில்லை.
அவளது ஆழமான விசுவாசம் நம்மில் யாருக்குமே இல்லை.
கொரோனா நோயாளியைப் பார்த்தவுடன் நம்மை ஓட வைப்பது எது?
நம்முடைய விசுவாசமின்மை.
இன்று அன்னை தெரசா உயிரோடு இருந்தால்,
தொழு நோயாளியை எடுத்துச் சென்று கவனித்தது போலவே
கொரோனா நோயாளியையும் எடுத்துச் சென்று கவனித்துக் கொண்டிருப்பார்.
நம்மைப்போல பயந்து சாக மாட்டாள்.
அவளிடம் இருந்த விசுவாசம் நம் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் ஆண்டவரின் ஆசை.
ஆழமான விசுவாசத்தில் இருந்து தான் அர்ப்பண வாழ்வு பிறக்கும்.
நம்மிடமுள்ள விசுவாசம் நமக்கு இறைவன் தந்த நன்கொடை தான்.
அதை ஆழப்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால்,
தாலந்து, உவமையில் ஒரு தாலந்து வைத்திருந்தவனைப் போல் ஆகிவிடுவோம்.
நமக்கு கடவுள் நன்கொடையாக அளித்த விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டியது நமது கடமை.
அதை இறைவனுடைய உதவி என்று நம்மால் தனியே செய்ய முடியாது.
"எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும் ஆண்டவரே"
என்று அவரைத்தான் கெஞ்சிக் கேட்க வேண்டும்.
தினமும் நம்முடைய விசுவாசத்தை அதிகமாக்கும்படி இறைவனிடம் வேண்டுவதன் மூலமும்,
இருக்கும் விசுவாசத்தை செயல்கள் மூலமும் பயன்படுத்துவதின் மூலமும்
நம்முடைய விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டும்.
திருமணத்திற்காக மதம் மாற விரும்பிய ஒருவருக்கு சுவாமியார் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஞானஸ்நானத்தின்போது,
சுவாமியார் அவரிடம்,
" திருச்சபை விடம் என்ன கேட்கிறாய்?"
என்றார்.
மாப்பிள்ளை,
"பெண் கேட்கிறேன்" என்றார்.
சுவாமியார் அவனிடம்,
" விசுவாசம்."
என்று சொல்லச் சொன்னார்.
மாப்பிள்ளை,
"விசுவாசம் என்ற பெண்ணைக் கேட்கிறேன்."
என்றார்.
விசுவாசமே இல்லாமல் விசுவாசத்தை மணக்க தயாராகி கொண்டிருந்தார் மாப்பிள்ளை.
நாமும் இந்த மாப்பிள்ளையை போல் தான் இறைவனிடம் நடந்து கொள்கிறோம்.
நாம் இறைவனை தேட வேண்டியது நமக்கு வேண்டிய ஆன்மீக காரியங்களுக்காக.
ஆனால் நாம் அதை மறந்து,
உலக சம்பந்தமாக காரியங்களுக்காகத்தான் உதவி கேட்டு
விண்ணப்பங்களைக் சமர்ப்பித்து கொண்டே இருப்போம்.
அவற்றைக் கேட்பது தப்பு அல்ல,
ஆனால் ஆன்மீக உதவிகளை கேட்காமல் இருப்பதுதான் தப்பு.
ஒளவைப் பாட்டி ஒரு மன்னனை,
"வரப்பு உயர." என்று வாழ்த்தியிருக்கிறார்.
மன்னனுக்குப் புரியவில்லை.
"பாட்டி, நான் உயர வேண்டாமா?"
"வரப்பு உயர, நீர் உயரும்.
நீர் உயர, நெல் உயரும்.
நெல் உயர, குடி உயரும்.
குடி உயர, முடி உயரும்." என்று பாட்டி விளக்கியிருக்கிறார்
ஆன்மீகத்தில்
விசுவாசம் அதிகமானால், அன்பு அதிகமாகும்.
அன்பு அதிகமானால், நற்செயல்கள் அதிகமாகும்.
நற்செயல்கள் அதிகமானால்,
நித்திய பேரின்பம் அதிகமாகும்.
ஆண்டவரே,
எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கியருளும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment