நீங்கள் ஒரு கத்தோலிக்கர்தானே?"
(தொடர்ச்சி)
*************
"ஹலோ மிஸ்டர், என்ன சிந்தனை? கேட்ட கேள்வி மறந்து போச்சா?"
"உங்களுக்கு சிந்தனைன்னா புதுசா தெரியுதா?"
"சிந்தனை புதுசா? உடன்பிறந்தது.
சிந்திக்க தெரிவதால்தான் பைபிளுக்கு புதுசு புதுசா விளக்கம் கொடுக்க எங்களுக்கு தெரியுது."
"ஆமாமா.. அதனால்தான் இயேசுவே நினைத்திராத விளக்கத்தை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்."
"உங்களுக்கு சிந்திக்கிற தெரியாததால்தான் பழசையே நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.
பரவாயில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க."
"மனிதன் இறந்தவுடன் அவனது ஆன்மா எங்கே செல்கிறது?
இதுதான கேள்வி?
எங்கே செல்லவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததோ அங்கே செல்கிறது.
இறைவனுக்காக வாழ்ந்த ஆன்மா உத்தரிக்கிற நிலையைக் கடந்து விண்ணக நிலையை அடைகிறது.
தனக்காக வாழ்ந்த ஆன்மா நரக நிலையை அடைகிறது."
"அதென்ன உத்தரிக்கிற நிலை?"
"விண்ணக நிலை என்பது இறைவனை அடைந்து, அவருடன் வாழும் நிலை.
இறைவன் பரிசுத்தர். பரிசுத்தமான ஆன்மா மட்டும்தான் இறைவனோடு இணைய முடியும்.
ஆகவே ஆன்மாவில் ஒட்டியுள்ள சிறுசிறு பாவ கறைகள் நீங்கி, ஆன்மா பரிசுத்தமான பின்புதான் இறைவனோடு இணைய முடியும்.
கறைகள் நீங்கி பரிசுத்தம் ஆகும் நிலைதான் உத்தரிக்கிற நிலை."
"உத்தரிக்கிற நிலைக்கு வெளிப்படையான பைபிள் ஆதாரம் இருக்கிறதா?"
"ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது."
(2 மக்கபே. 12:46)
இவ்வசனத்தில் நமது வேண்டுதல்கள் தேவையான இறந்தவர்கள் உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்களை குறிக்கிறது.
41 முதல் 46 முடிய வசனங்களை . வாசித்தால் உண்மை புலன் ஆகும்."
"ஹலோ, மக்கபே புத்தகம் பைபிளிலேயே கிடையாது."
"இரண்டு மக்கபே புத்தகங்களும் பைபிளில் உள்ளன.
நீங்கள் கத்தோலிக்க மறையை விட்டு பிரிந்து சென்றபோது
உங்கள் நம்பிக்கைக்கு ஒத்துவராததால் எடுத்துப் போட்டு விட்ட ஏழு புத்தகங்களில் இந்த இரண்டும் அடங்கும்.
ஏதோ ஒரு பிராணி கண்ணை மூடிக் கொண்டு 'உலகம் இருட்டாய்' இருக்கிறது
என்குமாம்!"
"வேறு ஆதாரம் இல்லையா?"
"ஏன் இல்லை?
மத்தேயு 12:32,
1 கொரிந்தியர் 3:11–3:15
எபிரேயர் 12:29
வசனங்களை ஆற அமர உட்கார்ந்து வாசியுங்கள் புரியும்."
"ஹலோ! அவற்றுக்கு எங்களுக்கு வேறு விளக்கம் கொடுக்க முடியும்."
"ஆமா. ஆமா. உங்களால் முடியாதது எதுவுமே இல்லை.
40000 பிரிவினர் இருக்கிறீர்கள்.
ஒரே வசனத்திற்கு 40000 எதிர் எதிரான விளக்கம் கொடுக்க உங்களைத் தவிர வேறு யாரால் முடியும்!"
"எனக்கு உத்தரிக்கிற நிலையில் நம்பிக்கை கிடையாது."
"உங்களுக்கு உத்தரிக்கிற நிலையில் நம்பிக்கை கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். "
"உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். பரவாயில்லை.
எவ்வளவு காலம் உத்தரிக்கிற நிலையில் இருக்க வேண்டும்?"
"மனிதனுக்கு கால அளவு இவ்வுலகில் வாழும் வரைதான்.
இவ்வுலகை விட்டு பிரிந்ததும் மனிதனுக்கு காலம் என்பது கிடையாது.
இறைவன் காலத்தை கடந்து நித்தியத்தில் வாழ்பவர்.
காலத்தை விட்டு செல்லும் ஆன்மாவும் நித்தியத்திற்குள் நுழைகிறது.
நித்தியத்தில் கால அளவு கிடையாது.
ஆகவே ஆன்மா எவ்வளவு காலம்
உத்தரிக்கிற நிலையில் இருக்கும் என்று கேட்கவும் முடியாது, சொல்லவும் முடியாது.
உத்தரிக்கிற நிலையில் ஆன்மா பரிசுத்தமாகி விண்ணகம் செல்லும் என்று மட்டும் சொல்லலாம்."
"காலத்திற்கும், நித்தியத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"காலத்திற்கு துவக்கமும், முடிவும் உண்டு.
நித்தியத்துக்கும் துவக்கமும், முடிவும் இல்லை.
காலத்தை ஒரு நீளமான கோட்டால் (line) குறித்தால்,
நித்தியத்தை ஒரு புள்ளியால்
குறிப்பிடவேண்டும்.
காலத்திற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று முக்காலங்கள் உண்டு.
நித்தியம் எப்போதும் நிகழ்காலம்தான். (Ever present)
நாமும் இவ்வுலகில் வாழ்ந்தபின்
நித்தியத்திற்குள் நுழைவோம்.
உலகம் முடிந்தபின் மனுக்குலம்
முழுவதும் நித்தியத்தில்தான் வாழும்.
இறுதி தீர்ப்புக்குப் பின் உத்தரிக்கிற நிலை இருக்காது.
நல்லவர்கள் நித்திய ஜீவியத்தில் (மோட்சம் Heaven) வாழ்வார்கள்.
கெட்டவர்கள் நித்திய மரணத்தில் (Hell) வாழ்வார்கள்."
"மோட்சம் எங்கே இருக்கிறது?"
"மோட்சம் ஒரு இடமல்ல.
Heaven is not a place.
அது உலக அர்த்தத்தில் எங்குமே இல்லை.
மோட்சம் ஒரு வாழ்க்கை நிலை.
(state of life)
நமக்கு இறைவன் தான் மோட்சம். நாம் அவரில் தான் நித்தியமாக பேரின்பத்தில் வாழ்வோம்."
"நமது உடல்?"
"சட உடல் (material body) உலகில் அழிந்து விடும்.
இறுதி நாளில் நாம் ஆன்மீக உடலுடன் (Spiritual body) உயிர்ப்போம்.
Spiritual body யுடன்தான் நித்தியமும் வாழ்வோம்."
"நரகம்?"
"இறைவனைப் பிரிந்து வாழும் நிலை.
இது இறைவன் தரும் தண்டனை அல்ல.
கெட்டவர்கள் அவர்களாகவே தேர்ந்தெடுக்கும் நிலை.
ஆன்மீக வேதனை (Spiritual torment) நிறைந்த நிலை.
அந்நிலையிலும் அவர்கள் மீது இறைவன் கொண்டுள்ள அன்பு மாறாது.
ஆனால் அவர்களால் அவரை நேசிக்க முடியாது"
"ஆமா, இவ்வளவு நேரம் சொன்னதற்கும் பைபிளில் ஆதாரம் இருக்கா?"
"நாங்கள் தாய்த் திருச்சபையின் பிள்ளைகள்.
நாங்கள்,ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றோம்.
திருச்சபையின் போதனைகளை விசுவசிக்கிறோம்.
பிள்ளைகள் அம்மா சொல்வதை நம்புவார்கள், ஆதாரம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அம்மா பொய் சொல்ல மாட்டாள் என்று அவர்களுக்குத் தெரியும்.
தாய் இல்லாதவர்கள்தான் தங்கள் பாதுகாப்பிற்காக ஆதாரத்தைத் தேடுவார்கள்."
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment