"ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
(மத்.22:21)
******** *********** *******
பரிசேயர்கள் ரோமையர்களால் ஆளப்படுவதை விரும்பாதவர்கள்.
ஏரோதியர்களும் யூதர்கள் தான். ஆனால் ரோமையரோடு நட்புடன் இருக்க விரும்புபவர்கள்.
எதிரெதிர் அணியில் இருக்கும் இருவருக்கும் இயேசுவை பிடிக்காது.
பரிசேயர்களின் சீடர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் வருகிறார்கள்.
"போதகரே, நீர் உண்மை உள்ளவர்: கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்."
ஒண்ணாம் நம்பர் முகஸ்துதி!
எதற்காக?
இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும், அவருடைய பதிலை வைத்து அவரை மடக்க வேண்டும்.
"செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?"
இக்கேள்விக்கு இயேசுவால் பதில் சொல்ல முடியாது என்பது அவர்களது எண்ணம்.
"முறை" என்று சொன்னால் அவர் யூதர்களுக்கு விரோதமானவர்.
முறை இல்லை என்று சொன்னால் அவர் ரோமையர்களுக்கும், ஏரோதியர்களுக்கும் விரோதமானவர்.
என்ன பதில் சொன்னாலும் அவர் சிக்குவார்.
அவர்களது கெடுமதி இயேசுவுக்குத் தெரியும்.
ஒரு நாணயத்தைக் கேட்கிறார்.
வழங்கப்படுகிறது.
"இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை?"
"செசாருடையவை."
"ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்."
அதாவது,
" செசாருடைய உருவம் பொறித்த நாணயம் செசாருடையது. அவருக்கு உரியதை அவரிடம் கொடுங்கள்."
*செசாருக்கு உரியதை* அவரிடம் கொடுக்க சொல்வதில் தவறு இருக்க முடியாது!
அடுத்த பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
"கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்."
கடவுளுடையது எது?
பணமா?
அவருடைய உருவம் பொறித்த நாணயம் எதுவும் இல்லை.
கடவுள் நாணயத்தை எதிர்பார்க்க வில்லை.
கடவுளுடைய உருவம் பொறித்த பொருள் எதாவது இருக்கிறதா?
"கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைத்தார்."
கடவுளின் சாயல் மனிதர்களாகிய நம்மிடம் இருக்கிறது.
"மக்களே, என்னுடைய சாயல் உங்களிடம் இருக்கிறது. ஆகவே உங்களையே எனக்கு காணிக்கையாகத் தந்து விடுங்கள்.
எனக்கு வேண்டியது பணம் அல்ல, பொருள் அல்ல,
நீங்கள் தான் முழுமையாக எனக்கு வேண்டும்."
என்று இயேசு நம்மிடம் சொல்கிறார்.
இயேசுவின் பதிலைக் கேட்டு கேள்வி கேட்டவர்கள் வியப்புற்று அவரை விட்டுப்போயினர்.
ஆனால் நாம் வியப்பு அடைய தேவையில்லை.
அவரை விட்டுப்போக வேண்டிய அவசியமும் இல்லை.
ஏனெனில் நாம் அவருக்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம்.
நம்மிடம் உள்ள நாணயத்தில் கடவுளின் சாயல் இல்லை,
நம்மிடம்தான் இருக்கிறது.
கடவுள் நம்மிடமுள்ள நாணயத்தை விரும்பவில்லை,
நம்மைத்தான் விரும்புகிறார்.
காணிக்கைப் பெட்டியில் லட்சக்கணக்கான ரூபாயை போட்டாலும் நம்மை கொடுக்காவிட்டால் ஆண்டவர்க்கு திருப்தி இருக்காது.
ஆனால் காணிக்கைப் பெட்டியில் ஒரு பைசா கூட போக முடியாதவர்கள் தங்களையே அவருக்கு அர்ப்பணித்து விட்டால் அதுதான் அவரை திருப்தி படுத்தும்.
உலகில் உள்ள அனைத்தும் இறைவனுக்கே சொந்தம்.
நாமும் அவருக்குத் தான் சொந்தம்.
நாம் அவருக்கு சொந்தம் என்பதை உளமாற ஏற்றுக்கொண்டு
அவரது பணிக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும்.
நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து விட்டால், நம்மிடம் இருப்பவை எல்லாம் அவருக்கு அர்ப்பணமாகி விடும்.
நம்மிடம் இருக்கும் பணம், பொருள், நமது நேரம், நம்மிடம் உள்ள திறமைகள், ஆசைகள், நமது சிந்தனை, நமது ஞாபகங்கள் சர்வமும் அவருக்குச் சொந்தம் ஆகிவிடும்.
அவருக்குச் சொந்தமானதை அவரது விருப்பப்படி தான் பயன்படுத்த வேண்டும்.
நம்மிடம் இருக்கும் பணத்தை பிறர் நலப் பணிக்காக பயன்படுத்த வேண்டும்.
நமது நேரத்தை ஆண்டவருக்காக வாழவும்,
அவரது நாமத்தைப் போற்றவும்,
பிறரன்பு பணிகள் செய்யவும்
பயன்படுத்த வேண்டும்.
நமது திறமைகளை ஆண்டவரது விருப்பப்படி பயன்படுத்த வேண்டும்.
நமது ஆசைகள் ஆண்டவரது ஆசைகளாக மாற வேண்டும்.
நமது சிந்தனைகள் இயேசுவின் சிந்தனைகளாக மாற வேண்டும்.
இறைவன் எப்போதும் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
அவருக்குச் சொந்தமானதை அவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது.
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற நம் தாயின் அர்ப்பணம் போலவே
நம்மையும் அர்ப்பணித்து,
அவளைப் போலவே நாமும் ஆண்டவருக்காகவே வாழ வேண்டும்.
நமக்காக?
நாம் ஆண்டவரின் அடிமையான பின், அவருடைய அடிமையையும் காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்புதானே!
அதுவும் ஆண்டவரே அளித்த பொறுப்பு.
நாம் ஆண்டவரின் அடிமையாகையால், ஆண்டவருடைய மற்ற பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியது நமது பொறுப்பு.
ஆண்டவரின் பிள்ளைகளை நேசிக்காமலும், கவனிக்காமலும் இருந்தால்
ஆண்டவரின் அடிமை என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.
ஆண்டவரின் அடிமையாக நடந்து கொண்டால் தான் அன்னை மரியாளின் பிள்ளைகள் என்று சொல்வதின் பொருள் இருக்கும்.
நாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் என்று சொல்வது நமது பிரிவினை சகோதரர்களுக்கு புரியவில்லை.
ஒருவர் கேட்டார்,
" அன்னை மரியாள் உங்களை எப்போ தத்துப்பிள்ளை களாக ஏற்றுக் கொண்டார்?"
"சிலுவையின் இயேசு தொங்கிக் கொண்டிருந்த போது."
"தொங்கிக் கொண்டிருந்தபோது
"இதோ! உன் தாய்" என்று தனதுசீடரை நோக்கி தான் சொன்னார்.
உங்களிடமா சொன்னார்,"
" இயேசு தனது சீடர்களிடம் ஒப்படைத்தது தனது திருச்சபையையும், தனது தாயையும் மட்டும்தான்.
சீடர்கள் தாங்கள் பெற்றதை நமக்குத் தந்திருக்கிறார்கள்.
அப்போஸ்தலிக்கத் திருச்சபை நமது திருச்சபை,
அன்னை மரியாள் அப்போஸ்தலர்களின் தாய்,
அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் தாய்,
திருச்சபையின் உறுப்பினர்களான நமது தாய்."
நமது சிந்தனைகளிலும், சொல்லிலும், செயலிலும் நமது தாயைப் போலவே நடப்போம்.
எந்த அளவிற்கு நமது தாயை பிரதிபலிக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் இயேசுவை நெருங்குகிறோம்.
எந்த அளவிற்கு இயேசுவை நெருங்குகிறோமோ,
அந்த அளவிற்கு நமது விண்ணகப் பேரின்பமும் இருக்கும்.
கடவுளுக்கு உரிய நம்மைக் கடவுளிடமே கொடுப்போம்,
அவரையே பரிசாகப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment