http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_28.html
இறைப்பிரசன்னத்தில் வாழ்வோம்.
______________________________________
நமது வாழ்க்கை நமது விசுவாசத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.
நமது வாழ்க்கையை ஒரு கட்டிடத்திற்கு ஒப்பிட்டால் அதன் அஸ்திவாரம் நமது விசுவாசம்.
அஸ்திவாரம் எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அந்த அளவுக்கு கட்டடமும் பலமாய் இருக்கும்.
நமது விசுவாசம் நாம் விசுவசிக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டது.
விசுவாச சத்தியம் வெறும் வார்த்தைகளில் அடங்கியிருக்க வில்லை.
காலப்போக்கில் வார்த்தைகளின் பொருள் மாறலாம், ஆனால் விசுவாசம் மாறாது.
கடவுள் எங்கும் இருக்கிறார் என்று விசுவசிக்கின்றோம்.
அந்த அடிப்படையில் அவர் நமக்குள்ளும் இருக்கிறார்.
கடவுள் எப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
God is always active.
கடவுள் நமக்குள் இருப்பதை நாம் விசுவசித்தால் மட்டும் போதாது, உணரவேண்டும்.
உணரும்போதுதான் அவர் செயலாற்றிக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.
நமது வீட்டில் உணவு இருக்கிறது.
அது எப்போது நமக்குப் பயன்படுகிறது?.
நாம் அதை உண்ணும் போது.
எப்போதும் ஹோட்டலில் போய் உண்பவனுக்கு வீட்டில் இருக்கும் உணவால் எந்தப் பயனும் இல்லை.
நம்முள் இருக்கும் இறைவனை உணர்ந்து, அவரோடு உறவில் இருந்தால்தான் அவர் நம்முள் இருப்பதன் பயனை அனுபவிப்போம்.
அவரோடு உறவில் இல்லாவிட்டால் அவர் நமக்குள் செயலாற்றிக் கொண்டிருப்பது நமக்குத் தெரியாமலே போய்விடும்.
"பரிசுத்த ஆவி இறங்கி வருகிறார்." என்று சொல்லுகிறோம். நாம் சொல்வது வார்த்தைகள்.
"இறங்கி வருகிறார்" என்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதிப்படி அர்த்தம் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.
நாம் flight ல் பறக்கும்போது தரையில்
இருக்க மாட்டோம்.
தரையில்இறங்கிய பின் flight ல் இருக்க மாட்டோம்.
நம்மால் ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.
ஆனால் பரிசுத்த ஆவி எங்கும் இருக்கிறார்.
அவரால் எங்கும் ஏறவும் முடியாது இறங்கவும் முடியாது.
அப்படியானால் இறங்கி வருகிறார் என்பதற்கு என்ன பொருள்?
'இறங்கி வருகிறார்' என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவி நம்முள் செயலாலாற்றுவதையே குறிக்கும்.
நமது ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி
நமது ஜென்ம பாவத்தையும், கர்மப் பாவங்களையும் மன்னித்து நம்மை பரிசுத்தம் ஆக்குகிறார்.
நமது உறுதிப்பூசுதலின்போது
நம்மை திடப்படுத்துகிறார்.
நமது ஞானஸ்நானத்தின் போதும், உறுதிப்பூசுதலின்போதும் ஏற்கனவே பரிசுத்த ஆவி நம்முள் இருந்தார்,
இன்றும் இருக்கிறார்,
நாளையும் இருப்பார்.
இவ்வுலகில் நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டுமென்றால்
பரிசுத்த திரி ஏக தேவன் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்கிறார் என்ற உணர்வோடு நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டும்.
நாம் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும் அவர் நம் உள்ளத்தை விட்டுப் போகமாட்டார்.
பாவம் இல்லாமல் பரிசுத்த நிலையில் இருந்தால் நாம் அவரோடு உறவு நிலையில் இருப்போம்.
பாவம் செய்து அவரோடு இருந்த உறவு நிலையை முறித்துக் கொண்டாலும்கூட,
'
நாம் திரும்பவும் உறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக நம் உள்ளே நமக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.
உள் தூண்டுதல்களைக் கொண்டு நமக்கு அழைப்பை விடுத்துக் கொண்டேயிருப்பார்.
அவரது அழைப்பை ஏற்று, நாம் நமது பாவங்களுக்காக வருத்தம் தெரிவித்தால்
அவர் நம் பாவங்களை மன்னித்து தம் உறவில் நம்மை இணைத்துக் கொள்வார்.
அவருடைய உறவு நிலையில் இல்லாமல் நாம் செய்யும் எந்த செயலுக்கும் ஆன்மீக ரீதியாக எந்த மதிப்பும் (value) கிடையாது.
அவருடைய உறவு நிலையில் நமது ஒவ்வொரு அசைவுக்கும் கூட மதிப்பு உண்டு.
பாவ நிலையில் நாம் செய்யும் எந்த செயலும் செல்லாத ரூபாய் நோட்டு மாதிரி.
நமது வாழ்வு ஆன்மீக ரீதியாக பயன் உள்ளதாக இருக்க வேண்டு மென்றால்,
நமது ஆன்மா எப்போதும் பரிசுத்த நிலையில் இருக்க வேண்டும்.
நமது இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும்தான் உயிர் வாழ முடியும்.
இதயத்துடிப்பு நின்றவுடன் உயிர்த் துடிப்பும் நின்றுவிடும்.
அதே போல்தான் பரிசுத்த நிலையில்தான் நமது ஆன்மா வாழும்.
பாவம் செய்த வினாடியில் ஆன்மா மரணித்து விடும். அதாவது இறையருள் நிலையை இழந்துவிடும்.
இதைத்தான் பாவத்தின் விளைவு மரணம் என்கிறோம்.
பாவ மன்னிப்புப் பெறுவதன் மூலம் இறந்த ஆன்மாவை உயிர்ப்பித்து விடலாம்,
அதாவது ஆன்மா உடலோடு இணைந்து இருக்கும் போது.
அதாவது உலக ரீதியாக உயிர் வாழும் போது.
ஆன்மா இறந்த நிலையிலேயே உடலை விட்டுப் பிரிந்துவிட்டால் இறந்தது இறந்ததுதான்.
ஆகவே உலகில் உயிர் வாழும் போது நமது ஆன்மாவும் வாழ வேண்டும்.
அதாவது இறை அருள் நிலையில் இருக்க வேண்டும்.
நாம் இறை அருள் நிலையில் இருந்தால் நம்முள் இறைவன் வாழ்வது நமது உணர்வில் இருக்கும்.
இந்த உணர்வில் வாழ்வது தான் இறை பிரசன்னத்தில் வாழ்வது.
எப்போதும் இறை பிரசன்னத்தில் வாழ்ந்தால் நமக்குள் பாவம் நுழைய முடியாது.
எப்போதும் இறை பிரசன்னத்தில் வாழ்ந்தால் விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவைக் கூட்டலாம்.
விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவு மண்ணுலகில் நாம் சம்பாதிக்கும் அருள் வரங்களை பொருத்தது.
மண்ணுலகில் நாம் சம்பாதிக்கும் அருள் வரங்களின் அளவு இறைவனுக்காக இவ்வுலகில் நாம் செய்யும் நற்செயல்களின் அளவை பொறுத்தது.
இறைவனுக்காக இவ்வுலகில் நாம் செய்யும் நற்செயல்களின் அளவு நாம் இறைப் பிரசன்னத்தில் வாழக்கூடிய கால அளவைப் பொருத்தது.
இவ்வுலகில் நமது தந்தையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
வழியில் நமக்குக் கிடைக்கும் பொருட்களை அவ்வப்போது நமது தந்தையிடம் கொடுத்து வைப்பதாக வைத்துக் கொள்வோம்.
நாம் வீட்டிற்கு வந்தவுடன் நமது தந்தையிடம் நாம் கொடுத்த பொருள்கள் எல்லாம் பத்திரமாக இருக்கும். அவற்றை நாம் வீட்டில் இருக்கும்போது அனுபவிக்கலாம்.
ஆனால் நாம் தனியாக பயணித்திருந்தால் நமக்கு கிடைத்தவற்றை அப்போதே செலவழித்திருப்போம். வீட்டிற்கு வந்தவுடன் அதிகப்படியாக நமக்காக ஒன்றும் இருக்காது.
அதேபோல்தான் நமது ஆன்மீக வாழ்விலும் இறைப் பிரசன்னத்தில் நாம் பயணித்தால்
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்முடன் இருக்கும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்திருப்போம்.
அவை எல்லாம் நற்செயல்களாக மாறியிருக்கும்.
தூங்கும்போது இறை பிரசன்னத்தில் நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் கூட நற்செயலாக மாறி இருக்கும்.
இரவில் படுக்கும் போதே இறைவனின் மடியில் தலைவைத்து படுப்போம்.
"தந்தையே இன்றைய இரவை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்"
என்று சொல்லி விட்டுதான் தூங்க ஆரம்பிப்போம்.
ஆகவே தூக்கத்தின் போது நாம் செய்யும் எல்லா செயல்களும் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு விடுகின்றன.
இறைப் பிரசன்னத்தில் இரவும் பகலும் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் விண்ணகத்தில் பலன் உண்டு.
அவற்றிற்குரிய பலன் விண்ணகத்தில் நமது கணக்கில் ஏறி இருக்கும்.
இறைப் பிரசன்னத்தில் நமது இரவையும் பகலையும் செலவிட்டால் இறைவனுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம்.
வகுப்பில் ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்திருக்கும்போது ஆசிரியருக்குப் பிடிக்காத எதையும் செய்கிறோமா?
அதே போல் தான் இறைவனுக்கு முன்னால் நாம் செயல் புரியும்போது
அவருக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம்.
அவருக்கு பிடித்தமான காரியங்களை மட்டுமே செய்வோம்.
நமது வாழ்வு புண்ணியங்கள் நிறைந்த வாழ்வாக இருக்கும்.
அதற்குறிய எல்லா பயன்களும் நித்திய வாழ்வை அடையும்போது நமக்கு வந்து சேரும்.
ஒரு நாள் ஒரு சிறு பையன் தங்கையிடம் கூறினான்,
"தங்கச்சி, இரவில் நாமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தபோது அம்மா நிறைய வடை செய்து வைத்திருக்கிறார்கள்.
அநேகமாக ஏதாவது சடங்கு வீட்டிற்குக் கொண்டு போவதற்காக இருக்கலாம்.
அங்க வச்சிருக்க இடம் எனக்கு தெரியும்.
வாரியா, அம்மாவுக்குத் தெரியாம ஒரு பத்து வடய நாம எடுத்து சாப்பிடுவோமா?"
"தெரியாம எப்படிச் சாப்பிட முடியும் ?"
"தெரியாம எடுத்து விட்டு வருவது என் பொறுப்பு.
அம்மாக்கிட்ட ' விளையாடப் போறோம்'னு சொல்லிட்டு, மாடிக்குப் போயிடுவோம்.
அம்மா வேலையில busy யா இருக்காங்க.
அப்பா ஆபீசுக்கு போய்ட்டாங்க.
நாம் வட சாப்பிடறத யாருமே பார்க்க மாட்டாங்க. சரியா?"
"நீ மட்டும் போய்ச் சாப்பிட வேண்டியதுதான. நான் வட கேட்கலிய."
"எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான். நான் மட்டும் சாப்பிட்டா நீ அம்மாக்கிட்ட போட்டுக் கொடுத்துட்டா?"
"சரி. ஆனால் யாரும் பார்க்க முடியாத இடமா இருக்கணும்."
"வீட்ல நம்மையும் அம்மாவையும் தவிர வேறு யாருமில்ல.
அம்மா வேலைய போட்டுட்டு மாடிக்கு வரமாட்டாங்க.
வேறு யார் நம்ம பார்க்க முடியும்?"
"ஏன்? கடவுள் இருக்கார! அவர் எங்கும் இருக்கார். மாடிய விடு. உங்கிட்டையும், எங்கட்டையும்தான் இருக்கார். நாம் எங்க போனாலும் நம்ம கூடவேதான் இருப்பார்!
தெரியாம எடுத்தா களவு. வேண்டாம். வா, அம்மாட்ட கேட்டு வாங்கிச் சாப்பிடுவோம்."
இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம்.
அவருக்கு வேண்டியதை மட்டும் செய்வோம்.
விண்ணகத்தை
உரிமையாக்குவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment