*நாமும் ஒருவர் ஒருவருக்காக வேண்டிக் கொள்ளலாம்.*
*--------------------------------------------------*
நண்பர் ஒருவர் கேட்கிறார்:
"இறைவன் தானாகவே, யாருடைய
Recommendation னும் இன்றி,
தன்னுடைய அளவுகடந்த அன்பின் காரணமாக நம்மைப் படைத்து பராமரித்து வருகிறார்.
நமக்கு என்னென்ன தேவை என்று அவருக்குத் தெரியும்.
தானாகவே மரம் வைத்தவருக்கு, மரம் வளரத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று தெரியாதா?
ஏன் புனிதர்களை நோக்கி 'எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்' என்று சொல்ல வேண்டும்?"
நண்பர் கடவுளிடமே கேட்டிருக்கலாம்:
"ஆண்டவரே, உம்முடைய அளவுகடந்த அன்பின் காரணமாக எல்லோரையும் படைத்து பராமரித்து வருகிறீர்.
யார் யாருக்கு என்னென்ன தேவை என்று உமக்குத் தெரியும்.
மரம் வைத்த உமக்கு, மரம் வளரத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று தெரியாதா?
நாங்கள் ஏன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்?
எங்களுக்கு தருவதைப்போல் நீரே மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கலாமே?"
நம்மைப்போல் பேசுவதாக இருந்தால் கடவுள் இப்படிப் பதில் சொல்லியிருப்பார்:
"உங்களைப் படைக்காமலே இருந்திருக்கலாம்.
துன்பப்படவே முடியாத நான்
துன்பப் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்து,
பாடுபட்டு சிலுவையில் மரித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!"
"தன்னுடைய அளவுகடந்த அன்பின் காரணமாக நம்மைப் படைத்து பராமரித்து வருகிறார்."
என்று தெரிந்திருந்த நண்பருக்கு *அன்பு* என்றால் என்ன என்று தெரியவில்லை.
அன்பு வெறும் உணர்வு மட்டுமல்ல.
சொல் மூலமாகவும், செயல் மூலமாகவும் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி.
அன்பு என்பது உறவு.
உறவு இல்லாத இடத்தில் அன்பிற்கு வேலை இல்லை.
அன்பு இல்லாவிட்டால் உறவும் இல்லை.
சமூகத்தின் அலகு ஆகிய குடும்ப உறவை எடுத்துக்கொள்வோம்.
குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்?
ஒருவரோடு ஒருவர் உரையாடுவதின் மூலமும்,
ஒருவருக்கொருவர் உதவி செய்தல் செய்வதன் மூலமும்,
ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுவதன் மூலமும்
ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பெற்றோருக்கு பிள்ளைகளின் தேவைகள் தெரியும்.
ஆனாலும் பிள்ளைகள் உரிமையோடு தங்களது தேவைகளை பெற்றோரிடம் வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே அவர்கள் மகிழ்வர்.
இவ்வாறு வெளிப்படுத்தும்போது பெற்றோரே நமக்கு எல்லாம் என்ற உண்மையை பிள்ளைகள் ஏற்றுக் கொள்கிறார்கள். .
அதுவே பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தை பாலுக்காக அழும்பொழுது தாய் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாள்.
அதே குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆகியபின்
இனி தாயின் உதவி தேவையில்லை என்று பிரிந்து செல்லும்போது தாயின் இதயத்தில் வலி ஏற்படும்.
இது பிள்ளையை பெற்றவர்களுக்குப் புரியும்.
பிள்ளைகள் ஒருவர் ஒருவருக்காக பெற்றோரிடம் பரிந்து பேசும் போது பிள்ளைகள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை கண்டு பெற்றோருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
இதுவும் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்குப் புரியும்.
இறைவன் நம்மை தனித்தனி தீவுகளாக படைக்கவில்லை சமூகமாக படைத்தார்.
சமூகம் என்றாலே உறவினால் இணைக்கப்பட்ட மனிதர்களின அமைப்பு.
ஒருவருக்கொருவர் உதவுதல்,
ஒருவர் ஒருவருக்காக பரிந்து பேசுதல்,
ஒருவர் மீது ஒருவர் இரக்கப்படுதல்,
ஒருவருக்கொருவர் தேவைப்படுதல்
இல்லாமல் சமூக உறவு இல்லை.
நாம் மற்றவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் போது
மற்றவர்கள் மேல் நமக்குள்ள அக்கரையைக் கண்டு கடவுள் மகிழ்வாரே தவிர
"எனக்கு எல்லாம் தெரியும்.
உன் சோலியைப் பாரு"
என்று சொல்லமாட்டார்.
இயேசுவின் ஞான உடலைச் சேர்ந்த நாம் குடும்ப உணர்வோடு, குடும்ப பாசத்தோடு,
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்
என்பதற்காகத்தான்
தாய் திருச்சபை ஞான உடலின் உறுப்பினர்களுக்கு இடையே உறவை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியில் வாழும் ஞான உடலின் உறுப்பினர்கள் அனைவரும்
சகோதர உணர்வோடு தங்களுக்குள்ளேயே உரையாடல் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
சபை என்ற அமைப்பே இருக்கிறது.
திருச்சபை ஒரு குடும்பம்.
நம் யாவருக்கும் தந்தை ஒருவரே.
இறைமகன் இயேசு நமது சகோதரர்.
நாம் யாவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து,
ஒருவரோடொருவர் உரையாடி,
ஒருவர் ஒருவருக்காக பரிந்து பேசி,
ஒருவருக்கொருவர் உதவி செய்து குடும்ப உணர்வோடு வாழ வேண்டும் என்பதே
நமது தந்தையின் விருப்பம்.
சில சமயங்களில் நாம் அவரோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான் நமக்கு துன்பங்களையே அனுமதிக்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும்
"விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"
என்று ஜெபிக்கும்போது நாம் ஒரே குடும்பத்தினர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
"எங்கள் தந்தையே" என்று அழைக்கும்போது
நாம் ஒவ்வொருவரும் எல்லாருக்காகவும் ஜெபிக்கிறோம் அதாவது பரிந்து பேசுகிறோம்.
இது இயேசு நமக்கு சொல்லித்தந்த ஜெபம்.
நாம் ஒவ்வொருவரும் நமக்காக ஜெபிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்கு கடிதம் எழுதும்போது கடைசி வரியாக
"என்னை உங்களது ஜெபத்தில். நினைவு கூறுங்கள்"
என்று எழுதுவது பழக்கம் ஆகிவிட்டது.
ஒருமுறை புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் நண்பர் ஒருவர்,
" Brother, நான் எனது முயற்சிகளில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்."
என்று கூறினார்.
அசிசியார் ஐந்து நிமிடங்கள்அமைதியாக நின்றார்.
நண்பர் "Brother, ஏன் இந்த திடீர் அமைதி?" என்று கேட்டார்.
"உங்களுக்காக வேண்டிக்கொண்டேன். உடனே வேண்டா விட்டால் பிறகு மறந்து போனாலும் போய்விடும்."
என்று அசிசியார் பதில் சொன்னார்.
யாராவது நம்மிடம் ஜெப உதவி கேட்டால் அதை உடனே செய்து விட வேண்டும்.
ஜெப உதவி கேட்பவர்களுக்கு மட்டுமல்ல கேளாதவர்களுக்கும் செய்ய வேண்டும்.
நண்பர்களுக்காக மட்டுமல்ல நம்மை வெறுப்பவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது இயேசுவின் போதனைப் படி நமது எதிரிகளையும் நேசிக்கிறோம்.
பெற்றோர் பிள்ளைகளுக்காகவும்,
பிள்ளைகள் பெற்றோருக்காகவும், சகோதர சகோதரிகள் ஒருவர் ஒருவருக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
பங்கு சாமியார் மக்களுக்காகவும் மக்கள் சாமியாருக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
எல்லோருக்கும் பண உதவி செய்ய நம்மால் முடியாமல் போகலாம்.
ஆனால் ஜெப உதவி யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.
பண உதவியை விட ஜெப உதவிக்குதான சக்தி அதிகம்.
ஏனெனில் ஜெபத்தின் மூலம் நாம் உதவிக்கு அழைப்பது சர்வவல்லவ தேவனை.
*ஒரே தந்தையின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் நமது தந்தையிடம் ஒருவர் ஒருவருக்காக பரிந்து பேசுவோம்.*
*எல்லோரும் நித்திய பேரின்பத்தில் இடம் பெறுவோம்.*
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment