http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_49.html
வசனமும், புரிதலும்.
-------------------------------------------------------
சிலர் பைபிள் வசனங்களுக்கு அகராதியை வைத்துக் கொண்டு அர்த்தம் பார்ப்பார்கள்.
விசுவாசத்தை வைத்துக் கொண்டு அர்த்தம் பார்க்க வேண்டும்.
சில குறிப்புகள்.
கடவுளைப் பற்றி நமது மனித மொழியில் பேசும்போது நமது புரிதல் நமது மொழியின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
விசுவாசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
"மூன்று ஆட்கள், ஒரு ஆள்."
என்ற விசுவாச சத்தியத்தை நமது மொழியின் அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது.
ஒன்று, இரண்டு, மூன்று என்பவை கணிதக் கருத்துக்கள்.
கடவுள் கணிதத்துக்கு அப்பாற்பட்டவர்.
One, two, three are mathematical concepts.
God is beyond mathematics.
கணிதத்துக்கு அப்பாற்பட்டவரை, கணிதக் கருத்துக்களால் எப்படிப் புரிய முடியும்?
தமதிரித்துவத்தை விசுவாச அடிப்படையால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
'தந்தை, மகன் உறவை மொழி அடிப்படையில் புரியும் போது, மகனை விட தந்தை வயதின் அடிப்படையில் மூத்தவராக இருப்பார்.
நைசீன் விசுவாசப் பிரமாணத்தில்
"இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர்."
"begotten, not made"
என்று மகனைப் பற்றி எழுதப் பட்டிருக்கிறது.
"செனித்தவர்" மொழி அடிப்படையில் அர்த்தம் கொண்டால்,
புரிதல் தவறாகிவிடும்.
தமதிரித்துவத்தில் தந்தை, மகன்' உறவை விசுவாச அடிப்படையில் மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுள் நித்தியர். காலத்திற்கு அப்பாற்பட்டவர். துவக்கமு .ம், முடிவும் இல்லாதவர்.
தந்தை நித்தியர். காலத்திற்கு அப்பாற்பட்டவர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
மகன் நித்தியர். காலத்திற்கு அப்பாற்பட்டவர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
பரிசுத்த ஆவி நித்தியர். காலத்திற்கு அப்பாற்பட்டவர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
'ஆகவே வயது என்ற பேச்சுக்கே இடமில்லை.
நமது மொழியில் எழுதப்பட்ட வசனங்களை விசுவாசத்தின் அடிப்படையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
"ஆதியிலே வார்த்தை இருந்தார்:"
மொழி அடிப்படையில் 'ஆதி' என்றால் துவக்கம்.
கடவுள் ஆதியும், அந்தமும்
(துவக்கமும், முடிவும்) இல்லாதவர்.
"ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்"
ஆதியாகமம் விண்ணும், மண்ணும் படைக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆனால், கடவுள் விண்ணும், மண்ணும் படைக்கப்படுமுன்பே
நித்திய காலமாக இருக்கிறார்.
"ஆதியிலே வார்த்தை இருந்தார்"
என்ற இறைவாக்கை
"நித்திய காலமாக வார்த்தை இருக்கிறார்."
என்ற பொருளில்தான் புரியவேண்டும்.
"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்."
(அரு. 14:16)
என்ற இறை வாக்கிற்கு நமது மொழியின் அடிப்படையில் பொருள் கொண்டால்,
"துணையாளர் இனிமேல் தான் வருவார் வந்து, உங்களோடு இருப்பார்" என்ற பொருள்தான் வரும்.
ஆனால் இறை இயல் அடிப்படையில்
தமதிரித்துவதின் மூன்று ஆட்களில் ஒவ்வொருவருள்ளும் மற்ற இருவரும் இருக்கிறார்கள்.
"நான் சொல்வதை நம்புங்கள்: நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."
(அரு. 14:11)
இது பரிசுத்த ஆவிக்கும் பொருந்தும்.
"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."
(அரு. 14:17)
அதாவது இயேசு அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பரிசுத்த ஆவியும் அவர்களோடுதான் இருக்கிறார்.
பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
(அரு20:22)
விண்ணகத்திற்கு செல்லும் முன்பே இயேசு அப்போஸ்தலர்கள் மேல் ஊதி,
"பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
எனறார்.
இயேசுவுக்குள் பரிசுத்த ஆவி இருந்ததினால் தான்
அவர் அப்போஸ்தலர்கள் மேல் ஊதி, "பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
அப்படியானால் "தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்:" என்ற இறைவாக்கை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
இயேசு நினைத்திருந்தால்
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அப்போஸ்தலர்கள் உடனுக்கு உடனேயே புரிந்து கொள்ளும் வரத்தை கொடுத்திருக்கலாம்.
அவர் அப்படி கொடுக்கவில்லை.
இறை அருளின் உதவியோடு அவர்கள் இறை ஞானத்தில் வளர வேண்டும் என்பதையே இயேசு விரும்பினார்.
அந்த வளர்ச்சி இயல்பான வளர்ச்சியாக இருக்கும்.
விண்ணகம் எய்து முன் இயேசு அவர்களிடம்
"நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்"
(அப்.1:5)
என்று சொன்ன போது,
"ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு
அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?"
(அப்.1:6)
என்று வினவினார்கள்.
இயேசு ஒன்றைச் சொல்ல சீடர்கள் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள்.
இன்னும் அவர்கள் எதையும் புரிந்து கொண்டிருந்ததாக தெரியவில்லை.
இயேசு உலகிற்கு வந்தது மனிதரை மீட்க,
இஸ்ராயேலுக்கு
அரசாட்சியை மீட்டுத்தர அல்ல.
இதுதான் மெசியாவின் பணி என்று தான் யூதர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதையே சீடர்களும்
பிரதிபலித்தார்கள்.
பெந்தேகோஸ்தே திருநாள் அன்று தான் சீடர்களுக்கு முழு புரிதலும் கிடைக்க வேண்டும் என்பதே இயேசுவின் திட்டம்.
"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது,
அவரது வல்லமையைப் பெற்று
யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்கு.மே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்." என்றார்.
(அப்.1:8)
.
பெந்தேகோஸ்தே திருநாள் அன்று
ஏற்கனவே அவர்களுள் இருக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அனைத்தையும் புரிய வேண்டிய விதமாய் புரிந்து
மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்கும்
நற்செய்தியை அறிவிக்க செல்ல வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.
அன்றுதான் அவர்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்று, (அப்.1:5)
மற்றவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.
.
அப்போஸ்தலர்களைப் பொறுத்த மட்டில், அவர்களுள் இருந்த பரிசுத்த ஆவிதான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
யூதர்கள் கொண்டாடிய அறுவடைத் திருநாளுக்குப் பெயர்தான் பெந்தேகோஸ்தே திருநாள்.
அச்சமயத்தில், வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கி திருநாளைக் கொண்டாடுவார்கள்.
அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு வசதியாக
அந்த திருநாளில்
பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களை தன் வல்லமையால் நிரப்பினார்.
திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டானது.
அந்த இரைச்சலைக் கேட்டு மக்கள் கூட்டமாகக் கூடினார்கள்.
கூட்டத்தில் பல மொழி பேசக் கூடியவர்கள் இருந்தார்கள்.
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்ற அப்போஸ்தலர்கள் ,
ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசி நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினர்.
நற்செய்தியை ஏற்றுக்கொண்ட ஏறத்தாழ மூவாயிரம் மக்கள்
ஞானஸ்நானம் பெற்றார்கள்.
யூதர்களின் அறுவடை தினத்தன்று,
அதாவது, பெந்தேகோஸ்தே திருநாளன்று
இயேசுவின் ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை பிறந்தது.
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களின் கூடவே இருந்து திருச்சபையை வழி நடத்தி வருகிறார்.
பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தி வருகிறார் என்று சொல்லும்போது
திரியேக தேவன் வழி நடத்தி வருகிறார்
என்று புரிந்து கொள்ள வேண்டும்.
திருச்சபையின் ஒவ்வொரு செயலும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தான் செய்யப்படுகிறது.
"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி,
வானதூதருக்கும்
மகனுக்குங்கூடத் தெரியாது." (மத். 24:36)
இந்த வசனத்துக்கு அகராதிப்படி பொருள் கொண்டால்
இறுதி நாள் பற்றிய விவரம்
" இயேசுவுக்கு தெரியாது"
என்பது போல் தோன்றும்.
ஆனால் இயேசு தந்தையுடன் ஒரே கடவுள்.
தந்தைக்கு தெரிவது எல்லாம் மகனுக்கும் தெரியும்.
பின் ஏன் "மகனுக்குங்கூடத் தெரியாது" என்கிறார்.
"இறுதிநாள் பற்றிய இரகசியம் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது"
என்ற உண்மைக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இயேசு தனக்கே தெரியாது என்கிறார்.
பைபிள் வாசிக்கும்போது வசனங்கள் தரும் செய்திக்கு (Message) முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர,
வார்த்தைகளை வாசித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது.
செய்தியை நாம் வாழ்வதற்காக உள்வாங்க வேண்டுமே தவிர வாதிப்பதற்காக அல்ல.
இரண்டு பேர் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அருகில் சென்று என்ன விவரம் என்று கேட்டால் ஒருவர் சொல்கிறார்:
"Glory to God in the highest, and on earth peace to men of good will.”
என்ற வசனத்தில் வரும் "peace" என்ற வார்த்தைக்கு பொருள் சமாதானமா? அமைதியா?
என்பது தான் பிரச்சனை, சார்.
நான் சமாதானம் என்கிறேன். அவர் அமைதி என்கிறார்.
இதுதான் சண்டைக்கு காரணம்.''
சமாதானமா? அமைதியா? என்ற வாதத்தால் சமாதானமும் போய்விட்டது, அமைதியும் போய்விட்டது!
பைபிள் வசனம் சண்டை போடுவதற்காக அல்ல, வாழ்வதற்காக.
இதை மனதில் வைத்துக்கொண்டு பைபிள் வாசிப்போம்.
வாசித்ததை வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment