http://lrdselvam.blogspot.com/2020/10/1029_20.html
*"அவர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்."* (லூக். 10:29)
*+++++++++++++++++++++++++++*
ஒவ்வொரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் ஒரு model School இருக்கும்.
மாணவ ஆசிரியர்கள் அங்குதான் model Class எடுக்க வேண்டும்.
அங்குள்ள மாணவர்கள் மாணவ ஆசிரியர்களை விட புத்திசாலிகள்.
வகுப்பு 3.
அன்று நான் எடுத்த பாடம் கோழியைப் பற்றி.
நான் மாணவ ஆசிரியன்.
முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மாணவர்கள்.
எனக்கு வயது 20. அவர்களுக்கு வயது 7.
வாழ்க்கையிலேயே அது எனது முதல் போதனை.
பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தை நன்கு தயாரித்துதான் சென்றிருந்தேன்.
இயன்ற அளவு நன்றாக பாடம் நடத்தினேன்.
நடத்தி முடித்தவுடன்,
"ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்." என்றேன்.
ஒரு பையன் எழுந்தான்.
எனது ஆசிரியர் பணி வாழ்வில் நான் சந்திக்கப்போகும் முதல் சந்தேகம்.
"சொல்லு, என்ன சந்தேகம்?"
பையன் நமட்டுச் சிரிப்புடன்,
"சார், கோழி எப்படி சார் ஒண்ணுக்கு இருக்கும்?"
எனக்கு இடி விழுந்தது மாதிரி இருந்தது.
எத்தனையோ ஆண்டுகளாக வீட்டில் நாங்கள் வளர்த்த கோழியை பார்த்திருக்கிறேன்.
இந்தச் சந்தேகம் எனக்கு ஒரு நாளும் வந்ததே இல்லை.
பாடப்புத்தகத்திலும் அதைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை.
மாணவர்கள்தான் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பதில் சொல்லி ஆக வேண்டும்.
வகுப்பாசிரியர் என்னை observe செய்து கொண்டிருக்கிறார்.
"புத்திசாலித்தனமான கேள்வி. இந்த கேள்விக்குப் பதில் தெரிந்தவர்கள் கைய தூக்குங்க."
மாணவர்கள் கைகளை ரொம்ப இறுக்கமாக மடியிலே வைத்துக்கொண்டார்கள்.
உண்மையில் எனக்குப் பதில் தெரியாது.
சமாளிக்க வேண்டும்.
Pocket ல் வைத்திருந்த புது
பென்சிலை கையில் எடுத்தேன்.
"சரியாகப் பதில் சொல்லும் முதல் மாணவனுக்கு பென்சில் பரிசு."
எல்லோரும் சேர்ந்து சப்தமாக சொன்னார்கள்.
"அது விட்டை போடும்போதே ஒண்ணுக்கும் இருந்துவிடும், சார்."
"Very good. எல்லோருமே புத்திசாலிகள். என்னிடம் இருப்பது ஒரே ஒரு பென்சில். இதை யாரிடம் கொடுப்பது?"
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்,
" நாளைக்கு வரும்போது 40 பென்சில்கள் வாங்கிக்கொண்டு வாருங்கள், சார்."
மணி அடித்தது. "தப்பித்தோம், பிழைத்தோம்" என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.
இந்த மாணவனைப் போல பெரியவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அவர்கள் கேள்வி கேட்பது பதில் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல,
நம்மை திக்குமுக்காட வைப்பதற்காக.
இந்த மாதிரி ஆசாமிகள் இயேசு வாழ்ந்த காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
"சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்க, "போதகரே, முடிவில்லாத வாழ்வு பெற, நான் செய்யவேண்டிய தென்ன?" என்று வினவினார்." (லூக். 10:25)
கேள்வி கேட்டவர் *சட்ட வல்லுநர்.*
கேள்வி கேட்டதின் நோக்கம்,
*ஆண்டவரைச் சோதிக்க.*
சட்ட வல்லுநருக்குப் பதில் தெரியாது இருந்திருக்குமா?
கேள்வியின் நோக்கம் ஆண்டவருக்கு கட்டாயம் தெரியும். ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக அவனோடு பேசுகிறார்.
"திருச் சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது? அதில் என்ன வாசிக்கிறீர் ?" என்று அவரிடம் கேட்டார்.
அவர் மறுமொழியாக,
"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் முழு மனத்தோடும் அன்புசெய்வாயாக. உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக" என்றார்.
இயேசு அவரிடம், "சரியாய்ப் பதில்சொன்னீர்: இப்படியே செய்யும்: வாழ்வீர் " என்றார்.
'
சட்ட வல்லுநர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்.
சட்ட அறிஞருக்குத் தன் அயலான் யார் என்று தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி,
(பதில் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல)
" என் அயலான் யார்?" என்றான்.
இப்போதும் இயேசு பொறுமையாக அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக நல்ல சமாரியன் உவமையைச் சொல்கிறார்.
சொல்லி முடிக்கும் போது,
"கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது ?" என்றார்.
"அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார்.
இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.
இங்கு இரண்டு விசயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
முதலாவது,
சட்ட அறிஞர் ஆண்டவரை சோதிப்பதற்காகவே கேள்வி கேட்கிறார்.
ஆண்டவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
அறிஞருக்கு வேண்டிய பதிலை அவர் வாயிலிருந்தே வரவழைக்கிறார்.
இரண்டாவது,
" நீரும் போய் அவ்வாறே செய்யும்"
என்ற பதிலில் உள்ள நயம்.
"கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான்.""
என்பது ஆண்டவர் கேட்ட கேள்வி.
"அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்பது சட்ட அறிஞரின் பதில்.
" நீரும் போய் அவ்வாறே செய்யும்"
என்று இயேசு சொல்கிறார்.
எவ்வாறு செய்யச் சொல்கிறார்?
*இரக்கம் காட்டியவன்* அதாவது *சமாரியன்* என்ன செய்தானோ, அதேபோல் செய்யச் சொல்கிறார்.
இயேசுவுக்கு தெரியும் சட்ட அறிஞன் ஒரு யூதன் என்று.
யூதர்களுக்கு சமாரியர்களைப் பிடிக்காது என்றும் இயேசுவுக்கு தெரியும்.
"என் அயலான் யார்?" என்று தான் அறிஞர் கேள்வி கேட்டிருந்தான்.
அந்தக் கேள்விக்கு இயேசு நேரடியாக பதில் சொல்லவில்லை.
அயலான் யார் என்று அறிஞருக்கு தெரியும் என்பது இயேசுவுக்கு தெரியும்.
அயலானை நேசி என்றாலே அனைவரையும் நேசி என்பதுதான் பொருள்.
நம்மைத் தவிர அனைவரும் நமக்கு அயலார் தான். பகைவன் கூட நமது அயலான்தான்.
ஜாதி இன சமய சமூக வேறுபாடின்றி, இறைவனால் படைக்கப்பட்ட அனைவரையும் நாம் நேசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
அயலான் என்றால் இறைவனில் நமது சகோதரன்.
கள்வர்களால் அடிபட்டுக் கிடந்தவனுக்கு எப்படி சமாரியன் ஒரு சகோதரனோ அதேபோல்தான்
குருவும், லேவியனும்.
அவனுக்கு அயலான் யார் என்று கேட்டபோது அறிஞன் "சமாரியன்" என்று பதில் சொல்லவில்லை.
அந்த வார்த்தையை சொல்ல அவனுக்குப் பிடிக்கவில்லை.
"அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றுதான் சொன்னான்.
ஆகவே " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று இயேசு
சொன்னதற்கு,
"நீரும் போய் கஷ்டப் படுகிறவர்களுக்கு உதவி செய்யும்"
என்பதுதான் பொருள்.
இயேசுவின் உவமையில் வரும் சமாரியன் யூதர்களையும் நேசிக்கிறான்,
அதாவது தன்னை வெறுப்பவர்களையும், நேசிக்கிறான்.
சட்ட அறிஞர் ஒரு யூதர். சமாரியர்களை வெறுப்பவர்.
அவர் சமாரியர்களை நேசிக்க வேண்டும் என்று இயேசு அவருக்கு அறிவுரை கூறுகிறார்.
"என் அயலான் யார்?" என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்
"நீர் யாருக்கு உதவி செய்கிறீரோ அவருக்கு நீர் அயலான்" என்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் அயலானாக இருக்க வேண்டும், இயேசுவின் உவமையில் வரும் அயலானைப் போல, அதாவது, நல்ல சமாரியனைப் போல.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வெற்றி பெற்றவர் அனைவருக்கும் ஆசிரியர் என்பதுதான் பெயர்.
ஆனால் பள்ளியில் அவர் பெற்ற வெற்றி மட்டும் அவரை ஆசிரியராக ஆக்க முடியாது.
மாணவர்கள் நலன் கருதி நேர்மையாக உழைப்பவர்கள் மட்டுமே அப்பெயருக்குப் பொருத்தமானவர்கள்.
அதேபோல் தான் அயலான் என்ற பெயர் இருப்பதாலே அயலான் ஆக முடியாது.
ஜாதி சமய இன வேறுபாடின்றி மற்றவர்களை நேசிப்பவன் தான் மற்றவர்களுக்கு அயலான்,
சமாரியன் அடிபட்டுக் கிடந்த யூதருக்கு அயலானாய் இருப்பது போல.
"உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக"
என்ற இறைவனின் கட்டளையை உலகிலுள்ள அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை.
உலகில் வாழும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.
உலகில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் மற்ற அனைவருக்கும் அயலான்தான்.
அயலான் என்றாலே
*அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் உரிமை உடையவன்.*
நாம் ஒவ்வொருவரும் மற்றவர் மீது இரக்கம் காட்ட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுடைய இரக்கத்திற்கு ஏற்றவர்கள் ஆவோம்.
''எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்."
என்று ஜெபிக்கும்படி நம் ஆண்டவர் கற்றுத் தந்த போதும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தினார்.
நம் அயலான் நமக்கு எதிராகக் குற்றம் செய்தால் அவன்மீது இரக்கம் வைத்து அவனது குற்றத்தை நாம் பொறுத்தால்தான்
நமது குற்றத்தை பொறுக்க தந்தை இறைவனிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்க முடியும்.
நாம் எல்லோரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.
ஆகவே எல்லோரும் ஒரே இறைவனின் பிள்ளைகள்.
இறைவன் எல்லோர் மீதும் இரக்கம் உள்ளவர்.
அவருடைய அளவில்லாத இரக்க பொக்கிஷத்திலிருந்து அவருடைய பிள்ளைகள் எல்லோரிடமும் தனது இரக்கத்தை தாராளமாக பகிர்ந்து அளித்துள்ளார்.
இலவசமாகப் பெற்றோம் இலவசமாகக் கொடுப்போம்.
அவருடைய பிள்ளைகள் அனைவரும் இறைவனிடமிருந்து பெற்ற நம்முடைய இரக்கத்தை தாராளமாக பரிமாறிக் கொள்வோம்.
*இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.*
( மத். 5:7)
.
லூர்து செல்வம்..
No comments:
Post a Comment