விசுவாசத்தின் தந்தை.
* * *
அபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கிறோம்.
ஏன்?
"ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்." (ஆதி. 21:12)
இவை ஆண்டவர் அபிரகாமிடம் கூறிய வார்த்தைகள்.
"நீ அதிகம் அன்பு செய்யும் உன் ஒரே புதல்வனான ஈசாக்கைத் தரிசனைப் பூமிக்குக் கூட்டிக் கொண்டு போய், அங்கே நாம் உனக்குக் காட்டும் ஒரு மலையின் மீது அவனைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுப்பாய்."
(ஆதி. 22:2)
இவையும் ஆண்டவர் அபிரகாமிடம் கூறிய வார்த்தைகள்.
அதாவது
யாரிடமிருந்து அபிரகாமுக்குச் சந்ததி தோன்றும் என்று ஆண்டவர் கூறியிருந்தாரோ
அவனையே தகனப்பலியாக ஒப்புக் கொடுக்கச் சொல்கிறார்.
இதை வாசிக்குப் போது நம்மிடம் ஒரு கேள்வி எழும்:
"ஈசாக்கை தகனப்பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டால் எப்படி அவரிடமிருந்து சந்ததி தோன்றும்?"
ஆனால் அபிரகாமிடம் அந்தக் கேள்வி எழவில்லை.
ஏன்?
அவருடைய அசைக்கமுடியாத விசுவாசத்தின் காரணமாக.
அவர் இறைவனை முழுக்க முழுக்க விசுவசித்தார்.
இறைவன் மாறாதவர், கொடுத்த வாக்கை மீறமாட்டார் என்று விசுவசித்தார்.
ஆகவே
"ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்."
என்ற ஆண்டவரின் வார்த்தைகளை விசுவசித்தார்.
ஆகவேதான் அவனை தகனப்பலியாக ஒப்புக்கொடுக்க ஆண்டவர் சொன்னபோது மறுமொழி பேசாமல் பலியிடப் புறப்பட்டார்.
"எப்படியும் ஆண்டவரது வாக்கு நிறைவேறும். நமது பணி அவர் சொல்லுக்கு கீழ்ப்படிவதுதான்."
இது விசுவாசத்தின் வெளிப்பாடு.
"இறைவன் வாக்குத் தவறாதவர்" என்பது விசுவாசம்.
"இறைவன் வாக்குத் தவறமாட்டார்" என்பது நம்பிக்கை.
அசைக்க முடியாத விசுவாசத்திடமிருந்து பிறப்பது,
அசைக்க முடியாத நம்பிக்கை.
அபிரகாமின் அசைக்க முடியாத விசுவாசத்தின் காரணமாகத்தான் அவரை "விசுவாசத்தின் தந்தை"
என்று அழைக்கிறோம்.
"விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம்"
என்ற வார்த்தைகளை
"நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பு"
என்று மொழி அடிப்படையில் மாற்றியுள்ளார்கள்.
வார்த்தைகள் மாறலாம்,
சத்தியம் மாறுவதில்லை.
ஏற்கனவே இருப்பதை ஏற்றுக் கொள்வது விசுவாசம்.
எதிர்காலத்தில் நடைபெறும் என்ற
உறுதி நம்பிக்கை.
இறைவனை நேசிப்பது இறையன்பு.
சர்வ வல்லப இறைவன் இருக்கிறார். உலகைப் படைத்தவர் அவர்தான். (விசுவாசம்)
இறைவன் நிச்சயம் என்னை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வார். (நம்பிக்கை)
இறைவனை முழுமனதோடு நேசிக்கிறேன். (இறையன்பு)
விசுவாசத்திலிருந்து பிறப்பது தான் நம்பிக்கையும், இறையன்பும்.
தேவசம்பந்தமான இந்த மூன்று புண்ணியங்களும் தான் நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை.
அபிரகாம் விசுவாசத்தின் தந்தை.
நாம் அவரது விசுவாசத்தின் வாரிசுகள்.
விசுவாசம் இறைவன் நமக்கு அளித்த இலவசப் பரிசு.
படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களின் அடி மனத்திலும் கடவுள் நம்பிக்கை இருக்கும்.
உலகில் உள்ள அனைத்து சமயங்களும் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவைதான்.
நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று கூறுவார்கள்.
ஆனால் அவர்களது அடி மனத்திலும் கடவுள் நம்பிக்கை இருக்கும்.
ஒரு நாத்திகனை தூக்கிக்கொண்டுபோய், நடுக்கடலில் போட்டுவிட்டு அவனுக்குத் தெரியாமல் அவன் முகத்தைக் கூர்ந்து பாருங்கள்.
அவன் அடிமனத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை முகத்தில் எட்டிப் பார்க்கும்.
உயிருக்கு ஆபத்து என்றால் யாருடைய உதவியும் கிடைக்காவிட்டால் நாத்திகனும் கடவுளைத் தேட ஆரம்பித்துவிடுவான்.
நாம் கிறிஸ்தவர்கள்.
நம்மிடம் விசுவாசம் இருக்கிறது.
ஆனால் பெயரளவில்
விசுவாசம் இருந்தால் போதாது.
"பரலோகத்தையும் பூலோகத்தையும் எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்."
என்று சொல்லுகிறோம்.
அதாவது நமது தந்தை சர்வவல்லவர் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல தந்தை எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் நமது நடைமுறை வாழ்க்கையில் நம்மிடம் உள்ள கவலையையும், பயத்தையும் பார்த்தால்
நமக்கு அப்படி ஒரு தந்தை இருப்பதையே மறந்து விடுகிறோமே!
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறான் நண்பன் ஒருவன்.
வழியில் ஜவுளிக்கடை ஒன்றில் நல்ல design சேலை ஒன்று விற்பனைக்குத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
கடைக்குள் சென்று விலையும் விசாரிக்கிறான்.
இரண்டாயிரம் ரூபாய்தான்.
ரூபாய் இருந்தால் வாங்கலாம்.
அடுத்த மாதம் பார்ப்போம்.
சேலையைப் பார்த்து ஏங்கிக் கொண்டே வாங்காமலேயே வந்துவிட்டான்.
வீட்டிற்கு வந்தவுடன் மனைவியிடம்:
"வரும் வழியில் கடையில் மிக அழகான சேலை ஒன்று விற்பனைக்கு தொங்கிக்கொண்டிருந்தது.
உனக்காக வாங்க ஆசைப்பட்டேன். 2000 ரூபாய்தான்.
கையில் காசு இல்லை.
ஆசையை மட்டும் கொண்டு வந்திருக்கிறேன்."
"ஏங்க, இன்று முதல் தேதி ஆயிற்றே, ஆபீசில் சம்பளம் போடவில்லையா?"
"Sorry. மறந்தே விட்டது. இந்தா கவர்."
"உள்ளே 2000 ரூபாய் கூட இல்லையா?"
"நல்லா எண்ணிப் பார்த்துக்கோ. ஒரு இலட்சம் இருக்கு."
"ஒரு இலட்சத்தில்
2000 இல்லையா?"
"ஏண்டி, கணக்கு test வைக்கிறியா?"
"இல்லை, சேலை test."
"ஆஆமா... கடையில் நிற்கும்போது ஞாபகம் வரவில்லை பார்த்தாயா!
சரியான மடையன்."
எல்லாம் வல்ல கடவுளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே பயந்துகொண்டே வாழ்கிறோமே, நம்மை விடவா பெரிய மடையன்!
கடவுளும் உள்ளத்தில், பயமும் உள்ளத்தில்!
"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"
என்று இயேசு நம்மிடம் கேட்கிறார்.
இறைவனை மீறி எதுவும் நடக்காது,
நடப்பதெல்லாம் அவரது அனுமதியுடன் நமது நன்மைக்காகவே நடக்கும்,
என்று ஏன் நமது புத்திக்கு எட்டவில்லை?
வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையா?
கவலையே வேண்டாம்.
பிரச்சினையை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.
பிரச்சினைக்கு கடவுள் கட்டாயம் தீர்வு தருவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.
தீர்வு வரும் போது அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"நம்புங்கள், ஜெபியுங்கள், நல்லது நடக்கும்."
என்று பாடல் வரி ஒன்று உண்டு.
"நம்பிக்கையோடு ஜெபிக்கும் போது எது நடந்தாலும் அது நல்லதுதான்"
என்பது வரிப் பொருள்.
அதாவது, ஜெபத்தின் பலனாகக் கிடைப்பது நல்லதா, இல்லையா என்று ஆராய்வது, கடவுளையே சந்தேகப்படுவது போல் ஆகிவிடும்.
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற ஆழமான விசுவாசம் வேண்டும்.
புனித சூசையப்பர் மாதாமேல் சந்தேகப்பட்டு அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,
கடவுளின் தூதர் அவரிடம், அவள் கருவுற்றிருப்பது இறைமகனே சொன்னவுடன் விசுவசித்து மாதாவை ஏற்றுக்கொண்டார்.
இயேசு பிறந்த பின் இறைத்தூதர் மீண்டும் அவருக்குத் தோன்றி,
"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்.
நான் சொல்லும்வரை அங்கேயே இரும்.
ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"
என்று சொன்னபோது,
"குழந்தை இறைமகனானால் ஏன் ஒரு மனிதனுக்குப் பயந்து ஓட வேண்டும்"
என்று ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை.
அவரது விசுவாசம் தளரவேயில்லை.
தூதர் சொன்னவுடன்
"எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்."
இறைமகனின் வல்லமை மீது அவருக்கு எள்ளளவும் சந்தேகம் வரவில்லை.
இறைவன் கொடுத்த கட்டளைக்கு எதிர் விளக்கம் கேட்காமல் கீழ்ப்படிந்தார்.
நாமும் சூசையப்பரைப் போலவே செயல் பட வேண்டும்.
நம்மை இயக்க வேண்டியது நம்முடைய அறிவு அல்ல,
நம்முடைய விசுவாசம்.
தேர்வு எழுதிவிட்டு அதில் வெற்றி வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுகிறோம்.
ஆனால் தோல்வி கிடைக்கிறது.
கொஞ்சம் கூட மனதில் கவலைப் படாமல்,
"இதுவே இறைவன் சித்தம்." என்ற விசுவாச உணர்வோடு
தோல்வியை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் ஆசைப்பட்ட படி கடவுள் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே கூடாது.
கடவுள் ஆசைப்பட்டபடிதான் நாம் நடக்க வேண்டும்.
"எது நடந்தாலும் இறைவன் சித்தமே"
என்று விசுவசித்து வாழ்பவன் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்.
"எனது விருப்பப்படியே எல்லாம் நடக்க வேண்டும்"
என்று நினைப்பவன் வாழ்வில் மகிழ்ச்சியும் இருக்காது, திருப்தியும் இருக்காது.
"இறைவா, உமது சித்தமே எனது பாக்கியம்"
என்ற உணர்வுடன் வாழ்வோம்.
அதுதான் இறைவன் தரும் வாழ்வு.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment