Sunday, October 11, 2020

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.
   _____________________________

சில நாட்களுக்கு முன்பு YouTubeல் வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.

"Bible alone" நண்பர்களில் ஒருவர் திரு.சாலமோன் அவர்களின் வெளியீடு.

 முன்பெல்லாம் ஏதாவது ஒரு கணக்கை யாராவது போட்டால், அதற்கு விடை காண முயற்சிப்பது வழக்கம்.

இப்பொழுது சிலர் இதை தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

அவர்களாக ஒரு விடையைத் தீர்மானித்துக் கொள்வார்கள்.

பின் விடைக்கு ஏற்ற   கணக்கு ஒன்றை கண்டு பிடிப்பார்கள்.

நண்பர் தீர்மானித்திருக்கிற விடை பாப்பரசர் திருச்சபையில் தலைவர் அல்ல.

அந்த விடையை சரியானதாக ஆக்க பைபிளுக்குள் சென்று ஆதாரத்தைத் தயாரிக்க வேண்டும்.

"மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
(மத்.16:18)

இயேசு புனித இராயப்பரின் தலைமையில் தனது திருச்சபையை நிறுவினார் என்பதற்கு ஆதாரமான வசனம்.

இந்த வசனத்திற்கு இயேசுவே பொருள் கூறியிருக்கிறார்.

 இந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் வரும் இயேசுவின் வசனங்களும்,

நற்செய்தி நூல்களின் பிற இடங்களில் வரும் இதைச் சார்ந்த இயேசுவின் வசனங்களுமே இந்த வசனத்திற்கு அவர் தரும் பொருள். 



"நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று இயேசு அவர்களைக் கேட்டார்.


16 சீமோன் இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.


17 அதற்கு இயேசு, 

"யோனாவின் மகன் சீமோனே,

 நீ பேறுபெற்றவன். 

ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே.

 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். 

உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என்

 திருச்சபையைக் கட்டுவேன்.

இவை முந்தைய வசனங்கள்.

"நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்"  என்ற சீமோனின் பதிலை ஏற்றுக்கொண்ட இயேசு,

 அதற்காக அவரை, 

" நீ பேறுபெற்றவன். " என்கிறார்.

உண்மையில் அவரது பதில் தந்தை இறைவன் அவர் வழியாக வெளிப்படுத்திய பதில் என்கிறார்.

" நான் உனக்குச் சொல்லுகிறேன். 
உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என்
திருச்சபையைக் கட்டுவேன். "

என்ற இயேசுவின் வசனங்களுக்கு,

"சீமொனே, உன் பெயரை பாறை  என்று மாற்றி இருக்கிறேன். 

பாறையைப் போல் உறுதியான உன்னை எனது திருச்சபைக்கு தலைவன் ஆக்குகிறேன்."
என்பது பொருள்.

எப்படி?

"வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்."

இவை அடுத்து வரும் வசனங்கள்.

இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமித்ததால் தானே அவர் கையில் வானகத்தின் திறவுகோல்களைக் கொடுக்கிறார்! 

திருச்சபையின் பணியே நம்மை வானக வீட்டிற்கு அழைத்துச் செல்வது தானே!

வானக வீட்டின் திறவுகோல்கள் இப்போது இராயப்பர் கையில்,

வானக வீடு இயேசுவின் வீடு. தன் வீட்டு சாவிகளையே இயேசு இராயப்பர் கையில் கொடுத்திருக்கிறார்.

"எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்"

என்றால் 

"விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உனக்கு சர்வ அதிகாரம் உண்டு என்பதுதானே பொருள்?"
.
இயேசு இயேசு விண்ணகம் எய்துமுன் இராயப்பரை

"அருளப்பனின் மகனான சீமோனே," என்ற அவரது இயற் பெயராலேயே அழைத்து,

"இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"

"நீ எனக்கு அன்புசெய்கிறாயா?"

"என்னை நீ நேசிக்கிறாயா ?" 

என்று மூன்று முறை அவருடைய அன்பைப் பற்றி கேள்வி கேட்டு பதில் வரவழைத்து,


"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

 "என் ஆடுகளைக் கண்காணி"

"என் ஆடுகளை மேய்"

என்று அவருக்கு உத்தரவிட்டபோது திருச்சபையின் முழு ஆளுமை பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார்.

பொதுநிலையினர், குருக்கள், ஆயர்கள் 

 என்ற மூன்று பிரிவினருமே தலைவரின் ஆளுமை பொறுப்பின் கீழ் வருகிறார்கள்.

முழுத் திருச்சபையின் ஆளுமை பொறுப்பு முழுவதையும் இயேசு
 இராயப்பரிடம் ஒப்படைத்து விட்டார் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேண்டுமா? 

"இச்சீடரே இவற்றுக்குச் சாட்சி. இவரே இவைகளையெல்லாம் எழுதிவைத்தவர். இவருடைய சாட்சியம் உண்மை என்று அறிவோம்." (அரு. 21:24)

இயேசு கூறியதற்குத் தானே சாட்சி என்று நற்செய்தி எழுதிய அருளப்பரே  ஒப்புதல் அளித்திருக்கிறார்.


வேறு ஏதாவது ஆதாரம்?

இயேசு பாடு படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு உணவின்போது,

சீடர்கள் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
(லூக். 22:24)

இயேசு அவர்களை நோக்கி:


"உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்." (லூக். 22:26)

என்று புத்திமதி கூறி விட்டு இராயப்பரை நோக்கி,


"சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.
32 ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன்.

 நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்." (லூக்.22:31, 32) 

"நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து"

என்று இராயப்பருக்கு மட்டும் அறிவுரை கூறுவது ஏன்?

மற்றவர்களைத் திருத்த வேண்டிய தலைமைப் பொறுப்பை இராயப்பரிடம் ஒப்படைத்து விட்டதால்தான் இவ்வாறு கூறுகிறார். 

ஆக இராயப்பர் என்ற பாறையின் மேல்தான் இயேசு தனது திருச்சபையை கட்டினார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

நண்பர் சாலமோனின் பிரச்சனை என்ன?

"இராயப்பர் திருச்சபையின் தலைவர் அல்ல" என்ற தன் கருத்துக்கு ஆதரவாக ஆதாரத்தை  உருவாக்க வேண்டும் . 

அதாவது இல்லாத ஆதாரத்தை உருவாக்க வேண்டும்.

அதற்கு அவர் பிடித்துக்கொண்ட வார்த்தைகள்:

" நான் உனக்குச் சொல்லுகிறேன். 
உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என்
திருச்சபையைக் கட்டுவேன். "

இவ்வார்த்தைகளின் கிரேக்க மூலத்திற்கு சென்று பொருள் தேடுகிறார்.

"உன் பெயர் "பாறை."  என்ற வசனத்தில் உள்ள பாறைக்கு உரிய கிரேக்க வார்த்தை 
"Petros".

அதாவது கல் (Stone)

"இந்தப் பாறையின்மேல்" என்ற வசனத்தில் உள்ள பாறைக்கு உரிய கிரேக்க வார்த்தை "Petra".

அதாவது பாறை.(Rock)

 சாலமோனின் வாதம்:

இராயப்பர் வெறும் கல் மட்டும்தான். பாறை அல்ல.

  "இந்தப் பாறையின்மேல்"
என்றால் "என் மேல்".

அதாவது 

"பாறை ஆகிய என் மேல்   என் திருச்சபையை கட்டுவேன்"
 என்று ஆண்டவர் சொல்கிறார் என்று சாலமன் சொல்கிறார்.

அதாவது 

"திருச்சபையின் தலைவர் நானே"  என்று இயேசு கூறுவதாக சாலமன் சொல்கிறார்.

சாலமோனின் வார்த்தைகளை வைத்து சொல்லவேண்டுமானால் இப்படி சொல்ல வேண்டும்:

அதாவது,

"சீமோனே, நீ வெறும் கல் தான்.

கல்மேல் திருச்சபையைக் கட்ட முடியாது.

ஆனால் நான் பாறை. பாறையாகிய என்மேல் தான் என் திருச்சபையைக் கட்டுவேன்."

என்று இயேசு சொல்வதாக சாலமோனின்  வார்த்தைகள் கூறுகின்றன.

அதாவது இராயப்பர் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு இயேசுவிடம் கேட்டது போலவும்,

 இயேசு அவரைப்பார்த்து,

 "நீ வெறும் கல் தான். உனக்கு தலைமைப்பதவி கொடுக்க முடியாது. அது என்னிடமே இருக்கும் "

என்று கூறுவது போல் இருக்கிறது!

ஆனால் எந்த இடத்திலும் இராயப்பர் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை, அது வேண்டும் என்று விண்ணப்பிக்கவும் இல்லை.

அது இயேசுவே தானாக அவருக்கு கொடுத்த பதவி.

எந்த இடத்திலும் 

"நான்தான் திருச்சபையின் தலைவன்"

 என்று இராயப்பர் பீத்திக் கொள்ள வில்லை.

அப்படியானால் சாலமோனின் வார்த்தைகளை எப்படி எடுத்துக் கொள்வது?

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment