Friday, October 16, 2020

திருமண உடை



             திருமண உடை.
___________________________________


அரசன் அளித்த திருமண விருந்து உவமையில்,

அவனது கட்டளைப்படி

அவன் ஊழியர்கள்   வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்க்கின்றனர். 


 அமர்ந்திருந்தோரைப் பார்க்க வரும் அரசன்   அங்கே திருமண உடையணியாத ஒருவனைக் காண்கிறான்

 அரசன் பணியாளரை நோக்கி, 

 "கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் " என்கிறான்.

உவமையை வாசித்த நண்பர் ஒருவர்,

"அரசனது கட்டளைப்படிதானே அவனது ஊழியர் வீதிகளில் கண்ட
நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டி வந்தனர்.

அழைத்து வரப்பட்டவர்களுள் ஒருவர் திருமண உடை அணியாமல் வந்ததற்காக

 அவரை ஏன் கையும் காலும் கட்டி  வெளி இருளில் தள்ளச் சொன்னார்?"

என்று கேட்கிறார்.

உவமை என்றால் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புரிய வைப்பதற்காக கூறப்படும் கதை.

அதன் அடிப்படையிலேயே தான் கதை கூறப் பட்டிருக்கும்.

கதை கேட்போர் சொல்லப்படும் கதையில் உள்ள கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

   
நம் ஆண்டவர் விண்ணரசை, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பிடுகிறார்.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டு: 

1.ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட இனமாகிய யூதர்கள் அவரது அரசுக்குள் வர மறுக்கிறார்கள்.

அவருடைய சீடர்கள்  சென்று அழைத்த  புறவினத்தார் ஆண்டவருடைய அரசுக்குள் வருகிறார்கள்.

யூதர்கள் தேர்ந்து கொள்ளப்பட்ட இனமாக இருந்தாலும்,  இறையரசு உலகினர் அனைவருக்கும் உரியது.

 

2: அக்கால வழக்கப்படி மன்னன் யாரையாவது திருமண விருந்துக்கு அழைத்தால்

 வருபவர்கள்  விருந்துக்கு வரும்போது உடுத்த வேண்டிய  உடையை வழங்குவான்.   

அவர்களுடைய சொந்த உடை எதுவாக இருந்தாலும்,

விருந்துக்கு வரும்போது

வழங்கப்பட்ட உடையைத்தான் அணிந்து   வர வேண்டும்.

அழைக்கப்பட்டவன் ஒருவன் அவனுக்கு கொடுக்கப்பட்ட உடையை அணியாமல் வந்திருக்கிறான்.

அதனால்தான் அவனுக்கு அரசனால் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இறை அரசுக்குள் வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை விளக்கவே திருமண உடை நிகழ்ச்சி.

திருமண உடை எதைக் குறிக்கிறது?

நாம் ஞானஸ்நானம் பெறும்போது குருவானவர் நம்மேல் ஒரு தூய வெள்ளை உடையை  போர்த்துவார்.

உடையின் தூய்மையான வெள்ளை நிறம்

 ஞானஸ்நானத்தின்போது நமது ஜென்மப் பாவம் மன்னிக்கப்படும்போது நமது ஆன்மா பெறும் தூய்மையைக் குறிக்கும்.

தூய்மையான உள்ளத்தோடுதான் கிறிஸ்தவ வாழ்வுக்குள் நுழைகிறோம்.

பெற்ற தூய்மையை நமது வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

  பெற்ற தூய்மையைக் கடைசி வரை பாவ  அழுக்குப் படாமல் காப்பாற்றினால்தான் 

இறை அரசுக்குள் நுழைய முடியும்.

உவமையில் வரும் திருமண உடை 
ஞானஸ்நானத்தின்போது நாம் பெறும் தூய்மையைக்  குறிக்கிறது.

திருமண விருந்து உவமை மூலம்
 ஆண்டவர் நமக்குச் சொல்வது :

 இறையரசு அனைவருக்கும் உரியது.

தூய்மையான இருதயம் உள்ளவர்கள்தான் அதற்குள் நுழைய முடியும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

ஞானஸ்நானத்தின்போது நமது ஆன்மா பரிசுத்தம் ஆவது எப்படி?

பரிசுத்த ஆவியினால்.

பரிசுத்த ஆவி நம்மிடம் இறங்கி வரும்போது நமது ஜென்மப் பாவம்  மன்னிக்கப்பட்டு நமது ஆன்மா பரிசுத்தமாகிறது.

பெரியவர்கள் ஞானஸ்நானம் பெறும் போது ஜென்மப் பாவத்தோடு, எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

நமது பரிசுத்தமான ஆன்மா பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாறுகிறது.

பரிசுத்த ஆவியின் ஆலயத்தைத் தொடர்ந்து பரிசுத்தமாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

பரிசுத்த ஆவியின் உதவி இருந்தால் தான் இந்த கடமையை
நம்மால் நிறைவேற்ற  முடியும்.

உறுதிப்பூசுதல் என்னும் தேவத் திரவிய அனுமானத்தைப் பெறும்போது பரிசுத்த ஆவி தனது அருள் வரங்களால் நம்மை கிறிஸ்தவ வாழ்வில் திடப்படுத்துகிறார்.

தந்தை நம்மை படைத்தார்.

மகன் நம்மை இரட்சித்தார்.

பரிசுத்த ஆவி நம்மை அர்ச்சிக்கிறார்.

ஆனாலும் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாக இருப்பதால்,

கடவுள் நம்மை படைத்தார், இரட்சித்தார், அர்ச்சிக்கிறார்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது 
பரிசுத்த ஆவி மட்டுமா நம்மிடம் வருகிறார்?

ஞானஸ்நானம் கொடுக்கும் போது,

"பிதா, சுதன், பரிசுத்த ஆயியின் பெயராலே, நான் உன்னைக் கழுவுகிறேன்" என்றுதான் குருவானவர் சொல்கிறார்.

நம்மிடம் வருவது 'மூவொரு கடவுள்'.


விண்ணக விருந்துக்கு நம்மை அழைத்திருக்கும்  விண்ணக அரசர்   நாம் அங்கு செல்லும்போது அணியவேண்டிய உடையாகிய பரிசுத்த தனத்தை நமக்கு தந்திருக்கிறார்.

அதில் பாவ அழுக்கு படிந்தால் அது விருந்துக்கு உரிய ஆடையின் தகுதியை இழந்துவிடும்.

பாவ அழுக்கு ஆடையோடு விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

வெளியே உட்கார்ந்து   பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.

விருந்துக்கு செல்லும் நாம் அணிந்திருக்கும் வெண்ணிற ஆடையை அழுக்குப் படாமல் பாதுகாப்போம்.

அழுக்குப் பட நேர்ந்தால் பச்சாத்தாப நீரால் துவைத்து சுத்தமாக வைத்திருப்போம்.

பரிசுத்த ஆவியின் துணையோடு பரலோக விருந்தில் கலந்து கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment