Tuesday, October 13, 2020

"அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்."(லூக்.11:37)

"அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்."
(லூக்.11:37)
*************************************

மக்கள் எல்லோரும் இயேசுவின் கையால் குணம் பெறவும்,

 அவரது நற்செய்திக்கு செவி மடுக்கவும் அவர் சென்றவிடமெல்லாம்  சென்றார்கள்.

ஆனால் பரிசேயரும், சதுசேயரும், மறை நூல் அறிஞரும் 

அவரது  போதனைகளில் குற்றம் கண்டுபிடிக்கவும்,

 சாபாத்  நாளில் அவர் வியாதியஸ்தரை  குணமாக்குகிறாரா என்பதைக் கண்காணிக்கவும்,

அவரைப் பிடித்துக் கொல்வதற்கான வழிமுறைகளைத் தேடவுமே அவர் பின்னாலே சென்றார்கள். 

அப்படிப்பட்ட பரிசேயர்களில் ஒருவன் இயேசுவை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறான்.

இயேசுவும் அவரது அழைப்பை ஏற்று விருந்துக்குச் செல்கிறார்.

இயேசுவுக்கு  பரிசேயன் எப்படி நடந்து கொள்வான் என்பது தெரியும்.

யார் எப்படி நடந்து கொண்டாலும் இயேசு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதற்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவார்.

பரிசேயனது வீட்டில் இயேசு சாப்பிட அமர்ந்தார்.

பரிசேயன்  "இயேசு உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு  வியப்படைந்தான்."


இயேசு கை கால்   கழுவுவாவது பற்றி  வாசிக்கும்போது எனக்கு மற்றொரு பரிசேயன் வீட்டில் இயேசுவின் அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறது.

லூக்காஸ் 7ம் அதிகாரத்தில் இதேபோல்தான்

பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். 

அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்.

பாவி ஒருத்தி இயேசுவின் பாதங்களை கண்ணீரால் கழுவிய போது 

பரிசேயன் , "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அப்போது இயேசு அவனை நோக்கி,

"நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை:

இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்."
என்றார்.
( லூக்.7:44)


அந்த பரிசேயன் இயேசு அவன் வீட்டுக்குள் வந்தபொழுது, அவரது பாதங்களைக் கழுவத் தண்ணீர் கொடுக்வில்லை என்று இயேசுவே
சொல்கிறார்.

 இந்த பரிசேயனும்  இயேசுவின் மேல் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே 

கால் கையை கழுவ தண்ணீர் கொடுக்காமல் இருந்திருப்பானோ என்று என் மனதில் தோன்றுகிறது.

எது எப்படி இருந்தாலும் இயேசு இந்த சந்தர்ப்பத்தை தனது நற்செய்தியைக் கூற பயன்படுத்திக் கொள்கிறார்.


பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு (letter) மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

  சட்டத்தின் நோக்கத்தை (spirit)  பற்றி கவலைப்படுவது இல்லை.

கழுவுவதின் நோக்கம் சுத்தப்படுத்துதல். 

மனிதனுக்கு உடலும், ஆன்மாவும் இருக்கிறது.

நமது உடல் கண்ணுக்கு  வெளியரங்கமாக தெரியக் கூடியது.

 ஆன்மா வெளியே தெரியாதது.

சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உடலுக்கு பொருந்துவது போலவே ஆன்மாவுக்கும் பொருந்தும்.

ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு உடலைவிட ஆன்மாவே முக்கியம்.

இயேசு உலகிற்கு வந்தது நமது ஆன்மாவை பரிசுத்தமாக்க, உடலைக் கழுவுவதற்காக அல்ல.

அவர் பாவிகளைத் தேடி வந்தார்.

பாவிகள் அகச் சுத்தம் இல்லாதவர்கள்.

அதாவது,

 அகத்தில் பாவம் உள்ளவர்கள்.

பாவிகளின் உள்ளத்தில் உள்ள பாவ அழுக்கை நீக்கி அதைப் பரிசுத்தப் படுத்துவதற்கே இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.


வைத்தியர் நோயாளியைக் குணப்படுத்த போவது போல 

இயேசு பாவிகளை மீட்க உலகிற்கு வந்தார்.

இயேசு மத்தேயுவின் வீட்டில் உணவு அருந்திய போது,

 பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, 

"உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை."  என்றார்.

இந்த பரிசேயன் இயேசு சாப்பிடு முன் கை கழுவாததை  ஒரு பெரிய குற்றமாகக் நினைக்கிறார்.

ஆகவே இயேசு சொல்கிறார்.

"பரிசேயரே, கிண்ணத்தையும் உணவுப் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். 

உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன." என்கிறார்.

அதாவது 

"ஒரு பாத்திரத்தின் உள்ள அழுக்கைப் பார்க்கும் நீங்கள் ஏன் உங்கள் உள்ளத்தில் உள்ள தீமையை, அதாவது, பாவங்களை பார்ப்பதில்லை?" என்று கேட்கிறார்.

வெளிபுறத்தை (உடலை) உண்டாக்கியவரே

 உட்புறத்தையும் (ஆன்மா) உண்டாக்கினார்.

உடல் சுத்தத்தை பேணுபவர்களுக்கு ஏன் ஆன்மாவின் சுத்தத்தைப் பேண வேண்டும் என்று தோன்றவில்லை?

நம்மையே எடுத்துக் கொள்வோம்.

திருப்பலியில் கலந்து கொள்ள புறப்படும்போது காலையில் குளித்து, உடலைச் சுத்தப்படுத்தி,

முகத்திற்கு பவுடர் போட்டு,

 iron பண்ணிய dress சை style ஆ
போட்டுகொண்டு, 

தலையை style ஆ சீவி,

 கண்ணாடியை பார்த்து நமது அழகை நாமே ரசித்து விட்டு கோவிலுக்கு புறப்படுகிறோம்.

இதெல்லாம் தப்பு இல்லை.

ஆனால் நம்மில் எத்தனை பேர் உடல் சுத்தத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ஆன்மீக சுத்தத்திற்குக் கொடுக்கிறோம்?

தினமும் குளிக்கிறோம், மிக நல்லது.

 ஆனால் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்?

உடலைப் படைத்த கடவுள்தானே ஆன்மாவையும் படைத்தார்?

உடல் அழிந்து போகக் கூடியது,

 ஆன்மா அழியாதது.

 அழிந்து போகக்கூடிய உடலுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை

 ஏன் நாம் ஆன்மாவிற்கு கொடுக்க மறந்து விடுகிறோம்?

நமது ஆலயங்களில் ஆண்டவர் வசிக்கிறார். ஆலயங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு நன்றாக அலங்கரிக்கிறோம். மிகவும் நல்லது.

ஆனால் பரிசுத்த ஆவியின் ஆலயமாகிய நமது ஆன்மாவை

 பாவமாசின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும், புண்ணியங்களால் அலங்கரிக்க வேண்டும் என்று எத்தனை பேருக்கு தோன்றுகிறது? 

உண்மையில் கோவில்  அலங்காரத்தைவிட ஆன்மாவின் அலங்காரம்தான் முக்கியம்.

ஆன்மாவின் அலங்காரம்தான் நம்மோடு விண்ணகத்திற்கு வரும்.

 உலகத்தின் முடிவில் உயிருள்ள பரிசுத்த ஆவியின் ஆலயங்கள்   மட்டுமே விண்ணகத்திற்குச் செல்லும்.

நம்மால் கட்டப்பட்ட ஆலயங்கள் நம்முடன் வராது.

உண்மையில்   வெளி வேடக்காரர்களான பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும் பாவிகள்தான்.

அவர்களையும் தேடித்தான் இயேசு உலகிற்கு  வந்தார்.

அவர்களுக்கும் மற்ற பாவிகளுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது.

அவர்கள் மனதில் பாவங்களை வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்கள் போல் நடமாடினார்கள்.

மற்ற பாவிகள் தாங்கள் பாவிகள்என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர் கொண்டு  வந்தபோது 

அவள் தன்னையே நியாயப்படுத்தவில்லை.

 தன் பாவத்தை ஏற்றுக்கொண்டு மனம் வருந்தினாள்.  இயேசுவும் அவளை மன்னித்தார்.

இயேசு எல்லா பாவிகள் 
மேலும்தான் இரக்கமாக இருக்கிறார்.

 ஆனாலும் தங்கள் பாவங்களை மனதார ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அந்த இரக்கத்தின் பயனை அடைவார்கள்.

நாம் கொரோனாவை நினைக்கும் போதே எவ்வளவு பயப்படுகிறோம்! 

அதனால் நமது உயிருக்கு ஆபத்து என்றுதானே அதைக் கண்டு பயந்து பயந்து ஓடுகிறோம்! 

தினமும் 100 தடவைகள் கைகளைக் கழுவுறோம்! 

ஆனால் கொரோனாவை நினைத்து பயப்படும் அளவுக்கு பாவத்தை நினைத்து  பயப்படுகிறோமா?

பாவ சந்தர்ப்பங்களை விட்டு 
ஓடுகிறோமா?


அடிக்கடி கிருமிநாசினியினால் கைகளை துடைத்துக் கொள்கிறோமே,

 நமது பாவங்களுக்காக அடிக்கடி மனம் வருந்துகிறோமா?

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக திருப்பலிக்குக் கூட போகாது இருந்திருக்கிறோம்.

திருப்பலி,ஜெபம், தவம், பிறர் பணி போன்ற ஆன்மீக காரியங்களுக்காக

 உலக காரியங்களை ஒதுக்கி வைத்திருக்கிறோமா?

பெற்றோர் தங்கள் பிள்ளையை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

நமது உடல்  தன்னுள் இருக்கும் தனது  ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறதா? 

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்.16:26)

சிந்திப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment