Friday, October 2, 2020

*தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே, ஆமென்.*

*தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்.*
*-----------------------------------------------------*
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் காலையில் எழுகிறோம், இரவில் தூங்கப் போகிறோம்.

நமது ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் ஆரம்பிக்கிறோம், முடிக்கிறோம்.

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்"

என்று சொல்லிதான் குருவானவர் நம்மைத் திருச்சபைக்குள் ஏற்றுக்கொண்டார்.

நாம் சொல்வது ஜெபம், வெறும் வார்த்தைகள் அல்ல.

உள்ளத்திலிருந்து வருவதுதான் ஜெபம். வாயிலிருந்து மட்டும் வந்தால் அது வெறும் வார்த்தை மட்டும்தான்.

உள்ளத்திலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து மட்டும் வருகிறதா என்பதை நமது வாழ்க்கையிலிருந்துதான் காண முடியும்.

உள்ளத்திலிருந்து வருவது வாழ்க்கையாக மாறும்.

வாயிலிருந்து மட்டும் வருவது வெறும் காற்றாகப் போய்விடும். 

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நமது செபமும், வாழ்க்கையும் ஒத்துப் போகிறதா என்று தெரியும்.

சமாதானத்தின் பெயரால் சண்டையை ஆரம்பிக்கலாமா?

அன்பின் பெயரால் அடிபிடி சண்டையை ஆரம்பிக்கலாமா?

திரி ஏக  தேவனின் பெயரின்  பெயரால் நாளை ஆரம்பிக்கிறோம்  என்றால் 

நாளின் நமது வாழ்க்கையில்  திரி ஏக  தேவனைப் பிரதிபலிக்கப் போகிறோம் என்று அர்த்தம்.

ஒரே கடவுள், மூன்று ஆட்கள்.

ஆட்கள் வெவ்வேறு, கடவுள் ஒன்று.

மூன்று ஆட்களையும் ஒரே கடவுள் ஆக்குவது எது?

பண்புகள்.(Attributes)

மூவருக்கும் ஒரே தேவசுபாவம்.
மூவருக்கும் ஒரே அன்பு.
மூவருக்கும் ஒரே நீதி.
 மூவருக்கும் ஒரே ஞானம்.

ஒரே மாதிரியான பண்புகள் அல்ல, ஒரே பண்பு.

மூவரும் ஒரே அன்பினால் ஒரே கடவுள்.

ஆள்வகையில் மூவராயினும், ஒரே அன்பினால் ஒரே கடவுளாய் நித்திய காலமும் வாழும் இறைவன்

தனது சாயலாக நம்மைப் படைத்தது நாமும் அன்பினால் ஒரே குடும்பமாக  வாழவேண்டும் என்பதற்காகத்தான். 

"தந்தை மகன் தூய ஆவியின் அன்புடன் இந்த நாளை வாழ தொடங்குகிறேன்."

என்ற எண்ணத்தோடு படுக்கையிலிருந்து  எழுவோம்.

அன்பு, இரக்கம், கனிவு, கனிவு, மன்னிப்பு ஆகிய பண்புகள் மட்டும்  நமது,சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை இயக்க வேண்டும்.

"கோபப்பட மாட்டேன், எரிச்சல் பட மாட்டேன், யாரோடும் வம்புக்குப் போக மாட்டேன், சண்டை போட மாட்டேன் பழிவாங்க மாட்டேன்" என்றெல்லாம் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

"இருட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்ல தேவையில்லை."

ஒளியை ஏற்றினால் இருட்டு தானாகவே போய்விடும்.

ஒளி இருக்கும்வரை  இருட்டு திரும்ப வராது.

அதே போல்தான் நாம் அன்பாய் இருந்தால் எதிர்மறைக் குணங்கள் நம்மிடம் இருக்காது.

நமது ஒவ்வொரு சிந்தனையிலும் அன்பு இருக்க வேண்டும்.

 ஒவ்வொரு சொல்லிலும் அன்பு இருக்க வேண்டும்.

 ஒவ்வொரு செயலிலும் அன்பு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பார்வையிலிலும் அன்பு இருக்க வேண்டும்.

வீட்டில் மட்டுமல்ல,

 வீதியிலும், வேலை பார்க்கும் இடத்திலும், ஓய்வு எடுக்கும் இடத்திலும் 

எல்லோரிடமும் அன்புடன் நடந்து கொண்டால் 

அன்றைய நாளில் நமது அனுபவம் மிகவும் இனிமையாக இருக்கும்.

நாம் தேடிப் போகாமலேயே சமாதானம் நம்மில் குடிகொள்ளும்.

திரியேக தேவன் பெயரால் நாம் நாளை ஆரம்பிக்கும் நாளில்

 அவரது திருச் சித்தத்தை  நிறைவேற்றுவதே நமது முதல் பணியாக இருக்கும்.

நமது சொந்த வேலையாக இருந்தாலும் அதை இறைவனுக்காக செய்ய வேண்டும் என்பதே அவரது சித்தம். 

எதைச் செய்தாலும் அதை இறைவனுக்காகச் செய்தால்

 அதற்குள் இறைவனுக்கு விருப்பம் இல்லாதது நுழையாமல் பார்த்துக்கொள்வோம்.

 உதாரணத்திற்கு அரசு பணிபுரிவோர் இறைவனுக்காக செய்தால் லஞ்சம் உள்ளே போகாது. 

பிறருக்கு நாம் என்ன செய்தாலும் அதை இறைவனுக்கே செய்கிறோம்.

 ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு உதவி செய்வோம். 


தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே நாளை ஆரம்பித்தால்

அன்று என்ன நடந்தாலும் அது அவரது திட்டப்படி தான் நடக்கிறது என்பதை உணர்வோம்.

அவரது திட்டப்படி நடக்கும் எதுவும் அவரது பிள்ளைகளாகிய நமது நன்மைக்காகக்தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்.

ஆகவே என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

என்ன நடந்தாலும் நன்றி  கூறுவோம்.

உலகப் பார்வையில் தடையாகத் தோன்றுவது கூட விசுவாச பார்வையில் திருப்புமுனையாக (Turning point) அமையும்.

என்ன நடந்தாலும் அதில் இறைவனை கண்டால்  அதை அப்படியே இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே" என்று வாயால் சொல்லும் போதே நமது கையினால் சிலுவை அடையாளம் வரைகிறோம்.

சிலுவை நமது மீட்பின் சின்னம்.

இறைமகன் இயேசுவின் சிலுவைப்பலி மூலமாகத்தான்   நமக்கு  மீட்பு வந்தது.

நாம் சிலுவை அடையாளம் வரையும்போது நம்மை நாமே மீட்பிற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

சிலுவை அடையாளத்தோடு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை மீட்பிற்கு இட்டுச் செல்கிறது.

ஆகவே சிலுவை அடையாளத்தோடு நாம் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நாளும் 

நாம்  விண்ணகத்தை நெருங்கும் நாள்.

விண்ணகம்தான் நமது சொந்த வீடு.  விண்ணக வீட்டை நோக்கி உற்சாகமாக நடைபோட அடிக்கடி ஜெபிப்போம் 

*தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே,  ஆமென்.*

லூர்து செல்வம்

No comments:

Post a Comment