Tuesday, October 6, 2020

*"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."*(லூக்.10:42)

http://lrdselvam.blogspot.com/2020/10/1042.html


*"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."*
(லூக்.10:42)
*+++++++++++++++++++++++++++*

கணவன், மனைவி, இரண்டு   பொடியன்கள் Railway Station ஐ நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

"கொஞ்சம் வேகமாக நடங்கள்.
 இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கிறது."

வேகமாக நடந்து பத்து நிமிடத்தில் Station க்கு வந்துவிட்டார்கள்.

"அப்பா எனக்கு அந்த பொம்மை"

" ஏல, ரயிலுக்கு வந்திருக்கிறோமா பொம்மை வாங்க வந்திருக்கிறோமா?"

அப்பாவிற்கு கடை மேல் கோபம் வந்தது.

விண்ணக பாதையில் நடந்து செல்லும் போது குறுக்கே வந்து நமது கவனத்தைத் திருப்பும் சாத்தான் போல அங்கு கடைஇருப்பதாக அவர் நினைத்தார்.

"அப்பா பொம்மை வாங்காம இரயிலுக்கு வர மாட்டேன்."

பொடியன் அழ ஆரம்பித்தான்.

பொம்மை வாங்கியாயிற்று.

"அப்பா, எனக்கு Ice fruit." அடுத்த பொடியன்."

அதுவும் வாங்கியாயிற்று.

" ஏங்க, சீக்கிரம் வாங்க இரயிலுக்கு டைம் ஆயிட்டு." 

எல்லோரும் பிளாட்பாரத்திற்கு வரவும் ரயில் வரவும் சரியாக இருந்தது.

எல்லோரும் ரயிலுக்குள் ஏறி அமர்ந்தார்கள்.

பொடியன்களுக்குக் கொண்டாட்டம்.

ஒருவன்  பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அடுத்தவன் Ice fruit ஐ. சூப்பிக் கொண்டிருந்தான்.

அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். கால்மணி நேரம் பயணம் ஜாலியாக இருந்தது.

திடீரென்று புதிய சத்தம் ஒன்று கேட்டது.

" டிக்கெட், டிக்கெட்."

T.T.E.R .

அப்போதுதான் அப்பாவிற்கு ஞாபகத்திற்கு வந்தது.

பொம்மை வாங்கினோம். Ice fruit
வாங்கினோம்.

டிக்கெட் வாங்க மறந்து போச்சு!

பயணத்திற்கு எது தேவையோ அதை மட்டும் வாங்க மறந்து போச்சு!

என்ன ஆகுமோ தெரியலியே!

இப்படித்தான் அநேக சமயங்களில் நாமும் நடந்து கொள்கிறோம்.

சம்பளம் வரும்  நாளில் கை நிறைய காசு இருக்கும்.

 மனம் நிறைய ஆசை இருக்கும்.

 கண்ட பொருளையெல்லாம் வாங்குவோம், பயன்படும் என்று,  ஆனால் பயன்படுத்த மாட்டோம்.

 ஆனால் தேவையானவற்றை வாங்க வரும்போது, கையில் காசு இருக்காது.

 இதே நிலைதான் நமது ஆன்மிக வாழ்விலும்.

ஆன்மீக வாழ்விற்கு இரண்டு பக்கங்கள் உண்டு,

 ஒன்று வெளியே தெரியக் கூடியது அடுத்தது உள்ளரங்க மானது.

அந்தரங்க ஆன்மீகத்திற்கு உதவுவதற்கே வெளியரங்க ஆன்மீகம்.

 நாம் வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு,

 உள்ளரங்க வாழ்விற்கு :'டாட்டா' காண்பித்து விடுவோம்.

கிறிஸ்மஸ் நெருங்கும். 

வீட்டிற்கு பெயிண்ட் அளிப்போம், 

ஜவுளிக் கடைக்குப் போவோம் ,

வீட்டை அலங்கரிப்போம், 

குடில் அமைப்போம்,

 ஸ்டார் தொங்க விடுவோம்,

 மறுநாள் விருந்துக்கு முந்திய நாளே ஏற்பாடு செய்வோம், 


 நள்ளிரவு திருப்பலிக்கு செல்வோம்,

திரு  விருந்தில் கலந்து கொள்வோம்,

நண்பர்களுடன் சிரித்து மகிழ்ச்சியாய் இருப்போம்,

 காலையில் மட்டன் வாங்கி,  சிக்கன் வாங்கி ஆடம்பரமாய் உணவு உண்போம்.

 ஒன்று மட்டும் செய்திருக்க மாட்டோம், திருப்பலிக்கு முன்

 பாவசங்கீர்த்தனம் செய்திருக்க மாட்டோம். 

புறத்தில் வெளிச்சம், அகத்தில் இருட்டு.

இத்தகைய கிறிஸ்மஸ் கொண்டாட்டம் குழந்தை இயேசுவுக்கு நிச்சயம் பிடிக்காது.

ஞாயிற்றுக்கிழமை,

 அலங்கார உடையணிந்து
பூசைக்குப் போவோம், 

பிரசங்கம் கேட்போம்,

 நன்மை எடுப்போம்,

'Superபிரசங்கம்' என்று சாமியாரை புகழ்வோம்

  ஒன்று மட்டும் செய்ய மாட்டோம்,

 சாமியார் பிரசங்கத்தில்  சொன்னதை வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டோம். 

எங்கு சுகமளிக்கும் ஆவிக்குரிய  கூட்டங்கள் நடந்தாலும் போவோம்,

கையசைத்து, தலையசைத்து சத்தமாக பாட்டு பாடி ஜெபிப்போம்,

 ஆனால் ஆன்மீக வாழ்வில் ஒரு முன்னேற்றமும் இருக்காது.


கோவில் திருவிழா வருகிறது.

 வரி பிரிப்போம், 

நன்கொடை வாங்குவோம்,

 கோவிலுக்கு பெயிண்ட் அளிப்போம்,

 விழாவின் முதல் நாளில் கொடி ஏற்றுவோம்,

 கோவிலை அலங்கரிப்போம்,

 ஒவ்வொரு நாளும் ஒரு சாமியாரை அழைத்து நவநாள் திருப்பலி நிறைவேற்றுவோம்,

 9ஆவது திருநாளிலும்,  பத்தாவது திருநாளிலும் தேர் இழுப்போம்.

 திருவிழா முடிந்து எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுப்போம்.

வரவு செலவு கணக்கு முடிக்கும்போது சண்டை போடுவோம்.

பாவசங்கீர்த்தனம்? அப்படின்னா என்ன?

ஆன்மாவும் உடலும் சேர்ந்த 
மனிதராகையால்

 நமக்கு ஆடம்பரங்கள் தேவை தான், மறுக்க முடியாது.

 ஆனால் உள்ளரங்க ஆன்மீக வாழ்வு இல்லாமல் வெளியரங்கத்தால் ஒரு பயனும் இல்லை.

"தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."

மார்த்தாள் விருந்து தயாரிப்பதில் தீவிரமாக இருந்தாள், ஆனால் மரியாள் நற்செய்திக்கு செவி மடுப்பதில் தீவிரமாக இருந்தாள்.

'மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."

என்று நம் ஆண்டவரே சொல்கிறார்.

 அது மட்டும் தான் ஆன்மீக வாழ்வுக்கு தேவையானது என்றும் ஆண்டவர் சொல்கிறார்.

நற்செய்தியை கேட்பதும் அதன்படி நடப்பதும் தான் ஆன்மீகம்.

வீட்டில் பைபிள்  வைத்திருப்பது மட்டும் ஆன்மீகம் அல்ல.

 பைபிளை திறந்து வாசிப்பது மட்டும்  ஆன்மீகம் அல்ல.

கையில் பைபிளை வைத்துக்கொண்டு எல்லோரிடமும் சவால் விடுவதும் ஆன்மீகம் அல்ல. 

 *பைபிள் வாசித்து அதன்படி வாழ்வது மட்டும் தான் ஆன்மீகம்.*

*கிறிஸ்தவ ஆன்மீகத்திற்கு உயிர் கொடுப்பவை தேவத் திரவிய அனுமானங்கள்.*

அவைதான் நமக்கு வேண்டிய அருள் வரங்களை இறைவனிடமிருந்து பெற்று தரக்கூடிய வாய்க்கால்கள்.

ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், மெய் விவாகம், குருத்துவம்,  ஆகியவை வாழ்வில்  ஒரு முறை மட்டும் பெறக்கூடிய தேவ திரவிய அனுமானங்கள்.

*பச்சாதாபம். நற்கருணை ஆகிய இரண்டு தேவ திரவிய அனுமானங்களையும் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும்  பெறலாம்.*

*நமது உலக வாழ்வில் தண்ணீரும் உணவும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஆன்மீக வாழ்வில் பச்சாத்தாபமும், நற்கருணையும்.*


ஒருவனுக்கு சகலவிதமான நவீன வசதிகள் உள்ள வீடு ஒன்று இருக்கிறது.

இரண்டே இரண்டு வசதிகள் மட்டும் இல்லை.

 தண்ணீர், உணவு.

 வாழ்நாள் முழுவதும் குளிக்காமலும், கால் கை கழுவாமலும், சாப்பிடாமலும் 

A.C வசதியை அனுபவித்துக்கொண்டு

 சோபாவில் உட்காருவான், 

ரத்ன கம்பளத்தின் மேல் நடப்பான்,

 மெத்தையில் படுப்பான், 

T.V பார்ப்பான், 

தண்ணீர் இல்லாத Western toilet ஐப் பயன்படுத்துவான்.

அந்த ஆளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

உலக வாழ்வில் தண்ணீர் உடலிலுள்ள அழுக்கைக் கழுவி சுத்தமாக்குவதுபோல 

*ஆன்மீக வாழ்வில் பச்சாத்தாபம் ஆன்மாவில் உள்ள பாவ அழுக்கை கழுவி பரிசுத்தமாக்குகிறது.*

வாழ்நாள் முழுவதும் குளிக்காமல் இருப்பவனுடைய உடல் எவ்வளவு அசுத்தமாக, நாற்றம் அளிப்பதாக இருக்குமோ,

அப்படியேதான் இருக்கும் வாழ்நாள் முழுவதும் பாவசங்கீர்த்தனமே செய்யாத ஆன்மாவின் நிலையும்.
 

வாழ்நாள் முழுவதும் உணவே அருந்தாத மனித உடலின் நிலை எப்படி இருக்குமோ 

அப்படியே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சுத்தமான இருதயத்தோடு திருவிருந்தில் கலந்து கொள்ளாத ஆன்மாவின் நிலையும்.

வேறு ஆடம்பர வசதிகளை அனுபவிக்கிறோமோ இல்லையோ,

 தினமும் காலையில் குளித்து உடலை  சுத்தமாக்கி விட்டு,

 ருசியான சத்தான உணவை 
உண்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

அதே கவனம் நமது ஆன்மீக வாழ்விலும் இருக்க வேண்டும்.

*நமது ஆன்மாவை பாவக் கறை இன்றி பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.* 

*பாவக் கறை பட நேர்ந்தால் பச்சாத்தாபம் என்னும் தண்ணீரால் அதை உடனே கழுவி சுத்தப்படுத்தி விட வேண்டும்.*

முடிந்தால் தினமும் திருப்பலியிலும்,  திருவிருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

முடியாவிட்டால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் திருப்பலியிலும்,  திருவிருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

*பரிசுத்தமான இருதயத்தோடுதான். திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.*

பரிசுத்தமான இருதயத்தோடு செய்யும் ஜெப தவ முயற்சிகளுக்கு சக்தி அதிகம்.

*நமது ஆன்மீக வாழ்வில் ஒப்புரவு அருட்சாதனத்திற்கும், திருப்பலிக்கும், திருவிருந்துக்கும் முதலிடம் கொடுப்போம்.*

இவை இருந்தால்தான்  மற்ற ஞான முயற்சிகளால் பலன் பெற முடியும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment