Monday, October 26, 2020

"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான்."(எபேசி. 5: 5)

http://lrdselvam.blogspot.com/2020/10/5-5.html


"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான்."
(எபேசி. 5: 5)
5555555555555555555555555555555


"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது." (மத். 6:24)


கடவுள் நம்மைப் படைத்தவர். ஆகவே அவருக்கு ஊழியம் செய்வது நியாயமானது.

ஆனால் பணம் நம்மைப் படைக்கவில்லை.

நாம் தான் நமது வசதிக்காக பணத்தை உண்டாக்கினோம். 

நம்மால் உண்டாக்கப்பட்ட பணத்திற்கு நம்மை படைத்த இறைவனுக்கு நிகரான இடத்தை கொடுப்பது தான் சிலை வழிபாடு.

சிலை உருவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

கடவுளுக்கு கொடுக்க வேண்டிய உன்னத இடத்தை  எதற்கு கொடுத்தாலும் அது சிலையே.

அது ஒரு பொருளாக இருக்கலாம், பதவியாக இருக்கலாம்,  ஆளாய் இருக்கலாம், கருத்தாக இருக்கலாம்,

எதுவாக இருந்தாலும் அததன் இடத்தில் வைக்காமல் இறைவன் இடத்திற்கு உயர்த்தினால்  அது சிலை வழிபாடு.

ஆகவேதான் புனித சின்னப்பர்  

"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை"
என்கிறார்.

இறைவன் மீது வைக்க வேண்டிய ஆசையை ஒருவன் பொருளின் மீது வைத்தால்
 அவன் சிலை வழிபாடு செய்கிறான்.


ஒரு செயலின் தன்மையை அதன் நோக்கத்தை (Intention) வைத்து தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒருவனுக்கு அவன் வகிக்கும் பதவியின் மேல் பற்று இருக்கிறது. தப்பு இல்லை.

பதவியை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே கருத வேண்டும்.

ஆனால் ஒரு பதவியைப் பெறுவதற்காக கிறிஸ்துவை மறுதலிப்பானானால், கிறிஸ்துவை விட உயர்ந்த இடத்தில் பதவியை வைக்கிறான்.

அவன் பதவியைத்தான் வழிபடுகிறான். அதற்குப் பெயர் சிலைவழிபாடு.


"ஏண்டா கோவிலுக்கு வருவதையே நிறுத்தி விட்டாய்?"

"கோவிலுக்கு வந்தும் பயன் ஒன்றும் இல்லையே!"

" சாமியார் நிர்வாகத்தில் நான்கு பள்ளிக்கூடங்கள் உள்ளன. எதிலாவது வேலை தருவார் என்ற எண்ணத்தில்தான் கோவிலுக்கு ஒழுங்காக வந்தேன்.

அவர் வேலை எதுவதும் தருவதாகத் தெரியவில்லை.

C.S.I கோவிலுக்குச் சென்றால் அவர்கள் பள்ளியில் வேலை வாங்குவது எளிது என்று கூறினார்கள். ஆகவே இப்போ அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்."

"அப்போ ஆண்டவரை விட உனக்கு வேலை தான் முக்கியமா?"

"அங்கேயும் அதே ஆண்டவர்தானே!"


"அங்கேயும் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வாய்?"

"கிடைக்கிற இடத்துக்குப் போவேன். எனக்கு முக்கியம் சம்பாத்தியம், அதற்கான வேலை."


"கடவுள்?"

"இப்போ வேலைதான் எனக்குக் கடவுள்."


இப்படிப் பட்டவர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைதான் அவர்கள் வழிபடும் சிலை.

சிலர் ஏதாவது உதவி கேட்டு கடவுளிடம் ஜெபிப்பார்கள்.

கேட்ட உதவி கிடைத்து விட்டால் ஜெபம் நின்று போகும்.


பழையபடி ஏதாவது உதவி தேவைப் படும் போது பழையபடி  ஜெபம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இவர்களுக்கு கடவுள் ஏதாவது வேண்டும் போது பெற்றுத்தரும் Agent மாதிரி!

உலக வசதிகள் மட்டுமே இவர்கள் வழிபடும் கடவுள்.

இவர்களும் சிலை வழிபாட்டினர்தான்!

சிலர் அவர்கள் வசிக்கும் ஊரிலுள்ள கோவிலுக்குப் போகமாட்டார்கள்.

ஆண்டிற்கு ஒரு முறை உவரி, வேளாங்கண்ணி போன்ற தூரத்திலுள்ள திருத்தலங்களுக்கு மட்டும் போவார்கள். 

கேட்டால் ஏதாவது நேர்ச்சை என்பார்கள்.

உள்ளுர் கோவிலில் உள்ள ஆண்டவர்தான் வேளாங்கண்ணியிலும் இருக்கிறார்.

ஆனால் உள்ளுரில் கோவிலுக்கே போகாதவர்கள், குடும்ப ஜெபம் செய்யாதவர்கள், ஜெபமாலையே சொல்லாதவர்கள் வேளாங்கண்ணிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்குப் போனால், என்ன அர்த்தம்?


அவர்கள் ஆண்டவரை வழிபட போகவில்லை.

திருவிழா பார்க்கப் போகிறார்கள் என்று தான் அர்த்தம்.

அவர்களுக்குக் கடவுள் திருவிழா கொண்டாட்டம்தான், யாருக்காகக் கொண்டாடப்படுகிறதோ அவர் அல்ல.

எல்லாவற்றிக்கும் மேலானவராக இறைவனை ஏற்றுக்கொண்டு அவரை வழிபடுகிறவனே இறை வழிபாடு செய்கிறான்.

ஏதாவது பயன் கருதி, அதை அடைவதற்காக மட்டும் இறைவனை வழிபடுகிறவன்,

அவன் கருதும் பயனைத்தான் வழிபடுகிறான்.

இயேசு "நானே வழி" என்று கூறியிருக்கிறார்.

அவரை அடைய தான் அவர் வழி,
பணத்தை அடைய அல்ல.


நம்மைப் படைத்த இறைவனை முழு இருதயத்தோடு ஏற்று, வழிபட வேண்டும்.

'முழு இருதயத்தோடு' என்றால் நமது இருதயம்  இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பொருள்.

இறைவனில், இறைவனுக்காக மட்டும் நம்மையும், நம் அயலானையும் நேசிக்க வேண்டும்.

"உனக்கு நான் வேண்டுமா, அல்லது பணம் வேண்டுமா?" என்று இயேசு கேட்டால்,


"நீர் வேண்டும்" என்று சொல்ல வேண்டுமே தவிர,

"பணத்திற்காக நீர் வேண்டும்" என்று சொல்லி விடக்கூடாது.

"எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே."

"எனக்கு எல்லாம் இயேசுவே" என்று சொன்னால்,

"இயேசு மட்டும்தான் என்னுடையவர் , 

நான் உட்பட வேறு எதுவும் என்னுடையது அல்ல"
என்று தான் பொருள்.

நானே என்னுடையவன் அல்ல.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான் ஒன்றுமில்லாதவன் என்பதுதான் பொருள்.

I am nothing.

ஏதோ something ஆனது நம்மால் அல்ல, இறைவனால்.

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது,

ஒரு நாள் அது ஒரு தெருவின்  ஓரமாக படுத்துக் கிடந்தது.

அத்தெருவில் வந்தோர் போனோர் எல்லாம் அதன் அருகே வந்தவுடன் அதை நோக்கி தலை வணங்கி விட்டு போனார்கள். 

அதற்கு ஒரே ஆச்சரியம்.

"நான் அவ்வளவு முக்கியமானவனா?  

எனக்கே தெரியாமல் போய்விட்டதே! 

வருவோர் போவோர் எல்லாம் என்னை பார்த்து வணங்கி விட்டு போகிறார்களே!"

அதற்கு பெருமை தாங்க முடியவில்லை.

சாயங்காலம் வீட்டிற்குச் சென்றவுடன் தன் மனைவியிடம் தன்னைப் பற்றி பீற்றிக் கொண்டது.

"நான் எவ்வளவு மதிப்புக்கு உரியவன் தெரியுமா?

இன்று நான் ஒரு இடத்தில் படுத்திருக்கும்போது அங்கு வந்தோர்  போனோர் எல்லாம் என்னை வணங்கிவிட்டு போனார்கள் தெரியுமா?"

"சும்மா டூப் விடாதே!"

"டூப்பா? நீயே வந்து பார்.''

மனைவிக் கழுதையை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று படுத்துக் கொண்டது.

என்ன ஆச்சரியம்! எல்லோரும் அதை வணங்கி விட்டுப் போனார்கள்.

மனைவிக் கழுதை சுற்றும் முற்றும் பார்த்தது.

"கொஞ்சம் எழுந்திரு."

"ஏன்?"

"எழுந்திரு சொல்றேன்."

கழுதை எழுந்தது.

"என்னுடன் வா"

உடன் சென்றது. 

"இங்கே படுத்துக் கொள்."

படுத்துக் கொண்டது. அங்கு வந்தோர் யாரும் அதை வணங்க வில்லை.

" அதோ அங்கே பார். நீ அப்போது படுத்திருந்த இடம். நீ இல்லாமலேயே அங்கே வருவோர் போவோர் எல்லாம் வணங்கி விட்டுதான் போகிறார்கள்."

"ஆமா! அப்போ யாரும் என்னை வணங்க வில்லையா?"

"அட மடக் கழுதை. அங்கே ஒரு கோவில் இருக்கிறது.

நீ கோவில் முன்னால் படுத்திருந்திருக்கிறாய்.

கோவிலைப் பார்த்து கடவுளை வணங்கியவர்கள் எல்லாம் உன்னை வணங்கியதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்! "

நம்மில் அநேகர் இப்படித்தான் தங்களுக்கு கிடைக்கும் மரியாதையை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்.

  ஒருவருக்கு அவருடையதாய் முக்கியத்துவம் கொடுப்பது அவர் அவளுடைய மகன் என்பதற்காக மட்டும் தான்.

 ஒருவருக்கு மாணவர்கள் மரியாதை செய்வது அவர் அவர்களது ஆசிரியர் என்பதற்காக மட்டும்தான்.

 அலுவலகத்தில் பதவியில் உள்ளவர்களுக்கு  மற்றவர்கள் மரியாதை செய்வது அவர்களிடம்   உள்ள பதவிக்காக மட்டுமே.


 தர்மம் எடுப்பவன் ஒருவரை நோக்கி கைகூப்பினால் அது அவரிடமுள்ள காசுக்காக மட்டுமே.

ஆனால், நமக்காக மட்டுமே நம்மை நேசிப்பவர்  நம்மைப் படைத்த கடவுள் ஒருவரே. 

 நாமும் கடவுளை 

நமது கடவுள் என்பதற்காக மட்டுமே

 அவரை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்வோம்,

 ஆராதிப்போம்.

அவர் தந்த பணத்தையோ,

 பதவியையோ,

 அல்லது 

வேறு எந்தப் பொருளையோ

அவரை விட அதிகமாக மதிப்பது
.
  சிலை வழிபாடு என்பதை உணர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment