*அன்பு படுத்தும் பாடு.*
*_______________*
வீட்டிற்கு விருந்தாட்கள் வந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு மத்தியானம் எல்லோருக்கும் Special விருந்து.
விருந்து என்று சொன்னவுடனே எல்லோருக்கும் மகிழ்ச்சி பொங்கும்.
ஏனெனில் விருந்து என்றவுடன் அதன் இனிமையும் ருசியும் நமது ஞாபகத்திற்கு வரும்.
ஆனால் விருந்திற்காக பலதரப்பட்ட உணவுவகைகளைத் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பது அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்.
அன்பு இனிமையானது. இதயங்களை இணைப்பது.
நம்மை அன்பு செய்பவர்களை நினைத்தால் நமக்கு மகிழ்ச்சி பொங்கும்.
நாம் நேசிப்பவர்கள் நம்முடன் இருந்தால் ஆனந்தமாக பொழுது போகும்.
ஆனால் இனிமையான அதே அன்பு கடினமானதும் கூட.
இன்பத்திற்கு மட்டுமல்ல துன்பத்திற்கும் அன்புதான் காரணம்.
*கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கும் இயேசுவின் முகத்தை பார்த்தால் இது புரியும்.*
*அன்பு படுத்திய பாடு அவருக்கு மட்டும்தான் நன்கு தெரியும்.*
தான் பெற்றெடுத்த மகன் இயேசுவை அன்பு செய்ததால்
அன்னை மரியாள் பட்ட கஷ்டங்களும், துன்பங்களும்,
வியாகுலங்களும் எவ்வளவு என்று நமக்கும் தெரியும்.
இயேசுவை அன்பு செய்த ஒரே காரணத்திற்காகத்தானே அவருடைய சீடர்கள்
வேத சாட்சிகளாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
ஆயினும் அவருக்காக உயிர்
நீத்ததிலும் அவர்கள் ஆனந்தம் கொண்டார்கள்!
மற்றவர்கள் நம்மை அன்பு செய்யும் போது அவர்களுடைய அன்பின் அரவணைப்பினால் நாம் பெரும் உள்ளத்து இன்பத்திற்கு அளவே இல்லை. உண்மைதான்.
அதனால் நாம் பெறும் ஆறுதலும் இன்பம் அளிப்பது தான், மறுக்க முடியாது.
ஆனால் மற்றவர்கள் நம்மேல் கொண்டுள்ள அன்பு தனியே வருவதில்லை.
தன்னோடு நமக்கென்று சில கடமைகளையும், பொறுப்புகளையும் கூடவே அழைத்து வருகிறது,
புதுமண தம்பதிகளுக்கு இது எளிதில் புரியும்.
திருமணத்திற்கு முன்னால் அவரவர், அவரவர் சாம்ராஜ்ஜியத்தில் சுயமாக ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள்.
அவரவர்க்கு ராஜாவும், ராணியும் அவரவர்களே.
ஆனால் திருமணம் நடந்த வினாடியில் இரண்டு சாம்ராஜ்ஜியங்களும் ஒன்றன் முன் ஒன்று சரண் அடைந்து விடுகின்றன.
கணவனின் சாம்ராஜ்ஜியத்துக்கு மனைவியும் மனைவியின் சாம்ராஜ்ஜியத்துக்கு கணவனும் அதிபதி ஆகி விடுகிறார்கள்.
சும்மாவா?
கடமைகளுடனும், பொறுப்புகளுடனும்.
*இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு அவரையே என்ன பாடு படுத்துவிட்டது!*
*நம்மைப் படைத்த ஒரே காரணத்திற்காகத்தானே அரூபியான அவர் நமது உருவத்தை எடுக்க வேண்டியதாயிற்று!*
*துன்பப்படவே முடியாத அவர் நமக்காக, நம்மை அன்பு செய்த ஒரே காரணத்துக்காக துன்பப்பட வேண்டியதாயிற்று.*
*மரணிக்கவே முடியாத அவர் நம்மை நேசித்த ஒரே காரணத்துக்காக சிலுவைச் சாவை சந்திக்க வேண்டிய தாயிற்று.*
அன்பு தனியே வருவதில்லை,
சில சுமைகளை சுமந்து கொண்டுதான் வருகிறது,
அன்பு செய்யப்படுபவர்களோடு பகிர்ந்து கொள்ள!
அன்பு விசாலமானது.
இறையன்பின் விசாலத்துக்கு அளவே இல்லை.
நமது அன்பு அளவு உடையதுதான் என்றாலும், அதன் அளவை எவ்வளவு வேண்டுமானாலும் விரித்துக் கொண்டே போகலாம்.
இறைவன் நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்கிறார் என்று சொல்லிவிடலாம்.
நமது அன்பை பற்றி அப்படி சொல்ல முடியாது.
ஏனெனில் நாமே அளவு உள்ளவர்கள்.
ஆனாலும் எந்த அளவு நம்மிடம் அன்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது.
நமது அன்பின் அளவை நமது செயல்கள் மூலம் தான் யூகிக்க முடியும்.
*உண்மையான அன்பு தனது செயல்கள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.*
*செயல்கள் அதிகமாக அதிகமாக அன்பின் அளவும் அதிகரிக்கிறது* என்று பொருள்.
அன்னை தெரசாவின் அன்பை அவளது செயல்கள் மூலம் யூகிக்கலாம்.
ஆனால் அவளுடைய அன்போடு நமது அன்பை ஒப்பிட்டுப் பார்த்தால்
சூரிய ஒளியோடு மின்மினிப்பூச்சியின் ஒளியை ஒப்பிடுவதுபோல் ஆகிவிடும்!
"ஒருவனுடைய குணத்தையும், பண்புகளையும், ஆசைகளையும் தீர்மானிப்பது அவனிடமுள்ள அன்புதான்.*
*உண்மையான அன்பு உள்ளவனிடம் நற்குணங்களும் நற்பண்புகளும், நல்ல ஆசைகளும் இயல்பாகவே தோன்றி வளரும்,*
உண்மையான அன்பு இல்லாதவரிடம் இருந்து நற்பண்புகளை எதிர்பார்க்க முடியாது.
நாம் இறைவனை உண்மையிலேயே நேசித்தால் எல்லா நற்பண்புகளும் வளரும்.
இறைவனை நேசிப்பது போல் நடித்தால் நமது பண்புகளும் வெறும் நடிப்பாகத்தான் இருக்கும்.
நாம் நேசிப்பவர்களை நினைக்க நினைக்க அவர்கள் மேல் நமக்குள்ள அன்பு வளரும்.
*இறைவனையும், அவரது அன்பையும், அவரது அன்புச் செயல்களையும் தியானிக்கத் தியானிக்க அவர் மீது நமக்குள்ள அன்பு வளர்ந்து கொண்டே வரும்.*
*தியானத்தோடு கூடிய செபமாலை இறைவன்பால் நமக்குள்ள அன்பை வளர்க்கிறது.*
அவர் நமக்காகவே மனித உரு எடுத்ததையும்,
நமக்காகவே வாழ்ந்ததையும்
நமக்காகவே பாடுகள் பட்டதையும்,
நமக்காகவே சிலுவையில் மரித்ததையும்
நமக்காகவே உயிர்த்து, விண்ணகம் எய்ததையும்
தியானிக்கத் தியானிக்க இறைவன்பால் நமக்குள்ள அன்பு வளர்ந்துகொண்டே வரும்.
*நமக்கு நேசமானவர்களை பற்றி நினைக்க நினைக்க நாம் அவர்களைப்போலவே ஆக ஆசைப்படுவோம்.*
*The more we reflect on whom we love, the more we would desire to reflect them.*
*இறை இயேசுவை பற்றி தியானிக்கத் தியானிக்க அவரைப்போலவே மாறிக் கொண்டிருப்போம்.*
*நற்செய்தியை அறிவிக்கும் இயேசுவைப்பற்றி தியானிக்கும் போது நாமும் நற்செய்தியை அறிவிப்பவர்களாக மாறுவோம்.*
*நமக்காக துன்பப்படும் இயேசுவைப்பற்றித் தியானிக்கும் போது நாமும் அவருக்காக துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.*
*சிலுவையயில் மரித்த இயேசுவைப்பற்றி தியானிக்கும் போது நாமும் அவருக்காக உயிரை விட தயாராக இருப்போம்.*
தன் மகன் மீது நமக்குள்ள அன்பு வளர வேண்டும் என்பதற்காகத்தான
அன்னை மரியாள் ஜெபமாலையை சொல்லச் சொல்லி நம்மிடம் கேட்டிருக்கிறாள்.
தாய் சொல்லைத் தட்டக் கூடாது.
*நாம் ஒரே ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்வது*
*சில நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.*
*அவர்கள் ஏன் திரும்பத்திரும்ப மூச்சு விடுகிறார்களோ தெரியவில்லை!*
நாம் அன்பு செய்பவர்களை எந்த அளவிற்கு சார்ந்து இருக்கிறோமோ,
எந்த அளவிற்கு நம்மை நாமே அவர்கள் முன் தாழ்த்தி கொள்கிறோமோ
அந்த அளவிற்கு அவர்கள் மேல் நாம் கொண்டுள்ள அன்பு வளரும்.
பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு உள்ள அன்பு எப்போது அதிகமாயிருக்கிறது?
அவர்களைச் சார்ந்திருக்கும் போதா?
அல்லது தங்களை தாங்களே சார்ந்திருக்கும் போதா?
நம்மால் எதுவும் இயலாது என்று அறிய வரும்போது நாம் இறைவனை தேட ஆரம்பித்து விடுவோம்.
*எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இறைவனைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணருகிறோமோ*
*அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் மேல் பக்தியும் அன்பும் அதிகம் ஆகும்.*
நமது தேடலும் அதிகமாகும்.
*இறைவன் முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளுகிறவன் மட்டும்தான் விண்ணகத்திற்கு உயர்த்தப்படுவான்.*
நமது அயலான் முன்னிலும் நம்மை தாழ்த்திக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
*அன்பின் காரணமாக மற்றவர்களுக்கு உதவும்போது நம்மை அவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளக் கூடாது.*
*பணிவுடன் சேவை செய்வதுதான் உதவி செய்பவனுக்கு அழகு.*
இதை நமக்கு போதிக்க தான் *இறைமகன் தன்னுடைய சீடர்களின் கால்களை கழுவினார்.*
*யூதாஸின் கால்களைக் கூட கழுவினார்.*
உண்மையான அன்பு உள்ளவர்கள் தங்களுடைய நேசருக்கு பிடிக்காத ஏதாவது ஒரு குணம் தங்களிடம் இருந்தால் அதை கஷ்டப்பட்டாவது திருத்திக் கொள்வார்கள்.
நம்மை அளவுக்கு அதிகமாய் நேசிப்பவர் இறைவன்.
அவருக்கு பிடிக்காதது பாவம்.
நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதற்கு முதல் அடையாளம்
நாம் பாவத்தை விட்டு விடுவதுதான்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் நம்மை நாமே திருத்திக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அன்பில் வளர்கிறோம்.
இறைவன் நம் மீது கொண்ட அன்பின் மூலமாக தனது இயல்பை முழுவதுமாக வெளிப்படுத்துகிறார்.
அன்பே கடவுளின் இயல்பு.
Love is God's Nature.
*ஒளியின் இயல்பு பிரகாசிப்பது.
இறைவனின் இயல்பு நேசிப்பது.*
இறைவன் முற்றிலும் நம்மிடம் இருந்தால் நமது இயல்பு அவரது இயல்பாக மாறிக் கொண்டிருக்கும்.
*இயேசு அன்னை மரியாளிடம் தான் மனித உருவெடுத்தார்.*
*அவள் இயேசுவால் நிறைந்திருந்தாள்.*
*ஆகவே அன்பால் நிறைந்திருந்தாள்.*
தாயைப் போல பிள்ளை என்பார்கள்.
*நமது விண்ணகக் தாய் இறை
அன்பால் நிறைந்திருந்தது போல நாமும் நிறைந்திருக்க முயற்சி எடுப்போம்.*
*ஏனெனில் அன்பு ஒன்றுதான் நிரந்தரமானது.*
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment