கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.
(தொடர்ர்சி
_____________________________
திரு.சாலமோனின் வார்த்தைகளை எப்படி எடுத்துக் கொள்வது?
கி.பி 2020ல் வாழும் சாலமோன் இயேசுவின் வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்கிறார் என்பதைவிட
இயேசுவின் சீடர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதுதான் முக்கியம்.
சாலமோன் கிரேக்க மூலத்தைப் பற்றி பேசுகிறார்.
அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் இயேசு பேசிய மொழி அராமெய்க் (Aramaic).
சாதாரண மக்கள் பேசிய மொழி.
அவர் பேசிய மொழியை சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.
அவர்கள் புரிதல்படி இயேசு சீமோனுக்குப் பாறை என்று பெயரிட்டார்.
அந்த பாறைமேல் தான் தனது திருச்சபையைக் கட்டப்போவதாகக் கூறினார்.
இயேசு கூறியதை சீடர்கள் இப்படித்தான் புரிந்து கொண்டார்கள்.
இப்படித்தான் புரிந்து கொண்டார்கள் என்று எப்படித் தெரியும்?
அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து.
அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை காதால் கேட்டு,
கருத்தில் வாங்கி செயல்பட்டவர்கள்.
அவர்களுடைய புரிதல்படி செயல்பட்டார்கள்.
அவர்கள்தான் ஆரம்ப திருச்சபை.
ஆரம்ப திருச்சபை இயேசுவின் போதனைகள்படிதான் செயல்பட்டது.
இயேசுவின் வார்த்தைகளை வாழ்ந்தது.
இயேசு விண்ணகம் எய்திய பின்
"இராயப்பர், அருளப்பர், யாகப்பர், பெலவேந்திரர், பிலிப்பு, தோமையார், பார்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், தீவிரவாதி என்னும் சீமோன், யாகப்பரின் மகன் யூதா ஆகியவர்கள், தாங்கள் வழக்கமாய்த் தங்கும் மாடியறைக்குப் போனார்கள்."
(அப். 1:13)
அங்கு இயேசுவின் தாய் அன்னை மரியாளோடு, ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒருநாள், அங்கே - ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் கூடியிருக்கையில் - இராயப்பர் அவர்கள் நடுவில் எழுந்துநின்று
யூதாசுக்குப் பதிலாக வேறு அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுக்கும்படி ஆலோசனை கூறுகிறார்.
இயேசு அவர்களுடன் இருந்த காலத்தில் அவர்தான் பேச ஆரம்பிப்பார்.
அவர் விண்ணகம் எய்தியபின்,
சீடர்களோடு,
நூற்றிருபது சகோதரர் கூடியிருந்த சபையில்,
முதல் முதல் பேச ஆரம்பித்தவர் இராயப்பர், இயேசுவின் பிரதிநிதி.
இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் சீடர்களின், அதாவது, ஆதித் திருச்சபையின் தலைவராக இராயப்பர் செயல்பட்டார் என்று.
பரிசுத்த ஆவியின் வருகையின் போது,
"எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்."
பன்னிருவரும் பேசுகிறார்கள்.
மக்கள் திகைத்துப்போய், "இதைப்பற்றி என்னதான் நினைப்பது ?" என்று ஒருவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு மனங்குழம்பி நின்றனர்.
சிலர் "இவர்களுக்கு மதுமயக்கமோ" என்று ஏளனம் செய்தனர்.
அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று,
மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.
எல்லோரும் போதித்தார்கள்.
ஆனால் மக்கள் மனங்குழம்பி நின்ற நின்றபோது
அவர்களுக்கு முதல் முதல் விளக்கம் அளித்தவர் இராயப்பர், தலைவர் என்ற முறையில்.
ஒரு இடத்தில் ஒரு குடும்பம் இருக்கும்போது
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளை வைத்து
யார் அப்பா, யார் அம்மா என்று வெளியில் உள்ளவர்கள் கண்டு கொள்ளலாம்.
அதே போல் தான்,
ஆதி திருச்சபையின் தலைவர் யார் என்று சபை உறுப்பினர்களின் , நடைமுறைகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
ஓடும் ரயிலில் எது எஞ்சின் என்று மற்றவர்கள் சொல்லியா தெரிய வேண்டும்?
பார்த்தவுடன் தெரியாது?
ஆதி திருச்சபை இராயப்பரைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டது.
அவர் ரோமாபுரியைத் தனது மேற்றிராசனமாகக் கொண்டு
போதித்ததால். ரோமாபுரி திருச்சபையின் தலைநகர் ஆயிற்று.
.இராயப்பரின் மரணத்திற்குப் பின் அதன் ஆயரான லீனுஸை (Lynus) இரண்டாவது பாப்பரசராக திருச்சபை ஏற்றுக்கொண்டது.
திருச்சபையின் ஆரம்பத்திலிருந்து ரோமாபுரியின் ஆயர்தான் திருச்சபையின் தலைவர்.
நண்பர் உடனே இதற்கு வசன ஆதாரம் எங்கு இருக்கிறது என்று கேட்பார்.
நற்செய்தி நூல்கள் இயேசு பிறந்தது முதல் விண்ணகம் எய்தும் வரை உள்ள வரலாற்றையே தருகின்றன.
திருமடல்கள் சம்பந்தப்பட்ட அப்போஸ்தலர்கள் தங்கள் போதனையால் மனந்திரும்பிய மக்களுக்கு எழுதிய போதனை விளக்க கடிதங்கள்.
திருச்சபையின் வரலாறு பாரம்பரியத்தை சேர்ந்தது.
பாரம்பரியத்தை நம்பாதவர்களுக்கு அதைப்பற்றி கூறினாலும் புரியாது.
திருச்சபையின் பாரம்பரியப்படி இராயப்பர்தான் ரோமாபுரியின் முதல் ஆயர்.
அவர்தான் திருச்சபையின் முதல் பாப்பரசர்.
குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போகின்றவர்கள் தாய் தந்தையை ஏதாவது குறை சொல்லி விட்டு பிரிந்து போவது போல
கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்தவர்களில் சிலர்தான் பாப்பரசரை ஏதாவது குறை சொல்லி விட்டு பிரிந்து சென்றார்கள்.
எத்தனை பேர் பிரிந்து சென்றாலும்,
இயேசுவின் பிரதிநிதியாகவும்,
திருச்சபையின் தலைவராகவும் இருப்பவர் பாப்பரசர்தான்.
இது வரலாற்று உண்மை.
இதற்கு வசன ஆதாரம் எதுவும் தேவை இல்லை!
திருச்சபை என்னும் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் இரண்டு தூண்கள் பாரம்பரியமும், பைபிளும்தான்.
பைபிள் எழுதி முடிக்கப்படு முன்பே பாரம்பரியம் ஆரம்பித்துவிட்டது.
சிறு பையன்களுக்கு ஒரு விசேசமான குணம் உண்டு.
ஊரணிக் கரையில் நின்றுகொண்டு தண்ணீரைப் பார்ப்பார்கள்.
தண்ணீர் அலைகள் ஏதும் இன்றி அமைதியாக இருக்கும்.
அவர்களுக்கு அந்த அமைதி பிடிக்காது.
ஒரு சிறு கல்லை எடுத்து தண்ணீருக்குள் எறிவார்கள்.
கல் விழுந்த இடத்தில் அலைகள் தோன்றி எங்கும் பரவும்.
அதைப் பார்த்து அவர்கள் ரசிப்பார்கள்.
அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு.
இதே போல்தான் சிலர் யாராவது அமைதியாய் இருந்தால் அதைப் பொறுக்காமல்
ஏதாவது ஒரு சொல்லைப் போட்டு அமைதியைக் கெடுத்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
இந்த ரீதியில் தான் இன்று சம்மந்தமே இல்லாத சிலர் திருச்சபைக்குள் சொற்களை வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய சொல் வீச்சு திருச்சபைக்கு ஒன்றும் புதிய அனுபவம் அல்ல.
பிறந்த நாளிலிருந்து,
இயேசுவைப்போல் சிலுவையைச் சுமந்து
வளர்ந்து கொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபை.
வேத கலாபனை காலத்தில் படாத கஷ்டமா?
சிந்தாத இரத்தமா?
தன் ரத்தத்தையே சிந்தி அதன் உரத்தில் வளர்ந்து கொண்டிருப்பது கத்தோலிக்கத் திருச்சபை.
தன் ரத்தத்தை சிந்தி,
அதை நமக்கு உணவாக தந்து கொண்டிருக்கும் நமது ஆண்டவர் இயேசு நம்மை நம்மோடு இருந்து
நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இயேசு காட்டுகின்ற வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம், விண்ணகத்தை நோக்கி.
யார் என்ன வசைமாரி பொழிந்தாலும்,
நமது திருப்பயணம் தொடரும்,
வெற்றி பெறும்.
நம்மை விட்டு பிரிந்து சென்ற நண்பர்களும்
நம்மோடு இணைந்து திருப் பயணத்தில் பங்கு கொள்ள இறைவனை வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment