http://lrdselvam.blogspot.com/2020/08/blog-post_31.html
பைபிள் வழி நிலை வாழ்வு.
****************************************
ஒரே புகை வண்டியில் அருகருகே அமர்ந்து
ஒரு கத்தோலிக்க குருவானவரும்,
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு விண் வெளிப் பயணியும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
குருவானவர் அமைதியாக பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார்.
பயணியின் கண்கள் குருவானவரது முகத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தன.
வெகுநேரம் கழித்து,
"Hello!"
"Yes"
"உங்களோடு இரண்டு வார்த்தை பேசலாமா?"
"தாராளமாக."
"எனது விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளியில் வெகுதூரம் பலமுறை பயணித்திருக்கிறேன்
ஆனால் ஒரு போதும் எங்கும் கடவுளைக் காணவில்லை.
கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்,
ஆனால் நான் அவரைப் பூமியிலும் காணவில்லை, விண்வெளியிலும் காணவில்லை.
என் கண்களுக்கு புலப்படாமல் அப்படி அவர் எங்கேதான் இருக்கிறார்?"
"கடவுள் எங்கும் இருக்கிறார். அவரைப் பைபிள் வழியாகப் பார்த்தால் மட்டுமே தெரிவார்".
"கொஞ்சம் பைபிளைத் தாருங்கள்."
குருவானவர் கொடுத்தார்.
பயணி பைபிளை கண்ணுக்கு முன் வைத்துக்கொண்டு, உற்று நோக்கினார்.
"ஒரு புத்தகம் மட்டுமே தெரிகிறது.
கடவுள் தெரியவில்லை."
"உங்கள் எண்ணங்கள் எங்கு இருக்கின்றன?"
"எனது மனதில்."
"உங்களது மனது எங்கே இருக்கிறது?"
"எனக்குள்."
"நான் உங்களைப் பார்க்கிறேன், ஆனால் உங்களுக்குள் இருக்கும் மனது எனக்குத் தெரியவில்லையே!"
"தெரியாது. எனெனில் மனது ஊனக் கண்களுக்குத் தெரியாது.
உங்களுக்கும்தான் மனது இருக்கிறது. எனக்கும் தெரியவில்லை."
"அதாவது ஊனக் கண்களுக்குத் தெரியாதது எல்லாம் இல்லை என்று அர்த்தம் இல்லை. சரியா?"
"நீங்கள் பேசுகிறீர்கள்.
உங்களது எண்ணங்களை வெளியிடுகிறீர்கள்.
எண்ணங்கள் மனதில்தான் இருக்கின்றன.
ஆகவே நீங்கள் வெளியிடும் எண்ணங்களை வைத்து
அவை இருந்து புறப்படுகிற மனது
இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
எனது புத்தியின் மூலமாக."
" காரணமில்லாமல் காரியமில்லை என்பது புத்திக்குத் தெரியும்.
பிரபஞ்சத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அது இல்லாமல் பிரபஞ்சம் தோன்றியிருக்க முடியாது என்று புத்திக்கு தெரிந்திருக்க வேண்டுமே!
அந்தக் காரணத்தைத்தான் கடவுள் என்கிறோம்."
காரணமில்லாமல் காரியமில்லை, அப்படியானால் கடவுளுக்கும் ஒரு காரணம் வேண்டுமே, அது யார்?"
"நாம் பயணம் செய்யும் இந்த புகைவண்டிக்கு எத்தனை பெட்டிகள்?
"12 பெட்டிகள் இருக்கலாம்."
"அப்படியே வைத்துக் கொள்வோம். 12வது பெட்டியை எந்தப் பெட்டியோடு கோர்த்திருக்கிறார்கள்?"
"11வது பெட்டியோடு."
"அதாவது 12-ஆவது பெட்டியை இழுப்பது 11ஆவது பெட்டி. சரியா?"
"சரி."
"அப்படியே ஒவ்வொரு பெட்டியையும் இழுப்பது அதற்கு முந்திய பெட்டி. சரியா?"
"சரி."
"இரண்டாவது பெட்டியை இழுப்பது முதல் பெட்டி. முதல் பெட்டியை இழுப்பது எது?"
"எஞ்சின். உண்மையில் எல்லா பெட்டிகளையும் இழுப்பது எஞ்சின்தான்."
"எஞ்சினை இழுப்பது?"
"எஞ்சினை எதுவும் இழுக்கவில்லை. அதுதான் எல்லா பெட்டிகளையும், இழுத்துக்கொண்டு போகிறது."
"இப்போ புத்தியில் ஒன்று பட வேண்டுமே!
பெட்டிகள் எதுவும் தாமாகவே அசைய முடியாது.
ஒவ்வொரு பெட்டியின் அசைவிற்கும் காரணம் அதற்கு முந்திய பெட்டி,
ஆனாலும் எல்லாப் பெட்டிகளின் அசைவுக்கும் ஆதி காரணம் எஞ்சின்.
ஆதி காரணத்துக்கு, அதாவது, முதல்
காரணத்துக்கு, இன்னொரு காரணம் இருக்க முடியாது.
ஆதி காரணமாகிய எஞ்சின் தானாக இயங்குகிறது.
அது இயங்குவதால் தான் மற்ற பெட்டிகள் இயங்குகின்றன.
கடவுள் படைப்புகள் அனைத்திற்கும் ஆதி காரணர்.
அவள் தாமாகவே இருக்கிறார் அவருக்கு காரணம் இருக்க முடியாது.
கடவுள் நமக்குப் புத்தியைக் கொடுத்திருப்பதே அதன்மூலம் தன்னைப் பார்ப்பதற்காகத்தான்."
"அப்படியானால் பைபிள் எதற்கு?"
"ஒருநாள்.உங்கள் அறையைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் சென்று விட்டீர்கள்.
நீங்கள் வந்து கதவைத் திறந்து பார்க்கும்போது மேஜையின் மேல் ஒரு அழகான செல்போன் இருக்கிறது
உங்கள் புத்தியில் என்ன படும்?"
''யாரோ கதவைத்திறந்து உள்ளே வந்து மேஜையின் மேல் செல்போனை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்."
"யாரோ என்றால்?"
"போனை மேஜை மீது ஒரு ஆள்தான் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த ஆள் கருப்பா சிவப்பா, நெட்டையா குட்டையா, தடியா பொடியா என்று அவரைப்பற்றிய விபரம் எதுவும் தெரியாது..
அவராக வந்து சொன்னால்தான் உண்டு."
"Correct. பிரபஞ்சத்தை படைத்தவர் கடவுள் என்று மட்டும் நமது புத்தி சொல்லும்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர் அவரது பண்புகள் எப்படிப்பட்டவை
என்று கடவுளாகவே நமக்கு வெளிப்படுத்தினால் தான் உண்டு
பைபிள் மூலமாக கடவுள் தன்னையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
பைபிள் இறைவனின் வார்த்தை,
ஆகவே கடவுளைப்பற்றி அறியவேண்டுமானால்
விண்வெளிக்குப் போக வேண்டாம்.
பைபிளுக்குள் போனால் போதும்.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்."
"அதாவது என்னை பைபிள் வாசிக்க சொல்லுகிறீர்கள்."
"Correct."
எதற்காக பைபிள் வாசிக்கிறோம்?
நம்மைப் படைத்த இறைவனைப் பற்றி அறிய,
இறைவனைப் பற்றி அறிய மட்டும்தான் பைபிள் வாசிக்கிறோம்.
பைபிள் ஒரு அறிவியல் நூல் அல்ல.
உலக வரலாற்று நூல் அல்ல.
புவியியல் நூல் அல்ல.
மருத்துவ நூல் அல்ல.
சிலர் பைபிளை வாசித்து விட்டு
" இது அறிவியலுக்கு முரண்பாடாக இருக்கிறதே" என்பார்கள்.
நண்பர் ஒருவர் ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தை வாசித்து விட்டு
"பிரபஞசம் உண்டானது பற்றி பைபிள் கூறும் கருத்துக்களும் அறிவியல் கூறும் கருத்துக்களும் ஒத்துப் போகவில்லையே."
என்று குறைபட்டுக் கொண்டார். .
இப்படி குறைபட்டுக் கொள்வது
ஒரு சினிமா பைத்தியம் பள்ளிக்கூடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு,
" இது சினிமா தியேட்டர் மாதிரி இல்லையே"
என்று சொல்வது போல் இருக்கிறது.
அறிவியல் கடவுளால் படைக்கப்பட்ட ஜடப் பொருளைப் (matter) பற்றியது.
பைபிள் உருவமற்ற, ஆவியாகிய (Spirit) இறைவனைப் பற்றியது.
இறைவன் தான் எல்லா படைப்புகளுக்கும் ஆதி காரணர் என்ற உண்மையை பைபிள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
அது அறிவியல் பாடம் அல்ல.
இறைவார்த்தையை வாசித்தால் மட்டும் போதாது. அதைச் சரியாக புரிந்து கொள்ளவும் வேண்டும்.
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற அறிவியல் செய்தியை
பைபிளில் தேடுவது
சமையலறைக்குப் போய் ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்குச் சமம்.
இறைவனுடைய அன்பு, இரக்கம், கனிவு, நீதி, சர்வவல்லமை, ஞானம் போன்ற பண்புகள்
அளவற்ற அன்பின் காரணமாக அவர் மனிதனை படைத்ததிலும்,
அவன் பாவம் செய்தபோது
அவன் மீது இரங்கி,
அவன் செய்ய வேண்டிய பாவப்
பரிகாரத்தை அவரே செய்வதற்காக.
மனிதனாய் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பரியாக்கியதிலும்
வெளிப்பட்டதை அறிய பைபிள் வாசிக்க வேண்டும்.
நாம் மீட்புப் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு விளக்குவது இறைவார்த்தை.
பைபிள் நமது இரட்சண்யத்தின் பாதை.
விண்ணகம் செல்ல வழிகாட்டுவது பைபிள்,
இறைவார்த்தை ஆன்மீக வாழ்விற்கான உணவு,
இவ்வுலக வாழ்விற்கான உணவு அல்ல.
இது நமது ஆன்மாவின் இரட்சணிய வரலாறு
உலக வரலாறு அல்ல.
கிறிஸ்து அகுஸ்துஸ் செசார் மன்னன் ரோமையை ஆண்டு கொண்டிருந்தபோது பிறந்த ஒரு வரலாற்று மனிதர்.
கடவுள் உண்மையாகவே மனிதனாய் பிறந்தார்.
ஆனால் அவர் மனிதனாகப் பிறந்தது உலக வரலாற்றை படைப்பதற்காக அல்ல
ஆன்மீக, இரட்சண்ய வரலாற்றைப் படைப்பதற்காக.
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இவ்வுலகில் நாம் எப்படி ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும் என்பதற்கான வழி காட்டக் கூடியது.
அவர் வாழ்ந்து பாடுபட்டு மரித்தது நமது ஆன்மீக விடுதலைக்காக,
அரசியல் விடுதலைக்காக அல்ல.
அவரது நற்செய்தி நமது அருளாதார வாழ்வுக்காக
பொருளாதார வாழ்வுக்காக அல்ல.
நாம் பைபிள் வாசிப்பது பட்டிமன்றத்தில் பேசுவதற்காக அல்ல
Quiz programme ல் கலந்து கொள்வதற்காக அல்ல,
வசனங்களை எடுத்துக்கொண்டு சண்டை போடுவதற்காக அல்ல,
வாழ்ந்து மீட்பு அடைவதற்காக,
அறிவியல் மூலம் இறைவனை காண புத்தி மட்டும் போதும்.
ஆனால் பைபிள் மூலம் இறைவனை காண புத்தியோடு விசுவாசமும் வேண்டும்.
புத்தியை விசுவாசம்தான் மிக முக்கியம்.
புத்தி அறிவை மட்டுமே கொடுக்கும்,
விசுவாசம் தான் இறைவன் மீது அன்பை கொடுக்கும்.
அறிவினால் மட்டும் இரட்சண்யம் கிடைக்காது.
விசுவாசம் இருந்தால் தான் இரட்சண்யம் கிடைக்கும்.
புத்தி மட்டும் உள்ளவனுக்கு சந்தேகங்கள் நிறைய வரும்.
கேள்வி கேட்டே நேரத்தை வீணாக்குவான்.
விசுவாசம் உள்ளவனுக்கு சந்தேகமே வராது.
ஆழ்ந்த விசுவாசத்தோடு இறைவார்த்தையை வாசிப்போம்,
வாசித்ததைத் தியானிப்போம்.
தியானித்ததை வாழ்வோம்.
பைபிள் வழியே நிலை வாழ்வுக்குள் புகுவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment