தொண்ணுற்றொன்பதை விட ஒன்று தான் பெரிது.
***"*************************************
தகுதித் தேர்வு ஒன்று நடந்தது.
அதில் வெற்றி பெற்றால்தான் interview attend பண்ண முடியும்.
100 one word answer கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
ஒரு நபர் 49 வினாக்களுக்கு சரியான விடை எழுதிவிட்டான்.
51 வினாக்களுக்கும் தவறான விடை.
தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது அவனது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஒரே எண்ணம்
"ஒரு கேள்வியால் போய்விட்டதே!"
ஒரு மார்க்கினால் வெற்றி போய்விட்டதே!
பெற்ற 49 மார்க்குகள் அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை..
தவறாக பதில் எழுதிய 51ல் 50 ஐப் பற்றி அவன் கவலைப் படவில்லை.
அவன் கவலைப் பட்டதெல்லாம்
தவறவிட்ட ஒரு மார்க்குக்காகத்தான்.
இந்த நிலையில் பெரிய நம்பராகப் படுவது 49 அல்ல. 50 ம் அல்ல,
ஒன்று மட்டும்தான்!
ஒருவன் 90 ஆண்டுகள் பாவ வாழ்ந்தாலும், அவன் தன் பாவங்களுக்காக வருந்த ஒரு வினாடி போதுமானது.
அவனைப் பொறுத்தமட்டில், அந்த ஒரு வினாடி 90 ஆண்டு வாழ்க்கையை விட முக்கியமானது.
நல்ல கள்ளன் வாழ்நாளெல்லாம் திருடிவிட்டு, வாழ்நாளின் இறுதி நேரத்தில் தன் மனஸ்தாபத்தால் விண்ணகத்தையே திருடிவிட்டான்.
அவன் இயேசுவிடம் சொன்னதெல்லாம்,
"இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்"
மட்டும் தான்.
இயேசு உடனே,
"இன்றே (underlined)
நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று
நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்"
என்றார்,
கேட்டதைக் கேட்டவுடன் கொடுத்துவிட்டார்.
அந்த வினாடிதான் அந்த திருடனின் வாழ்க்கையில் மிக முக்கியமான வினாடி.
ஊதாரிப் பிள்ளை உவமையில் தந்தை தன்னோடு தன் சொற்படி, கேட்டு வாழ்ந்த மூத்த மைந்தனுக்கு
அவன் நல்லவனாக வாழ்ந்ததற்காக விழா எடுக்கவில்லை.
ஆனால் தன் பங்கு சொத்தை எல்லாம் ஊதாரித்தனமாக செலவழித்த இளைய மகன்
மனம் திரும்பியதற்காக விருந்தோடு விழா எடுத்தார்.
விழாவிற்கான காரணம் மனம் திரும்பியதுதான்.
ஒரு கதை சொல்வார்கள். கற்பனையாக இருந்தாலும் கருத்துள்ள கற்பனை.
ஒரு நாள் கடவுள் தன்னுடைய சம்மனசுக்களை எல்லாம் அழைத்து,
"உலகமெல்லாம் சென்று தேடி, உங்கள் கண்ணுக்கு எது மதிப்பு உயர்ந்த பொருளாகத் தெரிகிறதோ அதை எடுத்து வந்து எனக்குப் பரிசாகத் தாவேன்டும்.
மிகச்சிறந்த பரிசுப்பொருளுக்கு மிகச்சிறந்த சன்மானம் கொடுக்கப்படும்.
புறப்படுங்கள்."
உடனே கோடிக்கணக்கான சம்மனசுக்களும் உலகெங்கும் தேடி, அவரவர்களுக்குச் சிறந்ததெனப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு விண்ணகம் சென்றனர்.
வரிசையில் நின்று ஒவ்வொருவராகப் இறைத் தந்தையிடம் தங்கள் தங்கள் பரிசைச் சமர்ப்பித்தனர்.
பல கோடிப் பரிசுகளுள் ஒன்றுகூட தந்தைக்குத் திருப்தி அளித்ததாகத் தெரியவில்லை.
ஒரு குட்டிச் சம்மனசு ஒரு சிறிய சிமிழில் தனது பரிசை வைத்துக் கொண்டு, கடைசியில் வந்து தந்தையிடம் சமர்ப்பித்தார்.
மற்ற சம்மனசுக்கள் பெரிய பெரிய பொருட்களைக் கொண்டு வந்திருந்ததால், எல்லோரும் சின்னச் சிமிழைப் பார்த்து சிரித்தனர்.
ஆனால் குட்டிச் சம்மனசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
தந்தை சிமிழை வாங்கி திறந்து பார்த்தார்.
முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
"எனக்கு மிகவும் பிடித்தமான பரிசு. இந்தப் பரிசை முன்னிட்டு இன்று விண்ணுலகில் மிகப்பெரிய விழா."
தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன் எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
புனித தோமையார் எழுந்து,
''ஆண்டவரே, அந்த சிமிழில் என்ன பரிசு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளக் கூடாதா?"
"நீ என் மகன் உயிர்த்ததையே அவரை
பார்த்தால் தான் நம்புவேன் என்று சொன்ன ஆனாச்சே!
பொடியா இங்கே வா. நீ கொண்டு வந்த பரிசு என்னவென்று எல்லாருக்கும் சொல்லு."
குட்டிச் சம்மனசு சொன்னது,
"எல்லா சம்மனசுக்களும் பரிசைத் தேடுவதில் busy யாக இருந்தபோது, நான் ஒரு கோவிலுக்குச் சென்று, நற்கருணை நாதர் அருகே உட்கார்ந்து,
"உமது தந்தைக்குப் பிடித்தமான பரிசு ஒன்றைக் காண்பியுங்களேன்'
என்றேன்.
அவர் என்னைப் பார்த்து,
"அதோ பார், ஒரு இளைஞனை.''
"பார்க்கிறேன், அவன்அழுது கொண்டிருக்கிறான்."
"அவனிடம் போய் ஏன் அழுகிறாய் என்று கேள். அப்பாவுக்குப் பிடித்தமான பரிசு கிடைக்கும்."
நானும் அந்த இளைஞனிடம் சென்று விசாரித்தேன்.
"நான் ஒரு பெரிய பாவி.
நெடுநாள் பாவியாகவே வாழ்ந்தேன்.
நேற்றுதான் பைபிள் வாசிக்கும்போது இறைமகனே மனிதனாகப் பிறந்து,
பாடுபட்டு, தன் உயிரையே பலியாகக் கொடுத்து என் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்திருக்கிறார்
என்பதை முழுமையாக உணர்ந்தேன்.
நான் செய்த பாவங்களுக்காக வருந்தி அழுது கொண்டிருக்கிறேன்." என்றான்.
உடனே சிமிழை எடுத்து அவனது கண்ணீரில் ஒரு சொட்டை மட்டும் பிடித்து, ஆண்டவரிடம் நன்றி கூறிவிட்டு நேரே இங்கே வந்தேன்.
நான் கொண்டு வந்திருப்பது மனஸ்தாபக் கண்ணீர்த் துளி!"
எல்லோரும் இயேசுவையே பார்த்தார்கள்.
அவர் முகத்தில் பேரின்பமய புன்சிரிப்பு!
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
இறை மகனாகிய அவர் மனிதனாகப் பிறந்தார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
கடவுளாகிய அவர் மனிதர் செய்த அவமானங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
சுற்றூணில் கட்டப்பட்டு கொடுக்கப்பட்ட கசையடிகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
தலையில் சூட்டப்பட்ட முள்முடியை ஏற்றுக்கொண்டார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
பாரமான சிலுவையைச் சுமந்து சென்றார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
தன் இரத்தத்தை எல்லாம் கடைசி சொட்டு வரைச் சிந்தினார்.
அந்த ஒரு துளி கண்ணீரை வரவழைக்கத்தானே,
சிலுவை மரத்தில் தன்னையே பலியாக்கினார்.
கடவுளே உயிரை விலையாகக் கொடுத்து வாங்கியது அந்த ஒரு துளி கண்ணீர்!
இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவராலேயே மிகவும் அதிகமாக மதிக்கப்படுவது பாவியின் மனஸ்தாபக் கண்ணிர் தான்!
ஆயனுக்குத் தன்னுடன் பத்திரமாக இருக்கும்
தொண்ணுற்றொன்பது ஆடுகளை விட, காணமல் போன ஒரு ஆடுதான் முக்கியம்.
அதைக் கண்டுபிடிக்க என்ன துன்பம் வந்தாலும் ஏற்றுக் கொள்வான்.
"அதைக் கண்டுபிடிக்க நேர்ந்தால்,
தவறிப்போகாத தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சியைவிட,
அவ்வொன்றைப்பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சி பெரிதாம் என்று
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.18:13)
அவனைப் பொறுத்தமட்டில் கையிலிருக்கும் தொண்ணுற்றொன்பதை விட
காணமல் போன ஒன்றுதான் பெரியது.
இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடித்தான் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்தார்.
மனந்திரும்வோம், இயேசுவின் பாதத்தை நம் கண்ணீரால் நனைப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment