Sunday, August 2, 2020

"அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" (மத். 14:18)


 "அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" (மத். 14:18)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

"வா, ராஜா, வா. வச்சாக் கிடைக்கும். ஒண்ணு வச்சா இரண்டு,
இரண்ட வச்சா நாலு,
 நாலு வச்சா எட்டு..
"வா, ராஜா, வா. வச்சாக் கிடைக்கும்
பத்து வச்சா இருபது..
நூறு வச்சா இருநூறு."

சப்தம் வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய கூட்டம்.

கூட்டத்துக்குள்ளே நுழைந்து பார்த்தால், ஒரு சீட்டுக் காரன். 

நாலைந்து சீட்டுக்களைப் பரப்பிப் 
போட்டிருந்தான். ஒவ்வொரு சீட்டிலும் 

சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள் பணம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சீட்டுக்காரன் அஞ்சாறு சீட்டுக்களைக் கலைத்து, ஒரு சீட்டை உறுவினான்.

உறுவிய சீட்டுக்கு ஒப்பான சீட்டில் பணம் வைத்தவனுக்கு double பணம்.

மற்றவர்கள் வைத்த பணம் சீட்டுக்காரன் பாக்கெட்டுக்கு!

ஒருவனுக்கு double. மற்றவர்களுக்கு இழப்பு.

பலருக்கு குறுக்கு வழியில் இழப்பு, ஒருவனுக்கு குறுக்கு வழியில் வருமானம்!


அந்த இடத்தை விட்டு கொஞ்ச தூரம் போனால், ஒரு பையன்,

"இன்றே கடைசி. ஒண்ணு கொடுத்தால் ஒரு லட்சம்,"

"என்னடா அது, ஒண்ணு கொடுத்தால் ஒரு லட்சம்?"

"லாட்டரி டிக்கட் சார். ஒரு ரூபாய் கொடுத்து வாங்கினால், ஒரு லட்சம்
ரூபாய் கிடைக்கும் சார்."


குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க உலகம் ஆயிரம் வழிகள் காட்டுகிறது.

நேர் வழியில் சம்பாதிக்கவும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

இவ்வுலகத்தைப் பொறுத்தமட்டில் பணம் சம்பாத்தியம் செய்ய  முதலில்  நாம்  பணத்தை முதலீடு (investment) செய்ய வேண்டும்.

முதலீடு செய்யக் கையில் பணம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது முதலீடு செய்து,

வருமானம் வந்தவுடன் கடனை அடைக்க வேண்டும்.

அதனால்தான் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை"
 என்று சொன்னார்கள்.


ஆன்மீகத்தைப் பொறுத்த மட்டில் முதலீட்டுப் பிரச்சனை இல்லை.

நமது வீட்டில் தங்கவும், சாப்பிடவும் முன்பணம் கேட்பார்களா?

நாம் ஒன்றுமில்லாமையாக இருந்தோம்.

ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை படைத்த இறைவன், நமக்கு என்ன கொடுத்தாரோ அது தான் நம்மிடம் இருக்கிறது.

நாமும், நம்மிடம் இருப்பதும் அவருக்கே சொந்தம்.

உறவின் அடிப்படையில் நாம் அவருக்குச் சொந்தம் ஆகும் போது, அவர் நமக்குச் சொந்தமாகி விடுகிறார்.

தாய் குழந்தை பெறும்போது,
குழந்தை எந்த அளவுக்கும் தாய்க்குச்
சொந்தமோ

அந்த அளவிற்கு தாயும் குழந்தைக்குச் சொந்தமாகி விடுகிறாள்.

அதே உறவு உரிமையில்தான் நாம் கடவுளைத் 'தந்தையே' என்று அழைக்கிறோம்.

பிறந்த குழந்தை தாயின் பாலைத் குடித்து வளர்வதுபோல, 

நமது ஆன்மா ஆண்டவரின் அருளைக் குடித்து வளரவேண்டும்.

உலகியல் வாழ்வில் பணம் சம்பாதிக்க வேண்டியிருப்பது போலவே.

ஆன்மீக வாழ்வில் அருள் சம்பாதிக்க வேண்டும்.

அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை.

அருளை எங்கேயிருந்து சம்பாதிக்க?

அருளுக்கு உரியவர் ஆண்டவர் ஒருவர்தான்.

உலகில் 'பணம் ஈட்டுவோர்' பணத்தை முதலீடாக போட்டு, ஈட்டுகின்றனர்.

அருளை ஈட்ட ஆன்மீக அருளைத்தான் முதலீடாகப் போடவேண்டியிருக்கும்.

ஆனால் நம்மிடம் சுயமாக அருள் இல்லை. 

அருளுக்கு உரியவர் கடவுள் மட்டுமே.

ஆகவே கடவுளிடமிருந்துதான் அருளைப் பெற வேண்டியிருக்கிறது.

கடவுள் நம்மைப் படைக்கும்போதே தம்முடைய பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவற்றில் முக்கியமான பண்பு அன்பு. 

அன்புதான் நம்மைக் கடவுளின் பிள்ளைகள் ஆக்குகிறது.

ஆகவே பிள்ளைகளுக்கு உரிய உரிமையோடு அவரிடமிருந்து அருளைப் பெறலாம்.

ஞானஸ்நானத்தின்போது நாம் பாவமன்னிப்புப் பெற்றதோடு,

கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கான அருளையும் இறைவனிடமிருந்து பெற்றோம்.

ஆனால் நாம் எதுவும் செய்யாமல் அருளைக் கேட்டுக் கொண்டே இருக்க முடியாது.

நாம் சோம்பேறிகளாக இருக்க கடவுள் நம்மைப் படைக்கவில்லை.

ஆகவே அன்பின் உதவியாலும், முதலில் பெற்ற அருளின் உதவியாலும் நாம் அவரிடமிருந்தே அருளைச் சம்பாதிக்க வேண்டும்.

இறைவனை அதிகமதிகமாய் அன்பு செய்வதாலும்,

 நமது அயலானை அன்பு செய்வதாலும், 

அந்த அன்பின் துணை கொண்டு நற்செயல்கள் புரிவதாலும், 

செபதவ முயற்சிகளாலும் நாம் இறையருளை ஈட்ட வேண்டும்.


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக அன்பு செய்கிறோமோ,

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நற்செயல்கள் புரிகிறோமோ,

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செபதவ முயற்சிகளில் ஈடுபடுகிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக இறையருளை ஈட்டலாம்.

இவ்வுலகில் அதிக பணம் ஈட்டுவோர், அதிக வசதிகளோடு வாழ்வது போல,

அதிக அருளை ஈட்டுவோர் விண்ணுலகில் அதிக பேரின்பத்தோடு வாழ்வர்.

இப்போது ஒரு அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.

முதலில் கடவுள் நாம் கேட்காமலேயே அன்பையும், அருளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவர் பகிர்ந்த அருளின் உதவி கொண்டு, 

நாம் பிறரோடு நமது அன்பை சொல், செயல் வடிவத்தில் பகிரும்போது நாம் இறையருளை ஈட்டுகிறோம்.

நாம் நமக்குத் தந்ததைப் பிறரோடு பகிரும் போதுதான் இறையருள் அதிகமாகக் கிடைக்கிறது.

நாம் நம்மை மட்டுமே அன்பு செய்து கொண்டிருந்தால் நமக்கு எதுவுமே கிடைக்காது.

பிறருக்கு அன்புச் செயல்கள் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் இயேசு.

சென்றவிடமெல்லாம் அன்புச் செயல்களே செய்தார்.

அவர் செய்த அன்புச் செயல்களில் ஒன்று,

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு 

 ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வயிறார உணவளித்த புதுமை,   

இயேசுவின் ஒவ்வொரு செயலில் இருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்வது போல,

இந்தப் புதுமையிலிருந்தும் நாம் ஒரு ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் உணவளித்த மக்களை அவர் ஒன்றும் இல்லாமையிலிருந்துதான் படைத்தார்.

அவர் நினைத்திருந்தால் உணவை ஒன்றுமில்லாமையிருந்து படைத்தே கொடுத்திருக்கலாம்.

அதற்குரிய வல்லமை அவரிடம் இருக்கிறது.

பின் ஏன் அப்படிச் செய்யாமல், ஒரு பையனிடம் இருந்த கொஞ்ச உணவை வாங்கி, அதை பலுகச் செய்தார்?

ஒரே காரணம், உறவை வளர்க்க.

உறவு என்பது ஒருவர் மற்றவர்களோடு கொண்டிருக்கும் அன்புத் தொடர்பு.

உறவு வளரவேண்டுமானால் அதில்  உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்,

 இறைவன் தன் பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது போல.

முதலில் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அப்புறம் அவரவர்கள் தங்களுக்கு உரியதை உறவினர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் பகிர ஒன்றுமே இல்லாவிட்டாலும். ஒரு புன்னகையாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு பையன்  இயேசுவோடு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொள்கிறான்,

இயேசு அவற்றைப் பலுகச் செய்து ஐயாயிரம் மக்களுக்கு வயிறார உணவளிக்கிறார். 

மறுநாள் தான் நமக்கு அளிக்கவிருக்கும் ஆன்மீக உணவைப் பற்றி அறிவிக்கிறார்.


"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." (அரு. 6:51)


தன்னையே நமக்கு உணவாகத் தரவிருக்கும் திட்டத்தை அறிவிப்பதற்கு முன், 

மக்களை மனதளவில் தயாரிப்பதற்காகத்தான்,

 முந்திய நாள் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்த புதுமையைச் செய்தார்.

முதலில் அளித்தது உடல் உணவு.

மறுநாள் அறிவித்தது தன் உடலையே நமக்குத் தரவிருக்கும் ஆன்மீக உணவு.

அவர் அன்று அறிவித்த ஆன்மீக உணவைத்தான் இன்று நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்.

 தன்னையே நமது உணவாகத் தந்து கொண்டிருக்கும் இயேசுவுக்கு 

நாம் எதையாவது  கொடுக்க வேண்டுமே!

நம்மிடம் சொந்தமாக எதுவுமில்லை.

அப்படியானால் நாம் என்ன செய்ய?

நம்மால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான்,
 
நம்மை முழுவதும் அவரோடு பகிர்ந்து கொள்வதுதான்.

இயேசு அவரை முழுவதும் நம்மிடம் தருவது போலவே நம்மை முழுவதும் அவருக்குக் கொடுத்து விட வேண்டும்.

திருப்பலியின்போது நமக்காக திருச் சிலுவையில் பலியான இயேசுவை இறைத் தந்தைக்கு,

 நமது பலியாக, 

நம்மையும் அவரோடு சேர்த்து

 ஒப்புக் கொடுக்க வேண்டும்.

திருவிருந்தின்போது, தந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு தன்னையே நமது ஆன்மீக உணவாகத் தருகிறார்.

நாம் நம்மை, நமது முழு வாழ்க்கையோடு சேர்த்து, இயேசுவுக்குத் தரவேண்டும்.

இதன் பொருள், இனி நாம் வாழ்வது நமக்காக அல்ல, இயேசுவுக்காக.

இயேசு எதற்காக வாழ்ந்தாரோ அதற்காக, அதாவது, அவரால் படைக்கப் பட்ட நம் அயலானுக்காக.

நாம் இயேசுவுக்காகவும், நமது அயலானுக்காகவும் வாழும் போது,

 இயேசு நமக்குக் கொடுத்த இரண்டு அன்புக் கட்டளைகளையும் நிறைவேற்றுகிறோம்.

அதாவது, நாம் கடவுளை நமது முழு இருதயத்தோடு அன்பு செய்கிறோம்.

நம்மை நாமே அன்பு செய்தது போல. நமது அயலானையும் அன்பு செய்கிறோம்.

நமக்கு ஆன்மாவோடு உடலும் இருப்பதால், உடலைப் பேண உணவும், உணவை வாங்க பணமும் தேவைப் படுகிறது.

நமக்குத் தேவைப்படும் பணத்தையும் நாம்தான் ஈட்ட வேண்டும்.

அப்படியானால் நாம் உலகியல் வாழ்வு வாழ வேண்டுமா?

நிச்சயமாகக் கூடாது. 

உலகில் வாழ்வது வேறு, உலகியலில் வாழ்வது வேறு.

உலக வாழ்க்கைக்காக மட்டும்,

அதாவது இறைவனையும், அவர் தரவிருக்கும் விண்ணக வாழ்வையும் மறந்து,

உலக வாழ்வே சதம் என எண்ணிக் கொண்டு,

உலக வசதிகளை ஈட்டுவதற்காக மட்டும் வாழ்வது உலகியல் வாழ்வு.

ஆனால், இறைவனுக்காக,

 இறைவனை அடைவதற்காக, 

நாம் பெற்ற இறையன்பை
 மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக,

சுருக்கமாகச் சொல்வதானால்

இறைவனையும், பிறரையும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிப்பதற்காக மட்டும்

இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

இவ்வுலக வாழ்வையே இயேசுவுக்காக வாழும் போது அது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

இயேசு தன்னையே நமக்குத் தந்தார், நாம் மட்டும் வைத்துக் கொள்வதற்காக அல்ல,

நம் அயலானுக்கும் அவரைக் கொடுப்பதற்காக.

இறைவன் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம்!

அவருக்காக, அவரோடு, அவரில் வாழ்வதே நமது பாக்கியம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment