"அரசன் வருந்தினான். ஆனால் தன் ஆணையின் பொருட்டும், விருந்தினர்பொருட்டும் அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான்.''
(மத். 14:9)
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான்.
அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.
ஸ்நாபக அருளப்பரைக் கொல்லக்கூடாது என்றிருந்த ஏரோது மன்னனின் எண்ணத்தை
ஏரோதியாளின் மகளுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உறுதிமொழியும்,
அவையில் குழுமியிருந்த விருந்தினர்களும் கொன்று விட்டனர்.
ஏரோது அரசன் ஏரோதியாளை வைத்திருந்தது பெரிய பாவம்.
தனக்குப் புத்திமதி சொன்னதற்காக ஸ்நாயக அருளப்பரைச் சிறையில் போட்டதும் பெரிய பாவம்.
ஆனாலும் அவரைக் கொல்ல மனமில்லாதிருந்தது நல்ல குணந் தான்.
ஆட்டக்காரி அவனிடம் அருளப்பரின் தலையைக் கேட்ட போது ''அரசன் வருந்தினான்."
ஆயினும் அவளது ஆட்டத்தில் மயங்கி அவன் கொடுத்த வாக்குறுதி கொலையில் போய் முடிந்தது.
நற்செய்தி ஆசிரியர்கள் இவற்றை எல்லாம் எழுதியிருப்பது நாம் பொழுது போக்கிற்காக வாசிப்பதற்காக அல்ல.
பைபிளில் தேர்வு எழுதத் தயாரிப்பதற்காக அல்ல.
Quiz programme க்குத் தயாரிப்பதற்காக அல்ல.
சொற்பொழிவுகளில் quote பண்ணுவதற்காக அல்ல.
இதையெல்லாம் நாம் செய்கிறோம். அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் இறைவார்த்தைகளில் நோக்கம் அது அல்ல.
பிறகு எதற்காக?
வாழ்வதற்காக.
ஏரோது அரசன் அருளப்பரைக் கொன்றதை அறிந்து அதிலிருந்து என்ன பாடம் கற்று, அதன்படி வாழ?
நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு ஏரோது இருக்கிறான். அநேக சமயங்களில் அவன்தான் நம்மை இயக்குகிறான்.
அருளப்பரின் மரணத்தை அறிந்த பின்னாவது அந்த ஏரோதுவை வெளியே விரட்ட வேண்டும். அப்போதுதான் இயேசு உள்ளேவருவார்.
ஏரோதுக்கு இயேசுவைப் பிடிக்காது.
இயேசு குழந்தையாய் இருந்தபோது அவரைக் கொல்லத் தேடியவன் ஒரு ஏரோது.
இயேசுவின் முன்னோடியைக் கொன்றவன் ஒரு ஏரோது.
இவனே படையோடு சேர்ந்து இயேசுவை அவமானப்படுத்தி,
எள்ளி நகையாடி,
அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பியவன்.
ஆக இயேசுவின் வாழ்வில் இரண்டு ஏரோதுகள் குறுக்கிட்டிருக்கிறார்கள்.
ஆக இயேசுவுக்கும், ஏரோதுக்கும் ஆகாது.
ஒரு சின்ன திருத்தம். இயேசு பாவிகளைத்தான் அதிகம் நேசிக்கிறார்
ஆகவே அவரைக் கொல்ல நினைத்த ஏரோதுவையோ,
அருளப்பரைக் கொன்றவனும், அவரை அவமானப் படுத்தியவனுமாகிய ஏரோதுவையோ அவரால் வெறுக்க இயலாது.
"உன்னை விரோதிப்பவர்களை நேசி" என்று சொன்னவர் அவர்.
போதித்ததைச் சாதித்தவர் அவர்.
ஆகவே அவர் ஏரோதுவையும் நேசித்தார்.
நான் இயேசுவுக்குப் பிடிக்காத ஏரோது எனக் குறிப்பிட்டது அருளப்பரைக் கொன்ற ஏரோதுவின் குணத்தை.
அருளப்பரைக் கொல்லக் கூடாது என்று நினைத்தது நல்ல குணம்.
ஆனால் ஒரு ஆட்டக்காரியின் ஆசையை நிறைவேற்ற அவரைக் கொன்றது கெட்ட குணம்.
கெட்ட குணம் நல்ல குணத்தை வென்று விட்டது.
இந்த ஏரோது தான்,
அதாவது,
ஏரோதுவின் குணங்கள்தான்,
அதாவது
நல்ல குணமும், கெட்ட குணமும் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளன.
கெட்ட குணம் நல்ல குணத்தைக் கொன்று விடுகிறது.
இந்த ஏரோதுவைத்தான் நாம் வெளியேற்ற வேண்டும்.
நன்மையே உருவான இயேசுவுக்கு நற்குணம் மட்டும் உள்ள இதயத்தை அர்ப்பணிக்க வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமை. கடன் திரு நாள். ஒவ்வொரு ஞாயிறும் ஒழுங்காகப் பூசைக்குப் போகிறோம். நல்ல பழக்கம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் பூசைக்குப் போவதால் திருச்சபையின் கட்டளையை நிறைவேற்றுகிறோம்.
ஆனால் திருப்பலியின் முழுப்பயனையும் அடைய வேண்டுமென்றால் பலி செலுத்தும் குருவானவரோடு ஒன்றித்து திருப்பலியை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
ஆனால் திருப்பலியின்போது நமது உடல் மட்டும் கோவிலில் இருக்கும்.
உள்ளம் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்.
பிரசங்கம் கேட்போம்,
தூங்கிக் கொண்டே.
திவ்ய நற்கருணை வாங்குவோம் ஆண்டவரோடு பேசாமல் பக்கத்து ஆளோடு பேசிக் கொண்டிருப்போம்.
திருமணம் முடிப்பது ஒரு தேவத் திரவிய அனுமானம்.
ஆனால் திருமண வாழ்வில் போடும் சண்டை அதன் பலனை எல்லாம் கொன்றுவிடும்.
ஆண்டவருடைய படைப்புத் தொழிலில் அவருக்கு உதவி செய்வோம். .
ஆனால் அவர் படைத்த பிள்ளைகளை அவர் அன்பில் வளர்க்க மாட்டோம்.
பைபிள் வாசிப்போம்,
அதன்படி வாழமாட்டோம்.
தர்மம் செய்வோம்.
தம்பட்டம் அடிப்போம்.
பங்குச் சாமியாரிடம் போவோம்.
ஞான உதவி எதுவும் கேட்கமாட்டோம்.
திருவிழாவுக்கு வரி கொடுப்போம்.
வரவு செலவில் சண்டை போடுவோம்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
'ஒரு நல்ல காரியம் செய்யும் போதே அதைச் சாகடிக்க எதிர்மறைக் காரியத்தையும் செய்து விடுவோம்.
விளைவு ?
+ + - = 0
எல்லோருடைய வாழ்விலும் அகம், புறம் என்ற அம்சங்கள் உண்டு.
புறவாழ்வை நம்முடன் இருப்போரது கண்களுக்குத் தெரியும். மற்றவர்கள் நமது குணத்தை, அதை வைத்தே மதிப்பீடு செய்வார்கள்.
அகவாழ்வு இறைவனுக்கு மட்டுமே தெரியும். நமது அக வாழ்வை வைத்தே இறைவன் நம்மை மதிப்பீடு செய்கிறார்.
ஒருவன் உலகோர் முன் நல்லவனாகவும், இறைவன் முன் மோசமானவனாகவும் வாழ்ந்தால் அவனை வேடதாரி (hypocrite) என்போம்.
இயேசு அப்படிப்பட்டவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்பார்.
உதாரணத்துக்கு,
ஒருவர் ஏழைகளுக்கு உதவுவதாக முகாம் நடத்தி அப்பகுதியிலுள்ள
வசதி இல்லாதவர்களுக்கு பொருட்களை அள்ளிக் கொடுப்பார்.
எல்லோரும் அவரை 'தர்ம பிரபு' என்பார்கள்.
ஆனால் மனதில் தான் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் தற்பெருமைக்காக, புகழுக்காகச் செய்வார்.
கடவுள் முன் அவருக்கு எந்த பலனும் கிடைக்காது.
அவரது புறவாழ்வை, அக வாழ்வு கொன்றுவிடுகிறது.
புறம் plus
அகம் Minus
இரண்டையும் கூட்டினால்
விடை zero!
ஏரோது அருளப்பரைக் கொல்ல விரும்பவில்லை.
ஆனாலும் ஆட்டக்காரியைத் திருப்திப்படுத்துவதற்காகக் கொன்றான்.
அதேபோல நாமும் ஆண்டவரை மனம் நோகச் செய்ய விரும்புவதில்லை.
ஆனாலும் நம்மை நாமே
திருப்திப்படுத்துவதற்காகக் கடவுளை மனம் நோகச் செய்கிறோம்.
நமது ego வையும், நமது சுய விருப்பங்களையும் தியாகம் செய்து விட்டு,
ஆண்டவருக்காக, ஆண்ட வருடைய மகிமைக்காக மட்டும் நாம் வாழ்ந்தால்தான் நமது உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஏரோது வெளியேறுவான்.
ஆண்டவருக்கு நம் உள்ளத்தில் இடம் கிடைக்கும்.
நல்ல கிறிஸ்தவனாக வாழ்வோம்.
நல்ல கிறிஸ்தவன் என்று பெயர் வாங்குவதற்காக அல்ல.
கிறிஸ்துவுக்காக,
கிறிஸ்துவுக்காக மட்டும்.
சில நல்ல காரியங்களைச் செய்யும் போது உலகத்திடம் கெட்ட பெயர் வாங்க வேண்டியிருக்கும்.
ஆண்டவருக்காக அதைப் பொறுத்துக் கொள்வோம்.
ஆண்டவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அது தான் முக்கியம்.
நமக்கு நிலைவாழ்வைத் தரவிருப்பவர் ஆண்டவர்,
உலகம் அல்ல.
வாழ்வோம்,
நமக்காக அல்ல,
.
நமக்கு வாழ்வைத் தருபவருக்காக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment