Saturday, August 15, 2020

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" (லூக். 11:28)


 "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" (லூக். 11:28)
*****************************************

இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவன்

இயேசுவின் தாய் பேறுபெற்றவள் எனப் புகழ்ந்தான்.

அவன் மரியாளைப் புகழ்ந்தாலும் அது இயேசுவையே போய்ச்சேரும்.

பள்ளியில் அரசுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பையனைப் புகழும்போது,

"இவவளவு திறமை உள்ள பையனைப் பெற்ற தாய் புண்ணியம் செய்தவள்"

என்று புகழ்கிறோம் அல்லவா, அது மாதிரி.

இயேசு தன் போதனையைக் கேட்டு, அதன்படி வாழ்பவர்கள் தன் தாயை விட பேறு பெற்றவர்கள் என்கிறார்.

நாம் நம்   பேறு பெற்ற  அன்னை மரியாளை மகிமைப் படுத்துவது எப்படி?

உலக வழக்கில்

தாய் மதிப்புப் பெறுவது பிள்ளையின் பெருமையால்.

ஆசிரியர் மதிப்புப் பெறுவது மாணவனின் பெருமையால்.

தாய் சொல் கேட்காத பிள்ளையால்  தாய்க்குப் பெருமை இல்லை.

மோசமான மாணவனால் ஆசிரியருக்குப் பெருமை இல்லை.

நாம் நமது அன்புத்தாய்க்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால்,

அவளுடைய திருமகனும், நமது அன்பு ஆண்டவருமாகிய இயேசுவின போதனையை நமது வாழ்வாக்க வேண்டும்.


"கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் தன் தாயைவிடப் பேறுபெற்றவர்கள்" என்று இயேசு சொல்வது 

ஆன்மீக வாழ்வில் நம்மை உற்சாகப் படுத்துவதற்காக.

நாம் உடனே நாம் தேவ அன்னையை விட சிறந்தவர்கள் என்று பெருமை பாராட்டிவிடக் கூடாது.

கடவுளின் சித்தத்தை நிறைவேற்றியதால் நம் அன்னை பேறு பெற்றவர்கள்.

நாம் பேறு பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்றால்,

அன்னையைப் போல நாமும் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

நம் தாய் இறைவனின் 'அடிமையாய்' வாழ்ந்து, அவரது சித்தப்படி வாழ்ந்ததால்தான் பேறுபெற்றவள் ஆனாள்.

நாமும் நம்மையே இயேசுவின் அடிமைகளாக அர்ப்பணம் செய்து,

அவரது போதனைப்படி வாழும்போது நம் தாய் மகிழ்சி அடைவாள்.

மாதாவுக்கு திருவிழா எடுப்பதாலோ, சப்பரங்கள் தூக்குவதாலோ, திருயாத்திரைகள் போவதாலோ, 
காணிக்கைகள் அளிப்பதாலோ

நம் அன்னை பெருமை அடைவதில்லை.

இயேசு மரியாள் பெற்ற பிள்ளை.

நாம் அவளது சுவிகாரப்பிள்ளைகள்.

பெற்ற பிள்ளை எப்படி வாழ்ந்தாரோ அதே போல

சுவிகாரப்பிள்ளைகளாகிய நாமும் வாழவேண்டும்.

இயேசு எப்படி வாழ்ந்தார்?

ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே மரித்தார்.

தன்னைப் பெற்ற அன்னைக்கும்,
வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொதுவாழ்வுக்கு வரும் வரை  தச்சுவேலை செய்து உழைத்தே வாழ்ந்தார்.

பொது வாழ்வில் தன் சொல்லாலும், செயலாலும் நற்செய்தியை அறிவித்தார். 

சென்றவிடமெல்லாம் நன்மைகள் செய்தார்.

நோயாளிகளைக் குணமாக்கினார்.

பாவிகளை நேசித்தார்.

பாவிகளை மன்னித்தார்.

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும்  நன்மையே செய்தார்.

தன்னைக் காட்டிக் கொடுத்தவனை "நண்பனே" என்று அழைத்தார்.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டார்.

நமக்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

தனது பாடுகளுக்கும், மரணத்திற்கும் காரணமானவர்களை மன்னித்தார்.

சுருக்கமாக, தனது போதனைகளை எல்லாம் வாழ்ந்து காட்டினார்.

இயேசு வாழ்ந்தது போலவே நாமும் வாழ்வோம்.

எளிய மனத்தினராய், உலக நாட்டம் இல்லாதவர்களாய் வாழ்வோம்.

தாழ்ச்சியுடன், இறைவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.

எதிரிகளையும் நேசிப்போம்.

நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வோம்.

நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிப்போம். 

மற்றவர்கட்காகக் கஷ்டங்களை ஏற்றுக் கொள்வோம்.

மற்றவர்களுக்காக நமது உயிரையும் தியாகம் செய்யத் தயாராய் இருப்போம்.

நமது வாழ்க்கையால் நம் அன்னையை மகிமைப் படுத்துவோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில்
இயேசுவைப் பார்ப்பார்கள்.

நமது சொல்லாலும், செயலாலும் நாம் மரியாளின் சுவிகாரப் பிள்ளைகள் என்பதை உலகம் அறியும்.

தாயைப் போல பிள்ளை என்பார்கள்.

நமது தாய் தனது வாழ்வில் வியாகுலங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

தாயைப் போல நாமும் நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

நமது தாய் இயேசுவின் சிலுவைப் பாதையில் அவருடனே நடந்தார்கள்.

இயேசு மரத்தினால் ஆன சிலுவையைச் சுமந்தார்.

நமது தாய் வியாகுலமாகிய சிலுவையைச் சுமந்து, தன் மகனைப் பின்தொடர்ந்தார்கள்.

"இதோ ஆண்டவருடைய அடிமை" எனக் கூறி தன் வாழ்க்கையையே இறைப்பணிக்கு அர்ப்பணித்தாள் நம் அன்னை.

அதே போல் நாமும் நமது வாழ்க்கையை இறைப்பணிக்கு அர்ப்பணிப்போம்.

நம்மில் அநேகருடைய மாதா பக்திக்கும், மற்ற புனிதர்களுடைய பக்திக்கும் அடிப்படை,

அவர்கள் நாம் கேட்பதைத் தருவார்கள் என்ற நம்பிக்கை.

அதில் சந்தேகமில்லை.
  
ஆனால் அது மட்டுமே நமது பக்தியின் ஆரம்பமும், நோக்கமுமாக இருந்தால்,

அதன் அடிப்படை சுயநலமாகிவிடும். 


"அம்மா. எனக்கு குழந்தை வரம் தாருங்கள், நான் ஒவ்வொரு ஆண்டும்
உமது திருத்தலத்துக்கு திருயாத்திரை வருகிறேன்.

எனக்கு உடல் நலன் தாருங்கள், நான் மாதா குளத்துக்கு முழங்காலிலேயே செல்கிறேன்,

என் கால்வலியைச் சுகமாக்குங்கள். நான் வெள்ளிக் காலை காணிக்கை யாக்குகிறேன்......."

இப்படியான நேர்சசைகளை நீட்டிக் கொண்டே போகலாம்.

இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.

தாயிடம் வேண்டியதைக் கேட்க பிள்ளைகளுக்கு முழு உரிமை இருக்கிறது.

ஆனால் அது மட்டுமே பக்தியின் நோக்கம் ஆகிவிடக்கூடாது.

"அம்மா, நான் உமது பிள்ளை. தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும்.

நீங்கள் பாவ மாசின்றி பரிசுத்தமாக வாழ்ந்தீர்கள்.

நானும் பரிசுத்தமாக வாழ உதவி செய்யும்.

நீங்கள் எங்களுக்கு மீட்பரைப் பெற்றுத் தந்தீர்கள்.

நன்றி. நாங்கள் மீட்பு அடையும்படி வாழ உதவியருளும்.

நீங்கள் வியாகுல மாதாவாக வாழ்ந்தீர்கள். எங்களுக்கு  வரும் துன்பங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வரம் தரும்படி உமது திருமகனை மன்றாடும் ........"

இவ்வாறாக நமது ஆன்மீக வாழ்வின் தாயாக மரியாளை ஏற்பதுதான் உண்மையான மாதா பக்தி.

மற்ற புனிதர்கள் மேல் உள்ள பக்தியும் இதே அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.

அவர்கள் புனிதமான வாழ்க்கை வாழ்ந்து, விண்ணகம் சென்றுள்ளார்கள்.

நாமும் அவர்களைப் போல வாழ்ந்து விண்ணகம் செல்ல நமக்கு உதவும்படி
அவர்களை வேண்டுவதுதான் உண்மையான பக்தி.

பக்தி என்பது ஆன்மீக அன்பு. 

அன்பு என்பது பொதுவான வார்த்தை. இறைவன் மீதும்,

புனிதர்கள் மீதும்

 நாம் கொண்டுள்ள அன்பை பக்தி என்கிறோம். 

பக்தி என்பது ஆன்மீக சம்பந்தப்பட்டது.

ஆகையால், ஆன்மீக வளர்ச்சிக்காக  அதைப் பயன்படுத்தும்போது தான்

 அதன் முழுப்பயனையும் அனுபவிக்கலாம்.

நம்மிடம் ஆன்மாவுடன் உடலும் இருக்கிறது. அதுவும் கடவுளுடைய படைப்புதான்.

ஆகவே உடல் நலன்களுக்காக பக்தியைப் பயன்படுத்தி இறைவனிடம் வேண்டலாம்.

 இறைவனிடம் வேண்டும்படி புனிதர்களையும் வேண்டலாம்.

தப்பே இல்லை.

ஆனால், உடல் சம்பந்தப்பட்ட நலன்களை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு

ஆன்மீக நலனை முற்றிலும் மறந்து விடக்கூடாது. 

மறந்தால், அது

காய்கறி வெட்டுவதற்காக வாங்கிய  கத்தியை எடுத்து, 

பென்சில் சீவுவதற்கு மட்டும் பயன்படுத்துவதற்குச் சமமானது.

நமது ஆன்ம நலனுக்காக நம்மை முற்றிலும அர்ப்பணித்தால்,

உடல் நலனை ஆண்டவரே பார்த்துக்
கொள்வார்.


"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

இயேசுவின் போதனைப்படி வாழ்வதன் மூலம்

கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுவோம். 

விண்ணகப் பேறு உடையவர்கள் ஆவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment