"போ பின்னாலே, சாத்தானே,"
(மத்.16:23)
**************************************
"யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்." (மத்.16:17)
"போ பின்னாலே, சாத்தானே,"
(மத்.16:23)
17வது வசனத்தில் இயேசு இராயப்பரை
"பேறுபெற்றவன்."
என்று கூறுகிறார்.
23 வது வசனத்தில் அதே இயேசு. அதே இராயப்பரை
"சாத்தானே"
என்று கூறுகிறார்.
"பேறுபெற்றவன்." என்றால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
"சாத்தான்" கடவுளுக்கு எதிரானவன்.
ஒரு சில நிமிடங்களில் பேறு பெற்றவர் எப்படி சாத்தான் ஆனார்?
இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து,
''நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டபோது,
சீமோன் இராயப்பர் மறுமொழியாக,
"நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார். அதற்கு இயேசு,
"
"யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்.
ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே."
அதாவது தந்தை சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை வெளிப்படுத்தியதால் இராயப்பர் பேறுபெற்றவர்.
ஆனால், இயேசு,
''தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும்,
கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்
என்று தம் சீடர்களிடம் சொன்னபோது
இராயப்பர்,
''ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்."
ஆண்டவர் எதற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதை செய்ய வேண்டாம் என்று இராயப்பர் சொன்னதால் இயேசு
"போ பின்னாலே, சாத்தானே," என்றார்.
இயேசு மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கவே பாடுகள் பட்டு மரிக்க வேண்டும் எந்த திட்டத்தோடு மனிதனாகப் பிறந்தார்.
மனிதனுடைய பாவத்திற்கு காரணவிருந்த சாத்தான்,
மனிதன் இரட்சிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தான்.
ஆகவே எந்த செயலால் மனிதரை மீட்க இயேசு திட்டமிட்டிருந்தாரோ அதை வேண்டாம் என்று சொன்னதால்
ஆண்டவர் இராயப்பரைச் சாத்தான் என்றார்.
அதாவது சாத்தான் நினைத்ததை சொல்கிறார் என்ற பொருளில் சொன்னார்.
தந்தை வெளிப்படுத்தியதைச் சொன்னபோது பேறுபெற்றவர் என்றார்.
சாத்தான் நினைத்ததைச் சொன்னபோது சாத்தான் என்றார்.
கடவுளுடைய கருத்துக்களுக்கு எதிரான மனிதனுடைய கருத்துகள் சாத்தானுடைய கருத்துக்களே.
இயேசு எதைச் சொன்னாலும் அது எக்காலத்திற்கும் பொருந்துவதாக தான் இருக்கும்.
ஆகவே அவர் இராயப்பருக்குச் சொன்னதிலிருந்து நாமும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் உயிருள்ள இறைவார்த்தையை வாசிக்கிறோம்.
தன்னிலே உலகம் கெட்டது அல்ல,
ஏனெனில் அது இறைவனால் படைக்கப்பட்டது.
தான் படைத்த யாவும் நல்லவை என்று இறைவனுக்கு தெரியும்.
ஆனாலும், எந்தப் பொருளை எந்த நோக்கத்திற்காக கடவுள் படைத்தாரோ,
அந்தப் பொருளை அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல்
அதன் எதிர் நோக்கத்திற்காகப் நாம் பயன்படுத்தினால்
அது கடவுளுக்கு எதிராக பாவம்.
உலகத்தில் வாழ்ந்து, அதை நமது ஆன்மீக வாழ்விற்காக பயன்படுத்தி விண்ணகம் நோக்கி நடக்க வேண்டிய நாம்
விண்ணகத்தை மறந்து நாம் வாழும் உலகத்தையே சதம் என்று எண்ணி, அதற்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தால்
நாம் இறைவனை தேர்ந்தெடுப்பதற்குப் பதில்
உலகையே தேர்ந்தெடுக்கிறோம்.
அதாவது உலகை இறைவனின் எதிரியாக மாற்றுகிறோம்.
இறைவனின் எதிரி சாத்தான்.
சாத்தான் உலகை இறைவனுக்கு எதிராக வேலை செய்ய பயன்படுத்திக் கொள்கிறான்.
ஆகவே உலகிற்காக உலகையே சதம் என்று எண்ணி வாழ்பவர்கள் சாத்தானின் அடிமைகள்.
'
அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள்
சாத்தானின் கருத்துக்கள்.
ஆன்மாவின் நலனுக்காக மட்டும் வாழ்பவர்கள் இறைவனைச் சேர்ந்தவர்கள்,
உடலின் நலனுக்காக மட்டும் வாழ்பவர்கள் சாத்தானைச் சேர்ந்தவர்கள்.
நாம் எதற்காக மட்டும் வாழ்கிறோம் என்பதை பற்றி தியானிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
பள்ளிக்கூடத்திற்குப் படிப்பதற்காக மட்டும் செல்பவர்கள் அங்கு தங்களுக்குக் கிடைக்கும் வசதிகள் எல்லாவற்றையும் படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துவார்கள்.
ஏதாவது வசதி தங்கள் படிப்பிற்கு இடையூறாக இருந்தால் அது பொருளாக இருந்தாலும் சரி, ஆளாக
இருந்தாலும் சரி அப்புறப்படுத்தி விடுவார்கள்.
ஆன்மாவும் நம்முடையது தான் உடலும் நம்முடையது தான்.
ஆன்மாவிற்காக உடல் இருக்கிறதா? உடலுக்காக ஆன்மா இருக்கிறதா?
உண்பதற்காக உயிர் வாழ்கிறோமா?
'
அல்லது
வாழ்வதற்காக உண்கிறோமா?
வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் வாழ்வதற்காக உண்பான்.
உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் உண்பதற்காக வாழ்வான்.
ஆன்மீக வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆன்மா தான் முக்கியம், உடல் ஆன்மாவிற்கு உதவி செய்வதற்கே என்பார்கள்.
ஆன்மீகவாதிகள் ஆன்மீக நலனுக்காக தங்கள் உடலை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக உடலை இழக்கவும் தயாராக இருப்பார்கள்.
அவர்களை பொறுத்தமட்டில் மரணம் என்பது நிலை வாழ்வின் ஆரம்பம்.
உடல் நலவாதிகள் உலக
சிற்றின்பங்களுக்காக ஆன்மாவைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
உலக சிற்றின்பங்களை அனுபவிப்பதற்காக ஆன்மா உடலை விட்டுப் பிரிவதை, அதாவது மரணத்தை, விரும்ப மாட்டார்கள்.
நிலை வாழ்வுக்குச் சாதகமாக நம் மனதில் தோன்றும் ஆன்மீகக் கருத்துக்கள் இறைவனிடமிருந்து வருபவை.
உலக வாழ்வுக்குச் சாதகமாக நம் மனதில் தோன்றும் லௌகீகக் கருத்துக்கள் சாத்தானிடமிருந்து வருபவை.
நாம் எப்போதும் நமது ஆன்மாவைப் பற்றியும்,
இறைவனைப் பற்றியும்,
இறைவார்த்தையை பற்றியும்,
'
இறை வாழ்வைப் பற்றியும் தியானித்துக் கொண்டிருந்தால்
நமது உள்ளத்தில் இறைவனின் கருத்துக்கள் தோன்றும்.
இறைவன் நமது உள்ளத்திலிருந்து பேசுவார்.
ஆனால் எப்போதும் உலக வாழ்வைப் பற்றியும்,
உலக இன்பங்களை பற்றியும்,
பணத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தால்
உலக சம்பந்தமான கருத்துக்களை சாத்தான் தோற்றுவித்துக் கொண்டே இருப்பான்.
ஆன்மாவிற்கான வாழ்க்கையையே உலகத்தில்தான் வாழ வேண்டி இருக்கிறது.
உலகில் வாழ உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம், வேலைக்குப் போகிறோம், பொருள் ஈட்டுகிறோம்.
இவை எல்லாம் உலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் என்றாலும், ஆன்மாவும், உடலும் சேர்ந்துதான் இவற்றைச் செய்கின்றன.
விண்ணிற்காகப் படைக்கப்பட்ட ஆன்மா, மண்ணில் இவற்றைச் செய்தாலும், மண்ணிற்காக இவற்றைச் செய்வதில்லை.
ஒரு வேலையின் தன்மையைத் (quality) தீர்மானிப்பது வேலை அல்ல,
அது செய்யப்படுவதற்கான நோக்கம்.
இறைவனுக்காக செய்யப்படும் எல்லா செயல்களும் நற்செயல்களே.
நமது உண்ணுதல், உடுத்துதல், உறங்குதல், வேலை பார்த்தல், பொருளீட்டுதல் போன்ற எல்லா செயல்களையும்
இறைவனது மகிமைக்காக அவருக்கே ஒப்புக்கொடுத்தால்
அவையெல்லாம் விண்ணில் நமக்கு சன்மானம் ஈட்டித் தரவல்ல நற்செயல்களே.
இறைவனது கட்டளைகளுக்கு விரோதம் இல்லாமல் செய்கிற எல்லா வேலைகளையும் இறைவனுக்காகவே செய்யலாம்.
உலக வாழ்வை இறைவனுக்காக எப்படி வாழ்வது என்று தியானித்து அப்படியே வாழ வேண்டும்.
உலகப் பொருள்களை எப்படி இறைவனுக்காகப் பயன்படுத்துவது என்று தியானித்து அப்படியே பயன்படுத்த வேண்டும்.
அப்படி செய்பவர்கள் பேறு பெற்றவர்கள்.
இறைவனை மறந்து உலக இன்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்பவர்கள் இறைவனை சார்ந்தவர்கள் அல்ல.
இரலில் பயணிப்பவர்கள் ரயிலுக்காக அல்ல, இல்லம் செல்லவே பயணிக்கிறார்கள்.
உலகில் நாம் வாழ்ந்தாலும் உலகிற்காக அல்ல இறைவனுக்காகவே வாழ்கிறோம்.
நமது எண்ணங்கள் இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.
நமது பேச்சு இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.
நமது செயல் இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.
நமது வாழ்க்கை இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.
"எல்லாம் உமக்காக,
இயேசுவின் திவ்ய இருதயமே,
எல்லாம் உமக்காக,"
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப
நாம் வாழ்வதே இறைவனுக்காக.
அவர் தரவிருக்கும் நிலை வாழ்வுக்காக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment