Friday, August 14, 2020

பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"(மத்.19:24)

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"
(மத்.19:24)
***"*************************************

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

"Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven."
(மத். 5:3)

எளிய மனத்தோர் X  பணக்காரன்
poor in spirit           x   the wealthy

பணக்காரன் விண்ணரசில் நுழைவது மிகவும் கடினம்.

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது"
என்றால் "மிகவும் கடினமானது"
என்று பொருள்.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது

பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட எளிது.

விண்ணரசு எளிய மனத்தோருக்கு உரியது.

எளிய மனத்தோர் (poor in spirit) என்றால் பணத்தின் மீது பற்று இல்லாதவர்கள்.

பணத்தின் மீது பற்று இருப்பவனுக்கு ஆன்மீக வாழ்வில் பற்று இருக்காது.

ஆன்மீக வாழ்வு நாம் இறைவனுக்காக வாழும் வாழ்வு.

இறைவனுக்காக வாழ்பவர்களுக்கு மட்டுமே இறையரசு உரியது.

பணப்பற்றும், இறைப்பற்றும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.

"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."
(மத். 6:24)

பணப்பற்று உள்ளவன் பணத்திற்கு அடிமை. அவனால் இறைவனுக்கும் அடிமையாய் இருக்க முடியாது.

ஆகவே பணப்பற்று உள்ளவனுக்கு இறையரசு உரியது அல்ல.

இப்போது நாம் பேசுவது பணத்தைப் பற்றி அல்ல.

பணப்பற்று உள்ளவனைப் பற்றியும் ,
பணப்பற்று இல்லாவனைப் பற்றியும்.

தன்னிடம் உள்ள பணம் காணாமல் போனாலும் அதைப்பற்றிக் கவலைப் படாதவன் பணப்பற்று இல்லாவன்.

தன்னிடம் பணமே இல்லாவிட்டாலும்
இல்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருப்பவன் பணப்பற்று உள்ளவன்.

The Wealthy can be poor in spirit,
The poor can be rich in spirit.

காமராஜரிடம் பதவி இருக்கும்போதும் அவர் அதன் மேல் பற்று இல்லாதிருந்தார். மக்கள் சேவையில் மட்டும் குறியாக இருந்தார்.

இன்று பதவியே இல்லாதவர்கள் கூட குறுக்கு வழியில் அதைத் தேடி அலைகிறார்கள், மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல, தங்களுக்கு பணம் சம்பாத்தியம் பண்ணுவதற்காக.

இன்றும் தங்களிடம் இருக்கும் பணத்தை இறைப்பணியிலும், பிறர் சிநேகப் பணியிலும் செலவழித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.

தங்களுடைய இறைப் பணியின் மூலம் விண்ணரசைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

தங்களிடம் பணமே இல்லாவிட்டாலும் இறைவனைத் தேடாமல் பணத்தை மட்டும் தேடி அலைபவர்கள் இருக்கிறார்கள்.

இறைவனைத் தேடாதவர்கள் இறையரசையும் தேட மாட்டார்கள்.

பற்றில்லா வாழ்க்கைக்கு நம் ஆண்டவரே முன் மாதிரிகை.

இவ்வுலகைப் படைத்தவர் அவர். இதில் உள்ள அனைத்தும் அவருக்கே சொந்தம்.

இயற்கை அவர் சொல்லுக்குக் கட்டுப்படும்.

கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, படகுக்குமேல் அலைகள் எழுந்தபோது,

அவர் காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.

அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே"

என்று ஆச்சரியப்பட்டார்கள்.


(மத். 8:24,26, 27)

ஆனால் தனது 33 வருட பூவுலக  வாழ்வில் உலகப் பொருட்கள் மீது பற்று இன்றி ஏழையாகவே வாழ்ந்தார்

உலகின் உரிமையாளரே அதன்மீது பற்றின்றி வாழ்ந்தார்.

நாமும் அவரைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவே அப்படி வாழ்ந்தார்.

நாம் உலகில் வாழ்த்தாலும் அதைச் சார்ந்தவர்கள் அல்ல.

உலகப் பொருட்கள் நமது பயன்பாட்டிற்காகத்தான், நாம் ஊழியம் செய்வதற்காக அல்ல.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."

உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றினை விடுவதற்கு

பற்றற்ற இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இறைவனை இறுகப் பற்றிக் கொண்டால், நமக்கு பணத்தின் மேல் பற்று வராது.

பணத்தை இறுகப் பற்றிக் கொண்டால் இறைவன் மேல் பற்று வராது.

இறைவன் நிரந்தரமானவர்.
பணமோ நிரந்தரமற்றது.

இறைவனை இறுகப் பற்றிக் கொள்பவர்கள், நிரந்தரமான  இறையரசை அனுபவிப்பார்கள்.

பணத்தை இறுகப் பற்றிக் கொள்பவர்களுக்கு இறையரசு இல்லை.

இறைவனைப் பற்றிக்கொள்வோம்.

நிரந்தரமான  இறையரசை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment