Friday, August 7, 2020

யாருக்கு நான் அடிமை?


யாருக்கு நான் அடிமை?
***************************************

கடவுள் நம்மைப் படைத்ததன் நோக்கம் என்ன?

அவருக்கு ஊழியம் செய்து, அதன் பலனாக விண்ணகத்தில் அவரோடு நிலை வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

அதற்கு நமக்கு உதவி செய்ய இவ்வுலகைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் உலகத்தை இறை ஊழியத்திற்குப்  பயன்படுத்துவதற்குப் பதில், 

உலகத்திற்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தால்

அது நம்மைப் படைத்தவருக்கு நாம் செய்யும் துரோகம்.

இந்தக் காலத்தில் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளையும் பணத்தினால்தான் மதிப்பீடு செய்கிறோம்.

பொருளை மட்டுமல்ல, நம்மையே பணத்தினால்தான் மதிப்பீடு செய்கிறோம்.

ஒருவர் பெறும் சம்பளத்தை வைத்து தான் அவரது உத்யோகத்தின் உயர்வு மதிப்பீடு செய்யப்படுகிறது.

இப்போது ஒரு கேள்வி.

ஒரு அலுவலக வேலையை எடுத்துக் கொள்வோம்.

நாம் சம்பளத்திற்காக வேலை செய்கிறோமா?

வேலைக்காக சம்பளம் பெறுகிறோமா?

சம்பளம் = வேலையா?
அல்லது,
வேலை = சம்பளமா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 

நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே எந்த வேலைக்கு அதிகச் சம்பளமோ அந்த வேலைக்குதான் விண்ணப்பிப்போம்.

இது முழுக்க முழுக்க உலக காரியத்தில்.

இப்போ அடுத்த கேள்வி:

இறைவனுக்கு ஊழியம் செய்ய உலகை அல்லது பணத்தைப் பயன்படுத்துகிறோமா?

அல்லது,

பணத்திற்கு ஊழியம் செய்ய இறைவனைப் பயன்படுத்துகிறோமா?

இதே கேள்வியை இப்படியும் கேட்கலாம்.

இறைவன் தந்த வாழ்க்கையை 

இறைவனுக்காகப் பயன்படுத்துகிறோமா?

அல்லது

உலகிற்காகப்  பயன்படுத்துகிறோமா?

இரண்டு வகையினரும் உலகில் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் எப்படி இருக்க வேண்டும்?

அதற்கு நம் ஆண்டவரது வார்த்தைப்படி நடக்க வேண்டும்.

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. 

ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."
(மத். 6:24)

ஒரே நேரத்தில் கடவுளுக்கும், பணத்திற்கும் ஊழியம் செய்யமுடியாது.

கடவுளுக்கு ஊழியம் செய்வது

எல்லாவற்றுக்கும் மேலாக அவரை நேசிப்பதிலும், அவரது சித்தப்படி நடப்பதிலும் அடங்கியிருக்கிறது.

கடவுளை நேசிக்கும்போது அவரால் படைக்கப்பட்ட அவரது எல்லா பிள்ளைகளையும் நேசிப்போம்.

நம்முடைய பிறர் நேசம் அவர் கட்கு நாம் செய்யும் நற்செயல்களில் அடங்கியிருக்கிறது.

நற்செயல் அவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளில் அடங்கியிருக்கறது. 

உதவி பல வகைகளில் செய்யலாம்.

சிலருக்கு நமது ஆறுதல் தேவைப்படும். அவர்களுக்கு நமது இனிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆறுதல் சொல்லவேண்டும்.

சிலருக்கு நம்முடைய உடல் உழைப்பு தேவைப்டும்.  நமது நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி உதவி செய்ய வேண்டும்.

சிலருக்குப் பண உதவி அல்லது பொருள் உதவி தேவைப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற பண உதவி  அல்லது பொருள் உதவி   செய்ய வேண்டும்.

பிறருக்கு உதவி செய்வதும் இறை ஊழியத்தில் ஒரு பகுதிதான்.

இங்கே நாம் பணத்தை இறை ஊழியத்துக்குப் பயன் படுத்துகிறோம்.

இறை ஊழியம் பணத்தைக் கொடுப்பதில் அடங்கியிருக்கவில்லை.

அது நாம் கொடுக்கும் நோக்கத்தில் அடங்கியிருக்கிறது

நமது நோக்கம்: இறைவனின் பிள்ளைக்கு உதவி செய்வது.

இறைவனுக்காக செய்யப்படுவதுதான் இறை ஊழியம்.


"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன்,

 கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மாற்கு, 9: 41)


 "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத். 10:42)

அதாவது யாருக்கு உதவி செய்தாலும்,

 கடவுளே இல்லை என்பவர்களுக்கு உதவி செய்தாலும், 

அவர்கள் கவுளுடைய பிள்ளைகள் என்ற அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்.

யாராவது கடவுளே வேண்டாம் என்று சொன்னாலும், கடவுள் அவர்களை வேண்டாமென்று சொல்லமாட்டார்.

அவருடைய பிள்ளைகள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற பிரச்சனை நமக்குத் தேவை இல்லை.

அவர்கள் இறைவனில் நமது சகோதார்கள்.


 ஆகையினால், நமது சகோதார்கள் என்பதற்காக,

 அதாவது, கவுளுடைய பிள்ளைகள் என்பதற்காக 

அவர்களுக்கு உதவ வேண்டும்.


கோவில் காரியங்களுக்காக கொடுக்கப்படும் காணிக்கைகளும் இறை ஊழியத்துக்காக கொடுக்கப்  படுபவைதான்.

அது போல முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்கள் ஆகியற்றிற்கு கடவுள் பெயரால் கொடுக்கப்படும் உதவிகளும் இறை ஊழியம் சம்பந்தப்பட்டவைதான்.

ஆனால் நல்ல காரியங்களுக்காக கொடுக்கப்பட்டாலும், நமது நோக்கம் தவறாக இருப்பின் நமது உதவிகட்கு ஆன்மீகப் பயன் எதுவும் இருக்காது.

கோவில் கட்ட நன்கொடை வாங்குபவர்கள்,

" 5000 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்தால் உங்கள் பெயரும், நன்கொடைத் தொகையும் கோவில் முன்னால் கல்வெட்டுகளில் எழுதப்படும்" என்று சொல்வதுண்டு.

தங்கள் பெயர் கல்வெட்டுகளில் எழுதப்படுவதற்காக அதிகமான தொகை கொடுத்தால்

அதன் நோக்கம் தேவ ஊழியம் அல்ல,
நமக்கான விளம்பரம்.

அதற்கு ஆன்மீகப் பயன் எதுவும் இருக்காது.

நாமும் இறைவனுடைய பிள்ளைகள்தானே. ஆகவே இறைவனுக்கு ஊழியம் செய்ய நமக்கும் உடல் வலு வேண்டுமே.

ஆகவே நாம் வாழ்வதற்காகச் செலவழிக்கப்பதும் இறை ஊழியத்துக்காகச் செலவழிப்பது தான், ஆனால் அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்படும் 
எல்லா செயல்களும், தூங்குவது உட்பட, செபமாக மாறிவிடுகின்றன.

எல்லாவகை செபங்களுக்கும் ஆன்மீகப் பயன் உண்டு.



நாம் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதில், பணம் நம்மைப் பயன்படுத்தினால் 

நாம் பணத்தின் அடிமைகள் ஆகி விடுகிறோம்.

பணத்தின் அடிமைகள் பணத்தைப் பணம் என்பதற்காகவே சம்பாதிப்பார்கள்.

நாம் இறைவனைத் தியானித்து மகிழ்வதுபோல, 

அவர்கள் தங்களிடம் பணத்தை எண்ணி எண்ணி  மகிழ்வார்கள்.

தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும்  பணம் ஈட்டுவதற்காகவே செலவழிப்பார்கள்.


பணத்தின் உதவியால் தங்கள் வாழ்க்கை வசதிகளைத் தேவைக்கு அதிகமாகவே தயாரித்து வைத்துக் கொள்வார்கள்.

அந்த வசதிகளை அனுபவிப்பதற்காகவே வாழ்வார்கள்.

தாங்கள் சம்பாதித்த பணத்தை வசதிகளுக்கு சேவை செய்வதிலேயே செலவழிப்பார்கள்.

பைக் ரிப்பேர், கார் ரிப்பேர். மோட்டார் ரிப்பேர், AC ரிப்பேர் என்று ஒவ்வொரு வசதிப் பொருளுக்கும் ஊழியம் செய்வதிலேயே நிறைய நேரமும், பணமும் செலவழிவும்  

இந்த எஜமானர்களுடைய பிடியிலிருந்து மீளவும் முடியாது.

வாழ்வதற்காக உண்பதற்கும், உண்பதற்காக வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

உண்பதற்காக வாழ்பவர்கள் உணவின் அடிமைகள்.


வசதிகளை அனுபவிப்பதற்காகவே வாழ்பவர்கள், வசதிகளின் அடிமைகள்.

பணம் ஈட்டுவதற்காகவே வாழ்பவர்கள், பணத்தின் அடிமைகள்.

பணம் ஈட்டுவதற்காகவே வாழ்பவர்கள் அதற்காக எந்த வகைப் பாவமும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

லஞ்சம் வாங்குதல், திருடுதல், கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கொலை செய்தல் 

போன்ற அநியாயங்கள் எல்லாம் அவர்களது அகராதியில் நியாயங்களாக மாறிவிடும்.

நாட்டில் இத்தகைய அநியாயங்கள் அதிகமாகி விட்டதற்குக் காரணம் 

பெரும்பாலானோர் பணத்திற்கு அடிமைகளாகி விட்டதுதான்.

பணத்தின் அடிமைகளால் இறைவனுக்கு சேவை செய்ய முடியாது.

தங்கள் செல்வச் செறுக்கைக் காண்பிப்பதற்காக கோவிலுக்குச் சென்று காணிக்கை என்ற பெயரில் பணத்தைக் கொட்டினால்,

அவர்கள் இறைவனையே விலைக்கு வாங்க ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம்!

அது முடியாத காரியம்.

காணிக்கை என்பது உண்மையான இறையன்புடன்,

நம்மால் இயன்ற அளவு,

இறைப் பணிக்காகக் கொடுப்பது,

நம்மால் இயன்ற அளவு உளமாறக் கொடுத்தால்,

நாம் நமது உள்ளத்தைத்தான் இறைவனுக்குக் காணிக்கையாக்குகிறோம்.
சுய விளம்பரத்துக்காகக் கொடுப்பது காணிக்கை அல்ல.

இறைவன் நாம் கொடுக்கும்  காணிக்கை அளவை (quantity) வைத்து நமக்கு ஆசீர் அளிப்பதில்லை.

அப்படி அளித்தால் பணக்காரன் நிறைய ஆசீரை வாங்கிக் கொண்டு போய்விடுவான்.

ஏழைக்கு ஒன்றுமே கிடைக்காது.

ஆண்டவர் பார்ப்பது நம் மனத்தை, பணத்தை அல்ல.

கொடுப்பதற்குப் பணமே இல்லாவிட்டாலும், நல்ல மனத்தைக் கொடுத்தாலே போதும். 

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு 
உன் முழு உள்ளத்தோடும் 
உன் முழு ஆன்மாவோடும் 
உன் முழு மனத்தோடும் 
உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" 

என்பதுதான் ஆண்டவர் அளித்த அன்புக் கட்டளை.

நம்மால் இயன்றதை
உன் முழு உள்ளத்தோடும்,
உன் முழு ஆன்மாவோடும்,
உன் முழு மனத்தோடும்,
காணிக்கையாகக் கொடுப்போம்.

நம்மை முழுவதுமே இயேசுவுக்குக்
காணிக்கையாகக் கொடுப்போம்.

இறைவனுக்கு மட்டுமே அடிமையாய் இருப்போம், பணத்திற்கு அல்ல.

இயேசுவுக்கு நாம் தருவது ஊழியம்.

அவர் தரயிருப்பது விண்ணரசில்  நிலைவாழ்வு.

ஊழியம் சாகும் வரை.

நிலைவாழ்வு நிரந்தரம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment