Tuesday, August 4, 2020

"நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்"  (மத்.17:4)"**************************************

http://lrdselvam.blogspot.com/2020/08/174.html



"நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்"  (மத்.17:4)
"**************************************

இயேசு ஒரு மலை மேல் உருமாறும்போது அவரோடு எலியாசும், மோயீசனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவரோடு இராயப்பரையும், அருளப்பரையும் , யாகப்பரையும் அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போஸ்தலர்களில் இராயப்பர் மிகவும் வாய்த்துடுக்கானவர்.

இயேசு அப்போஸ்தலர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டால்,

இராயப்பர்தான் முதலில் பதில் சொல்வார்.


இங்கே இயேசு பேசிக் கொண்டிருந்தது எலியாசுடனும், மோயீசனுடனும்.

இராயப்பரிடம் எதுவும்  கேட்கவும் இல்லை. சொல்லவும் இல்லை.

ஆனால் இராயப்பர் அவராகவே இயேசுவை நோக்கி,

 "ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! 

நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும்,

 மோயீசனுக்கு ஒன்றும்,

 எலியாசுக்கு ஒன்றுமாக 

இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" என்று சொன்னார்.


அவர் சொன்னதிலிருந்தே

 அவர் சாதாரணமானவராக இருந்தாலும் 

தலைமைப் பதவிக்குப் பொறுத்தமானவர் எனத் தெரிகிறது.

இவ்வுலகத் தலைவர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமானதைத் தங்களுக்குச் சேர்ப்பதிலேதான் குறியாக இருப்பார்கள்.

ஆனால் ஆறு பேர் இருக்கும் இடத்தில் இயேசு, மோயீசன், எலியாசு ஆகிய மூவருக்கும் மூன்று கூடாரங்கள் அமைப்பதாகக் கூறுகிறார்.

தன்னையும், தன்னுடன் இருக்கும் அருளப்பரையும், யாகப்பரையும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு எண்ணம் வருகிறது.

மூவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மூன்று கூடாரங்கள் அமைத்து,

ஆளுக்கொரு கூடாரத்தில் உட்காரச் சொன்னால் எப்படி மூவரும் பேச முடியும்!

அப்பாவி இராயப்பர், ஆனால் சுயநலம் உள்ளவர்.

சுயநலம் உள்ளவரா? அது எப்படி?

சுயநலம் இருந்தால்தான் இயேசுவை நேசிக்க முடியும்.

எப்படி?


இம்மறை நிகழ்வைப் பலமுறை வாசித்திருப்போம்.

நமது வாசிப்பு நமது வாழ்வின் முன்னேற்றப் பாதையில் ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டிருக்கு மானால் வாசிப்பில் பொருள் இருக்கிறது.

நாம் வெளியூர் செல்லும்போது கையில் காசிருந்தால் நிறைய பொருட்கள் வாங்குவோம்.

ஆனால் அநேக சமயங்களில் அவற்றைப் பயன்படுத்துவதில்லை.

பைபிள் வாசிப்பும் அப்படி இருந்து விடக்விடக்கூடாது.

ஒரே நிகழ்வு பலருக்கும் பல வகையில் தூண்டுதல்களை (inspirations) ஏற்படுத்தும். .

இம்மறை நிகழ்வில் என் மனதைத் தொட்டது இராயப்பருடைய சுயநலம் உள்ள குணம்.

இதைப் பற்றி (சுயநலத்தைப்) பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது

அவர் கேட்டார்.  "தன்னலம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?"

தன்னலம் என்ற கருத்தை எந்தக் கண்ணோக்கில் பார்க்கிறோமோ
அதைப் பொறுத்து விடை அமையும்.

நமக்கு உள்ளே இருந்து நம்மை மட்டும் பார்ப்பது. அதாவது நம்மைச் சுற்றியிருப்போரைப் பற்றி கவலைப் படாமல் நமது நலனை மட்டும் பார்ப்பது.
இது ஒரு கண்ணோக்கு.


இரண்டாவது கண்ணோக்கு, நம்மைச் சுற்றியுள்ளோரிடமிருந்து நம்மைப் பார்ப்பது. அதாவது பிறருக்கு உதவியாய் இருப்பதின் அடிப்படையில் நமது நலனைப் பார்ப்பது,


முதல் வகையினர் தமது நலனுக்காக மற்றவர்களைப் பயன் படுத்துவர்.

 மற்றவர்கள் நலனையும் கவனிப்பர்,

 ஆனால் அதன் நோக்கம் மற்றவர்கள் நலமாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்ற எண்ணம்.

சில அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்மை செய்வது ஏன்?

மக்கள் நலமாக இருந்தால்தான் தாங்கள் பதவியில் நீடிக்க முடியும், நிறைய சம்பாதிக்க முடியும்.

இத்தகைய தன்னலம் ஆன்மீகத்தில் இருக்கவே முடியாது.


இரண்டாவது வகையினர் இயேசுவைப் போன்றவர்கள்.

இயேசு கடவுள். கடவுள் சுயமாக  இருப்பவர், சுயமாக இயங்குபவர்.

அவருடைய இயக்கத்துக்கு வெளியுதவி ஏதும் தேவை இல்லை.

அவருக்கு வெளியே இருப்பவை எல்லாம் அவர் படைத்தவை மட்டுமே.

அவற்றைப் படைக்கு முன்னமே நித்திய காலமாக அவர் இயங்கி வருகிறார்.

அவர் நம்மைப் படைத்தது அவரது மகிழ்ச்சியை அதிகப்படுத்த அல்ல,

  இயல்பாகவே அவரது மகிழ்ச்சி அளவில்லாதது.

அவர் நம்மைப் படைத்தது நமது மகிழ்ச்சிக்காக,

 தனது அளவற்ற அன்பையும், மற்ற பண்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக.

அவர் நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்கிறார்.

அவர் நம்மை அன்பு செய்வதால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை.

பயன்பெறுவது நாம்தான்.

நாம் அவரை அன்பு செய்வது நமக்கும் அவருக்கும் இடையேயுள்ள உறவை வளர்ப்பதற்காக,

 அவரை வளர்ப்பதற்காக அல்ல.

நாம் செய்யும் அன்பின் அளவுக்கு ஏற்ப, நமது ஆன்மீகம் வளர்கிறது.

நாம் அவருக்கு அன்பே செய்யாவிட்டாலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

நாம் பாவம் செய்கிறபோது பாதிக்கப்படுவது நாம்தான், அவரல்ல.

இறைமகன் மனிதனாகப் பிறந்தது, பாடுகள் பட்டது, சிலுவையில் மரணம் அடைந்தது எல்லாம் நமக்காக,   நமக்காக மட்டும்தான்.

அவரது பாடுகளாலும், மரணத்தாலும் அவருக்குத் துளி கூட ஆதயம் கிடையாது.

100க்கு 100 பயன் பெற்றது நாம் தான்.

அவரது அன்பு தன்னலத்திற்கு ஆதாயம் தேடாத அன்பு.

அதாவது தனது நலனுக்காக அல்ல நமது நலனுக்காக நம்மை நேசித்த அன்பு.

அவர் இயல்பாகவே நலமாக இருக்கிறார்.

அவருடைய நலனுக்காக நம்மை நேசிக்கவில்லை.

தனது நலனை அவர் நமக்காகப் பயன்படுத்துகிறார்.

அவரது நலனை அதிகப்படுத்த நம்மைப் பயன்படுத்தவில்லை,

ஏனெனில் இயல்பாகவே அவரது நலன் அளவற்றது.

நாம் மீட்கப் படுவதால் நாம்தான் விண்ணகம் அடைகிறோம்.

நாம் மீட்கப்படாவிட்டாலும் அவர் விண்ணகத்தில்தான் இருப்பார்.

உண்மையில் அவர் இருக்கும் இடம் தான் விண்ணகம்.

ஒரு வகையில் அவர்தான் விண்ணகம், நாம் விண்ணகம் செல்லும்போது அவரோடு தானே இணைகிறோம்.

நமக்காக, (அவருக்காக அல்ல,)

நமது நலனுக்காகவே இயேசு மனிதன் ஆனார்.

இயேசு இயல்பிலேயே நலன் உள்ளவர்.

நாம் இயல்பிலேயே நலன் உள்ளவர்கள் அல்ல.

நமது நலன் இறைவனால் நமக்குத் தரப்பட்டது. நாம் நமது நலனைப் பேணவேண்டும். இதற்குத் தன்னல உணர்வு வேண்டும்.

ஆனால் எதற்காக நமது நலனைப் பேணவேண்டும்?

இந்தத் கேள்விக்குப் பதில் காணுமுன், இன்னொரு கேள்வியையும் நாமே கேட்டு நாமே விடை காணவேண்டும்.

நலன் என்றால் என்ன?

நமக்கு மண்ணைச் சார்ந்த ஒரு உடலும், விண்ணைச் சார்ந்த ஒரு ஆன்மாவும் இருக்கின்றன.

அதே போல உடலைச் சார்ந்த உலக நலனும், ஆன்மாவைச் சார்ந்த ஆன்மீக நலனும் இருக்கின்றன.

இந்த இரண்டு நலன்களில் எதைப்பற்றிப் பேசுகிறோம்? 

சுயநலம் என்பது ஆன்மீக நலனா? உலக நலனா?

சுயநலம் என்பது இவ்வுலக வார்த்தை, ஆகவே இயல்பாக உலகு சார்ந்த நலனையே குறிக்கும்.

ஆன்மீகத்தில்  உலக அர்த்தத்திலான சுயநலமே இருக்க முடியாது.

அன்பு என்பது இறைப்பண்பு. உணமையான அன்பு இறைவனையும், அயலானையும் நேசிக்கும்.

தன்னையே இறைவனுக்காகவே நேசிக்கும்.

இறைவனுகாக நம்மை நாம் நேசித்தால்தான், நம்மை, நமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய முடியும்.

தன்னைத் தனக்காக நேசிப்பவன் எப்படி தன் உயிரை இறைவனுக்காக இழப்பான்?

அந்த வகையில், சுய நலம் அல்லது தன்னலம் என்ற வார்த்தையை ஆன்மீகப் படுத்தி, அதன் பொருளைப் பார்ப்போம்.

அந்தப் பொருளில், சுயநலன், நமது ஆன்ம நலன்.

ஆன்மீகத்தில், தன் ஆன்மாவை நேசிப்பவன், 

இயல்பாகவே ஆன்மாவைப் படைத்த ஆண்டவரையும்,

 ஆண்டவரால் படைக்கப்பட்ட அயலானையும் நேசிப்பான்.

இப்போ சொல்லுங்கள், இராயப்பரிடம் சுயநலம், இருந்ததா? இல்லையா?

ஆன்மீகப் பொருளில் தன்னலம் வேண்டும்.

இதைத்தான் "Charity begins at home" என்கிறோம்.

பிறர் சிநேகம் தன் சிநேகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

அதனால்தான் ஆண்டவர், "உன்னை நேசிப்பதுபோல, உன் அயலானையும் நேசி" என்றார்.


ஆகவே தன்னலமே பிறர் நலனைப் பேணுவதற்காகத்தான் இருக்க வேண்டும்.

நாம் நலம் இல்லாதிருந்தால், நம்மால் மற்றவர்கட்குச் சேவை செய்ய முடியாது, 

மற்றவர்கள்தான் நம் நலனைப் பேண 

நமக்குச் சேவை செய்ய வேண்டிய திருக்கும்.

இந்த வகையில் தன்னலம் தேவை, பிறர் நலனுக்காக.

இயேசு நமக்குக் கொடுத்த பிறரன்புக் கட்டளை,

"நீ உன்னை நேசிப்பது போல, உன் அயலானை நேசி.

''நீ உன்னை நேசி" என்று இயேசு சொல்லவில்லை. ஏனெனில் இறைவன் நமக்குத் தந்திருக்கும் இயல்பிலேயே நாம் நம்மை நேசிக்கிறோம்.

இறைவன் தனது அன்பு செய்யும் இயல்பையும் நம்மோடு பகிர்ந்துள்ளார்.

இயல்பிலேயே இறைவன் தன்னை நேசிக்கிறார்.

தன்னை நேசிப்பதுபோல அவர் நம்மையும் நேசிக்கிறார்.

அவரது நேசம் அளவில்லாதது,
ஆகவே அவர் அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

நாமும் நம்மை நேசிப்பது போலவே பிறரையும் நேசிக்க வேண்டும்.

இயேசு நமக்காகப் பாடுபட்டார்.

நாமும் பிறருக்காக கஷ்டப்பட வேண்டும்.

இயேசு நமக்காகத் தன் உயிரையும் கொடுத்தார்.

நாமும் தேவைப்பட்டால் பிறருக்காக நமது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

அன்னைத் தெரசா தன் நலனை ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்ததிலேயே செலவழித்தாள்.

அவளின் ஆன்மாவில் இருந்த இறையன்புதான் அவளைச் சேவை செய்யத் தூண்டியது.

இதுதான் கிறிஸ்தவம்.

மன்னுயிரை மீட்க தன்னுயிரைப் பலியாக்கினார் நம் ஆண்டவர் இயேசு.

இயேசுவின் வழியே நம் வழி.

லூர்து செல்வம். 
-

No comments:

Post a Comment