கர்த்தர் கற்பித்த செபம் கற்பிக்கும் பாடம். (தொடர்ச்சி)
***************************************
நான்காவது மன்றாட்டு :
4. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
வினாடிகளை நிமிடத்தின் கணம் (Set) என்பார்கள்.
மணியை நிமிடங்களின் கணம் என்பார்கள்.
நாளை மணிகளின் கணம் என்பார்கள்.
ஆண்டை நாட்களின் கணம் என்பார்கள்.
ஒரு வினாடியில் அந்த வினாடியை மட்டுமே வாழ முடியும்,
அடுத்த வினாடியை வாழ முடியாது.
இது நிமிடத்துக்கும், மணிக்கும், நாளுக்கும் பொருந்தும்.
ஒரு நாளில் அடுத்த நாளை வாழ முடியாது.
மறுநாள் வருமா வராதா என்பதே நமக்குத் தெரியாது.
அந்தந்த நாளை அன்றன்றுதான் வாழ வேண்டும்.
இறைவன் நம்மை ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும் நம்மைப் பராமரித்து வருகிறார்.
நமது பிள்ளையை வெளியூருக்கு அனுப்பும்போது,
"பத்திரமாய் போய், வா "
என்று சொல்லி அனுப்புகிறோம்.
உடன் போவதில்லை.
ஆனால் கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்து வருகிறார்.
அன்றன்றைய தேவைகளை அன்றன்றுதான் பயன்படுத்த முடியும்.
நாளைய தேவைகளை இன்று பயன்படுத்த முடியாது.
உலக நியதிப்படி பல ஆண்டுகளுக்கான தேவைகளை இன்றே சேமித்து வைத்துக் கொள்கிறோம்.
ஆனால் இறைவன் நியதிப்படி நம்மிடம் சுய முயற்சியோடு ஆழமான விசுவாசம் இருந்தால்
அன்றன்றய தேவைகளை அன்றன்றே இறைவன் பூர்த்தி செய்வார்.
தேவைக்குப் போக மீதி இருப்பவற்றை தேவையுள்ள அயலானோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதனால்தான் இயேசு,
"எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."
"ஒரு மாதத்திற்கான உணவை இன்று தாரும்" என்று கேட்கவில்லை
"இன்றைக்கு தேவையான உணவை இன்று தாரும்" என்றுதான் கேட்கிறோம்.
அதாவது,
"தந்தையே,
எனது முயற்சியின் விளைவாக என்னிடம் இம்மாதம் முழுவதற்கும் போதுமான உணவு இருக்கிறது,
ஆனால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் சாப்பிட முடியும்.
என் தேவைக்குப் போக மீதி இருப்பதை தேவைப்படும் அயலானுக்குக் கொடுத்து உதவுகிறேன்.
இப்போது வேறு யாருக்கும் தேவை ஏதும் இல்லாவிட்டாலும், எப்போது தேவை இருக்கிறதோ அப்போது கொடுத்து உதவுவேன்.
எனது அன்றன்றைய தேவைகளை நீர் அன்றன்று பூர்த்தி செய்வீர் என்று உறுதியாக விசுவசிக்கிறேன்."
நாம் நமது எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல் நம்முடைய சந்ததியாருடைய எதிர்காலத்திற்கும் சேமிக்க விரும்புகிறோம்.
இது உலகியல் மதிப்பீடு,
கிறிஸ்தவ மதிப்பீடு அல்ல.
அயலானுக்கு உதவி வாழ்வதே விண்ணகம் செல்லும் வழி.
விண்ணகம் செல்ல வேண்டுமென்றால்,
எல்லாவற்றையும் நமக்கே சேமித்து வைத்துக்கொள்ளாமல்,
நமது அயலானுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்று இயேசு பாடம் கற்பிக்கிறார்.
குறைவான விசுவாசம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கடினமான பாடம்,
ஆழமான விசுவாசம் உள்ளவர்களுக்கு மிக எளிதான பாடம்,
ஐந்தாவது மன்றாட்டு:
5. எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்,
மன்னிப்பதற்கென்றே இயேசு மனிதனாகப் பிறந்தார்.
நாம் அனைவரும் பாவிகள்.
நம் எல்லோருக்கும் மன்னிப்புத் தேவைப்படுகிறது.
கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் முன்
நாம் நமக்குத் தீமை செய்த மற்றவர்களை மன்னிக்க வேண்டும்,
நம்மால் மன்னிக்க முடியாவிட்டால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க நமக்கு தகுதி இல்லை.
நமது பாவங்களுக்கு இறைவனிடமிருந்து மன்னிப்பு பெறுவது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி.
நாம் மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் நமது அயலானை நாம் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்றுத் தருகிறார்.
ஆறாவது மன்றாட்டு:
6.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
சோதனைக் காரன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் வேலையே சோதிப்பதுதான்.
அவனது சோதனையின் விளைவாகத்தான் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.
அவன் இன்றும் கர்ஜிக்கும் சிங்கம் போல் யாரை விழுங்கலாம் என்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான்.
ஆகவே அவன் நம்மையும் சோதிப்பான்.
இயேசுவின் பொதுவாழ்வு ஆரம்பிக்குமுன் அவரையே சோதித்தான்.
அவர் கடவுள்.
நமக்கும் சோதனைகள் வரும் என்று நமக்கு பாடம் கற்பிக்கவே தன்னைச் சோதிக்க அவனுக்கு அனுமதி கொடுத்தார்.
நாம் அவனைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை,
ஏனென்றால் கடவுள் நம்மோடிருக்கிறார்.
சோதனைகளை வென்று நமது ஆன்மாவைப் பரிசுத்தமாகக் காப்பாற்றிக் கொள்வதுதான் விண்ணுலகில் நுழைய வழி.
சோதனைகளை வெல்ல தந்தையின் உதவியை கேட்க வேண்டும் எந்த பாடத்தை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
ஏழாவது மன்றாட்டு :
7. தீமைகளிலிருந்து எங்களை இரட்சித்தருளும்..
நமது ஆன்மிகப் பயணத்தில் பாவம் ஒன்றுதான் தீமை. பாவம் ஒன்றுதான் நம்மை இறை உறவிலிருந்து பிரிக்கும்.
ஞானஸ்நானத்தின்போது நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை மாசுபடாமல் பாதுகாத்துப் பயணித்தால்தான் விண்ணகம் செல்லமுடியும்.
துன்பங்களாலோ, , துயரங்களாலோ , நோய் நொடிகளாலோ மரணத்தாலோ நம்மை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாது.
பாவத்தால் மட்டுமே அது முடியும்.
பாவம் எதுவும் செய்யாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி,
நான் பலகீனமானவர்கள். இறைவன் உதவி இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது.
ஆகவே நம்மை பாவத்தில் விழாமல் பாதுகாக்கும்படி தந்தையின் உதவியை தேடுகிறோம்.
நாம் நமது தந்தையைச் சார்ந்து வாழ்வதே தந்தைக்கும் பெருமை.
தந்தையின் அருள் உதவி இருந்தால் மட்டுமே பாவத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எந்த பாடத்தை இயேசு நமக்கும் கற்பிக்கிறார்.
கர்த்தர் கற்பித்த செபம் தந்தை இறைவனுக்கும், அவரை அடையத் தேவையான ஆன்மீக பரிசுத்தத் தனத்திற்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கிறது.
இறைவனைப் புகழ்கிறோம்.
அவரை அடையத் தேவையான பரிசுத்தத் தனத்தை நமக்குத் தந்தருள அவரை வேண்டுகிறோம்.
நமது தேவைகளை பொருத்தமட்டில் அன்றாடத் தேவையில்லை அன்றன்றைக்கு தந்தை பூர்த்தி செய்வார் எங்க உறுதியான விசுவாசத்தை தந்தைக்கு தெரியப்படுத்துகிறோம்.
மிக முக்கியமான அம்சம், நாம் ஒவ்வொருவரும் மனுக் குலத்தின் சார்பாக நமது மன்றாட்டுக்களை சமர்ப்பிக்கிறோம்.
இயேசு தன்னையே தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது,
மனுக்குலம் முழுவதின் மீட்புக்காகத்தான்.
ஆகவேதான் மனுக்குலம் முழுவதற்குமாகத்தான் செபிக்க நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
மனுக்குலம் முழுவதும் மனம் திரும்பி இயேசுவின் வழிக்கு வர வேண்டும்.
மனிதர் எல்லோரும் மீட்கப்பட வேண்டும்.
அதுவே தந்தையின் சித்தம்.
தந்தையின் சித்தம் நிறைவேற பாடுபடுவோம்.
ஆழமான விசுவாசத்தோடு தந்தையிடம் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிப்போம்.
விண்ணகத்தில் தந்தையோடு இணைவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment