"உங்களால் முடியாதது ஒன்றும் இராது." (மத்.17:21)
*****************************************
விசுவாசத்தினால் ஆகாதது எதுவும் இல்லை.
நம் ஆண்டவர் சொல்கிறார்,
"கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்,
நீங்கள் இம்மலையை நோக்கி, "இவ்விடம் விட்டு அவ்விடம் செல்" என்றால்
அது பெயர்ந்து செல்லும்."
"என்னிடமும் விசுவாசம் இருக்கிறது, எங்கள் வீட்டிலுள்ள கொசுவைக் கூட என்னால் விரட்ட முடியவில்லை''
என்று யாரோ சொல்வது மாதிரி தெரிகிறது.
பத்து பைசாவை வைத்துக் கொண்டு,
"பணம் இருந்தால் வீடு கட்டலாம் என்று சொன்னார்கள். என்னிடம்
பணம் இருக்கிறது.
ஆனால் அதைக் கொண்டு
கொண்டு ஒரு செங்கல் கூட வாங்க முடியவில்லை",
என்று சொன்னால் எப்படி இருக்கும்?
ஒரு நாள் வகுப்பில் புவியியல் பாடவேளையில் காலநிலை மாற்றங்கள் பற்றி பாடம் நடத்தும்போது,
"சூரியன் கடக ரேகையிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்து, நில நடுக்கோடு வழியே சென்று மகர ரேகையை அடைகிறது.
அடுத்து மகர ரேகையிலிருந்து வடக்கு நோக்கிப்பயணித்து, நில நடுக்கோடு வழியே சென்று கடக ரேகையை அடைகிறது.
இந்தப் பயணத்தின்போது எந்த நிலப் பகுதியில் சூரியனது கதிர்கள் செங்குத்தாக விழுகிறதோ அங்கு கோடைகாலம்,
எங்கே சாய்வாக விழுகிறதோ அங்கு குளிர்காலம்." என்றேன்.
ஒரு குசும்பன் எழுந்து கேட்கிறான்,
"சார், நீங்கள் எப்போதாவது சூரியனுடன் பயணம் செய்திருக்கிறீர்களா?"
அவன் குசும்பன்தான். ஆனால் அவன் கேட்டது நியாயமான கேள்வி.
யாரோ எழுதிவைத்ததை நேர் அனுபவம் மாதிரி சொல்லுகிறோம்.
அதேபோல்தான். விசுவாசம் பற்றி நாம் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகப் பேசுகிறோம்.
பேசுவது பற்றி நமக்கு நேரடி அனுபவம் ஏதும் இல்லாததால், அது வரலாறு, புவியியல் பாடம் நடத்துவது போல் ஆகிவிடுகிறது.
"ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று சுவைத்துப் பாருங்கள்" என்று இறை வார்த்தை கூறுகிறது.
நேரடி அனுபவம் இல்லாவிட்டால் எப்படி சுவைத்துப் பார்க்க முடியும்?
தேன் என்று சொன்னால் இனிக்காது.
தேனை நாவில் வைத்தால்தான் இனிக்கும்.
இறைவன் ஆவியானவர். நமது ஆன்மாவும் ஆவி.
எப்படி சடப்பொருளாகிய நமது நாவினால் சடப்பொருளாகிய உணவைச் சுவைக்க முடிகிறதோ
அவ்வாறே ஆவியானவராகிய இறைவனை,
ஆவியாகிய நமது ஆன்மாவினால்தான் சுவைக்க முடியும்.
சுவைப்பதற்கென்றே நமது ஆன்மாவில் ஒரு ஆன்மீக உறுப்பு இருக்கிறது.
அதுதான் நமது மனது, சிந்தனையின் இருப்பிடம்.
வெளியூரில் உள்ள தன் மனைவியை மனதில் சிந்தித்துத் சிந்தித்து
ரசித்து, ருசித்துப் பார்க்கிற கணவன்மாருக்கு இது புரியும்.
இதை எனது அனுபவத்திலிருந்துதான் நான் சொல்கிறேன்.
எல்லோருக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறையவே இருக்கும்.
அளவில்லா அன்புடன் நம்மைப் படைத்து, நேசித்து, பராமரித்து வரும் நமது அன்புத் தந்தையாகிய இறைவனைத்
தியானித்து, ரசித்து, ருசித்துப் பார்க்கவும் நமது மனது பயன்படும்.
பயன்படும் என்று சொன்னால் போதாது, பயன்படுத்த வேண்டும்.
நமது பள்ளிக்கூட அனுபவங்களை மலரும் நினைவுகளில் நினைத்து, ரசித்து, அது திரும்பவும் வராதா என்று ஏங்குகிறவர்கள் பலர் நம்மிடம் பலர்.
அதேபோல் நமது இறை அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தால், தியானித்தால்
நம்மால் இறைவனை ரசிக்கவும், சுவைக்கவும் முடியும்.
முதலில் இறைவனின் எண்ணங்கள் நித்தியமானவை என்பதை உணர்ந்தால்,
இறைவன் நம் ஒவ்வொருவரையும் நித்திய காலமாகவே தன் மனதில்
எண்ணமாக (idea) சுமந்து நேசித்தார் என்பது புரியும்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, துவக்கமே இல்லாத காலத்திலிருந்து, நம்மை நினைத்து நேசித்தவர் இறைவன்.
இது வெறும் வார்த்தை அல்ல, சத்தியமான உண்மை.
நமது வாழ்வின்,
பாவத்தைத் தவிர, (Sin is our own product)
ஒவ்வொரு வினாடியையும் நாம் பிறக்கு முன்னே திட்டமிட்டவர் நம் தந்தை.
நாம் எங்கே பிறக்க வேண்டும், யாரிடம் பிறக்க வேண்டும்,
எந்த குழ்நிலையில் பிறக்க வேண்டும், யாருடைய உடன்பிறப்பாகப் பிறக்க வேண்டும்,
எப்படி வளர வேண்டும்,
என்னென்ன அனுபவங்களில் நாம் வளரவேண்டும் என்றெல்லாம்
திட்டமிட்டவர் நம் இறைவன்.
அவரது உள்ளத்தில் Idea வாக இருந்த நம்மை
அவர் திட்டமிட்ட நேரத்தில் real ஆக பிறக்க வைத்து
அவரது நித்திய திட்டத்தின்படி (eternal plan) பராமரித்து வருகிறார்.
தனது பராமரிப்பின்படி நம் வாழ்வின் வரும் துன்பங்களை நமது நன்மைக்காகவே அனுமதிக்கிறார்.
துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டு அவருக்கே ஒப்புக்கொடுத்தால் அவை ஆசீர்வாதங்களாக (blessings) மாறிவிடுகின்றன.
துன்பவேளையிலும் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் தான் இருக்கிறார்.
நம்மை நல்லவர்களாகவும், விண்ணுலக வாழ்வுக்கு ஏற்றவர்களாகவும் மாற்ற அவர் பயன்படுத்தும் கருவிகள்தான் துன்பங்கள்.
சிறிது தியானித்துப் பார்த்தால்
இறைவன் அருளால் நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு
ஆன்மீக ரீதியாக எப்படி பயன்பட்டன என்பது நமக்குப் புரியும்.
நமது உள்ளத்திலேயே இருந்து நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்பதும் புரியும்.
தியானிக்க தியானிக்க நமது உள்ளத்தில் நமக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு நெருக்கமாகும், வலுப்படும்.
நமது விசுவாசமும் ஆழமாகும்.
இறைவனை அடிக்கடித் தியானிப்பதால் ஏற்படும் விசுவாசத்தின் காரணமாக இறைவனைப் ரசிக்கவும், சுவைக்கவும் ஆரம்பிப்போம்.
அவரை நம் உள்ளத்தால் சுவைக்கச் சுவைக்க அவர் எவ்வளவு நல்லவர் என்பது புரியும்.
நமது பார்வைக்கு இரண்டு கோணங்கள் (point of views) உள்ளன.
நேர்மறை (Positive)
எதிர்மறை (negative)
ஒரு பொருளையோ, நபரையோ, நிகழ்வையோ நேர்மறைக் கோணத்தில் பார்த்தால் அதில் உள்ள நன்மைகள் எல்லாம் தெரியும்.
எதிர்மறைக் கோணத்தில் பார்த்தால் அதில் உள்ள நல்ல அம்சங்கள் கண்ணில் படாது.
பெற்றோரையும், பிள்ளைகளையும் பொறுத்த மட்டில், பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லதை மட்டும்தான் செய்வார்கள்.
ஒரு தந்தை மகனிடம் கோபப் பட்டாலும் அது அவனது நல்லதுக்காகவே இருக்கும்.
இதைப் புரிந்து கொண்டால் மகன் தந்தை தனக்கு என்ன செய்தாலும் நல்ல மனதோடு ஏற்றுக் கொள்வான்.
நம்மைப் படைத்த கடவுள் நம் தந்தை என்று முழுமனதோடு ஏற்றுக் கொண்டால்
அவர் நல்லவர்,
நமது நலனை மட்டும் நினைப்பவர்,
அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காக மட்டும் தான் செய்வார்
என்பதையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வோம்.
அதை ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள நன்மை நமது கண்ணுக்குத் தெரியும்.
நமக்கு நல்லதை மட்டும் செய்யும் கடவுளை தியானிக்கத் தியானிக்க
அவர் மீது பற்றும் பாசமும் அதிகரிப்பதோடு நமது விசுவாசமும் மிகவும் ஆழமாகும்.
ஆழமான விசுவாசம் இருக்கும் போது நம்மை முழுவதும் அவரிடம் அர்ப்பணித்து விடுவோம்.
அவர்தான் நமக்கு எல்லாம்.
அவர்தான் நமக்கு எல்லாம் என்றால் கடவுளோடு ஒன்றாக இணைந்து விட்டோம் என்று அர்த்தம்.
அதாவது இந்நிலையில் வாழ்வது நாம் அல்ல, கடவுளே நம்மில் வாழ்கிறார்.
இத்தகைய விசுவாச நிலையில்தான் புனித சின்னப்பர் தொடங்கி எல்லா புனிதர்களும் வாழ்ந்தார்கள்.
இத்தகைய விசுவாசம் உள்ளவர்களால் சாதிக்க முடியாதது ஒன்றும் இராது.
"கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்,................உங்களால் முடியாதது ஒன்றும் இராது."
(மத்.17:21)
தியானிப்போம், விசுவாசத்தை ஆழப்படுத்துவோம்.
விண்ணகத்தை உரிமையாக்குவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment