Wednesday, August 26, 2020

எல்லாம் நன்மைக்கே.


எல்லாம் நன்மைக்கே.
 **************************************


ஐந்தறிவு உள்ள பிராணிகளுக்கும், ஆறறிவு உள்ள மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஆறாவது அறிவு.

மனிதன் சிந்தித்து செயல்படுகிறான்.
பிராணிகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை.

அவை இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும்  instinct எனப்படும் இயற்கையான உந்துவிசை, அல்லது  உள் உணர்வினால் இயக்கப்படுகின்றன.

அதனால்தான் ஒரு வகையை சேர்ந்த பிராணிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இயங்குகின்றன.

மனிதன் மட்டும்தான் ஆறாவது அறிவாகிய புத்தியைப் பயன்படுத்தி சிந்தனை வழியே இயங்குகிறான்.

அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரியாக இயங்குகிறான்.

அவனுடைய சிந்தனை, செயல் ஆகியவை காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் மாறிக்கொண்டே  இருக்கின்றன.

ஏனெனில் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறான்.

பேனா என்றால் எழுத வேண்டும். எழுதவே முடியாத ஒரு  பொருளை  பேனா என்று அழைக்க முடியாது.

 சிந்திக்கத் தெரியாதவனை,   அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தெரியாதவனை எப்படி அழைப்பது?


நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம்.

ஆன்மீக அனுபவங்கள்.

ஆன்மாவுக்கு பயன்தரும் அனுபவங்களை ஆன்மீக அனுபவங்கள் என்கிறோம்.

இவை இறைவனைச்   சார்ந்த அனுபவங்கள்,

உலகைச் சார்ந்த அனுபவங்கள் லௌகீக அனுபவங்கள்.

லௌகீக அனுபவங்களிலிருந்தும் ஆன்மீக பாடங்கள்  கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா உலக மக்கள் அனைவருக்கும் ஒரு லௌகீக அனுபவம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த லௌகீக அனுபவத்திலிருந்து ஆன்மீக பாடம் கற்றிருக்கிறோமா?

சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம்.

கொரோனா நமது உலக அனுபவங்களுக்குள் மட்டுமல்ல ஆனமீக அனுபவங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்திருக்கிறது.

கொரோனாவின் காரணத்தினால் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன.

 நம்மால் நமது ஆன்மீக வழிகாட்டிகளாகிய  குருக்களைச் சந்திக்க இயலவில்லை. 

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறமுடியவில்லை. 

திருப்பலியை youtube ல் தான் பார்க்க முடிகிறது.

திருவிருந்தை அருந்த முடியவில்லை. 

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும்,

 மரித்தவர்களும் பரிசுத்த ஆவியின் ஆலயங்களே.

பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, தொட்டு ஆறுதல் கூற முடியவில்லை.

நமது கல்லறைத் தோட்டங்கள்  ஆலயத்திற்கு அடுத்து பரிசுத்தமானவை.

ஆனாலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆலயங்களுக்கு அங்கே இடமில்லை!

 அடக்கத்துக்கு குருவானவரோ, உபதேசியாரோ போக முடியாது.

இந்த அனுபவங்களிலிருந்து நாம் ஆன்மீக பாடம் கற்றுப் பயனடைய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

எல்லாம் வல்ல இயேசு எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

அவரால் எல்லாம் முடியும் என்று நமக்கு தெரியும்,

நாம் ஒவ்வொரு நாளையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

 அப்படியானால் நடப்பதெல்லாம் அவர் பெயராலேயே நடக்கின்றன.

தாயின் மடியில்  இருக்கும் பிள்ளை யாருக்கும் அஞ்சாது.

நாம் நமது தந்தையின் மடியில் தான் இருக்கிறோம்.

ஆகவே அச்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம்.

கோவிலுக்குப் போக முடியவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அது தாய்த் திருச்சபையின் விருப்பம் என்பதால் ஏற்றுக் கொள்கிறோம்.

இயேசுவின் விருப்பமும் அதுதான்.

"எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்." (மத்.16:19)

கோவிலுக்குப் போக முடியாதபோது  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தையே சுட்டிக் காண்பிக்கிறது.

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
(மத். 18:20)

நிறைய பேர் கூடி இருக்கும் கோவிலில் மட்டுமல்ல,

 கொஞ்சப் பேர் இருக்கும் நமது வீட்டிலும் இயேசு இருக்கிறார்.

கோவிலில் செய்யவேண்டிய செபத்தை வீட்டிலேயும் செய்யலாம்.

ஏனெனில் நமது ஆன்மீக நன்மைக்காக 

நாம் எதை, எங்கு செய்தாலும்

 இயேசுவும் நம்முடன் இருந்துதான் செயலாற்றுகிறார்.

 நமது உள்ளமாகிய ஆலயத்தில் இயேசு எப்போதும் இருப்பதால் நாம் தனியாக இருப்பதில்லை. 

ஆக குடும்பத்தில் இருந்தாலும் சரி தனியாய் இருந்தாலும் சரி  இறைவன் நம்மோடுதான் இருக்கிறார்.

இவை எல்லாம் அறிவுபூர்வமாக நாம் அறிந்ததுதான்.

 ஆனால் அனுபவபூர்வமாக அறிந்துகொள்ள கொரோனா உதவி செய்திருக்கிறது.

எந்த சூழ்நிலையிலும் இறைவன் நம்மோடுதான் இருக்கிறார். 

நாம் அவரது பாதுகாப்பில்தான் இருக்கிறோம் என்பதை 

அனுபவப் பூர்வமாக நாம் அறிவது  அனுபவம் கற்றுத் தந்திருக்கிற பாடம்.

இறைவன் பைபிள் வழியாக மட்டுமல்ல, குருக்கள் வழியாக மட்டுமல்ல நேரடியாகவும் நம்மோடு பேசுகிறார்.

திருப்பலி காணும்போதும், பிரசங்கம் கேட்கும்போதும் நமக்கு வெளியே இருந்து இறைச் செய்தி வருவதால் 

 நமக்குள்ளிருந்து வரும் செய்தியைப் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை.

ஆனால் இப்போது நாம் நமக்குள் பேசும் இயேசுவுக்கு காது கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குருவானவர் சொல்வதை காது வழியாக கேட்டுக்கொண்டிருந்த நாம் இனி இயேசு கூறுவதை உள்ளத்தின் வழியே கேட்போம்.

காது வழியே செல்லும் செய்தி உள்ளத்திற்குப் போகாமல் மறு காது வழியே வெளியே வந்துவிடலாம்.

 ஆனால் உள்ளத்தில் பிறக்கும் செய்தி உள்ளத்தில் தங்கி பலன் தரும்.

Youtube வழியே வரும் இறைச் செய்தியையும்  உள்ளத்தில் பதிக்க  கற்றுக்கொள்வோம்.

உள்ளத்தில் பதியும் செய்திதான் நமது ஆன்மாவை இயக்கும்.

கொரோனா மூலம் கிடைக்கும் நேரத்தை தியானிக்கவும், இயேசுவோடு பேசவும் பயன்படுத்திக் கொள்வோம்.

கொரோனா காலம்  தரும் இன்னுமொரு முக்கியமான அனுபவம் ஒன்று இருக்கிறது.

இயேசு இராயப்பரின் மேல் கட்டிய திருச்சபையின் உறுப்பினர்கள் நாம்.

இறைவன் ஒருவர். அவரைப்பங்கு போட முடியாது.  

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் முழுமையாக இருக்கிறார்.

நமக்கு அவர் தன்னை முழுமையாகத் தந்திருக்கிறார்.

நமது ஆன்மாவும் முழுமையானது பங்கு வைக்க முடியாதது.

நமது உடலை வெட்டி கூறு போட முடியும், ஆனால் ஆன்மாவை வெட்டி கூறு போட முடியாது.

அதேபோல ஒரே திருச்சபை,
 முழுமையான ஆன்மீக அமைப்பு. அதையும் பங்கு போக முடியாது.

ஒரே திருச்சபையைப் பிரிக்க முடியாது.

சடப்பொருளைப் பிரிக்கலாம். ஆன்மீகத்தைப் பிரிக்க முடியாது.


திருச்சபையில் ஆயிரம் பேர் இருப்தாக வைத்துக் கொள்வோம். 

அதிலிருந்து 50 பேர் வெளியேறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். 

திருச்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை குறையலாம்.

ஆனால் திருச்சபை முழுமையாகத்தான் இருக்கும்.

ஒரே திருச்சபை 1000த்தில் 950 திருச்சபையாக மாறாது.

ஏனெனில் அது கிறிஸ்துவின் 
ஞானசரீம்.

கிறிஸ்துவைப் பிரிக்க முடியாது.

இயேசு ஒவ்வொரும் உறுப்பினருக்கும் முழுமையாக சொந்தம்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி நான்கு பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பாவும் முழுவதும் சொந்தம். அம்மாவும் முழுவதும் சொந்தம்.

அப்பாவின் சடப் பொருளான, சொத்தைப் பங்கு வைக்கலாம். அப்பாவைப் பங்கு வைக்க முடியாது.

'
நமக்குள் இருப்பது முழுமையான ஆன்மா,

 ஆன்மாவில் வசிப்பது முழுமையான கடவுள்

 நமக்கு சொந்தமானது முழுமையான இறைவன்.

நாம் முழுமையான திருச்சபைக்குள் இருக்கிறோம்.

ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் முழுத் திருச்சபையின் பலனை அனுபவிக்கிறார்.

, Every individual  member enjoys the benefits of the   whole church.

ஆகவே இக்காலகட்டத்தில் நாம் தனியாக இருக்க நேர்ந்ததே என்ற கவலை வேண்டாம்,

 முழு கிறிஸ்துவும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.

ஆகவே அவருடைய ஞான உடலாகிய
முழு திருச்சபையும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது

கிறிஸ்துவாகிய ஒரே ஊற்றிலிருந்து தான் அனைவரும் அருளாகிய நீரைப் பருகுகிறோம்.

இந்த உண்மையை அனுபவப் பூர்வமாக அனுபவிக்க இந்த கொரோனா  காலம் உதவி இருக்கிறது.


மற்றொரு உண்மையை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்தால் நாம் படும் கஷ்டங்களை நினைத்து சங்கடப்பட மாட்டோம்.



இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று 

மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் 

பாடுகள் பல படவும்,

 கொலையுண்டு 

மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்குக் கூறியதை

இங்கே நினைவு கூற வேண்டும்.

இயேசு பூவுலகிற்கு வந்ததே நமக்காக  பாடுபட்டு,

 சிலுவையில் மரணம்  அடைந்து  நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான்.

இயேசு நமக்காக பட்ட பாடுகளை நினைத்தால் நாம் பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்கள்  நமக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.

நாமும் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் 

நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை நமது பாவங்களுக்கும்

 உலகத்தினர் அனைவரின்   பாவங்களுக்கும் பரிகாரமாகத் தந்தையிடம் ஒப்படைப்போம். 

இன்ப  காலத்தில் இறைவனை மறப்பதும், துன்ப காலத்தில் அவரைத் தேடுவதும் மனித ரத்தத்தில் ஊறி விட்ட பண்பு.   

அறிவியல் வசதிகள் பெருகப் பெருக மனிதன் எல்லாவற்றையும் தன்னால் சாதிக்க முடியும் என்ற மமதையோடு இறைவனை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

உலகில் பாவங்கள் அளவுக்கு மீறி பெருகிவிட்டன. 

மனித குலத்தைப் பாவத்தின் பாதையிலிருந்து திருப்பி தன் பாதைக்கு கொண்டு வர இறைவன்  திட்டமிட்டிருக்கிறார்.


அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிற மனிதகுலத்தை நிறுத்தி, யோசிக்க நேரம் கொடுத்திருக்கிறது கொரோனா,

மனிதன் பாவத்தை விட்டு விட்டு இறைவன்பால் திரும்ப வேண்டும்.

மனம் வருந்தி, திருந்தி நல்வழியில் வாழ முடிவு எடுக்க வேண்டும்.

அரசுகள் போர் ஆசையை கைவிட்டுவிட்டு சமாதானத்திற்குத் திரும்பவேண்டும்.

அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும்.

அறிவியலால் உலகைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து

அரசுகள் இறையியலை ஏற்று ஆன்மீகப் பாதையில் விண்ணகம் நோக்கி நடைபோட வேண்டும். 

உலகம் ஆண்டவர் பக்கம் திரும்பினால் கொரோனா இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 அதுவரை, கிடைத்த விடுமுறையை முழுக்க முழுக்க ஆண்டவருக்காகவே செலவழிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment