."ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்."
(லூக்.1:37)
***************************************
தினமும் பைபிள் வாசிக்கிறோம்..
பக்தியுடன்தான் வாசிக்கிறோம்,
ஒவ்வொரு வசனமாக வாசிக்கிறோம்.
சில வசனங்களை மனப்பாடம் கூட செய்கிறோம்.
தேவைப்படும்போது வசனங்களை மேற்கோள் காட்டுகிறோம்.
விளக்கமும் கொடுக்கிறோம்.
இதெல்லாம் ஆசிரியர் வீட்டில் பாடங்களைத் தயாரித்து வகுப்பில் விளக்கி பாடம் நடத்துவதுபோல.
மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து, Super ஆ தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று, விண்ணப்பிக்கிற வேலையையும் பெறுவார்கள்.
,அவர்கள் பெற்ற மதிப்பெண் அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கும்.
ஆனால் படித்த விஷயம் வாழ்க்கையில் எந்த சமயத்திலும் பயன்படாது.
வேண்டுமென்றால் அவர்களும் ஆசிரியர்களாக மாறி அவர்களும் பாடம் நடத்தலாம்.
இரண்டாம் உலகப் போர் பற்றி 20 வருடங்கள் பாடம் நடத்தியிருக்கிறேன்
ஆனால் இரண்டாம் உலகப்போரின் காரணங்களோ, விளைவுகளோ என் வாழ்க்கையில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பாடம் நடத்தியதற்கு சம்பளம் கிடைத்தது மட்டும்தான் பயன்.
அதே கதி நம் வாழ்வில் பைபிளுக்கும் வந்து விட கூடாது.
நான் பைபிளை வாசித்து 10 பேருக்கு விளக்கிய பின்
நான் வாசித்தது என் வாழ்வில் எனக்குப் பயன்படாவிட்டால் நான் வாசித்ததில் பயனில்லை.
நான் வாசித்த வசனம் எப்படி எனக்கு பயன்படாமல் போகும்?
இறைவார்த்தையில் பொருள் இருக்கிறது, உயிர் இருக்கிறது.
இறைவார்த்தையை வாசிக்கும்போது பொருளோடு உயிரையும் சேர்த்து நாம் கிரகிக்க வேண்டும்.
அநேக சமயங்களில் பொருளை எடுத்துக் கொள்கிறோம், உயிரை விட்டுவிடுகிறோம்.
இதை எப்படி கண்டுபிடிப்பது?
கபிரியேல் தூதர் மாதாவிடம் மங்கள வார்த்தை சொன்ன போது
"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"" என்று சொன்னார்.
இவ்வசனத்தை நம் வாழ்நாளில் பலமுறை வாசித்திருப்போம்.
"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
இவ்வசனத்தையும் பலமுறை வாசித்திருப்போம்.
இவ்விரு வசனங்களையும் நம் வாழ்நாளில் நமக்கு எப்போவாவது பயன்படுத்துகிறோமா?
நாம் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.
நமது purse ல் 10,000 ரூபாய் இருக்கிறது.
வழியில் சைக்கிளில் ஒரு வியாபாரி ஜவுளி விற்றுக் கொண்டிருக்கிறான்.
ஒரு பெண் சேலை ஒன்றை விலை பேசிக் கொண்டிருக்கிறாள்.
நல்ல சேலை. விலை 5000 ரூபாய்.
மனைவிக்கு ஒரு சேலை வாங்கிக் கொடுக்க ஆவலாயிருக்கிறது.
"பணம் இல்லையே, என்ன செய்யலாம்? சரி, இன்னொரு நாள் பார்ப்போம்."
என்று வாங்க முடியாமைக்கு வருத்தப்பட்டு கொண்டே போகிறோம்,
நம்மைவிட பைத்தியக்காரர்கள் உலகத்தில் இருப்பார்களா?
Purse ல் பத்தாயிரம் இருப்பது அவசரத்தில் ஞாபகத்திற்கு வராவிட்டால் அது இருந்தும் பயனில்லை.
குடும்பத்தில் ஒரு பெரிய சிக்கல். அதை எப்படிப் பிரிப்பது என்று தெரியாமல் நாட்கணக்கில் கண்ணைக் கசக்கிக் கொண்டே அலைகிறோம்.
"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
என்ற வசனத்தைப் பல முறை வாசித்திருந்தும், அது மூளைக்கு எட்டவில்லை.
"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"" என்று சொன்னார்."
என்ற வசனமும் நமது ஞாபகத்துக்கு வரவில்லை.
இரண்டு வசனங்களும் உயிரோடு நம்மில் இருந்திருந்தால் நமது குடும்பத்தில் சிக்கலே இருந்திருக்காது. வந்த உடனே ஓடி இருக்கும்.
உயிருள்ள இறைவார்த்தையும் ஆழமுள்ள விசுவாசமும் சேர்ந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இருக்க முடியாது.
வீட்டில் அழகான, கவர்ச்சிகரமான, விலைமதிப்புள்ள T.V.ஒன்று இருக்கிறது.
வீட்டிற்கு வருவோர்க்கெல்லாம் அதைக் காண்பித்து அதன் அருமை பெருமைகளை எல்லாம் விளக்குவோம்.
ஒரு நண்பர் சொன்னார்:
"T.V. அழகாக இருக்கிறது. படம் தெரியவில்லையே?"
"வீட்டில் மின்சாரம் இல்லையே!"
"அதாவது T.V க்கு உடல் இருக்கிறது, அப்போ T.V !இருந்தும் பயனில்லை"
இறை வார்த்தைக்கு உயிர் இருக்கிறது ஆனால் நாம் அதை கண்டுகொள்வதில்லை.
"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:27)
இவ்வசனம் எல்லோருக்கும் தெரியும். இதன் பொருளும் பெரியும்.
நாம் எல்லோருமே கிறிஸ்துவின் சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம்.
ஆனால் நமக்கு துன்பங்கள் வரும் பொழுது நமது உள்ளத்தில் இருக்கும் இந்த வசனம் என்ன செய்கிறது?
நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டால் இந்த வசனம் நம்மில் உயிருடன் இருக்கிறது.
துன்பங்கள் நம்மிடம் விருப்பமின்மை ஏற்படுத்தினால் வசனம் வெறும் வசனமாக இருக்கிறது.
மற்றவர்களுக்குத் துன்பம் வரும்போது இந்த வசனத்தை அவர்களிடம் மேற்கோள்காட்டி பேசுவோம்.
ஆனால் நமக்கே துன்பம் வரும்போது வசனத்தை மறந்து விடுவோம்.
நோய் நொடிகள் வரும்போது, அவை நீங்க மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.
நோய்கள் நீங்க கடவுளிடம் வேண்ட வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.
இயேசுவே புதுமைகள் செய்து அநேக நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.
நாம் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது ஏற்படும் உடல்ரீதியான துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினால்,
அவை இறைவன் அருளைக் கொண்டு வரும் ஆன்மீக சக்தி கொண்ட சிலுவையாக மாறிவிடுமே!
உடல் வலிகளும் சரி, வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களும் சரி
வெறும் துன்பங்களாக இருப்பதும், சிலுவையாக இருப்பதும் நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
உயிருள்ள இறைவாக்கை வெறும் வசனமாக வைத்திருக்காமல், நமது உயிரோடு கலந்த வாழ்வாக மாற்றினால்
துன்பம் ஆன்மீக வாழ்வளிக்கும் இயேசுவின் சிலுவையாக மாறி, நம்மை இயேசுவின் சீடனாக மாற்றும்.
ஒரு தந்தை ஒவ்வொரு நாள் காலையிலும் தன் பிள்ளை.களுக்கு ஒரு இறைவார்த்தையை விளக்குவது வழக்கம்.
அன்றைய வசனம்
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."
வசனத்தின் பொருளை விளக்கிவிட்டு தந்தை சொன்னார்,
"இந்த வசனம் இன்று மட்டுமல்ல என்றும் உங்கள் உயிராய் இருந்து செயல்பட வேண்டும்."
பிள்ளைகளில் ஒருவன் உயர்நிலைப்பள்ளி மாணவன். பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
அன்று மாலையில் பள்ளிக்கூடம் வந்தவன் நேரே அப்பாவிடம் சென்றான்.
"அப்பா, முதலில் ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள்."
"என்னடே விஷயம்? பள்ளியிலில் என்ன நடந்தது?"
"முதலில் ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள். அப்புறம் சொல்கிறேன்."
"ஆண்டவருக்கு நன்றி!
சரி, இப்போ சொல்லு."
பையன் முதலில் பையிலிருந்து progress report ஐ எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.
"பையன் நல்ல மதிப்பெண்
வாங்கியிருப்பான் போல் இருக்கிறது"
என்று எண்ணிக்கொண்டே,
progress report ஐ பார்த்தவுடன் முகம் மாறிவிட்டது.
மூன்று பாடங்களுக்கு சிவப்புமையில் மார்க் பதிவாகியிருந்தது.
"ஏண்டா மூன்று பாடங்களில் பெயில் ஆகி இருக்க, அதற்கு நன்றி சொல்ல வேண்டுமா?"
"அப்பா, என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."
"டேய்! இறை வார்த்தையை Joke அடிக்கப் பயன்படுத்தக்கூடாது."
"Joke இல்லப்பா. உண்மையாக, மனமார சொல்லுகிறேன்.
நான் படிக்காமல் சோம்பேறியாக இருந்து தேர்வு எழுதி குறைந்த மார்க் எடுத்திருந்தால் என் தப்பு.
உங்களுக்கு தெரியும் நான் நேரத்தை வீணாக்காமல் படிக்கிறேன் என்று.
உங்களுக்கு தெரியும் கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக திறமைகளை கொடுப்பதில்லை என்று.
தாலந்து உவமையை விளக்கும்போது நீங்கள்தானே சொன்னீர்கள்.
எனக்கு அவர் தந்துள்ள திறமைகளை முற்றிலும் பயன்படுத்தி இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன்.
எனக்கு நன்றாகத் தெரிகிறது, எனது மேற்படிப்பு கடவுளின் சித்தம் இல்லை என்று.
அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது என் கடமை.
பத்தாவது வகுப்பு முடிந்தவுடன் நான் உங்களுடன் விவசாயம் பார்க்க வந்துவிடுகிறேன்.
அதுதான் கடவுளே சித்தம் என்று நான் நம்புகிறேன்.
அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்,
நீங்களும் நன்றி கூறுங்கள்."
தந்தையின் முகம் மலர்ந்தது.
"இறைவார்த்தை உன் உள்ளத்தில் உயிருடன் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இறைவார்த்தையில் பொருளையும் உயிரையும் ஒருங்கே ஏற்றுக் கொள்பவன்
இறைவன் சித்தப்படியே வாழ்வான், வளர்வான்.
இறைவா உனக்கு நன்றி."
வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் இறைவனினின் சித்தமாக இருக்கும்.
நமது விசுவாசத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்க வந்திருக்கிறது ஒரு சவால்: கொரோனாவின் ஆட்சி.
சவாலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால்,
"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."
உள்ளிட்ட இறை வார்த்தைகள் நம்முடைய உள்ளத்தில் உயிரோடு இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
அஞ்சாமல் வெற்றிநடை போடுவோம் விண் நோக்கி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment