Wednesday, August 19, 2020

"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" (மத்.22:21)

"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" (மத்.22:21)
***************************************
இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள்.

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது,
உயிர் உள்ளது,
வாழ்வு அளிக்கக் கூடியது.
வல்லமையுள்ளது.

அவர் பேசிய வார்த்தைகள் அவர் உலகில் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு  மட்டுமல்ல

நமக்கும், உலகம் முடியும் மட்டும் வாழப்போகும் அனைத்து மக்களுக்கும் வழி காட்டுபவை.

அவரது நற்செய்தியைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் எப்போதும் அவரைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அவரின் புகழின் மீது பொறாமை கொண்ட பரிசேயர்

அவரைத் தங்கள் பேச்சில் சிக்கவைத்து, அவரது புகழைக் கெடுக்க முயற்சி செய்தார்கள்.

ஒரு நாள் தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி,

"போதகரே, நீர் உண்மை உள்ளவர்: கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர்.

நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்."

முதலில் அவர்கள் சொன்னது முகஸ்துதி.

அவர்மேல் தங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதாக காட்டிக்கொள்ள சொன்ன புகழ்ச்சி வார்த்தைகள்.

உண்மையில் அவர்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல, வாயிலிருந்து மட்டும் வந்தவை.

அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி அவரை அவரது பதிலில் தங்களிடம் சிக்க வைப்பதற்காக.

மெசியாவைப் பற்றி மக்களிடம் இருந்த தவறான கருத்தை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி.

மெசியா ரோமை சாம்ராஜ்யத்திலிருந்து, தங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து,

தனி யூத அரசை நிறுவுவார் என்று மக்கள் எண்ணி கொண்டிருந்தார்கள்.

மெசியா வந்தது மக்களுக்கு விடுதலை வாங்கி தரத்தான் .

ஆனால் அவர் வாங்கி தரப்போவது அரசியல் விடுதலை அல்ல, ஆன்மீக விடுதலை, பாவத்திலிருந்து  விடுதலை.

அவர்கள் கேட்ட கேள்வி:

செசாருக்கு வரி கொடுப்பது

முறையா ?

இல்லையா?

"செசாருக்கு வரி கொடுப்பது முறை" என்று அவர் சொன்னால்,

அவர் செசாருடைய ஆள், ஆகவே மெசியா அல்ல என்று எண்ணி

மக்கள் அவரை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.

"செசாருக்கு வரி கொடுப்பது முறை அல்ல" என்று சொன்னால் அவர் செசாருக்கு எதிரானவர் என்று அவர்மேல் ரோமை அரசு நடவடிக்கை எடுக்கும்.

என்ன பதில் சொன்னாலும் இயேசு மாட்டிக்கொள்வார் என்று பரிசேயர்  நம்பினார்கள்.

இயேசு அவர்களது கெடுமதியை அறிந்திருந்தார்.

அவர் பதிலாக

"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.

"செசாருக்கு உடையதைச் செசாருக்குக் கொடுங்கள்."

"செசாருக்கு வரி கொடுங்கள்" என்று சொல்லவில்லை.

ஒருவருக்கு 'உடையதை' அவருக்குக் கொடுப்பது நீதி.

உடையதா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது மக்கள்.

இயேசு அரசியல்வாதி அல்ல, அதைத் தீர்மானிக்க.

அவர் இறைமகன், முழுக்க முழுக்க ஆன்மீக விடுதலைக்காக மனிதனாகப் பிறந்தவர்.

அரசியல் விடுதலைக்காகவோ,   பொருளாதார விடுதலைக்காகவோ   மனிதனாகப் பிறக்கவில்லை.

ஆகவே வரி கொடுப்பது பற்றி  சொல்வது அவர் கடமை அல்ல.

இயேசு பரிசேயரால் கொடுக்கப்பட்ட.  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நற்செய்தியையும் உடனே அறிவிக்கிறார்.

"கடவுளுடையதைக் கடவுளுக்குச் செலுத்துங்கள்."

இந்த வாக்கியத்திற்குள் கொஞ்சம் ஆழமாகச் செல்வோம்.

மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்.

ஆகவே அவன் கடவுளுக்கே உரிய அவரது உடைமை.

ஆனால் கடவுளுக்கு எதிராகத் தான் செய்த பாவத்தினால் தன்னைத் தானே கடவுளிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டான்.

கடவுள் தான் இழந்த மனிதனை மீட்கவே மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் பரிசுத்தர். ஆகவே, பாவம்  உள்ள மனிதனால் பரிசுத்தராகிய கடவுளோடு சேர முடியாது.

ஆகவே அவன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து அவனது பாவங்களை மன்னித்த பின்புதான்

அவன் கடவுளோடு சேர முடியும்.

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்யவே கடவுள் மனிதன் ஆனார்.

பரிகாரம் செய்தபின்பும்,

தன் சுதந்தரத்தைப் பயன்படுத்தி கடவுளிடமிருந்து பிரிந்த மனிதன்

தன் சுதந்தரத்தைப் பயன்படுத்திதான் தன்னைத்  தானே கடவுளுக்குக் கொடுக்க முடியும்.

இயேசு தனது பொதுவாழ்வின் இறுதியில், பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து

மனிதனின் பாவத்திற்குப் பரிகாரம் செய்து விடுவார்.

அதன் பின் மனிதன் கடவுளுடைய உடைமைப் பொருளாகிய தன்னை கடவுளிடமே கொடுத்து விட வேண்டும்.

"கடவுளுடையதைக் கடவுளுக்குச் செலுத்துங்கள்" என்ற வாக்கியத்தில் மனிதனுடைய தலையாய கடமை அடங்கி இருக்கிறது.

ஆன்மீகமும், லௌகீகமும் இணைந்தவன் மனிதன்.

லௌகீகத்தில் அவன் அவனை ஆளும் அரசாங்கத்துக்குக் கட்டுப் பட்டிருக்கிறான்.

ஆகவே அரசுக்கு அவன் கொடுத்த வேண்டியதைக் கொடுக்க வேண்டும்.

இங்கு நமது ஞாபகத்தில் வைக்க வேண்டியது நமது ஆன்மீகம் எந்த வகையிலும் உலக அரசுக்கு கட்டுப்பட்டது அல்ல.

இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டது.

அரசினால் ஆன்மீக சம்பத்தப்பட்ட கட்டளைகளை நமக்குக் கொடுக்க முடியாது.

உலக அரசு ஆன்மீகத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் அதற்கு நாம் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவேதான்

"செசாருக்கு 'உடையதைச்' செசாருக்குக் கொடுங்கள்."
என்றார்.

செசாருக்கு நமது லௌகீகம் மட்டுமே சொந்தம்.

ஆனால் கடவுளுக்கு நாம் முழுவதுமே சொந்தம்.

அதாவது நமது ஆன்மீக வாழ்வு மட்டுமல்ல, நமது உலக வாழ்வும் கடவுளுக்குச் சொந்தம்.

நமது உலக வாழ்வு எந்தவகையிலும் ஆன்மீக வாழ்வுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது.

ஆன்மீக வாழ்விற்காக உலக வாழ்வை தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

தாய்த் திருச்சபையின் வேத சாட்சிகள் அதற்கு நமது முன்னோடிகள்.

கிறிஸ்துவின் போதனையைக் கைவிட்டால் மட்டுமே உயிர் வாழலாம் என்று அரசன் சொன்னபோது,

"கடவுளை மறுதலிப்பதை விட உயிரை விடுவதே மேல்"

என்று உயிர்த்தியாகம் செய்தவர்கள்தான் வேத சாட்சிகள்.

நமது உடல், பொருள், ஆவி அனைத்தும் கடவுளுக்கு மட்டுமே சொந்தம்.

நம்மை மீட்கவே இயேசு சிலுவையில் பலியானார்.

இயேசு நம்மை மீட்டுவிட்டார்.

ஆகவே நாம் முழுவதும்   அவருக்கே சொந்தம்.

அவருக்கே சொந்தமான நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும்  அவருக்கே கொடுப்போம்.

இயேசு தன் உயிரையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்டிருக்கிறார்.

நம்மை அவரது உயிருக்கு உயிராக நினைத்ததால் தான் அவ்வாறு செய்திருக்கிறார்.

நாம் ஒரு  பொருளை விலை கொடுத்து வாங்கும்போது நாம் வாங்கும் பொருள் நாம் கொடுக்கும். விலைக்குச் சமமானதா என்று பார்ப்போம்.

ஆனால் ஒரு பொருளை மிகவும் நேசித்தால், அதன் பெறுமானத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.

நாம் நேசிக்கும் பொருள் வெறும் பத்து ரூபாய் மட்டும் பெறுமானதாக இருந்தாலும் அதை ஆயிரம் ரூபாய் கொடுத்தும் கூட வாங்குவோம்.

நமது நேசம் அதன் பெறுமானத்தைக் கூட்டிவிடுகிறது.

கடவுள் முன் நாம் ஒன்றுமே இல்லாதவர்கள்.

ஆனாலும் அவர் நம்மை எவ்வளவு நேசித்திருந்தால் தனது  விலை மதிப்பற்ற ரத்தத்தை சிந்தி ஒன்றுமில்லாத நம்மை மீட்டிருப்பார்!

இதை உணர்ந்தால் நாம் நம்மை முழுவதும் அவருக்கு அர்ப்பணிக்க தயங்கவே மாட்டோம்.

அர்ப்பண வாழ்வு என்பது ரோஜாப்பூ மெத்தை இல்லை, முள்கட்டில்.

ஆனாலும் இயேசுவிற்கு யூதர்கள் சூட்டிய முள்முடி அளவுக்கு கஷ்டமானது அல்ல.

எப்படி கொடுக்கப்பட்ட கசை அடியையும், முள்முடியையும் இயேசு நமக்காகத் தாங்கிக் கொண்டாரோ,

அதேபோல நாமும்  அவருக்காக வாழும் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

இயேசு 40 நாட்கள் நோன்பிருந்து பொது வாழ்க்கையை ஆரம்பிக்கப் புறப்படும்போது சாத்தான் அவரை சோதித்தான்.

இயேசுவையே சோதித்தவன் நம்மை விட்டு வைப்பானா?

கட்டாயம் சோதிப்பான்.

ஆன்மீக வாழ்வின் பெருமையே இறையருளின் உதவியால் சாத்தானை வென்று விண்ணகத்தை அடைவதில்தான் அடங்கியிருக்கிறது.

சாத்தானால்தானே பாவம் உலகினுள்ளே நுழைந்தது,

அப்படி இருக்க சாத்தானை வெல்லாமல் எப்படி பாவத்தை வெல்ல முடியும்?

இயேசுவின் பொது வாழ்வில்  பரிசேயரும், சதுசேயரும் சாத்தானின் வேலையைத் தானே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

இயேசுவின் மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்களும் அவர்கள்தானே!

ஆனால் இயேசுவினால் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

அவர்கள் செய்த கொலையிலிருந்து நமக்கு இரட்சணியம் பிறந்ததே!

அது இயேசு வரவழைத்த நன்மை.

இயேசுவிற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களை சாத்தானால் எதுவுமே செய்ய முடியாது.

சோதிக்க மட்டும் முடியும், வெற்றி பெற இயலாது.

இயேசுவின் அருள் அரணாய் இருந்து அவர்களைப் பாதுகாக்கும்.

நமக்குத் தன்னையே அளித்த
இயேசுவுக்கு நம்மையே அர்ப்பணிப்போம்.

நிலை வாழ்வில் அவரோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment