Thursday, August 20, 2020

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" (லூக்.6:5)

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" 
(லூக்.6:5)
***************************************
 "கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்." ( ஆதி. 2:2)

எல்லாருக்கும் தெரியும் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது என்று.

கடவுள் நித்திய காலத்திலிருந்து சதா இயங்கிக் கொண்டிருக்கிறார்.

God is always active.

அப்படியானால் இவ்வசனம் தரும் இறைச் செய்தி என்ன?

ஓய்வு நாள் முழுக்க முழுக்க ஆண்டவருக்கு உரிய நாள்.

வாரத்தின் ஆறு நாட்களில் இவ்வுலகு சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்கிறோம். அவற்றையும் ஆண்டவரது அதிமிக மகிமைக்காகத்தான் செய்ய வேண்டும்.

ஏழாவது நாளில் இவ்வுலகு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு முழு ஓய்வு கொடுத்துவிட்டு, 

நேரடியாக இறைவன் சம்பந்தப்பட்ட பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

ஏனெனில் அது ஆண்டவருடைய நாள்.

பழைய ஏற்பாட்டில் சனிக்கிழமை ஓய்வு நாளாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் உயிர்த்த நாளாக இருப்பதால்,

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அந்நாளை நாம் ஓய்வுநாளாகக் கொண்டாடுகிறோம்.

ஆக நமக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய நாள்.

ஆண்டவருடைய நாள் ஆண்டவருவருக்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும்.


ஆண்டவருடைய நாளை ஆண்டவருவருக்காக மட்டுமே
எப்படிச் செலவழிப்பது?

சாதாரண நாட்களிலேயே
அதாவது கொரோனா ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னால்,

நாம் சுதந்திரமாகச் செயல்படக் கூடிய காலத்திலேயே,

நம்ம ஆட்கள் ஞாயிறு கடன் பூசைக்கு வர ரொம்ப சங்கடப்படுவாங்க.

அநேக ஆட்கள் பூசை ஆரம்பிச்ச பிறகு தான் வருவாங்க.

நன்மை கொடுக்கும் முன் கோயில் நிறைந்து விடும்.

நன்மை கொடுக்கும்போது இருந்த ஆட்கள் பூசை முடியும்போது இருக்க மாட்டாங்க.

சுருக்கமாக ஞாயிற்றுக் கிழமை அநேகர் முழுப்பூசை காணமாட்டார்கள்.

கொரோனா வந்தது.

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா, கோவிலையும் பூட்டி விட்டது.

கோவிலுக்குப் போக முடியாத இந்த காலத்தில்  எப்படி நாம் ஓய்வுநாளை கடவுளுக்காக மட்டும் செலவழிப்பது?

கடவுள் சர்வ வல்லவர். சர்வ ஞானம் உள்ளவர், அவரின்றி ஒரு அணுவும் அசையாது.

 அப்படியானால் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா அவருக்கு தெரியாமல் உலகிற்கிற்குள் நுழைந்திருக்க முடியாது.

 "என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" என்று இறைவாக்கு சொல்கிறது.

"நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்ற
நேர்மறை உணர்வோடு (positive feeling) கொரோனாவை எடுத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

கோவில் இறைவன் வாழும் ஆலயம் என்பதை மறுக்க முடியாது.

திவ்ய நற்கருணை ஸ்தாபகம் உள்ள ஆலயத்தில் இயேசு உடலோடும் ஆன்மாவோடும் உண்மையிலேயே இருக்கின்றார். (Really present)

அவரை நேரில் சந்திக்கவும், அவரை நமது ஆன்மீக உணவாக பெறவும் வாய்ப்பு இல்லையே 

என்பதை நினைக்கும்போது நமக்கு வருத்தமாக இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

ஆனாலும் நம்மை விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்காகவே இறைவன் இந்நிலையை அனுமதித்திருக்கிறார் எந்த நேர்மறை உணர்வோடு வாழ்வோம்.

இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதை விசுவசிக்கிறோம். 

அப்படியானால் நமது இல்லத்திலும் இருக்கிறார்,

 நமது உள்ளத்திலும் இருக்கிறார்.

 உண்மையில் நமது இல்லமும்,  உள்ளமும் இறைவனுக்குள்  இருக்கின்றன.
-
' "என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்"  (அரு. 20:29)

என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.

திவ்ய நற்கருணையில் இயேசுவை  நமது புறக் கண்ணாலும், அகக் கண்ணாலும் பார்க்கிறோம்.

 அதே இயேசுவை நமது இல்லத்தில் நம்முடைய அகக்கண்ணால் பார்ப்போம். தியானத்தினால் அவரை நெருங்கி அரவணைப்போம்.

 நமது உள்ளமும் ஆண்டவர் வாழும் ஆலயம்தான். 

பரிசுத்தர் வாழும் ஆலயத்தை பரிசுத்தமாக வைத்துக்கொள்வோம், இதுவே நாம் அவருக்கு செய்யும் வழிபாடுதான்.

ஊரடங்கு நாட்டில் அமலில் இருப்பதால் ஏறக்குறைய வாரம் முழுவதும் வீட்டில் தான் இருக்கிறோம்.

ஆகவே இறைவனைத் தியானிக்கவும், வழிபடவும் ,நன்றி கூறவும்,
,வாழ்த்தவும், நமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்  நமக்கு நேரம் நிறையவே இருக்கிறது.

சொல்லப்போனால் சாதாரண காலத்தைவிட இக்காலத்தில்தான் இறைவனை பற்றி சிந்திக்க நமக்கு அதிகம் நேரம் கிடைக்கிறது.

நமக்காகத்தான் youtube ல் 
திருப்பலிகளும், பிரசங்கங்களும், ஆராதனைகளும் நிறைய ஒளிபரப்பப்படுகின்றன.

நமக்கு தெரிவது படங்கள்தான்.

கண்ணை படத்திலும்,

 கருத்தை உண்மையில் நம் உள்ளத்தில் வாழும் இறைவனிடமும் திருப்பி,

அவரோடு ஒன்றித்து செபிப்பது நமது விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்தும்.

நமது கண் படத்தில் இருந்தாலும்

 மூளையின் செயல்பாட்டை நேரே உள்ளம் நோக்கித் திருப்புவோம்.

உள்ளத்தில் வாழும் உண்மையான இறைவனோடு ஒன்றிப்போம்.

நமது எண்ணங்களை இறைவனில் ஒன்று படுத்துவோம்.

 எண்ணங்களால் இறைவனோடு  ஒன்றிக்கும்போது நமது நெஞ்சின் ஆழத்தில் இறைவன் செயல்படுவதை நன்கு உணர்வோம்.

இப்படி நாம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நமது விசுவாசம் ஆழப்படும்.

உள்ளத்தில் இறைவனோடு ஒன்றிக்க ஒன்றிக்க நமது ஆன்மா பரிசுத்தம் ஆகும்.

நமது உள்ளம் இறைவனே  தான் வாழ கட்டிய ஆலயம்.

கோவில் இறைவன் வாழ மனிதன் கட்டிய ஆலயம்.

நமது உள்ளத்தில் இறைவன் கட்டிய ஆலயம் இருக்கிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

 ஆனால் அதை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க இந்த கொரோனா ஓய்வு நமக்கு சந்தர்ப்பம் அளித்திருக்கிறது.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினோம்.

'கொரோனா போய் சாதாரண நிலை திரும்பிய பின்பும் 

இந்த தியானப் பயிற்சி நமது அன்றாட செபத்தில் உதவியாயிருக்கும்.

ஆனால் சாதாரண நிலை திரும்பிய பின் கோவிலுக்குப் போக மறந்து விடக்கூடாது.

இப்போது வெளியே போக முடியாவிட்டாலும் வீட்டில் இருந்து கொண்டே நமது பிறர் சிநேக முயற்சிகளை நமது குடும்பத்தாரோடு
தொடர்வோம்.

அம்மாவுக்கு சமையல் அறையில் உதவலாம்.

நம் உடன் பிறந்தாரோடு அன்புடன் பேசி, அவர்களுக்கு  வேண்டிய உதவிகளைச் செய்யலாம்.
'
கொராேனா காலத்தை  குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், சமாதானமும், நற்செயல்களும் வளரப் பயன்படுத்துவோம்.

இதெல்லாம் செய்தபின்பும் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

 கிடைக்கும் நேரத்தை ஞான வாசகத்திற்குப் பயன்படுத்துவோம்.

 பைபிள், புனிதர்களின் வாழ்க்கை வரலாறு, கத்தோலிக்க ஞான உபதேசம் போன்ற ஆன்மீகப் பயனுள்ள புத்தகங்களை வாசிப்போம்.

இவற்றை  அறிவுபூர்வமாக அல்ல, உணர்வுப்பூர்வமாக வாசிப்போம்.

ஞான வாசகத்தின் நோக்கம் அறிவை வளர்ப்பது அல்ல, ஆன்மீக வாழ்க்கைக்கு உதவுவது.

சிலர் எதை வாசித்தாலும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் தான் வாசிப்பார்கள்.

சிலர் எதை வாசித்தாலும் தங்கள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்வர்.

ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களை  வாசிப்பதாக வைத்துக் கொள்வோம்.

அறிவுப் பூர்வமாக வாசிப்போர்,

சூரியனைப் படைக்கும் முன்  ஒளி எப்படி உண்டாயிற்று?

அறிவியல் சூரியனிடமிருந்து தான் பூமி பிரிந்தது என்கிறதே, 

பைபிள் பூமி படைக்கப்பட்ட பின்தான் சூரியனையும், சந்திரனையும் கடவுள் படைத்தார் என்கிறதே , இதில் எது உண்மை?

என்பன போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு பதில் காண முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

பைபிள் அறிவியல் புத்தகமோ,

 வரலாற்றுப் புத்தகமோ,

பூகோளப் புத்தகமோ

 அல்ல,

 என்பதை அறியாமல்

 ஆராய்ச்சியிலேயே வீணாக நேரத்தை போக்கிக்  கொண்டிருப்பார்கள்.

அப்படி வாசிப்பவர்களுக்கு பைபிள்  எந்த விதத்திலும் உதவாது.

உணர்வுப் பூர்வமாக வாசிப்பவர்களுக்கு பைபிள் இறைவார்த்தை.

இறைவார்த்தையின் நோக்கம் அறிவியல் அறிவைத் தருவது அல்ல,

வாழ்க்கைக்கு வழிகாட்டுவது,

அவர்கள் அதே அதிகாரங்களை வாசிக்கும்போது,

"உலகையும் மனிதனையும் கடவுள் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தார்.

கடவுள் மனிதனை எவ்வளவு நேசித்திருந்தால்,

 அவனைப் படைக்கு முன்பு அவன் வாழ்வதற்காக இவ்வளவு  அழகான உலகையும்,    

ரசிப்பதற்காக வானத்தில் பரந்து கிடக்கும் விண்மீன்களையும் படைத்திருப்பார்!

அவன்மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால்  அவன் வாழ அழகான சிங்கார வனத்தை அமைத்துக் கொடுத்து இருப்பார்!

அவன் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்தபோதும்  அவன் மீது கோபம் கொள்ளாமல் அவனை பாவத்திலிருந்து மீட்க

தானே மனிதனாய்ப் பிறக்க தீர்மானித்தாரே, அவரது அன்பு எவ்வளவு பெரியது!

இவ்வளவு அன்புடன் என்னை படைத்து, மீட்ட கடவுள் என்னைக்
 கை விடுவாரா!

என்னை படைத்தவர் என்னுடன் இருக்க நான் எதற்கு அஞ்ச வேண்டும்?"

என்று உணர்வு பூர்வமாகத் தியானிப்பான்.

நற்செய்தி நூல்களை வாசிக்கும்போது 

அவற்றிலுள்ள இறை வார்த்தைகள் தனது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்ன செய்திகளை தருகிறது என்பதை மட்டும் பார்த்து 

அவற்றை தியானித்து அவற்றின்படி வாழ்வான்.

நற்செய்தி நூல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டான்.

யார் யார் எழுதினாங்க?

எப்போது எழுதினாங்க?

 எந்த மொழியில் எழுதினாங்க? 

 யார் யார் மொழிபெயர்த்தாங்க?

 என்பதெல்லாம் வாழ்வுக்கு வழியை தேடுபவனுக்கு தேவை இல்லாத விசயம்,

சுகம் இல்லாதவனுக்கு மருந்துதான் தேவை, மருந்தைப் பற்றிய ஆராய்ச்சி தேவை இல்லை.

 ஆராய்ச்சி செய்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பணியை அவர்கள் செய்யட்டும்,

 நாம் செய்ய வேண்டாம்.

இயேசு உலகிற்கு வந்தது நம்மை மீட்க, நமக்கு வாழ வழி காட்ட,

ஆராய்ச்சி செய்ய அல்ல.

நாம் மீட்பு அடைய வேண்டுமானால் அவர் காட்டிய வழியே நடக்க வேண்டும்.

நற்செய்தி நூல்களில் அந்த வழி காட்டப்படுகிறது, அதன் வழி நடப்போம் மீட்பு உறுதி.

Lockdown ஓய்வு நாட்களை ஆண்டவருக்காகச் செலவிட நிறைய வழிகள் இருக்கின்றன.

அவற்றைப் பின்பற்றினால் எந்தவிதமான  உலகத் தீமையிலிருந்தும், 

எண்ணற்ற ஆன்மீக நலன்களை வரவழைக்க முடியும்., இறைவன் துணையோடு.

ஓய்வு நாள் ஆண்டவருடைய நாள்.
அதை ஆண்டவருக்காக மட்டும் செலவழிப்போம்.

ஆண்டவரோடு இணைந்த நித்திய பேரின்பம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

லூர்து செல்வம்.

 

No comments:

Post a Comment