Friday, August 28, 2020

".இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." (மத்.25:29)



".இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."  (மத்.25:29)
*****************************************
இயேசு கூறிய தாலந்துகள் உவமையில் எசமானர் ஒருவர் தனது ஊழியர் மூவருக்கு வெவ்வேறு எண்ணிக்கையில் தாலந்துகளைக் கொடுத்து விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

அவர் தாலந்துகளைக் கொடுத்தது அவற்றை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக.

எசமானர் வெளியூரிலிருந்து திரும்பியவுடன் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவரிடம் வருகிறார்கள்.

முதல் இருவர் தாலந்துகளைப் பயன்படுத்தி அவற்றை இரட்டிப்பு மடங்கு ஆக்கியிருந்தனர். 

அவர்களுக்கு அவர் சன்மானம் அளிக்கிறார்.

மூன்றாமவர் அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பயன்படுத்தவேயில்லை.
அவனுக்குத் தண்டனை அளிக்கப் படுகிறது.

இயேசு சொல்லும் ஒவ்வொரு உவமையிலும் ஒரு மையக்கருத்து இருக்கும். 

அதுதான் அந்த உவமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இந்த உவமையின் மையக்கருத்து:

 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட  தாலந்துகளை இலாபகரமாகப் பயன்படுத்துவோர் சன்மானம் பெறுவர்.

பயன்படுத்தாதோர் தண்டனை பெறுவர்.

இறைவன் நம்மைப் படைக்கும்போது பொம்மைகளைப் போல் படைக்கவில்லை.

இயங்கக்கூடிய ஆன்மாவோடும், இயக்கப் படக்கூடிய உடலோடும் இயக்கத்திற்கு பயன்படக்கூடிய திறமைகளுடன்தான்  படைத்தார்.

நாம் ஒரு வாகனத்தை இயக்கும் போது அது முன்னேறிச் செல்ல  வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இயக்குவோம்.

முன்னேறாமல் நின்ற இடத்திலேயே நிற்குமானால் அது பயன்படாத வாகனம்.

அதேபோல்தான் நாம் இயங்குவதும் முன்னேறுவதற்காக, வளர்ச்சி அடைவதற்காக.

இங்கே குறிப்பிடப்படுவது ஆன்மீக முன்னேற்றமும் ஆன்மீக வளர்ச்சியும்,

 நமது ஆன்மா எந்தவித வளர்ச்சியும் இன்றி இருந்தால் அது தளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்று பொருள்.

வளர்ச்சி அடைவதற்கு பயன்படக்கூடிய சக்தியோடும் திறமைகளுடன் தான் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சக்தியையும் திறமைகளையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.

அம்மா உணவு தருகிறார், உண்ண வேண்டியது நம் பொறுப்பு.

உண்ணாதிருந்தால் அம்மா உணவைத் தந்தும் நமக்குப் பயன் இல்லை.

 ஆசிரியர் பாடம் போதிக்கிறார், கேட்டு பயனடைய வேண்டியது நம் பொறுப்பு.

கற்ற பாடத்தை மனதில் பதித்து நாம் பயன்படுத்தாவிட்டால் கற்றும் பயனில்லை.

அதேபோல்தான் இறைவன் தந்த திறமைகளைப் பயன்படுத்தி நமது ஆன்மா வளர்ச்சி அடைந்தால்தான்,

 அவர் தந்த திறமைகளால் நமக்கு பயன். இன்றேல், இல்லை.

ஒரு செடியை நட்டு, உரமிட்டு, நீரூற்றி வருகிறோம். உரத்தை உண்டு, நீரை குடித்து வளர வேண்டியது செடி.

 மாதக்கணக்கில் நீர் ஊற்றியும் அது வளராமல், நட்டபடியே நின்றால் என்ன செய்வோம்?

அதை அப்புறப்படுத்திவிட்டு வேறு செடியை நடுவோம்.

நமது வாழ்வின் நோக்கத்தை அடைய நாம் பயன்படுத்த வேண்டிய திறமைகளைப் பயன்படுத்தாவிட்டால்

 அல்லது தவறாக பயன்படுத்தினால்

 நமது நோக்கத்தை அடைய முடியாது.

நமது வாழ்வில் நோக்கம் விண்ணுலகை அடைவது.

யாருமே திறமைகள் இன்றி  பிறப்பதில்லை,

 ஆனாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் கொடுக்கப்படுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான திறமைகள், வெவ்வேறு அளவில் கொடுக்கப்படுகின்றன.

ஒரே குடும்பத்தில், 

ஒரே சூழ்நிலையில்  

பிறந்த பல பிள்ளைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறான துறைகளில்  முன்னேற்றம் அடைந்து விளங்குவது இதற்குச் சான்று.

அண்ணன் என்ஜினியர், தம்பி டாக்டர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வளர்வது 

இறைவன் அவர்களுக்கு அளித்துள்ள திறமைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்  என்பதையே காண்பிக்கிறது.

இறைவன் தந்த திறமைகளை தவறாகப் பயன்படுத்தி தவறான துறைகளில் வளர்பவர்களும்  நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள்.

தங்கள் பேச்சு திறமையைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், 

தங்கள் நிர்வாக திறமையைத் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள்,

தங்கள் எழுத்துத் திறமையைத் 
தவறாகப் பயன்படுத்தி, அசிங்கமான புத்தகங்களை எழுதி மக்கள் மனதைப் பாழடிப்பவர்கள்

என்போர்   போன்ற பல திறமையாளர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.

இவர்கள் இறைவன் தந்த திறமைகளை  சாத்தானுக்காகப் பயன்படுத்துபவர்கள்.

இறைவன் நம்மைத் திறமைகளோடு படைத்தது 

அவருக்கு செய்யும் பணியில் அவற்றைப் பயன் படுத்துவதற்காகத்தான்,  
அவருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அல்ல.

தனது சிந்தனைத் திறமையை மிகச்சரியாக பயன்படுத்தி இறையியல் வல்லுனர் ஆகியவர்
 புனித அகுஸ்தினார்.

தனது பேச்சு திறமையால் ஆயிரக்கணக்கானோருக்கு  நற்செய்தியை அறிவித்து அவர்களை இறைவன் வழிக்கு கொண்டு வந்தவர் புனித அந்தோணியார்.

 தனது செயல் திறமையால் பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ மறையைப் பரப்பியவர் புனித சவேரியார்.

இப்படி ஆண்டவருக்காக தங்களுடைய திறமைகளை எல்லாம் பயன்படுத்திய புனிதர்களின்  பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் புனிதர்கள் மீது பக்தி வைத்திருக்கிறோம்.

நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர்கள் மூலம் இறைவனை வேண்டுகிறோம்.

தப்பே இல்லை.

ஆனால் நமது வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றாதது தான் தப்பு.

புனிதர்களுக்குக் கொடுத்துள்ள அதே திறமைகளைத்தான் நமக்கும் இறைவன் தந்திருக்கிறார்.

பணம் மருந்து வாங்கவும் பயன்படும், விஷம் வாங்கவும் பயன்படும்.

தங்களுடைய கால்களைத் தினமும் காலையில் திருப்பலி காண கோவிலுக்குப் போக  பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,

டாஸ்மார்க் கடைக்குப் போக  பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,

கடவுள் நம்மை படைத்து உலகில் வாழ விட்டிருப்பது அவரை அடைவதற்கான ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 

உலக சம்பந்தமான காரியங்களைச் செய்வது கூட

 நமது ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருப்பதற்காகத்தான்.

உலக வாழ்க்கையை ஆண்டவருக்காக வாழும்போது அங்கு பாவம் இருக்காது.

 உலகத்திற்காக வாழும்போதுதான் பாவம் உள்ளே புகுகிறது.

ஆண்டவருக்காக நாம் வாழவேண்டிய ஆன்மீக  வாழ்க்கையை வாழ்வற்காகத்தான் நமக்கு திறமைகள் தரப்பட்டிருக்கின்றன.

நம்மில்  அநேகர் செய்கின்ற தப்பு தங்களிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்பதைப்பற்றி கவலைப்படாமல்,

மற்றவர்களைக் கவனித்து அவர்களைப்போல் வாழ ஆசைப்படுவதும் முயற்சி எடுப்பதும் தான்.

தவளை ஒன்று ஒருநாள் குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த ஒரு பசுவைப் பார்த்தது.

'' எப்போதாவது குளத்திற்கு தண்ணீர் குடிக்க வரும்  பசு இவ்வளவு பெரியதாய் இருக்கிறது, தண்ணீருக்குள்ளே வாழும் நான் ஏன் இவ்வளவு சிறியதாய் இருக்கிறேன்?

நானும் பசுவைப் போல் பெரியவனாய் ஆக வேண்டும்."

என்று தீர்மானித்தது.

உடலைப் பருமன் ஆக்குவதற்காக மூச்சை உள்ளே இழுத்தது. கொஞ்சம் வயிறு பெரிதாகியது. 

இன்னும் மூச்சை உள்ளே இழுத்தது. வயிறு இன்னும் கொஞ்சம் பெரிதாகியது.

தொடர்ந்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று வயிறு வெடித்துச் சிதறியது. 

தவளை அளவு திறமை உள்ளவர்கள் பசுவைப் போல் ஆக நினைத்தால் விளைவு இதுதான்.

இளைஞன் ஒருவனுக்கு துறவி ஆக ஆசையாய் இருந்தது.

 துறவியர் மடம் (monastery) ஒன்றுக்கு சென்றான்.

 Superior ரிடம் சென்று,

"சுவாமி நான் துறவி  ஆக விரும்புகிறேன்"

" எதுவரை படித்திருக்கிறீர்கள்?"

"10 வரை''

" உங்களுக்கு என்னென்ன வேலைகள் தெரியும்?"

" சுவாமி,  ஜெபம் சொல்லுவேன், சமையல் வேலை, தோட்டவேலை உட்பட எல்லா வேலைகளையும் செய்வேன்."

"இந்த வேலைகள் செய்ய ஒரு ஆள் தேவைதான். 

நான்  உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிக்கொள்கிறீர்களா?"

"சுவாமி நான் வேலை கேட்டு வரவில்லை. துறவியாகி இந்த வேலைகளை ஆண்டவருக்காகச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்."

அவரது ஆர்வத்தை பார்த்த சுப்பீரியர் அவரை ஏற்றுக்கொண்டார்.

ஒரு ஆண்டு நவசந்நியாசம் முடித்து, இளைஞர் துறவியானார்.

எல்லா வேலைகளையும் ஆண்டவருக்காகச் செய்தார்.

.ஒரு நாள் சுப்பீரியர் அவரை அழைத்து,

"Brother, உங்களுக்கு விண்ணகத்தில் எங்களை விட இருமடங்கு பலன் கிடைக்கும்."

"எப்படி சுவாமி?"

"நாங்கள் ஆண்டவருக்காக உழைக்கிறோம்.

 நீங்கள் ஆண்டவருக்காக மட்டுமல்ல, ஆண்டவருக்காக உழைப்பவர்களுக்காகவும்  உழைக்கிறீர்கள்."

"அப்படியெல்லாம் இல்லை சுவாமி, எல்லோரும் ஆண்டவருக்காக மட்டுமே உழைக்கிறோம்."

இந்த சகோதரரிடம் சுவாமிமாரிடம் இருக்கிற அளவு திறமை இல்லை.

ஆனாலும் அவரது ஆர்வம்  திறமையை மிஞ்சி விட்டது.

ஒருவரிடம் பத்து திறமைகள் இருக்கலாம். எல்லாம் ஆண்டவர் கொடுத்தவையே. அவர்கள் பத்து திறமைகளையும் நன்று பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

 நம்மிடம் ஒரே ஒரு திறமை மட்டும் இருக்கலாம். அதற்காக நாம் வருந்தக்கூடாது, இருக்கிற திறமையை இயன்ற அளவு நன்றாக பயன்படுத்தினால் போதும்.

புனித சிறுமலர் தெரசா புனித சவேரியாரைப்போல நாடு விட்டு நாடு சென்று வேதம் போதிக்க வில்லை.

ஆனால் மடத்தில் இருந்து கொண்டே 

தனது செப வாழ்வால் சவேரியார் அளவிற்கு ஆன்மாக்களை மனம் திருப்பிக்கொண்டிருந்தாள். .

புனித சவேரியாரைப் போலவே அவளும் வேத போதக நாடுகளின் பாதுகாவலியாக தாய்த் திருச்சபையால் நியமிக்கப்பட்டாள்.

நாமும் நம்மிடம் இருக்கும் திறமையை இறைவனுக்காக நேர்மையோடு பயன்படுத்துவோம்.

பயன்படுத்தாவிட்டால் அது பயனின்றி போகும்.

பயன்படுத்துவோம் பூவுலகில்.
பலன் பெறுவோம் விண்ணுலகில்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment