Thursday, August 13, 2020

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்." ( மத். 18:22)

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்." ( மத். 18:22)
**"*************************************

இறை நீதி உலக நீதிக்கு நேர் எதிரானது.

உலக நீதி மன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவனை விசாரித்து,

 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவனுக்குத் தண்டனை கொடுக்கின்றன.

நிரபராதியை விடுவிக்கின்றன.

குற்றவாளியை மன்னிப்பதற்காக அரசு நீதி மன்றங்களை நிருவவில்லை.

அரசு நீதிமன்றங்களை இயக்குவது நீதி மட்டும் தான். அங்கு அன்புக்கு இடமில்லை.

ஆகவே அன்பினால் மட்டும் கொடுக்கக் கூடிய மன்னிப்புக்கும் இடமில்லை.

இறைவன் தன் எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவர் அளவில்லாத அன்பு உள்ளவர்.

அளவில்லாத நீதி உள்ளவர்.

அன்பிடம் உள்ள கருணை, பரிவு. இரக்கம் ஆகிய குணங்கள் அன்பை மன்னிக்கத் தூண்டுகின்றன.

இறைவனின் அன்புக்கு எல்லை இல்லை,
 
ஆகவே மன்னிப்புக்கும் எல்லை இல்லை.

எல்லையற்ற அன்புள்ள அதே கடவுள்தான் எல்லையற்ற நீதி உள்ளவர்.

ஒரே கடவுளிடம் இரண்டு எதிர்மறைக் குணங்கள் இருக்க முடியாது.

ஆகவே இறை நீதியும் மன்னிக்கும் தன்மை உள்ளது. 

மனிதன் பாவம் செய்தான்

நீதிப்படி மன்னிப்புப் பெற பாவம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும்.

 மனிதன் அளவுள்ளவன். அவன் செய்த பாவமோ அளவில்லாத கடவுளுக்கு எதிரானது.

ஆகவே, பரிகாரம் செய்யும் ஆள் மனிதனாகவும் இருக்க வேண்டும்,

அளவற்ற தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஆகவே, அளவில்லா நீதியே,

அதாவது, அளவில்லா நீதி உள்ள கடவுளே,

மனிதனாகப் பிறந்து பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

அன்பே கடவுள்.
நீதியே கடவுள்.

அளவற்ற நீதியுள்ள கடவுள், தன் அளவற்ற அன்பினால் உந்தப்பட்டு,

மனிதனாகப் பிறந்து, 
தன் பாடுகளாலும், 
சிலுவை மரணத்தாலும் 
நமது பாவங்களுக்குப்
 பரிகாரம் செய்தார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தது, 
நாம் செய்த பாவங்களுக்காக நம்மைத் தீர்ப்பிட அல்ல,

நமது பாவங்களை மன்னிக்க.

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்." (அரு. 12:47)


"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது 

அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,

 அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)
 
ஆக, கடவுள் மனிதனாகப்  பிறந்தது நமது பாவங்களை மன்னிக்க.

அவர் தன் எல்லா பண்புகளிலும் அளவற்றவராய் இருப்பதுபோல, 

தன் மன்னிக்கும் பண்பிலும் அளவற்றவராக இருக்கிறார்.

மன்னிப்புப் பெற ஒரே நிபந்தனை நாம் நமது பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மன்னிப்பதற்கு எண்ணிக்கை வரம்பெல்லாம் கிடையாது.

மன்னிக்க வேண்டியது

'ஏழு முறை என்றன்று, 

எழுபது முறை ஏழு முறை' 

அதாவது. கணக்கற்ற தடவைகள்,

என்று இயேசு சொல்லுகிறார்.

நமது பாவங்கள் எவ்வளவு பெரியனவாய் இருந்தாலும்,

எண்ணிககையில் எவ்வளவு அதிகமாக இருந்தாலும்

அவற்றுக்காக உத்தம மனஸ்தாபப் பட்ட வினாடியில் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

அதன் பிறகு திரும்பவும் பாவம் செய்ய நேர்த்தால் திரும்பவும் அதற்காக உத்தம மனஸ்தாபப் பட்டால் பாவம் மன்னிக்கப்படும்.

எத்தனை முறை பாவத்தில் விழுந்தாலும் அத்தனை முறையும் உத்தம மனஸ்தாபப் பட்டால் பாவம் மன்னிக்கப்படும்.

உத்தம மனஸ்தாபப் படும்போது இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஆனாலும் மனித பலகீனத்தினால் பாவம் செய்ய நேரிடும்.

நமது உத்தம மனஸ்தாபம் நேர்மையானதாக இருந்தால்,

பாவங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறையும்.

நாம் பாவமன்னிப்புப் பெறுவதற்காகத்தான் ஆண்டவர் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார்.

கடந்த காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு முன்னும் பாவசங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் இருந்தது.

காலப்போக்கில் பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இப்போது கொரோனா ஆட்சிகாலத்தில் முற்றிலுமாக நின்றுவிட்டது.

மக்களிடையே பாவ உணர்வும் குறைய ஆரம்பித்துவிட்டது.

முற்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வருபவர்களில் அநேகர்

 பூசைக்கும் போகாவிட்டால் பாவம்

எனற எண்ணத்திலேயாவது பூசைக்குச் சென்றனர்.

காலப் போக்கில் அந்த எண்ணமும் போய்விட்டது.

இப்போ கொரோனா பார்த்த வேலை பூசைக்குப் போவதே நின்றுவிட்டது.

T.Vயில் பூசைகாணும் நிலை வந்துவிட்டது. 

நேரில் பார்த்து கொஞ்சிக் குலாவிய பேரன் பேத்திகளை Video Callல் பேசுவது போல் ஆகிவிட்டது.

பேரன் phone க்கு முத்தம் கொடுத்து விட்டு,"தாத்தா, உங்களுக்குத்தான் கொடுத்தேன்" என்கிறான்!

இது விஞ்ஞானம் படுத்தும் பாடு!

கட்டளைகளை மீறுவது பாவம் என்பதை நாம் உணர வேண்டும்.

பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப் பட வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் அடிக்கடி செய்ய வேண்டும். 

எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் மன்னிப்பது இறைவனின் தாராள குணம்.

பாவமே செய்யாதிருக்க வேண்டியது நமது கடமை.

நோய் வந்தால் மருத்துவமனைக்குப் போகிறோம்.

மருத்துவமனை இருக்கிறது என்பதற்காக யாராவது நோயில் விழுவார்களா?

பாவம் செய்தால் மன்னிப்புக் கிடைக்கும்.

ஆனாலும் பாவம் செய்யாமல் இருப்பது நமது கடமை.


இறையன்பு இருக்கும் இடத்தைப் பாவம் அண்டாது.

இறைவனை நேசிப்போம். பாவத்தைத் தவிர்ப்போம்.


மனித பலகீனத்தின் காரணமாக பாவத்தில் விழ நேர்ந்தால் உடனடியாக மனஸ்தாபப்பட்டு பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் தந்தையை நோக்கி ,

"எங்களுக்குத் தீமை செய்தவர்களை

 நாங்கள் பொறுப்பது போல

 எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்."

என்று செபிக்கிறோம்.

கடவுள் நம்மீது கொண்ட அன்பின் காரணமாகவே நம்மை மன்னிக்கிறார்.

நமக்கும் பிறரன்பு இருந்தால் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிப்போம்.

தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று நம் விண்ணகத் தந்தை ஆசைப்படுகிறார்.

அவரிடம் இருக்கும் மன்னிக்கும் குணம் நம்மிடமும் இருக்க வேண்டும்.

மன்னித்தால்தான் மன்னிக்கப்பட வேண்டிய தகுதியைப் பெறுவோம்.

மன்னிப்போம்.

மன்னிப்புப் பெறுவோம்.

மன்னிப்பின் பரிசாய் நிலை வாழ்வைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment