"இவ்வார்த்தையைக் கேட்டு அவ்வாலிபன் வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது."
(மத்.19:22)
***************************************
வாலிபன் ஒருவன் இயேசுவிடம்,
"நான் கட்டளைகளை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்,
என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?" என்று கேட்டான்.
அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால்,
போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.
வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும்.
பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.
இதைக் கேட்ட வாலிபன் தன் சொத்துக்களை இழக்க மனமில்லாமல் சென்றுவிட்டான்.
ஆன்மீக வாழ்வின் தரத்தில் பல படிகள் (degrees) இருக்கின்றன.
முதல்படி கடவுள் நம்மைப் படைத்து, பராமரித்து வரும் அன்புத் தந்தை என்பதையும்,
நாம் அவரை நேசித்து,
அவருக்கு ஊழியம் செய்து,
அவரோடு நித்திய காலமும் வாழ்வதற்காகவே
படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்வது.
அடுத்தபடி அவரது கட்டளைகளை அனுசரிப்பது. இறைநேசம், பிறர் நேசம் என்ற அன்பின் அடிப்படையில் தான் அவரது கட்டளைகள் இருக்கும்.
இக்கட்டளைகளை அனுசரிக்கும் தரத்தை வைத்து அடுத்த படிகள் இருக்கும்.
கட்டளைகளை மீறக்கூடாது என்று அனுசரிப்பவர்கள்,
அன்பினால் உந்தப்பட்டு கட்டளைகளை அனுசரிப்பவர்கள்,
கட்டளைகளையே வாழ்வாக வாழ்பவர்கள்
என பலதரத்தினர் உள்ளனர்.
படிகளின் உச்சியில் இருப்பது நிறைவு. (perfection)
"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)
எல்லோருமே நிறைவை நோக்கிதான் பயணிக்கிறோம்.
எல்லோரும் உடல் நலத்துக்காகவே சாப்பிடுகிறோம். ஆனாலும் ஒரு சிலர் உடல் நலனை மிகுதியாக அடைய Tonic சாப்பிடுவதில்லையா!
அதே போல நிறைவை எளிதாக அடைய சிலருக்கு விசேச அழைப்பைக் கொடுக்கிறார் நம் ஆண்டவர்.
அழைப்பு கொஞ்சம் கடினமானது. ஆனால் அழைப்பை முழுமனதோடு ஏற்றுக் கொண்டால்
அதன் மூலம் நிறைவை அடைவது எளிது.
கட்டளைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து வரும் வாலிபன்,
"என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?" என்று கேட்டான்.
மனதுக்குள் குறை நீங்கி நிறைவை அடைய ஆசை இருக்கிறது.
ஆனால் அதற்கான அழைப்பை இயேசு கொடுத்த போது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆண்டவர் கொடுத்த அழைப்பு என்ன?
"நீ நிறைவு பெற விரும்பினால்,
போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.
வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும்.
பின்னர் வந்து என்னைப் பின்செல்"
இந்த அழைப்பை ஏன் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
அவனிடம் சொத்து நிறைய இருந்தது.
ஆண்டவரது பின்னால் செல்ல வேண்டுமானால் தனது சொத்தை இழக்க வேண்டியிருக்கும்.
இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுறார்.
இப்பிரபஞ்சத்துக்கே அதிபதி அவர்.
ஆனால் நமக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக ஏழையாகப்
பிறந்து ஏழையாக வாழ்ந்தார்.
"என்னைப் பின்செல்" , என்று இயேசு அந்த வாலிபனுக்குக் கொடுத்த அழைப்பு விசேசமான அழைப்பு.
'என் பின்னே வாருங்கள்: "
என்று தான் இராயப்பரையும், பெலவேந்திரரையும் அழைத்தார்.
அவர்கள் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
யாகப்பரையும், அருளப்பரையும் அழைத்தபோது
அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
அந்த வாலிபனுக்கும் அவர் கொடுத்தது அதே போன்ற அழைப்பு தான்.
ஆனால் அவன் தன் சொத்துக்களை விட்டு விட்டு அவர் பின்னால்
செல்லவிரும்பவில்லை.
இவ்வுலக செல்வங்களை விற்று, ஏழைகளுக்குக் கொடுப்பதால் கிடைக்கும் வானகச் செல்வத்தின் மதிப்பு அவனுக்குத் தெரியவில்லை.
அழியக்கூடிய செல்வத்தை இழந்து, அழியாத செல்வத்தைப் பெற இயேசு அழைப்பு விடுக்கிறார்.
உலக அளவில் பார்த்தால்கூட,
வியாபாரிகள் மேல் முதல் 'போட்டால்தான்' இலாபம் 'எடுக்க' முடியும்.
ஆனால் முதல் போட்டாலும் இலாபம் கிடைக்குமா என்பது உறுதி இல்லை.
ஆனால் இயேசுவின் அழைப்பை ஏற்று இவ்வுலக அழியும் செல்வத்தை இழந்தால்
அழியாத வானகச் செல்வம் கிடைப்பது உறுதி.
ஆன்மீகச் செல்வத்தைக் கண்ணால் பார்க்கமுடியாது.
ஊனக் கண்ணால் பார்க்க முடியாத, விலை மதிப்பற்ற ஆன்மீகச் செல்வத்தைப் பெறுவதற்காக
மண்ணில் விழுந்து அழியக்கூடிய சடப்பொருளை இழக்க அந்த வாலிபனுக்குப் பிரியமில்லை.
மனிதனிடம் ஒரு இயற்கை சுபாவம் உண்டு.
ஒரு பொருளை அதிகமாக விரும்ப ஆரம்பித்து விட்டால், வேறெந்த பொருளையும் விரும்பாதவாறு
முதல் விருப்பம் தடுத்துவிடும்.
முதல் விருப்பத்தில் பிரச்சனை வந்தால் மட்டும்
"ஐயோ! தெரியாத்தனமா மாட்டிக் கிட்டோமே!"
என்று அழத்தோன்றும். இது மனித பலகீனம்.
காதலித்து கல்யாணம் செய்து விட்டு,
கல்யாணததிற்குப் பின் அழும் ஜோடிகள் இதற்கு சாட்சி.
ஏதாவது ஒரு உலகப் பொருள் மீது மித மிஞ்சிய பற்று ஏற்பட்டுவிட்டால்
அது நமது ஆன்மீக வாழ்வுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு இளைஞனுக்கு அவனுடைய நாய் மீது அபாரப் பற்று.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் நாயைக் காணவில்லை.
வீட்டிலுள்ள மற்றவர்கள் பூசைக்குப் போகும் போது, இவன் பூசையைத் தியாகம் செய்துவிட்டு நாயைத் தேடிப் போய்விட்டான்!
பெற்றோர் தங்கள் குழந்தைகளை இறைப் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.
தங்களை விடவும் இறைவன்தான்
முக்கியம் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்க்க வேண்டும்.
சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு ஆழமான இறைப் பற்று ஏற்பட்டு விட்டால்,
உலகப் பொருட்கள் மீது மிதமிஞ்சின நாட்டம் ஏற்படாது.
சிறுவயதிலிருந்தே படிப்பு, தேர்வில் வெற்றி, வேலை, சம்பாத்தியம, பணம் ஆகியவற்றின் மீது மட்டும் பற்று ஏற்பட்டு,
சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்வின் குறிக்கோள் என்ற எண்ணம் மனதில் வேறூன்றி விட்டால்,
ஆன்மீக காரியங்களில் அக்கரை ஏற்படாது.
அப்படிப்பட்ட பிள்ளைகள் பதவி, பணத்திற்காக எதையும் தியாகம் செய்வார்கள், பெற்றோர் உட்பட.
இன்று Tution னுக்காகத் திருப்பவியைத் தியாகம் செய்யும் பிள்ளைகள்,
நாளை வேலைக்காக இயேசுவையே தியாகம் செய்யத் தயங்கமாட்டார்கள்.
ஒரு மன்னனும், துறவியும் சந்திக்க நேர்ந்தது.
மன்னன் துறவியைப் புகழ்ந்தான்.
"நான் மோட்சத்தைப் பற்றி கவலைப் படாமல் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
வசதியுள்ள உலக வாழ்க்கையைத் துறந்து, துறவியாக வாழும் நீங்கள் உண்மையிலேயே பெரிய தியாகி!"
"இல்லை மன்னா, என்னை விட நீங்கள்தான் பெரிய தியாகி."
"நான்தான் வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறேனே, நான் எப்படித் தியாகியாக முடியும்?"
"மன்னா, ஒருவனது தியாகத்தின் பெருமையை எதை வைத்து மதிப்பீடு செய்வீர்கள்?"
"தியாகம் செய்யப்படும் பொருளின் மதிப்பை வைத்து.
எந்த அளவுக்கு தியாகம் செய்யப்படும் பொருளின் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ,
அந்த அளவுக்கு அந்த தியாகத்தின் பெருமையும் அதிகரிக்கும்."
"அழியும் சிற்றின்பம், அழியாத பேரின்பம், இந்த இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம்?"
"அழியாத பேரின்பத்துக்குதான் மதிப்பு அதிகம்."
"நீங்கள் அழியாத பேரின்பத்தைத் தியாகம் செய்து
அழியும் சிற்றின்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நான் அழியும் சிற்றின்பத்தைத்தான் தியாகம் செய்திருக்கறேன்,
அழியாத பேரின்பத்திற்காக.
நீங்கள்தான் பெரிய தியாகம் செய்திருக்கிறீர்கள்.
உலகிற்காக மோட்சத்தையே தியாகம் செய்திருக்கிறீர்கள்.
ஆகவே நீங்கள்தான் பெரிய தியாகி."
இயேசுவுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு."
(மத்.9:37)
என்று ஆண்டவர் சொல்கிறார்.
இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளோர்
பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, சுகம் ஆகியவற்றைத் துறந்துதான் இறைப்பணி செய்கிறார்கள்.
வர வர தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இளைஞர்களிடையே உலகப் பற்று இல்லாதிருந்தால்தான்
தேவ அழைத்தல்களை ஏற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் உலகப் பொருட்கள் மீது ஆசை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மாணவர்களிடையே Tution வகுப்புகளுக்குப் போவதில் உள்ள ஆர்வம்
ஞானோபதேச வகுப்புகளுக்குப் போவதில் இல்லை.
இளைஞர்கள் பங்குக் குருவோடு பழகுவதில் அதிகம் ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
பங்குக் குருக்கள் தேவ அழைத்தலுக்கான விதையை ஊன்ற வேண்டும்.
பெற்றோர் உற்சாகம் என்ற நீரூற்றி விதை முளைத்து வளரச் செய்ய வேண்டும்.
சிறார்களையும், இளைஞர்களையும் உலகச் செல்வப் பற்று இன்றி,
இறைப் பற்றோடு வளர்க்க வேண்டியது பெற்றோர்களது கடமை.
'
உலகச் செல்வத்தைத் தியாகம் செய்து இயேசுவின் பின் செல்லும் இளைஞர்களை உருவாக்குவாக்குவோம்.
நிறைவோடு விண்ணகச் செல்வத்தைப் பரிசாக அடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment