" உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" (மத். 14:27)
"**************************************
உலகப் பேரதிசயம், அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பார்த்து பயந்தது!
கடவுளைப் பார்த்து அவரது சீடர்கள்
'பூதம்' என்று நினைத்துப் பயந்தார்கள் என்றால் இதைவிட பெரிய அதிசயம் எங்கும் இருக்க முடியுமா?
இயேசு, அவர்கள் பயந்ததைப் பார்த்து,
"தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.
இயேசு அப்போஸ்தலர்களுடன் படகில் ஏறி வந்திருக்கலாம்.
ஆனால்,
"சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்."
தமக்குமுன் அக்கரைக்குப் போகும்படி சீடர்களை வற்புறுத்தியவர்,
அவர்கள் அக்கரைக்குப் போகுமுன்னாலேயே,
எதிர்காற்றடித்தபடியால் அலைகளால் நடுக்கடலில் படகு தத்தளித்துக் கொண்டிருந்தபோது,
நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
அவர்கள் அவர் கடல்மேல் நடப்பதைக் கண்டு கலங்கி, "ஐயோ! பூதம்" என்று அச்சத்தால் அலறினர்.
இந்நிகழ்ச்சியைத் தியானிக்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்கள்:
இயேசுவுக்கு முக்காலமும் தெரியும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் அறிந்து வைத்திருப்பவர்.
தனது பூவுல வாழ்வின் ஒவ்வொரு வினாடி நிகழ்வும் அவருக்குத் தெரியும்.
ஒவ்வொரு வினாடியையும் திட்டமிடுபவர் அவர்.
ஆகவே, தன் திட்டப்படிதான் தமக்குமுன் அக்கரைக்குப் போகும்படி சீடர்களை வற்புறுத்தியிருக்கிறார்.
"தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று தான் கூறுவதைக் கேட்க
தன் சீடர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கியிருக்கிறார்.
அதற்காகத்தான் நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
தான் இருக்கும் போது எதற்கும் அஞ்சக்கூடாது என்ற அறிவுரையை தன் சீடர்களுக்குச் சொல்லவே இந்தத் திட்டம்.
ஒவ்வொரு நாளும் அன்றைய நற்செய்தியை வாசிக்கும்போது,
அதன் மூலம் இயேசு நம்மோடு
பேசுகிறார்.
இன்றைய நற்செய்திப் பகுதியை, வாசிக்கும்போது,
நமது கடந்த காலத்தில் நமக்குக் காரணம் புரியாமல் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இப்போது காரணம் புரியும்.
இறைவன் திட்டப்படிதான் எல்லாம் நடக்கின்றன.
சில போதகர்கள் கூறுவது போல,
"இயேசுவிடம் வாருங்கள்,
உங்கள் துன்பங்கள் எல்லாம் போய்விடும்,
வியாதி வருத்தங்கள் எல்லாம் மறைந்துவிடும்,
கடன் தொல்லைகள் கரைந்துவிடும்."
போன்ற பேச்சுக்கள் எல்லாம் இயேசுவின் போதனைகளோடு சம்பந்தம் இல்லாதவை.
" தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"
(லூக் 14:27)
சிலுவை என்றால் துன்பம்.
"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள்."
(மத்.10:22)
" நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.
11 என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்."
(மத். 5:10, 11 )
"அப்பொழுது உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்: கொலைசெய்வார்கள்: என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்."
(மத். 24 :9)
என்னைப் பின்வற்றுவோர் துன்பமே படமாட்டார்கள் இயேசு எங்கும் வாக்களிக்க வில்லை.
அவரது சீடர்கள் பட்ட பாடு இதற்கு சாட்சி.
நம்மோடு எப்போதும் இருப்பதாக இயேசு வாக்களித்திருக்கிறார்.
"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." (மத். 28:20)
நாம் எப்படி வாழ வேண்டுமோ அப்படி இயேசுவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அவர் வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்துதான் வாழ்ந்திருக்கிறார்.
அவர் எவ்வளவு பாடுபட்டு சிலுவை யில் மரணமடைந்தார் என்பது உலகமே அறிந்த விசயம்.
ஆனால், நமது துன்ப சமயங்களில் எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.
"நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்."
(இசை. 41:10)
நமது துன்ப வேளையில், தனது சீடர்களிடம் சொன்னதுபோலவே
"தைரியமாயிருங்கள், அஞ்சாதீர்கள்,
நான் உங்களுடன்தான் இருக்கிறேன்."
ஆகவே,
நமது வாழ்வில் துன்பங்கள் வரும்,
இடைஞ்சல்கள் வரும்.
தடங்கல்கள் வரும்.
அவமானங்கள் வரும்.
வியாதிகள் வரும்.
மரணம் கூட வரும்.
ஆனால் இவை எல்லாவற்றின்போதும் இயேசு நம்மோடு இருப்பார்.
இவை எல்லாவற்றையும் ஆசீர்வாதமாக மாற்றுவார்.
எல்லாவற்றையும் இயேசுவுக்கே ஒப்புக் கொடுத்தால்,
இவ்வுலக துன்பங்களை எல்லாம்
விண்ணுலகில் பேரின்பமாக மாற்றுவார்.
இவ்வுலக துன்பங்கள் முடியக்கூடியவை.
விண்ணுலக பேரின்பம் முடிவில்லாதது.
ஆகவே துன்பங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
நமக்காகக் காத்திருக்கும் பேரின்பத்தை நினைத்து மகிழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment