."இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம்."
(மத்.18: 6)
************************************
ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணி.
அம்மா மகனை எழுப்புகிறாள்.
"டேய், எழுந்திரிடா, மணி ஐந்தாகி விட்டது. எழுந்து, பல் தேய்த்து, குளித்துவிட்டு ரெடியாக இரு 7 மணிக்குப் பூசை."
"ஏம்மா, எனக்கு மட்டும்தான் பூசையா? அப்பாவுக்கு இல்லையா? "
"அது அவர் பாடு. நீ பூசைக்குப் புறப்படு. நானும் புறப்பட வேண்டும்."
"நீங்க புறப்படுங்க. நான் அப்பா
வந்தால்தான் வருவேன்."
"அப்படிச் சொல்லாதேடா."
"அப்படித்தான் சொல்லுவேன்.
அப்பாவைப்போல் தான் மகன் இருப்பான்."
சொல்லிவிட்டு இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டான்.
இங்கு தகப்பனார் பிள்ளைக்கு இடறலாய் இருக்கிறார்.
அநேக குடும்பங்களில் பெண்களும், சிறுவர்களும் மட்டும் கோவிலுக்குப் போகிறார்கள்.
சிறுவர்கள் வளர வளர தகப்பனாரைப் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.
பெற்றோர்களிடம் பிள்ளைகளை வளர்க்கக் கொடுத்திருப்பவர் இறைவன்.
அவர்கள் முழுக்க முழுக்க தங்கள் சக்தியினால்தான் குழந்தைகளைப் பெற்றிருப்பதாக நினைக்கக் கூடாது.
இறைவன் தனது படைப்புத் தொழிலில் அவர்களை கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அதிலும் உடல்களை உருவாக்க மட்டும் தான்.
பிள்ளைகளுடைய ஆன்மாக்களை இறைவன் நேரடியாகவே படைக்கிறார்.
ஆன்மாதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது.
அப்படியானால் பிள்ளைகள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள்.
அவர்களை வளர்க்கும்படி பெற்றோரிடம் இறைவன் ஒப்படைத்திருக்றார்.
பெற்றோர் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காவிட்டால் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு இடறலாய் இருப்பவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம் என்று இயேசு சொல்கிறார்.
இடறல் விசயத்தில் இயேசு அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார்.
நாம் யாரும் அதை Seriousஆக எடுத்துக் கொள்வது மாதிரி தெரிய வில்லை.
கத்தோலிக்க திருச்சபையின் உயிராய் இருப்பது தேவத்திரவிய அனுமானங்கள்.
அவை இல்லாவிட்டால் நமது திருச்சபையும் இல்லை.
சிறு பிள்ளைகள் அவற்றின்
முக்கியத்துவத்தை உணர்ந்தால்தான்
வளரும்போது அவற்றுக்கு ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பெரியவர்களே அவற்றின் முக்கியத்துவம் பற்றிக் கவலைப் படாதிருக்கும்போது, சிறுவர்கள் எப்படிக் கவலைப் படுவார்கள்?
முதல் தேவத் திரவிய அனுமானமாகிய ஞானஸ்நானம்தான் நம்மை ஜென்மப் பாவத்திலிருந்து விடுவித்து,
நம்மைத் திருச்சபையின் உறுப்பினராக்கி
மற்ற தேவத் திரவிய அனுமானங்களைப் பெறத் தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறது.
நாம் ஞானஸ்நானத்தின் ஆன்மீக
முக்கியத்துவம் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமது முக்கியத்துவம் எல்லாம் பிள்ளைக்கு எடுக்க வேண்டிய dress,
விருந்தினர்களுக்குக் கொடுக்க வேண்டிய அழைப்பு மற்றும் விருந்து,
குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய gift ஆகியவைகளுக்கு மட்டும் தான்.
எந்தப் பெற்றோராவது தங்கள் பிள்ளைகளுக்குப் புரியும் பருவம் வரும்போது அவர்களிடம்,
" நீ பிறக்கும்போது சென்மப் பாவதோடு பிறந்தாய்,
ஞானஸ்நானம் மூலம் உன் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது,
இப்போது பாவமாசு இல்லாமல் இருக்கிறாய்.
தொடர்ந்து.பாவமே செய்யாமல் பரிசுத்தமாய் வாழவேண்டும்."
என்று சொல்லுகிறார்களா?
"நன்கு சாப்பிட வேண்டும், அப்போதான் வளர்வாய்,
குளிக்க வேண்டும், அப்போதான் வியாதி வராது,
நல்லா dress போடணும், அப்போதான் பார்க்க அழகாய் இருப்பாய்"
என்றெல்லாம் சொல்லத் தெரிகிறது.
ஆனால், "பாவம் செய்யாமல் இருந்தால்தான் கடவுளுக்குப் பிரியமுள்ள பிள்ளையாய் இருப்பாய்,
உனக்கு வேண்டியதைக் கடவுளிடம் கேட்க வேண்டும், அதற்காகத்தான் செபம் சொல்கிறோம்,
கடவுளைக் கும்பிட்டு விட்டு தான் காலையில் எழவேண்டும், இரவில் படுக்க வேண்டும்"
போன்ற பக்தி முயற்சிகளில் பழக்கத் தெரியாது.
பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாய் இருக்காவிட்டால்
இடறலாய் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
ஆன்மீகப் பயணத்தில் உட்கார்தல் (Sitting) கிடையாது.
ஒருவன் முன்னேறுவான், அல்லது பின்னேறுவான்.
We keep on moving, either forward or backward.
பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள் படிக்கும்.
பெற்றோர் ஒழுங்காகக் காலை, இரவு செபம் செய்தல்,
சாப்பிடு முன்னும் , பின்னும் செபித்தல்,
ஒவ்வொரு வேலையையும் ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் தமதிரித்துவத்தின் செபம் சொல்லுதல்,
ஒழுங்காக முழுப் பூசைக்குப் போதல்,
திருப்பலியின்போது பராக்குக்கு இடம் கொடாமல் பக்தியாய் இருத்தல்,
நற்கருணை வாங்கியபின் பக்தியுடன் செபம் செய்தல்
போன்ற எல்லா பக்தி முயற்சிகளையும் ஒழுங்காகச் செய்தால் பிள்ளைகளும் அவர்களைப் பின்பற்றுவார்கள்.
பிள்ளைகள் பார்க்கும்படி மாதம் ஒரு முறையாவது பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
அதன் அவசியத்தை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும்.
பிள்ளைகளும் அதையே வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பார்கள்.
இப்போதெல்லாம் பாவசங்கீர்த்தனம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
பாவங்களின் எண்ணிக்கை?
பாவமன்னிப்பின் மகத்துவத்தை பிள்ளைகளுக்குப் போதிக்க வேன்டுமாயின்,
கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் மன்னித்து வாழவேண்டும்.
பிள்ளைகள் தப்பு செய்தால், அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.
ஆனாலும் பிள்ளைகள் தப்பை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்டால், வேறு விசாரணை இன்றி உடனே மன்னித்து விட வேண்டும்.
மன்னித்ததை மறந்து விட வேண்டும்.
மறுபடி ஒரு முறை கூட அதைச் சுட்டிக் காண்பிக்கக்கூடாது.
பிள்ளைகளிடம் சிக்கனத்தை எதிர்பார்த்தால்,
பெற்றோர் சிக்கனமாக இருக்க வேண்டும்.
அநேக பெற்றோர் கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவது, வெறும் பழக்கத்தினால் மட்டுமே, பக்தியினால் அல்ல.
பழக்கத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அப்புறம் கடமைகளை மறந்து விடுவார்கள்.
இப்போ நடக்கிற கொரோனா period முடிந்து அப்புறம எத்தனை பேர் பழக்கத்துக்குக் கூட திரும்பப் போகிறார்களோ தெரியவில்லை!
பெற்றோர் பக்தியுள்ள கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால்தான் பிள்ளைகளும் அப்படி வாழ்வார்கள்.
எல்லா விசயங்களில் பெற்றோர் முன்மாதிரிகையாய் இல்லாவிட்டால்,
இடறலாய் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(மத்.12:30)
இடறலாய் இருப்பவர்கள் கடவுளுக்கு எதிராய் இருக்கிறார்கள்.
அவர்கள் கழுத்தில்...............!
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரிகையாய் இருக்கவேண்டும்.
அவர்கள் நடத்தும் பாடம் தேர்வில் வெற்றி பெற்றுத் தரும்.
அவர்கள் நல்வாழ்வு மாணவர்களின் வாழ்வில் வெற்றி பெற்றுத் தரும்.
ஞான மேய்ப்பர்கள் தங்கள் ஞானப் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாய் இருக்கவேண்டும்.
அவர்களின் வாய்வழி நற்செய்தி அறிவிப்பை விட,
வாழ்வு வழி நற்செய்தி அறிவிப்பே
அதிக பலன் தரும்.
ஆள்பவர்கள் ஆளப்படுகிறவர்களுக்கு
முன்மாதிரிகையாய் இருக்க வேண்டும்.
அலுவலகங்களில் நிர்வாகிகள் அலுவலர்களுக்கு முன்மாதிரிகையாய் இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு
முன்மாதிரிகையாய் இருக்க
வேண்டும்.
நம் ஆண்டவராகிய இயேசு
தான் போதித்த எல்லா போதனைகளையும், (உயிர்த் தியாகம் உட்பட, ) வாழ்ந்து காட்டினார்.
அவருடைய வாழ்க்கை முழுவதுமே நமது வாழ்க்கைக்கு முன்மாதிரிகையானதுதான்.
அவரைப்போல் வாழ நம்மால் முயற்சிதான் செய்யமுடிகிறது.
, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.
(லூக்.9:58)
சொந்த வீடு இன்றி வாழ நம்மால் முயற்சி கூட செய்ய முடியவில்லை.
இயேசுவை ஒரு வகையிலாவது பின்பற்றுவோம்:
இயேசு நமக்கு முன்மாதிரிகையாய் வாழ்ந்தது போல,
நாம் நமது பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாய் வாழ்வோம்.
நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்.
நமது முன்மாதிரிகை வாழ்க்கையால் நாம் இரண்டு வகையில் ஆன்மீகப் பயன் அடைகிறோம்.
முதலில்:
முன்மாதிரியாய் வாழும்போது சிறிஸ்தவ நெறியை முழுமையாக கடைப்பிடித்து வாழ்வோம்.
இதனால் நமது ஆன்மா தனது விண்ணகப் பயணத்தில் இறையருளோடு வெற்றி நடை போடும்.
இரண்டாவது:
நமது அடுத்த தலைமுறையும் நாம் அடைந்த அத்தனை ஆன்மீக நலன்களையும் பெற்று வாழும்.
அவர்களும் அவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாக வாழ்வார்கள்.
அது மட்டுமல்ல நமது முன்மாதிரிகை வாழ்வு ஒரு சக்தி வாய்ந்த நற்செய்திப் பணியாக மாறி இறையரசை உலகெங்கும் பரவச்செய்யும்.
வாழ்வோம், வாழ வைப்போம்.
அனைவரும் நிலை வாழ்வில் இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment