,http://lrdselvam.blogspot.com/2020/08/2442.html
"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது."
(மத். 24:42)
*****************************************
நம்மைப் படைத்த இறைவன் சர்வஞானம் உள்ளவர்.
நாம் காலத்திற்கு உட்பட்டவர்கள்.
அவர் காலத்திற்கு அப்பாற்பட்டவர்.
நிகழ் காலத்தில் வாழும் நமக்கு இப்போது நடந்து கொண்டிருப்பது மட்டும்தான் தெரியும்.
கடந்த காலமும் தெரியும்.
ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.
அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று இந்த வினாடி நமக்குத் தெரியாது.
கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு அதை எழுதி முடிப்பேனா என்றுகூட தெரியாது.
ஆனால் காலத்திற்கு அப்பால் வாழும் கடவுளுக்கு நமது முக்காலமும் தெரியும்.
நாம் சுதந்திரமாகத்தான் செயல்படுகிறோம். கடவுள் நமது சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.
ஆனாலும் நாம் எப்படிச் சுதந்திரமாகச் செயல்படுவோம் என்று அவருக்குத் நித்தியமாக (from eternity) தெரியும்.
நாம் எப்படிச் சுதந்திரமாகச் செயல்படுவோம் என்று நமக்கே தெரியாது.
ஆனால் கடவுளுக்குத் தெரியும்.
நாம் ஒரு பணியாளை வேலையின் நிமித்தம் வெளியூருக்கு அனுப்பும்போது,
எப்போது போகவேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்போது திரும்ப வேண்டும் என்று சொல்லிதான் அனுப்வோம்.
காலத்திற்கு அப்பால் வாழும் கடவுள்
ஒன்றுமில்லாதிருந்த நம்மைப் படைத்து காலத்திற்குள் அனுப்பும் போதே,
அதாவது நாம் நமது தாயின் வயிற்றில் கருத்தரிக்கும்போதே,
எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ வேண்டும்,
எப்போது காலத்தை விட்டு வெளியேறி
காலத்திற்கு அப்பால் வாழும் அவரிடம் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு விட்டார்.
ஆனால் எப்போது நம்மை திரும்ப அழைப்பார் என்று நமக்கு வெளியிடவில்லை.
நமக்கு நாம் உற்பத்தியான நேரமும் தெரியும்,
வாழ்ந்த நேரமும் தெரியும்.
வாழ்கின்ற நேரமும் தெரியும்,
எப்பொழுது கடவுளிடம் செல்வோம் என்று தெரியாது.
தெரியக்கூடாது என்பதே கடவுளின் திட்டம்.
நாம் காலத்துக்குள் வருவது சனனம். (Conception)
வாழ்வது வாழ்க்கை (Life)
காலத்தை விட்டு வெளியேறுவது மரணம். (death)
மரணத்தோடு நமது காலம் முடிந்து விடுகிறது. நாம் நித்தியத்திற்குள் நுழைகிறோம்.
அங்கு காலம் இல்லை, ஆகவே முடிவும் இல்லை.
நாம் நுழையப் போகும் நித்தியம் பேரின்பமயமாக இருக்குமா,
பெருந்துன்பமயமாக இருக்குமா என்பதை
நமது இவ்வுலக வாழ்க்கைதான் தீர்மானிக்கும்.
இறைவனுக்காகவே வாழ்ந்து இறைவனில் மரிப்பவர்கள் நித்திய பேரின்பத்திற்குள் நுழைவார்கள்,
பாவத்திற்காகவே வாழ்ந்து
பாவத்தில் மரிப்பவர்கள் நித்திய பெருந்துன்பத்திற்குள் நுழைவார்கள்,
பாவத்திற்காகவே வாழ்ந்தவர்களும் இறுதி நேரத்தில் இறைவன் பக்கம் திரும்பிவிட்டால் பேரின்பத்திற்குள் நுழைவார்கள்.
இறைவன் நம்மை அழைக்க வரும் நேரத்தை ஏன் நமக்கு முன் அறிவிக்கவில்லை?
நாம் மாணவர்களாக இருந்தபோது நமது அனுபவம் நமக்கு தெரியும்.
மாணவர்களின் இருவகையுண்டு.
ஒரு வகையினர் ஆண்டு முழுவதும் தங்களைத் தேர்வுக்குத் தயாரிப்பார்கள்.
மற்றொரு வகையினர் ஆண்டு முழுவதும் விளையாடிவிட்டு தேர்வுக்கு முந்திய நாள் தேர்வுக்குத் தயாரிப்பார்கள்.
ஆண்டின் துவக்கத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நாட்குறிப்பேட்டில் இறுதித் தேர்வு நடைபெறும் தேதி குறிக்கப்பட்டிருக்கும்.
தேர்வு நாள் முன்கூட்டியே தெரிந்திருப்பதால்
தேர்வுக்கு முந்திய நாள் தயாரித்தால் போதும் என்று எண்ணி ஆண்டு முழுவதையும் வீணடிப்பார்கள்.
ஆண்டின் எந்த நேரத்திலும்
முன் அறிவிப்பு இன்றி
தேர்வு நடைபெறும்
என்ற விதி இருந்தால்
மாணவர்கள் எப்பொழுதும் தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள்.
மனித வாழ்வைப் பொருத்தமட்டில் வாழ்வு எப்போது முடியும் என்று,
கடவுளைத் தவிர,
யாருக்கும் தெரியாது.
தாயின் வயிற்றில் இருக்கும்போது முடியுமா,
பிறந்தவுடன் முடியுமா,
குழந்தைப் பருவத்தில் முடியுமா,
சிறுவயதில் முடியுமா,
இளமைப் பிராயத்தில் முடியுமா.
வயசு ஆகி முடியுமா
என்று நமக்குத் தெரியாது.
ஒன்று மட்டும் தெரியும், வாழ்க்கை ஒரு நாள் முடியும்.
அது என்று என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
ஒருவகையில் அது நமக்கு தெரியாமல் இருப்பதே நல்லது.
தெரிந்திருந்தால் நேரம் நெருங்க நெருங்க நமது நிம்மதி பறிபோய் விடும்.
ஒரு பையனுக்கு 16 வயதில் அழைப்பு வரும் என்று தெரிந்திருந்தால் அவன் பள்ளிக்கூடத்திற்கே போக மாட்டான்.
100வயதில்தான் அழைப்பு வரும் என்று தெரிந்தவன் 99 வயது வரை இஸ்டம் போல் வாழ்வான்.
அநேகருக்கு திருமணமே நடக்காது.
மாப்பிள்ளை, பெண் பார்ப்பவர்கள் வயது வரம்பை விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.
நமது நன்மைக்காகத்தான் இறைவன் நமது இறுதி நாளை நமக்கு அறிவிக்காமல் வைத்திருக்கிறார்.
உலகத்தையும் காலத்தையும் விட்டு வெளியேற
நாம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு வினாடியும் பாவம் இன்றி இறை உறவுடன் இருக்கவேண்டும்.
நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம்
"இந்த வினாடி நான் மரித்தால் எங்கே போவேன்?"
என்று நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால்,
நாம் எப்பொழுதும் தயாராக இருப்போம்.
ஒருநாள் ஆயர் ஒருவர் தனது இல்லத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவரிடம் பேசவந்த ஒரு குருவானவர் அவரை நோக்கி,
"ஆயர் அவர்களே, இன்னும் ஐந்து நிமிடங்களில் உங்களது உயிர் பிரியப்போகின்றது என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?"
"தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டுதான் இருப்பேன்.
ஆண்டவர் அழைக்கும்போது எங்கிருந்தால் என்ன?
தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்,"
தயாராக இருக்க வேண்டும் என்றால், நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருக்க வேண்டும் என்று பொருள்.
நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது ஆன்மா பாவ நிலை நீங்கி தேவ இஷ்டப் பிரசாத நிலைக்கு வந்தது.
அந்நிலையை இழந்து விடாமல் வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.
எப்போதாவது பாவத்தின் மூலம் அதை இழக்க நேரிட்டால்,
நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து அதைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
நமது மரண நேரத்தில் நாம் தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
ஆண்டவர் அழைக்க வரும் நேரம் நமக்குத் தெரியாமல் இருந்தால்தான் நாம் கவனமுடன் அந்நிலையைத் தொடர்ந்து காப்பாற்றுவோம்.
ஒரு நீர்நிலையை நீச்சலடித்து கடந்து கொண்டிருப்பவன் தொடர்ந்து நீந்தவேண்டும்.
பாதிவழி கடந்த பின்,
"இனி கரை பக்கம் போன பின் நீந்திக் கொள்ளலாம்" என்று நீந்துவதை நிறுத்திவிடக்கூடாது.
அதுபோல்தான் நாமும் வாழ்நாள் முழுவதும் இறையுறவு நிலையில் வாழவேண்டும்.
தொடர்ந்து இறையுறவு நிலையில் வாழ்ந்தால்,
நமது வாழ்க்கை இறையன்பு செயல்களாலும்,.
பிறரன்புச் செயல்களாலும் நிறைந்திருக்கும்.
எப்பொழுதும் இறை உறவு நிலையில் இருக்க ஒரு வழி
எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது நல்ல காரியங்களை செய்து கொண்டிருப்பதுதான்.
ஒரு வேலையும் இல்லா விட்டால் ஞான வாசகம், தியானம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.
எதுவும் செய்யாமல் சோம்பலாக இருக்க கூடாது.
சோம்பல் சாத்தானின் பட்டறை,
Idleness is the Workshop of the devil.
மனதை எப்போதும் பயனுள்ள எண்ணங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் தேவையற்ற எண்ணங்கள் வராது.
இறைவன் எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார். தியானத்தின் மூலம் அதை உணர்கிறோம்.
ஆனால் முகத்துக்கு முகம் அவரைப் பார்க்க முடியவில்லை.
காரணம் அவருக்கும் நமக்கும் இடையில் ஒரு மெல்லிய திரை இருக்கிறது.
திரை விலகிய வினாடி அவரை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பிப்போம்.
நாம் திரையைப் பற்றி கவலைப்படவேண்டாம், ஏனெனில் திரை இருந்தாலும், விலகினாலும் நாம் இறைவனோடுதான் இருப்போம்.
திரை இருந்தால் இவ்வுலகில் இருப்போம், விலகினால் விண்ணுலகில் இருப்போம்.
திரையால் நம்மைப் பிரிக்க முடியாது.
திரை எப்போ விலகும் என்று நமக்குத் தெரியாது.
ஆனால் கடவுளுக்குத் தெரியும், ஏனெனில் திரையைப் போட்டவரே அவர்தான்.
அவர் போட்ட திரையை அவர் எப்போது வேண்டுமானாலும்
விலக்கிக் கொள்ளட்டும்.
நாம் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம்.
நமது உடல் தான் கடவுள் நமக்கும் அவருக்கும் மத்தியில் போட்டிருக்கும் திரை.
திரை விலகிய பின் நாம் என்றென்றும் கடவுளோடு இருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment