Tuesday, August 25, 2020

"உட்புறத்தை முதலில் தூயதாக்கு: (மத்.23:26)

"உட்புறத்தை முதலில் தூயதாக்கு: 
(மத்.23:26)
 **************************************

ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது

 தான்  உணவு கொண்டு போகும் போசனக் கும்பா ( tiffin Carrier) விற்குள்

கணக்கு பாடம் பற்றிய குறிப்புகள் எழுதியிருந்த பேப்பரைப் போட்டிருந்தான்.

மறுநாள் பள்ளிக்குப் புறப்படும் போது போசனக் கும்பா உணவுடன்  ரெடியாக இருந்தது. 

அவன்  தான் அதற்குள் போட்டிருந்த பேப்பரை பற்றி மறந்து போயிருந்தான்.

பள்ளிக்கு வந்து மதிய உணவு வேளையின் போது சாப்பிடும்போதுதான் 

அவன் போட்டிருந்த பேப்பர் சோற்றோடு சோறாக கலந்து அவன் கையில் அகப்பட்டது. 

 உடனே அம்மா மேல்தான் கோபம் வந்தது, சாப்பாடு வைக்குமுன் பாத்திரத்தை தேய்த்து கழுவவில்லை என்று.

மாலையில் வீடு வந்ததும்,

"ஏம்மா, சாப்பாடு வைக்கும் முன் பாத்திரத்தைக்  கழுவும் பழக்கம் இல்லையா?"

"தேய்த்துக் கழுவினேனே. வயலுக்குப் போகிற அவசரத்தில் வெளிப்புறத்தை மட்டும் தேய்த்தேன். உட்புறத்தை நீ சாப்பிட்ட உடனே கழுவியிருப்பாயே."

" மொத்தத்தில் இன்று நான் மத்தியானம் பட்டினி."

"ஏண்டா? பாத்திரத்தில் நான் சாப்பாடு வைத்திருந்தேனே."


"சாப்பாட்டுடன் நான் வைத்திருந்த பேப்பரும் இருந்தது. பேப்பரை சாப்பிட முடியுமா?"

"ஏன்டா உனக்கு பேப்பர் வைக்க வேறு  இடம் கிடைக்கவில்லையா?  போசனக் கும்பாதான் கிடைத்ததா?"

"நீங்கள் ஏன் பாத்திரத்தின் உட்புறத்தைக் கழுவவில்லை?  அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க."

"Sorry டா. வயலுக்குப் போகிற அவசரம்."

போசனக் கும்பாவுக்கு மட்டுமல்ல எல்லா பொருள்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் உட்புறமும் வெளிப்புறமும் உண்டு.

விற்பனைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்கின்றவர்கள் அவற்றின் வெளிப்புறத்தை மிக கவர்ச்சிகரமாக வைத்திருப்பார்கள்

 வெளிப்புற கவர்ச்சிக்கும் உள்புற தரத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

 இதைவிட பெரிய கொடுமை, விளம்பரப்படுத்தப்படும் பொருள்களை விட

 விளம்பர நடிகர்கள் கவர்ச்சியாய் இருப்பார்கள்.

 மக்கள் விளம்பர நடிகர்களின் கவர்ச்சியை பார்த்து பொருள்களை வாங்கி ஏமாந்து போகிறார்கள்.

பொருள்களைப் போலவே மனிதர்களிடமும்  உள்ளும் புறமும் இருக்கிறது.

நமது உடல் எல்லோருக்கும் தெரியக்கூடிய வெளிப்புறம்.

 நமது ஆன்மா  யாராலும் ஊனக் கண்ணால் பார்க்க முடியாத உட்புறம்.

நமது உடல் அழகாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும் எல்லோருக்கும் தெரியும்.

 நமது ஆன்மா எப்படி இருந்தாலும் யாருக்கும் தெரியாது.

சிந்திப்பது ஆன்மா. சிந்தனையை மனதில் வைத்திருப்பதும் ஆன்மா.

நமது சிந்தனையை மற்றவர்களுக்கு சொல் வடிவில் வெளிப்படுத்துவதும் செயல்படுத்துவதும் உடல்.

நேசிப்பது ஆன்மா நேசத்தை சொல்லாலும் செயலாகும் வெளிப்படுத்துவது உடல். 

நமது சிந்தனை சுத்தமாக இருந்தால் சொல்லும் செயலும் சுத்தமாக இருக்கும்.

 சிந்தனையில் பாவம் இருந்தால் சொல்லிலும் செயலிலும் பாவம் இருக்கும்.

ஆன்மாவில் இறை அன்பு இருந்தால் அந்த அன்பு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்.

ஆன்மாவில் உலகப் பொருட்களின் மீது பற்று அதிகம் இருந்தால் அந்த பற்று சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்.

நமது ஆன்மா எப்படி இருக்கிறதோ அப்படியே சொல்லும் செயலும் இருக்கும்.

நமது ஆன்மாவை பாவமாசு இன்றி  சுத்தமாக வைத்திருந்தால் நம்முடைய சொல்லும் செயலும் பாவமாசின்றி இருக்கும்.

நமது உடல் மூலம் நாம் செய்யும் எல்லா பாவச் செயல்களுக்கும் ஆன்மாதான் பொறுப்பு.


நமது உடல் மூலம் நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் ஆன்மாதான் பொறுப்பு.

நமது ஆன்மீக வாழ்வு முன்னேறுகிறதா அல்லது  பின்னேறுகிறதா என்பது

 நமது ஆன்மாவில் உதிக்கும் சிந்தனையைப்  பொறுத்தே அமைகிறது.

ஆன்மீக ரீதியான சிந்தனையை தியானம் என்கிறோம்.

 ஒவ்வொரு நாளும் காலையில் நாம் தியானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து

 நமது ஆன்மீக வாழ்வின் தரம் அமைந்திருக்கும்.

 காலையில் இறைவார்த்தையைத் தியானித்து, 

அன்று முழுவதும் தியானத்தை செயலாக்க வேண்டும்.

சிந்தனையும் செயலும்  இணைவது தான் வாழ்க்கை.

Bike கிற்கு Petrol மாதிரி

ஆன்மீக வாழ்வுக்குத் தியானம்.

ஆன்மீக வாழ்வின் மிக முக்கியமான அம்சம் 

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும்  ஒத்துப்போக வேண்டும் என்பதுதான்

Our thought,.word and action must tally with one another.

ஆன்மீக வாழ்வில் நேர்மை மிக முக்கியம். நேர்மையானவன் சிந்தித்ததைச் சொல்வான் சொல்வதைச் செய்வான்.

இயேசு தனது  சிந்தனையை நற்செய்தி ஆக்கினார்.

 நற்செய்தியை வாழ்ந்து காண்பித்தார்.

 அதையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

அவர் கடிந்துகொண்டது பரிசேயருடைய வெளி வேடத்தை.


."வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!" (மத்.23: 15)


"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

வெளி வேடக்காரர்களை ஆண்டவர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பிடுகிறார்.


"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! 

ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்.

 அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன.

 உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன."
(மத்.23:27)

சாதாரணமான, இயல்பான, நடிக்க தெரியாத மனிதர்களிடம் உள்ளே இருப்பது தான் வெளியே வரும்.

ஆனால் அனேக மனிதர்கள் நடிப்பதில் வல்லவர்கள்.

உள்ளொன்றை வைத்துக்கொண்டு புறமொன்றை பேசுவதிலும்,

பேசியதைச் செய்வதுபோல் நடித்துக்கொண்டே வேறொன்றைச் செய்வதிலும் வல்லவர்கள்.

அவர்களது உள்ளத்தில் நம்மீது வெறுப்பு இருக்கும். ஆனால்   வார்த்தைகளில் தேனிருக்கும். செயலில்  விஷம் இருக்கும்.

அவர்கள் கடவுளைப் பற்றியும் கவலைப்படுவதில்லை தங்களது ஆன்மாவைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. 
நிலை வாழ்வைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

உலகத்தில் செல்வ செழிப்போடும் 
 செல்வாக்குடனும் வாழ வேண்டும், 

இன்பகரமான உலக வாழ்வுமட்டுமே அவர்களது குறிக்கோள்.

அப்படிப்பட்டவர்கள் விண்ணரசுக்குள் நுழையமுடியாது.

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

 மனிதர்களுக்கு அவர்களது உட்புறம் தெரியாமலிருக்கலாம்.

 கடவுளுக்கு அவர்களது உட்புறமும் தெரியும், வெளிப்புறமும்  தெரியும். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.

 நமது உள்  நோக்கத்தை வைத்துதான் நமது செயலின் தரத்தை அவர் மதிப்பிடுகிறார்.

விண்ணக வாழ்வுக்குள் நுழைய ஆசைப்படும் நாம் 

முதலில் நமது உட்புறத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்

 அதாவது 
,
நமது ஆன்மாவை ஆண்டவரின் அருள் வரங்களால் நிறைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

விசுவாசம், நம்பிக்கை,  இறையன்புடன் மற்ற  புண்ணியங்களாலும்  நமது ஆன்மாவை அலங்கரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.

நமது ஆன்மாவின் பரிசுத்தத் தனத்திற்கு ஏற்ப விண்ணகத்தில் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

எண்ணங்கள்  தூயதானால் .
விண்ணரசு நமதாகும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment