"அதற்கு அவர், "இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்."
(மத்.15:24)
***************************************
இறைவன் சர்வ ஞானம் உள்ளவர்.
நித்திய காலத்திலிருந்தே
தன்னால் படைக்கப்படப்போகும் மக்கள்,
தான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி
என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்
என்று அவருக்குத் தெரியும்.
மனிதனுடைய சுதந்திரத்தில் அவர் தலையிட மாட்டார்.
ஆனால் அவர்களுடைய சுதந்திரமான செயல்களைக் கருத்திற்கொண்டே
அவர் நித்திய காலமாகவே தன் திட்டங்களைத் தீட்டுகிறார்.
அவற்றை மாற்றாமல் செயல்படுத்துகிறார்.
நம்முடைய முதற் பெற்றோர் அவருடைய கட்டளைகளை மீறி பாவம் செய்வார்கள் என்று நித்திய காலத்திலிருந்தே அவருக்குத் தெரியும்.
ஆகவே தனது ஒரே மகனை உலகத்திற்கு மீட்பராக அனுப்ப நித்திய காலமாகவே திட்டமிட்டார்.
மீட்பர் மனுக்குலம் முழுவதற்கும்,
அதன் ஒரு பகுதியினருக்கு மட்டுமல்ல.
இறைமகன் மனிதனாகப் பிறக்க ஒரு இனத்தைத் தேர்ந்தெடுத்து,
தன் மனித வருகைக்காய்த் தயாரிக்கிறார். அந்த இனம் இஸ்ராயேல் இனம்.
ஆனால் அவர் பாடுபட்டு, இரத்தம் சிந்தி மரிக்கப் போவது இஸ்ராயேல் இனத்திற்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும்தான்.
அவர் மனிதனாய்ப் பிறந்தது அவரது வருகைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
இஸ்ராயேல் குலத்தில், யூதாவின் வம்சத்தில்.
அவர் பிறப்பால் யூதர், நாம் பிறப்பால் தமிழராய் இருப்பதுபோல.
ஆனால் மனிதகுலம் அனைத்திற்கும் அவர் மீட்பர்.
உலகின் கடைசி எல்கை வரை அவரது மீட்புக்கு உட்பட்டது.
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்." (மத். 28:19)
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்." (மாற்கு, 16:15)
"பாவமன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர்பெயரால் அறிவிக்கப்படும்." (லூக்.24:47)
இந்த இறைவாக்குகளிலிருந்து
இயேசு உலகெங்கும் சென்று,
எல்லா இனத்தாருக்கும்
நற்செய்தியை அறிவிக்கவே சீடர்களை அனுப்பினார் என்பது தெளிவாகிறது.
இயேசு தீர், சீதோன் நகரங்களின் பக்கம் சென்றபோது,
அங்கே வாழ்ந்த கனானேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து,
"ஆண்டவரே, தாவீதின் மகனே! என்மேல் இரக்கம்வையும். என் மகள் பேய்பிடித்துப் பெரிதும் துன்புறுகிறாள்" என்று கூவினாள்.
இயேசுவிடம் உதவிகேட்டது அவர் எந்த நகர்ப் பக்கம் சென்றாரோ அங்கு வாழ்ந்த கனானேயப் பெண்.
அவள் கூவிக்கொண்டே வந்தாலும் இயேசு ஒரு வார்த்தைகூடப் பதில்சொல்லவில்லை.
சீடர் அவரை அணுகி, "இவள் நமக்குப்பின் கத்திக் கொண்டு வருகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று வேண்டினர்.
அதற்கு இயேசு,
"இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
அவரால் படைக்கப்பட்ட மனுக்குலம்
(ஆதாம் தொடங்கி உலகம் முடிவில் வாழப்போகிற கடைசி மனிதன் வரை)
முழுவதையும் மீட்க மனிதனாகப் பிறந்த இயேசு ஏன்
"இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்?
இயேசு கூறியதன் உட்கருத்து விவிலிய அறிஞர்களின் ஆய்வுக்கு உட்பட்டது.
நான் எனது எல்கையைத் தாண்டி போகக் கூடாது.
ஆனால் கனானேயப் பெண் உதவி கேட்ட சமயத்தில் இயேசு ஏன் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்பெண்ணின் ஆழமான விசுவாச அறிக்கையை வெளிக் கொணர்வதற்காகவே அவ்வாறு சொன்னார்.
முதலில் அவள் உதவி கேட்டும் கூவிக்கொண்டே வந்தாலும் அவர்
ஒரு வார்த்தைகூடப் பதில்சொல்லவில்லை.
அவள் உதவி கேட்டு கத்துவதை விடவில்லை.
'இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்"
என்று சொன்ன பிறகும் அவள்,
அவரைப் பணிந்து, "ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்" என்றாள்.
அவர் மறுமொழியாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
இந்தப் பதில் அவளது தாழ்ச்சியை அதிகரித்தது. தாழ்ச்சிதான் எல்லா புண்ணியங்களுக்கும் முதன்மையான புண்ணியம்.
அவள் தாழ்ச்சியோடு,
"ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.
அவள் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால்.
இயேசு அவளுக்கு மறுமொழியாக,
"அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார். அந்நேரமுதல் அவள்மகள் குணமாயிருந்தாள்.
இந்நிகழ்ச்சியை இயேசுவின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.
இயேசு கடவுள். யோபுவின் இறைப்பற்றைச் சோதிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுத்த அதே கடவுள்.
அனுமதி கொடுக்கும்போதே யோபு வெற்றி பெறுவார் என்று அவருக்குத் தெரியும்.
இங்கேயும் அப்பெண்ணின் விசுவாச உறுதி இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
தெரிந்தும் ஏன் சோதித்தார்?
நமக்காக.
இயேசு நற்செய்தி அறிவித்தது அவரது காலத்தில் வாழ்ந்த மக்களுக்காக மட்டுமல்ல,
உலக முடியுமட்டும் வாழப்போகிற அனைத்து மக்களுக்காகவும்தான்.
இச்செய்தி உலகெங்கும் அறிவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்.
அதைக் கேட்கிற நமக்குப் புரிவதற்காக.
நாம் இறைவனிடம் ஏதாவது விண்ணப்பிக்கும்போது அவர் அதைக் கேளாதது மாதிரி இருப்பார்.
அவர் மௌனமாக இருக்கும்போது நமது விசுவாசம் இன்னும் ஆழமாக வேண்டும்.
இடைவிடாமல் ஆழமான விசுவாசத்தோடு செபிக்க வேண்டும்.
நாம் கேட்பது கடைசிவரை தரப்படாவிட்டால்,
நாம் தமக்கு தீங்கு தரக்கூடியதைக் கேட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு நன்மை தரக்கூடியதை மட்டும் தான் தருவார்.
நன்மை தரக்கூடியதை கட்டாயம் தருவார், உரிய நேரத்தில்,
ஒரு கற்பனைக் கதை. கருத்தை எடுத்துக் கொண்டு, கதையை மறந்து விடவேண்டும்.
ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தான்.
வீடுவீடாகச் சென்று பிச்சை எடுப்பான்.
ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று,
"இயேசுவே, தாவீதின் குமாரனே, என்மேல் இரக்கமாயிரும்." என்று சப்தமாகச் சொல்வான்.
அவனது செபத்தைக் கேட்டதும் வீட்டிலுள்ள யாராவது வந்து பிச்சை போட்டுவிட்டுப்போவார்கள்.
உடனே ஆள் வராவிட்டால் ஆள் வருமட்டும் திரும்பத் திரும்பச் சொல்வான்.
ஒருநாள் கோவிலுக்குச் சென்று,
" இயேசுவே, நான் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீர் கொஞ்சம் வசதியைக் கொடுத்தால், பிச்சை எடுப்பதை விட்டு விடுவேன்.
இயேசுவே, தாவீதின் குமாரனே, என் மேல் இரக்கமாயிரும்." என்று வேண்டினான்.
ஆனால் அதற்குப் பிறகு தான் அத்தொழில் மோசமானது.
முன்பு வீட்டின் முன் நின்று ஒரு முறை அல்லது இரு முறை சொன்ன செபத்தைப் பல முறை சொல்லவேண்டியிருந்தது.
பிச்சையின் அளவும் குறைந்தது.
ஆகவே பிச்சை எடுக்க வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை கூடியது.
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகியது.
அவன் அடிக்கடி கோவிலில் சென்று வேண்டுவான்.
இருந்தாலும் தன் செபம் எப்போதாவது கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் செபத்தைக் கைவிடவில்லை.
ஆனாலும் கோவில் சந்திப்புகளும் அதிகமாயின, வீடுகளின் எண்ணிக்கையும் கூடியது.
கடைசியாக ஒரு நாள் பெரிய பிச்சைக்காரனாகவே இறந்தான்.
மோட்சத்திற்குச் சென்றவுடன் நேரே இராயப்பரிடம் சென்றான்.
"நான் ஆண்டவரை உடனே பார்க்க வேண்டும்."
"ஒரு முறைப் பார்த்தால் போதுமா?"
"இல்லை. நான் எப்போதும் மோட்சத்தில்தான் இருப்பேன். எப்போதும் பார்ப்பேன்.
ஆனால் இப்போது ஒரு சந்தேகத்தைக் clear பண்ணுவதற்காக உடனே பார்த்துப் பேசவேண்டும்."
"அதை நானே Clear பண்ணிவிடுகிறேன்.
உன் வாழ்நாளில் நீ செய்த செப எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போயிருக்கு.
அவற்றை எல்லாம் கூட்டிப்பார்த்து, அதுக்குப் பரிசா உனக்கு இயேசு தன் பக்கத்திலேயே இடம் கொடுத்திருக்கிறார்.
மாதாவுக்கு அடுத்த இடம் உனக்குதான்."
"உண்மையாகவா? முடிவில்லாத காலம் இயேசு பக்கத்திலேயே இருப்பேனா?"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு சம்மனசுக்கள் வந்து அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள்.
இயேசுவின் பக்கம் போனவுடனே, இயேசு அவனை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு,
"நீ வாழ்நாளெல்லாம் கூப்பிட்டுக் கொண்டிருந்த தாவீதின் குமாரன் நான்தான்."
"நன்றி ஆண்டவரே."
"சரி. நல்ல பிள்ளை. போய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொள்."
நாமும் செபிப்போம். இடைவிடாமல் செபிப்போம்.
விசுவாசத்தோடு செபிப்போம்.
கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு செபிப்போம்.
நமக்கு விண்ணரசு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment