Tuesday, August 18, 2020

"ஆயக்காரரும் விலைமாதரும் . கடவுள் அரசில் செல்வார்கள்." (மத்.21:31)


"ஆயக்காரரும் விலைமாதரும் . கடவுள் அரசில் செல்வார்கள்." (மத்.21:31)
***************************************

இயேசு கூறிய ஒரு உவமையில் ஒரு தந்தைக்கு இரண்டு மக்கள்.

அவன் ஒரு நாள் ஒரு மகனை வேலைக்குப் போகச் சொன்னான்.

அவன் போகமாட்டேன் என்று சொன்னான்

ஆனால் பின்னர் மனம் வருந்தி, போனான்.

பின்

அடுத்த மகனை வேலைக்குப் போகச் சொன்னான்.

அவன் போவதாகச் சொன்னான்,
ஆனால் போகவில்லை.

இருவருள் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் ?" என்று இயேசு கேட்டார்.


போகமாட்டேன் என்று சொன்னாலும் 
மனம் வருந்தி, போனவன்தான்   தந்தையின் விருப்பப்படி நடந்தவன் என்று பதில் வந்தது.

இயேசு பதிலை ஏற்றுக் கொண்டார்.

இரட்சண்யம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தவே இயேசு இந்த உவமையை சொன்னார்.

இரட்சண்யம் பெற வேண்டுமானால் இறைவன் தந்த கட்டளைகள்படி நடக்க வேண்டும்.

சிலர் வெளிப்படையாக கட்டளைகள்படி நடப்பதாக வாக்குக் கொடுக்கின்றனர்.

சிலர் கட்டளைகள் படி நடக்க மாட்டோம் என்கிறார்கள்.

கட்டளைகளை அனுசரிப்பதாகக் கூறியவர்களை நல்லவர்கள் என்றும்
ஆகவே இரட்சண்யம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கட்டளைகளை அனுசரிக்க மாட்டோம்
என்கிறவர்கள் இரட்சண்யம் பெற மாட்டார்கள் என்றும் 
எதிர்பார்க்கிறோம்.

நாம் பார்ப்பது வெளிப்புறத்தை மட்டும் தான்.   கடவுள் உள்ளத்தைப் பார்க்கிறார்.

அனுசரிக்கிறோம் என்று வாயால் சொல்லிவிட்டு உள்ளத்தில் அனுசரியாதவர்களும் இருக்கிறார்கள்,

அனுசரிக்க மாட்டோம் என்று வாயால் சொல்லிவிட்டு, உள்ளத்தில் சொன்னதற்காக வருத்தப்பட்டு அனுசரிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

நம் சிந்தையும் செயலும் ஒன்று போல் இருக்கிறதா, ஒன்றுக்கொன்று எதிர்மாறாய் இருக்கிறதா என்று கடவுளுக்குத் தெரியும்.

கடவுள் விரும்புவது நேர்மை.

நேர்மையாக இருப்பவர்கள் கடவுள் அவர்கள் உள்ளத்திலே பதித்திருக்கிற மனசாட்சிப்படி நடப்பார்கள்.

ஆன்மீக வாழ்வில் மனசாட்சியின்படி நேர்மையாய் இருப்பவர்களுக்கு மட்டும்தான் மீட்பு.

"ஆயக்காரரும் விலைமாதரும் . கடவுள் அரசில் செல்வார்கள்."

யூதர்கள் மத்தியில் ஆயக்காரர், வரிதண்டுபவர்கள், என்றாலே பாவிகள் என்ற கருத்து இருந்தது.

மத்தேயுவும் வரி தண்டுபவர்தான். இயேசு அவரது உள்ளத்தைப் பார்த்தார்.

சுங்கத்துறையில் அமர்ந்திருந்த   அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். 

அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்சென்றார்.

அவருக்குப் பணத்தின் மேல் பற்று இருந்தால்,  'அனைத்தையும் '
விட்டு விட்டு இயேசுவைப் பின் செல்வாரா?


பின், 'மத்தேயுவின் வீட்டில் இயேசு பந்தியமர்ந்திருக்கையில்  ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

ஆனால் இயேசு, தான் பாவிகளையே அழைக்க வந்துள்ளதாகக் கூறினார்.

பாவிகளை மனம் திருப்பவே இயேசு மனிதன் ஆனார்.

நாம் ஒருவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து அவர் பாவி என்று எண்ணிக் 
கொண்டிருந்தால்

நமக்கு முன்பேயே அவர்  விண்ணகத்திற்குச் சென்று நம்மை வரவேற்பார்!  

இயேசு பாவிகளின் உள்ளத்தைத் தொடும்போது அவர்கள் மனம் திரும்புகிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் அவர்களது உள்ளத்தை பார்க்காததால் அவர்களைப் பாவிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

ஆகவே நாம் ஒருவரது வெளித்தோற்றத்தை வைத்து 

அவர் எப்படிப்பட்டவர் என்று தீர்மானிக்கக் கூடாது.

விலை மாதாய் இருந்த ஒரு பெண் மனம் திரும்பினாலும் அதை அறியாத உலகம் அவளை விலைமாது என்றே கூறுகிறது. 

ஆனால் மனம் திரும்பிய அவள் பரிசுத்தமானவள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் அவர்தான் உள்ளத்தையும் பார்க்கிறார். 

மரிய மதலேனாளை அவள் காலத்திய யூதர்கள் பெரிய பாவி என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவள் பாவங்களுக்காக வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு கேட்டாள்.

இயேசு பாவங்களை மன்னிக்க வல்ல கடவுள் என்று அவள் உறுதியாக விசுவசித்தாள்.

 இயேசு அவள் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டார்.

 அதற்குப்பின் அவள் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்.

இயேசுவுக்கு  ஊழியம்   செய்வதிலேயே தன்  மீதி நாளைச்  செலவழித்தார்.


உயிர்த்த இயேசுவை முதல்முதல் பார்க்கும் பாக்கியம் பெற்றார்.

உலகம் விலைமாது என்று எண்ணிய பெண் இன்று புனிதையாய் விண்ணுலகில் வாழ்கிறாள்.

யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ தீர்ப்புச் சொல்லும் உரிமை நமக்கு இல்லை.

இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தன் உயிரைப் பலியாக்கியது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்காக மட்டும் அல்ல,

 மனுக்குலத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்காகவும்தான்.  

 ஆகவே ஏதாவது ஒரு சாரார் நமக்கு மட்டுமே மீட்பு என்று எண்ணி கொண்டிருக்க கூடாது.

இறைவனால் மனிதராய் படைக்கப்பட்ட அனைவருக்குமே மீட்பு அடைய வாய்ப்பு உண்டு.

வாழ்நாள் முழுவதும் பாவ வாழ்க்கை வாழந்தவர்கள் கூட

 வாழ்வின் இறுதி வினாடியில் மனம் திரும்பி, 

மனம் வருந்தி, 

மன்னிப்புப் பெற்று 

விண்ணகம் செல்லலாம்.

இயேசு மரித்த அதே நாளில் மரித்த நல்ல கள்ளன் ஒரு உதாரணம்.

இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்களின் சாவுக்குக் காரணமான ஹிட்லர் கூட

 அவனது மரணத்தின் இறுதி வினாடியில் மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று விண்ணகம் சென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.
மறுக்க முடியாது.

நாம் விண்ணகம் சென்ற பிறகுதான் யார்யார் எங்கே போயிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

அதுவரை எதிர்மறையில் தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை.

எங்கே பாவங்கள் அதிகமோ அங்கு நோக்கிதான் இறைவனின் அருள் வெள்ளம் அதிகம் பாயும் என்கிறார்கள்.


"அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று."
(மத்.18:14)

நாம் எல்லோரும் மீட்பு அடைய வேண்டும் என்பதுதான் நமது விண்ணகத் தந்தையின் விருப்பம்.

ஆகவே அவர் பாவிகள் மேல் பொழியும் அருள் மழைக்குக் குறைவே இருக்காது.

பாவிகள் ஒத்துழைத்தால் எவ்வளவு பெரிய பாவமும் மன்னிக்கப்படும்.

நம்ம பையன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும்போது,

யாராவது நம்மிடம் வந்து,

"உங்க பையன் நிச்சயம் fail தான் ஆவான்."

என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருக்கும் இறைத் தந்தைக்கும் அவருடைய பிள்ளைகள் நரகத்துக்குதான் போவார்கள் என்று யாராவது சொன்னால்.

அதனால் இயேசு யாரையும் தீர்ப்பிடாதீர்கள் என்று நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்." (மத். 7:1)


 மற்றொரு முக்கியமான ஒரு உண்மையை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

 கடவுள் ஒருவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறாரோ அதன் அடிப்படையில்தான் கணக்கு கேட்பார்.

 அதிகம் பெற்றவர்கள் அதிகம் கணக்குக் கொடுக்க வேண்டும்.

 குறைவாகப் பெற்றவர்கள் குறைவாக கணக்குக் கொடுத்தால்  போதும். 

அதிகம் படித்தவர்களை விட படிக்காத பாமர மக்கள் மீட்பு அடைவது எளிது.

கடவுள் எதிர்பார்ப்பது அவர் நமக்குத் தந்ததைச் சரியாகப் பயன் படுத்த வேண்டும் என்பதைத்தான்.

நாம் உலக வழக்கில் தேர்வு வைக்கும் முறைக்கும்,

இறைவன் தேர்வு வைக்கும் முறைக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

நமது வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களில் மிகவும் கெட்டிக்காரர்கள் இருப்பார்கள்,

கெட்டிக்காரர்கள் இருப்பார்கள்,

சாதாரணமானவர்கள் இருப்பார்கள்.

Weak Studentsம் இருப்பார்கள்.

எல்லோருக்கும் ஒரே வினாத்தாள் தான் கொடுப்போம்.

விளைவு நமக்குத் தெரியும்

ஆனால் கடவுள் தேர்வு வைக்கும்போது, அவரவர் நிலைக்கு ஏற்ற வினாத்தாள் கொடுப்பார். 

Weak Students கூட 100 மார்க் எடுக்க வாய்ப்பு உண்டு.

கெட்டிக்காரர்கள் குறைவாக மார்க் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

மோட்சத்தில் அவரவர் நிலைக்கு ஏற்ப நிறைவாக இருப்போம்.

கடவுளுடைய வழிகள் அதிசயமானவை. நம்மால் கண்டுபிடிக்க முடியாதவை.

God's ways are mysterious.

அவரவர்,

 அவரவர் தகுதிக்கு ஏற்றபடி,

 மனசாட்சிக்கு விரோதமில்லாமல்,

 நேர்மையாக.,

 இறைவனின் கட்டளைகளையும், 

திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரிப்போம்.

விண்ணக அரசுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment