Thursday, July 7, 2022

" என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

" என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."
(மத்.10:22)

"தாத்தா, இயேசு தனது அப்போஸ்தலர்களை பயிற்சியின் நிமித்தம் நற்செய்தி அறிவிக்க அனுப்பிய போது அவர்களிடம் 

"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள்."
என்று சொன்னாரே.

அவர் உலகைப் படைத்து, மனுக்குலத்தையே ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வரும் 
கடவுளின் மகன்தானே.

அவருடைய பெயரை யார் வெறுப்பார்கள்?"

", ஒருவரை யார் வெறுப்பார்கள்?"

"அவருடைய விரோதி."

" , கடவுளுடைய விரோதி யார்?"

"சாத்தானாகத்தான் இருக்க வேண்டும். அவன்தானே கடவுளால் படைக்கப்பட்ட மனிதனை அவருக்கு விரோதமாக பாவம் செய்ய தூண்டியவன்."

",எதற்காக மனிதனை சாத்தான் பாவம் செய்ய தூண்டினான்?"

"மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்ட லூசிபர் என்ற சம்மனசு கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ததால் மோட்சத்தை இழந்தான்.

தான் இழந்த மோட்சத்திற்குள் மனிதன் நுழைந்துவிடக் கூடாதே என்பதற்காக அவனை பாவம் செய்ய தூண்டினான்.

பாவம் செய்த மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக கடவுளுடைய மகன் மனிதனாக பிறந்தார்.

தான் கெடுத்த மனிதரை மீட்பதற்காக கடவுளுடைய மகன் மனிதராக பிறந்ததால் சாத்தான் அவரை வெறுத்தான்.

யாரெல்லாம் சாத்தானைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் எல்லாம் 

இறைமகன் இயேசுவை  பின்பற்றுகிறவர்களை வெறுக்கிறார்கள்.

சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் இறைமகனைப் பின்பற்றுவதில்லை.

அவர்களுக்குத்தான் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியிருக்கிறது.

ஆகவே அவர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பவர்களை வெறுக்கிறார்கள்."

",உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நீ ஏன் தெரியாதவன் போல் என்னிடம் கேட்கிறாய்?"

",நீங்கள் ஆசிரியர் தானே. தேர்வின்போது உங்களுக்கு தெரிந்த விஷயத்தைத்தானே மாணவர்களிடம் கேட்கிறீர்கள்!"

".ஆசிரியர் தான் சொல்லிக் கொடுத்த பாடத்தை மாணவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறானா என்பதை பரிசோதிப்பதற்காக கேள்வி கேட்கிறார். நீ ஏன் கேட்கிறாய்?"

"நீங்கள் பணி ஓய்வு பெற்று 26 ஆண்டுகள் ஆகின்றன.

உங்களுடைய ஞாபக சக்தியை பரிசோதிக்கத்தான் நான், ஆசிரியருடைய பேரன், கேள்வி கேட்கிறேன்.

இயேசுவின் பெயரைக் குறித்து அப்போஸ்தலர்களை எல்லாரும் வெறுத்தால், 

அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

",தாங்கள் இறை மகனின் சீடர்கள் என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்."

"மகிழ்ச்சி அடைந்து?"

",தங்கள் மகிழ்ச்சியை வாழ் நாளெல்லாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது,

இறுதிவரை இறையன்பில் நிலைத்து நிற்க வேண்டும்.


இறுதிவரை இறையன்பில் நிலைத்து நிற்பவன்தான் மீட்புப் பெறுவான்."

"ஏன்?"

", மீட்பு பாவத்திலிருந்து விடுதலை பெற்று விண்ணக வாழ்வை அடைவதில் அடங்கி இருக்கிறது.

இவ்வுலகில் வாழும்போது பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட வேண்டும்.

ஆனால் இறந்தபின்புதான் விண்ணக வாழ்வை முடியும்.

ஆகவே பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நிலை நமது மரணம் வரை நீடிக்க வேண்டும்.

 மரணம் அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு சாவானபாவ நிலைக்குத் திரும்பினால் மீட்புப் பெற முடியாது.

மரணம் அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்புவரை சாவானபாவ நிலையில் இருந்தவர்கள் கடைசி வினாடியில் மனம் திரும்பி விட்டால் மீட்புப் பெறுவர்.

இறுதிநிலை மிக முக்கியம். இதுதான் மீட்பை உறுதி செய்யும் நிலை."

"இதை ஏன் இயேசு அப்போஸ்தலர்களிடம் கூறினார்?"

",அவர்கள்தானே நற்செய்தியை அறிவிக்க வேண்டியவர்கள்.

நற்செய்தியை அறிவிக்கிற அவைவருக்கும் இது பொருந்தும்.


நற்செய்தியை அறிவிக்கிறவர்களும் அதை இறுதி வரை கடைப் பிடிக்க வேண்டும்.

போதிப்பவர்கள் அனுசரிப்பதை பார்த்தே மற்றவர்கள் மனம் திரும்புவர்.

வாய்ச் சொல்லை விட செயலுக்கே சக்தி அதிகம்.

நமது சொல்லும் செயலும் ஒன்றாக இல்லா விட்டால் நம்மை யாரும் நம்ப மாட்டார்கள்."


"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள்.

 இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."

இந்த இரண்டு உண்மைகளையும் ஆண்டவர் ஒரே வசனத்தில் கூறியிருக்கிறாரே, இரண்டுக்கும் ஏதாவது உள் சம்பந்தம் (Internal relationship) உண்டா?"

", நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும், 

கிறிஸ்துவை நேசிப்பதையும் அவர் சொற்படி நடப்பதையும் நாம் இறுதிவரை கைவிடக் கூடாது.

நற்செய்தி வாழ்வில் இறுதி வரை நிலைத்து நின்றால் மீட்பு பெறுவோம்.

நாம் நற்செய்தியை வாழ்வது இயேசுவின் அன்புக்காக,

 மற்றவர்களது விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல.''

"அதாவது, எந்த சூழ்நிலையிலும் நாம் இயேசுவின் கரத்தை விட்டு விடக்கூடாது. 

ஏனெனில் அவர்தான் நமது மீட்பர்.

மீட்பு பெறுவது நமது வாழ்வின் இலட்சியம்."

", இறுதிவரை இயேசுவின் அன்பில் நிலைத்து நிற்போம், மீட்பு பெறுவோம்.''

லூர்து செல்வம்.

Wednesday, July 6, 2022

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன்." (மத்.10:16)

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன்." (மத்.10:16)

இயேசு தன்னைப் பின்பற்றிய சீடர்களிலிருந்து 12 பேரை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்.

அவர்கள்தான் அவர் நிறுவவிருக்கும் திருச்சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கப் போகின்றவர்கள்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் போகின்றவர்கள்.

அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக அவரது வாழ்நாளின் போதிலே அவர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார்.

"சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே செல்லுங்கள்.

புறவினத்தாருடைய நாட்டுக்குச் செல்லவேண்டாம். 

சமாரியருடைய ஊரில் நுழைய வேண்டாம்."

பயிற்சியாக இருப்பதால் வெளி உலகிற்கு அனுப்பாமல் இஸ்ராயேல் மக்களிடமே அனுப்புகிறார்.

பயிற்சியின் போது எந்த சூழ் நிலையையும் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால்தான்

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன். 

ஆகவே, பாம்புகளைப்போல விவேகம் உள்ளவர்களாயும்,

 புறாக்களைப்போலக் கபடற்றவர்களாயும் இருங்கள்." என்று கூறுகிறார்.

முதலில் "இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே  செல்லுங்கள்"
என்று சொன்னவர்,

"ஓநாய்களிடையே அனுப்புகிறேன்." என்று சொல்லக் காரணம் என்ன?

அவர் அளிக்கப் போவது பயிற்சி.

"இறைவனின் ஆட்டுக் குட்டியாகிய அவரே பணி புரிந்து கொண்டிருப்பது ஓநாய்களின் மத்தியில் தான்.

ஆடுகளுக்கு அவர் போதித்து கொண்டிருந்தாலும் பரிசேயர்கள், சதுசேயர்கள். மறை நூல் அறிஞர்கள், யூத மத குருக்கள் ஆகிய ஓநாய்கள் அவரை கடித்து தின்பதற்கென்று எப்போதும் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

கள்ளங் கபடில்லாத அவர் விவேகத்துடன் மூன்று ஆண்டுகள் அவர்கள் வாயில் அகப்படவில்லை.

ஆயினும் அவரை சிலுவையில் அறைந்து கொன்றவர்கள் அவர்கள்தான்.

அதே ஓநாய்கள் இஸ்ரயேலர்கள் வாழ்ந்து கொண்டிருந்த மற்ற பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆகவே அப்போஸ்தலர்கள் ஓநாய்களுக்கு மத்தியில் தான் ஆடுகளுக்கு நற்செய்தி போதிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் கபடில்லாமலும், விவேகத்துடனும்தான்  பணி  புரிய வேண்டும் என்று இயேசு அறிவுருத்துகிறார்.

திருச்சபை நிறுவப்பட்ட பின் வேத சாட்சிகளாக மரிப்பது வரை நற்செய்தி அறிவிப்பதற்காக அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமே!

முதலில் ஓநாய்களுக்கு இரையாக வேண்டியது இயேசுதான். அவரைப் பின்பற்றிதான் அப்போஸ்தலர்கள்.

இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கூறிய வார்த்தைகள் அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

வார்த்தைகள் மூலமும், வாழ்க்கை 
மூலமும் நாமும் நற்செய்தி அறிவித்து கொண்டுதான் இருக்கிறோம், மற்ற ஆடுகளுக்கு ஓநாய்கள் மத்தியில்.

நாமும் கபடில்லாமலும், விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவத்தை முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் புரிந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில்,

நாம் கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் புரிந்து கொண்டிருக்கிறோம்.

நமது திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் கபடில்லாமலும், விவேகத்துடனும் நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. எதிரிகளையும் நமது பக்கம் இழுத்து, அவர்களை மன்னித்து,
நண்பர்களாக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்.


நமது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் நம்மை வெறுப்பவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் நமது நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இதற்கு நம்மிடம் விவேகம் வேண்டும்.

யார் யாரோடு எப்படி பழக வேண்டும், அவர்களே அறியாமல் நமது கருத்துக்களை அவர்களுக்குள்ளே அனுப்ப வேண்டும் என்று நாம் அறிந்திருக்க வேண்டும்.

நமது சொல்லிலும் செயலிலும் கபடு இருக்கக் கூடாது.

நாம் நாமாகவே இருக்க வேண்டும்.

விவேகத்துடன் நடந்தால்தான் நாம் உண்மையை விட்டு மாறாமல் மற்றவர்களை உண்மையின் பக்கம் ஈர்க்க முடியும்.

கெட்டவர்களோடு சேர்ந்து நாம் கெட்டுப் போகாமல் அவர்களை நல்லவர்களாக மாற்ற விவேகம் வேண்டும்.

நம்மை அழிக்க நினைப்பவர்களை காப்பாற்ற நினைத்தால்,

அதாவது, நமக்கு தீமை செய்ய நினைப்பவர்களுக்கு நாம் நன்மை
செய்ய நினைத்தால்,

அவர்களது அழிக்கும் நினைப்பு அழிந்து விடும்.

அதையும் தாண்டி அவர்கள் நம்மை அழித்தால் நாம் இன்னொரு இயேசுவாக மாறிவிடுவோம்.

ஆண்டவரின் செம்மறியை ஓநாய்கள் கொன்று விட்டாலும்

அவற்றை மன்னித்து விட்டு தான் அவர் உயிர் துறந்தார்.

நாமும் ஓநாய்கள் மத்தியில் வாழ்ந்த ஆண்டவரின் செம்மறியைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."(மத்.10:8)

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

இயேசு 12 அப்போஸ்தலர்களை போதிக்க அனுப்பும்போது

நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும்,

 இறந்தோரை உயிர்ப்பிக்கவும் 

, தொழுநோயுற்றோரைச் சுகமாக்கவும் , 

பேய்களை ஓட்டவும்: 
அதிகாரம் அளித்ததோடு

''இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்"

என்று உத்தரவும் போட்டார்.

இறைவன் நமக்குத் தருபவை வரங்கள்.

நமது உடல், ஆன்மா உட்பட கடவுள் நமக்குத் தந்திருப்பவை அனைத்தும் நமக்கு இலவசமாய்த் தரப்பட்டவை.

கடவுள் ஒரு வியாபாரி அல்ல. அவர் நம்மை வியாபாரிகளாகப் படைக்கவில்லை.

கடவுள் தனது அன்பினால்தான் நம்மைப் படைத்தார்.

தனது அன்பினால்தான் நம்மோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

தனது அன்பினால்தான் தன்னால் படைக்கப்பட்ட உலகை நமது பயன்பாட்டுக்காக இலவசமாய்த் தந்தார்.

நமக்குள் அன்பு இருந்தால் நமக்கு இலவசமாய் கிடைத்தவற்றைத் தேவைப் படுவோராடு இலவசமாய்ப் பகிர்ந்து கொள்வோம்.

நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களோடு இலவசமாக பகிர்ந்து கொள்வோம்.

அவர்கள் நம்மிடம் இல்லாததை இலவசமாக பகிர்ந்து கொள்வார்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் இந்த இலவச பகிர்வு இருக்கும்.

அன்பு இல்லாத இடத்தில் இலவச பகிர்வு கொடுக்கல் வாங்கலாக மாறி,

கொடுக்கல் வாங்கல் வியாபாரமாக மாறி விடுகிறது.

வியாபாரத்தின் மையம் இலாபம், அன்பு அல்ல.

ஆன்மீகத்தில் வியாபாரத்திற்கு இடமில்லை.

ஆன்மீகத்தின் மையம் அன்பு.

ஆகவேதான் அன்பே உருவான இயேசு இலவசமாக பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாக கொடுங்கள் என்கிறார்.

அப்போஸ்லர்கள் தாங்கள் இயேசுவிடமிருந்து பெற்ற வரங்களாகிய 

நோய் பிணிகளைக் குணப்படுத்துதல், ,

 இறந்தோரை உயிர்ப்பித்தல், 

, தொழுநோயுற்றோரைச் சுகமாக்குதல், 

பேய்களை ஓட்டுதல்

ஆகியவற்றை  இலவசமாகவே பயன்படுத்த வேண்டும்.

இவ்வரங்களால் பயன்பெற்ற 
நபர்களிடமிருந்து எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.

பயன்பெற்றவர்கள் ஆன்மீக ரீதியாகப் பயன் அடைந்திருக்க வேண்டும்.

இயேசுவின் புதுமைகளால் சுகம் அடைந்தவர்கள் விசுவாசம், பாவ மன்னிப்பு ஆகிய வரங்களைப் பெற்றார்கள்.

அதேபோல் அப்போஸ்தலர்களால் சுகம் வருபவர்கள் ஆன்மீக ரீதியாக பயன் பெற வேண்டும்.

வேறு எந்தவிதமான பதில் உதவியும் அப்போஸ்தலர்கள் எதிர்பார்க்கக் கூடாது.

இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கூறிய புத்திமதி நமக்கும் பொருந்தும்.

நம்மிடம் புதுமைகள் செய்யும் வரம் எதுவும் இல்லாமலிருக்கலாம்.

ஆனால் நாமும் மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியாக நமது செபத்தினால் உதவிகள் செய்யலாம்.

அதற்கு உலக ரீதியான பதில் உதவி எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஆன்மீகத்தில் நாம் செய்யும் பிறர் அன்பு பணிகளுக்கான சன்மானம் விண்ணகத்தில் தான் இறைவனால் தரப்படும்.

பூவுலகில் அதை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கக் கூடாது.

யாராவது அன்பின் அடிப்படையில் நமக்கு தேவையான ஒன்றை நம்முடன் பகிர்ந்து கொண்டால் 

அது அன்பின் அடிப்படையில் தரப்படுவதால் அன்பின் அடிப்படையில் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி ஒருவர் பசியாக இருக்கும்
 போது அவருக்கு நாம் உணவு கொடுத்தால் அது இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறதோ,

அதேபோல நமக்கு பசிக்கும் போது இன்னொருவர் உணவு தந்தால் அதுவும் இயேசுவுக்கே கொடுக்கப்படுகிறது.

இந்த பகிர்வு முழுக்க முழுக்க இறை அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இறை அன்பினால் உந்தப்பட்டு நாம் எதை செய்தாலும் அதை இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்காக செய்யப்படும் எந்த நற்செயலுக்கும் இந்த உலகை சார்ந்த சன்மானம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
 
இறைவனும் அவர் தரும் நித்திய பேரின்ப வாழ்வும் மட்டுமே அதற்குரிய சன்மானம்.

நமக்காக செபிப்பதற்காக நமது இல்லம் தேடி வருபவர்களுக்கு நாம் ஏதாவது காணிக்கை கொடுக்கலாமா?

காணிக்கை கடவுளுக்கு கொடுக்கப்படுவது.

கடவுளுடைய பெயரால் தேவையில் உள்ளோர் யாருக்குக் கொடுத்தாலும் அது காணிக்கைதான்.

கடவுளுடைய பெயரால் கொடுக்கும் போது நமது நோக்கத்தில் தவறு இருக்காது.

நமது நோக்கம்தான் (intention) நமது செயலின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

செபிக்கிறவர்களும் இறையன்புடன் கூடிய பிறரன்பின் அடிப்படையில் செபிக்க வேண்டும்.

கொடுப்பதும், பெறுவதும் இறைவனுக்கு ஏற்றது, உண்மையான அன்பின் அடிப்படையில் நடைபெறும்போது.

ஆன்மீக நோக்கம் இன்றி பணத்தற்காக மட்டும் இறைவனை அடுத்த காரியங்களைச் செய்வது தவறு.

உண்மையான அன்பின் அடிப்படையில் நாம் செய்யும் எதிலும் தவறு இருக்க முடியாது.

அன்பே உருவான இறைவன் நமக்கு இலவசமாய்த் தந்தவற்றை உண்மையான அன்பின் அடிப்படையில் இலவசமாகவே பகிர்ந்து கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 4, 2022

"இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்"(மத். 5:34)

"இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்"
(மத். 5:34)

பரிசேயர்கள் தாங்கள்தான் திருச் சட்டப்படி நடப்பதாகவும், ஆகவே தாங்கள் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டதோடு,

வரி தண்டுவர்களையும், படிக்காத சாதாரண மக்களையும் பாவிகள் என்று கருதினார்கள்.

அவர்கள் கருத்துப்படி இயேசுவும் ஒரு பாவி, ஏனென்றால் அவர் பாவிகளோடு பழகுகிறார், அவர்கள் வீட்டில் சாப்பிடுகிறார்.

இயேசு பாவிகளைத் தேடி வந்த கடவுள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை கடவுளுக்கு எதிராக பேசுபவராகவே கருதினர்.

பேய்பிடித்த ஒரு ஊமையன் ஒருவனிடமிருந்து அவர்
 பேயை ஓட்ட, ஊமையன் பேசினான். மக்கட்கூட்டம் வியப்புற்று, "இப்படி ஒருகாலும் இஸ்ராயேலில் கண்டதில்லை" என்றது.

இயேசு செய்த புதுமையை புதுமை இல்லை என்று பரிசேயரகளால் கூற முடியாது.

ஆனால் , "இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்" என்று கூறினார்கள்.

மூவுலகையும் படைத்த கடவுளை பேய்களின் தலைவனின் வேலையாள் என்று கூறும் அளவுக்கு அவர்களுடைய தரம் தாழ்ந்து விட்டது.

எந்த அரசனாவது தனக்கு எதிராக செயல் புரிவானா?

இயேசு இறையரசை உலகில் நிருவ நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார்.

அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் சாத்தான்

அவன் தான் அனுப்பிய 
பேயையே விரட்ட யாருக்காவது உதவி செய்வானா?

இயேசு பேய்களின் தலைவனின் ஆளாக இருந்தால் எப்படி தன் தலைவனுக்கு எதிராக செயல்படுவார்? என்று சிந்திக்கக் கூட பரிசேயரால் முடியவில்லை.

இப்படி சிந்திக்கத் தெரியாமல் சிந்திப்பதால் பாதிக்க பட போகின்றவர்கள் சிந்திப்பவர்கள் மட்டுமே, இயேசு அல்ல.

 இயேசு எப்போதும் மனுக் குலத்தை மீட்க மனித உரு எடுத்த இறைமகன்தான்.

இன்று கூட பரிசேயத்தனமாக சிந்திக்கக் கூடிய மக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

நமது பிரிவினை சகோதார்கள்.

கையில் பைபிள் ஒன்றை வைத்துக் கொண்டு,

தாங்கள்தான் பைபிள்படியும், இயேசுவின் போதனைப்படியும் வாழ்வதாகக் கூறிக் கொண்டு,

இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையை சிலை வழிபாட்டுக் காரர்களின் கூட்டம் எனக் கூறிக் கொண்டு,

கத்தோலிக்கத் திருச்சபையின்
 (அதாவது இயேசுவின்) போதனையையும், அதன் வழிபாட்டு முறைகளையும்

குறை சொல்பிக் கொண்டே திரியும் இவர்களை,

இயேசுவைக் குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்த பரிசேயர்களுடன் ஒப்பிடுவதில் என்ன தவறு?

அவர்கள் திருச்சட்டம் பற்றியே பேசியது போல,

இவர்கள் பைபிள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

அவர்கள் திருச்சட்டத்தின் எழுத்துப்படி (letter) மட்டுமே நடந்தார்கள், கருத்துப்படி (spirit)  அல்ல.

இவர்கள் பைபிள் எழுத்துக்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுத்துக் கொண்டு, அப்படியே வாழ்கின்றார்கள்.

பைபிளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவேயில்லை. 

ஏற்றுக் கொண்டிருந்தால் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்,

கத்தோலிக்க குருக்களுக்கு ஆண்டவர் அளித்த பாவம் மன்னிப்பு அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

திருப்பலியையும், 
திவ்ய நற்கருணையையும் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

இயேசுவின் அன்னையைத் தங்கள் அன்னையாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

கத்தோலிக்க திருச்சபையை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் நம்மைப் பற்றி கூறும் கருத்துக்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இயேசுவின் சொற்படி நடப்பதும், அவரைத். திருப்திப்படுத்துவது மட்டுமே நமது பணி.

ஒருவன் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

இறைவன் மட்டுமே நமது தலைவர்.

அவருக்கு மட்டுமே ஊழியம் செய்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, July 3, 2022

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"(மத்.9:37, 38)

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.
ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"
(மத்.9:37, 38)

"தாத்தா, அறுவடையின் ஆண்டவர் 
யார்?"

",இயேசு"

"அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்றால்?"

",அவரைத் தான் மன்றாட வேண்டும்."

''யாரைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்?"

",தம் சீடர்களை நோக்கி."

"எதற்காக மன்றாடச் சொன்னார்?'

",பொடியா, வசனம் உன் கையில் இருக்கிறது. எதற்காக அதைப் பிரித்து கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறாய்?"

''உங்களுக்கு உதவி செய்யத்தான்."

'', எனக்கு உதவி செய்யவா?"

"வசனத்தை மொத்தமாக வாசித்து விட்டு விளக்குங்கள் என்று சொன்னால் பிரித்து பிரித்துதான விளக்குவீர்கள்.

பிரிக்கிற வேலையை நான் செய்கிறேன், விளக்குகின்ற வேலையை நீங்கள் செய்யுங்கள்."

", சரி, கேள்."

"ஏற்கனவே கேட்டு விட்டேன்."

",தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி மன்றாடச் சொன்னார்."

"யாருடைய அறுவடைக்கு?"

", இந்த பதிலிலேயே அந்தப் பதிலும் இருக்கிறது.

தம் அறுவடைக்கு, அதாவது இயேசுவின் அறுவடைக்கு."

" அவருடைய அறுவடைக்கு அவர் 
வேலையாட்களை அனுப்ப வேண்டியதுதானே.

ஏன் சீடர்கள் மன்றாட வேண்டும்?

",அதற்கு முந்திய வசனத்தை வாசி."

"அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்."

", அதாவது?"

"ஏராளமான மக்கள் சுகம்
 பெறுவதற்காக இயேசுவைத் தேடி வந்தவர்களின் கவனிப்பாரில்லாமல் தவித்துக் கிடந்த நிலை பார்த்து மனமிரங்கினார்."

", அவர்களைப் பார்த்து மட்டும்தானா, அல்லது?"

"அங்கே குறிப்பிடப்பட்டிருப்பது அவர்கள் மட்டும்தான்.

ஆனால் அவர்களுக்காக மட்டும் இயேசு மனிதனாக பிறக்கவில்லை.

உலகம் முடியும் மட்டும் வாழக்கூடிய அனைத்து மக்களுக்காகவும்தான் பிறந்தார்.

அப்படியானால் இயேசுவின் மனதில்    இன்று வாழும் மக்களும்  இருந்திருக்க வேண்டும்.''

", அதென்ன இருந்திருக்க வேண்டும்? இருந்தார்கள்.

அவர் போதித்த நற்செய்தியும், 
பட்ட பாடுகளும்,
 அடைந்த மரணமும் அனைத்து மக்களுக்காகவும்தான்."

"அப்படியானால் அவர் சொன்னது சீடர்களுக்கு மட்டுமல்ல.

நமக்கும்தான்'

அவர் சொன்ன வார்த்தைகளை நாமும் வாசிப்போம் என்று அவருக்கு தெரியும்.

 அன்று அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து அவர் இரங்கியது போல இன்று அவரை அறியாத அனைவர் மீதும் இரங்குகிறார். 

அவரைப் பின்பற்றி நாமும் நற்செய்தி அறியாத மக்களை பார்த்து இரங்க வேண்டும்.

இரங்கி ஆண்டவரை நோக்கி,

"இயேசுவே, உமது நற்செய்தியை அறிவிக்க இன்னும் அநேக குருக்கள் தேவை.

உமது தேவ அழைத்தலை அநேகருக்குக் கொடும்."

என்று இயேசுவை நோக்கி மன்றாட வேண்டும்."

", இயேசுவுக்கு எல்லாம் தெரியுமே, நாம் கேளாமலே குருக்களுக்கு ஏற்பாடு செய்ய மாட்டாரா?"

"திசையை மாற்றி விட்டீர்கள்?"

",எந்த திசையை?"

"நான் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொன்ன திசையை மாற்றி நான் பதில் சொல்லும்படி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்."

", Correct. பதில் சொல்லு, 

இயேசுவுக்கு எல்லாம் தெரியுமே, நாம் கேளாமலே குருக்களுக்கு ஏற்பாடு செய்ய மாட்டாரா?"

"தாத்தா, நாம் கேட்காமல்தான் நம்மைப் படைத்தார்.

நாம் கேட்காமல்தான் நமக்காக மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரணம் அடைந்தார்.

ஆனால் நாம் கேட்காமல் நம்மால் மீட்பு அடைய முடியாது.

நாம் ஒவ்வொருவரும் நமது மீட்புக்காக மன்றாட வேண்டும்.

மற்றவர்களது மீட்புக்காக மன்றாடுவது ஒரு பிறர் அன்புச் செயல்தானே.

நாம்  ஒவ்வொருவரும்  
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,
 
ஒருவர் மேல் ஒருவர் இரக்கப்பட்டு, 

ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசி,

தங்கள் மீட்புக்காக மட்டுமல்ல மற்றவர்கள் மீட்புக்காகவும் உழைப்பதன் மூலம்

தாங்கள் அன்பு நிறைந்த குடும்பத்துப் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்.

எங்க வீட்ல, தாத்தா, அப்பா ஏதாவது தின்பண்டம் வாங்கி வந்தால் எனக்கு அதிகம் தர சொல்லி என்னுடைய அண்ணன் அப்பாவிடம் சொல்லுவார்.

 அவரது சகோதர பாசத்தை நினைத்து அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

 அதேபோல்தான் நாம் மற்றவர்கள் மீட்பு பெற குருக்களை அனுப்பும்படி இயேசுவிடம் கேட்டால் அவரும் நமது சகோதர பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவார்.

 நமக்காக பாடுகள் பட்டு மரித்த ஆண்டவரது மகிழ்ச்சிக்காக

 நாம் அவர் கேட்டுக் கொண்டபடி அறுவடைக்கு அதிக ஆட்களை அனுப்பும்படி  அவரிடம் வேண்டலாமே!"

",ஆக இந்த வசனம் ஆண்டவரால் நமக்காக கூறப்பட்ட. இறைவாக்கு."

" இந்த வசனம் மட்டுமல்ல. இயேசு கூறிய அத்தனை வார்த்தைகளும் நமக்காக கூறப்பட்டவை தான்.

எல்லா நற்செய்தி நூல்களும் நமக்காக எழுதப்பட்டவைதான்,

வெறுமனே வாசிப்பதற்காக மட்டுமல்ல, வாசித்தபடி வாழ்வதற்காக.

இயேசு கேட்டுக் கொண்டபடி அறுவடைக்கு அதிக ஆட்களை 
அனுப்பும்படி அவரை வேண்டுவோம்.

நாமும் அதற்காக உழைப்போம்."

", நாம் அதற்காக உழைப்பது எப்படி?"

"நற்செய்தியை. அறியாதவர்களுக்கு நாமே அறிவிக்கலாம்.

நாமே முன்மாதிரிகையாக நற்செய்திப்படி வாழ்வதன் மூலம்
நற்செய்தியை அறிவிக்கலாம்.

நமது சிந்தனையில் நற்செய்தி இருந்தால் அது இயல்பாகவே சொல் மூலமும், செயல் மூலமும் வெளிப்படும்.

நாமும் நற்செய்திப்படி வாழ்வோம், மற்றவர்களையும் வாழவைப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, July 2, 2022

''நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்"(மத்.9:21)

''நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்"
(மத்.9:21)

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்திக்கு தான் சுகம் பெற வேண்டும் என்று ஆசை.

இயேசுவால் தன்னைக் குணமாக்க முடியும் என்று உறுதியாக விசுவசித்தாள்

இயேசு இறந்த ஒரு பெண்ணை உயிரோடு எழுப்புவதற்காக அவளுடைய தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது, 

பெரும்பாட்டினால் வருந்திய பெண்,

" நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே

.அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து,

 "மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

 அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.

இயேசு சர்வ வல்லப கடவுள்.

நினைத்தவுடன் எதையும் சாதிக்க அவரால் முடியும்.

அவர் சர்வ ஞானம் உள்ளவர்.
எல்லோருடைய உள்ளத்தில் உள்ளதும் அவருக்குத் தெரியும்.

இதை அந்த பெண் விசுவசித்தாள்.

அவள் இயேசுவிடம்,

"என்னைக் குணமாக்குங்கள், ஆண்டவரே" என்று கேட்க வில்லை.

விசுவாசத்தை தனக்குள்ளே வைத்துக் கொண்டே அவரது போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

குணம் அடைந்தாள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிடம் இருந்த விசுவாசம்,

இயேசுவைப் பற்றிய இரண்டாயிரம் ஆண்டு மனித அனுபவத்தையும் அறிந்த நம்மிடம் இருக்கிறதா?

நமக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று கேட்டு இயேசுவை நோக்கி மணிகணக்காய் செபிக்கிறோம்.

நமக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று இயேசுவுக்குத் தெரியாதா?

அவர் நமது உள்ளத்தில் உள்ளதை எல்லா அறிந்தவர் ஆயிற்றே!

அந்தப் பெண் இயேசுவின் போர்வையின் விளிம்பைத்தான் தொட்டாள்.

ஆனால் நாம் நற்கருணை வாங்கும்போது இயேசுவையே நமது நாவால் தொடுகிறோமே.

நமக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்தால் நாம் ஆசைப்படும் எதையும் இயேசுவிடம் கேட்க மாட்டோம்.

அவரை நாவால் வாங்கும்போது அவர் எவ்வளவு நல்லவர் என்று மட்டும் சுவைத்துப் பார்ப்போம்.

நமக்க வேண்டியதை அவர் பார்த்துக் கொள்வார்.

அந்தோனியார் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நவநாள் செபம் நடக்கும்.

செபத்தின்போது

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

என்ற பாட்டைப் பாடுவது வழக்கம்.

உண்மையான விசுவாசத்தோடு இப்பாட்டைப் பாடுகின்றோமா?

அல்லது வழக்கம் போல் பாடுகின்றோமா?

என்பதை சிறிது சிந்திப்போம்.

ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

13 வாரங்கள் நவநாள் செபத்திலும் கலந்து கொண்டு விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைக்க வேண்டும் மன்றாடுகிறோம்.

ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இப்போது 13 வாரங்களாக நாம் பாடிய பாட்டை நினைத்துப் பார்க்கிறோம்.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

இப்போது நமது மனதில் வெவ்வேறு வகையான எண்ணங்கள் ஓடும்.

அவற்றை எல்லாம் இரண்டே வகையில் பார்ப்போம்.

1. நம்பினேன், செபித்தேன், ஆனால் நல்லது நடக்கவில்லை.

2.நம்பினேன், செபித்தேன், நல்லது நடந்திருக்கிறது.

முதல் வகையில் நாம் வேலை கேட்டது நல்லது என்று நாம் ஏற்கனவே தீர்மானித்து விட்டோம்.

ஆனால் நாம் எதிர்பார்த்தபடி நல்லது நடக்கவில்லை.

ஆகவே நாம் பாடியது waste.


இரண்டாவது வகையில்,

அந்தோனியார் நல்லவர் என்று விசுவசிக்கின்றோம். அவர் அவரது பக்தர்களுக்கு நல்லதைத்தான் செய்வார்.

வேலை கேட்டு விண்ணப்பித்தோம்.

வேலை எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது.

வேலை கிடைக்கவில்லை.

வேலை நல்லதாக இருந்திருந்தால் அந்தோனியார் பெற்றுத் தந்திருப்பார்.

வேலை நமக்கு ஏற்றது அல்ல. ஆகவே பக்தர்களுக்கு நல்லதை மட்டும் செய்யும் அந்தோனியார் அதைப் பெற்றுத் தரவில்லை.

நாம் நம்பினோம், செபித்தோம், நல்லதுதான் நடந்திருக்கிறது.


இரண்டு வகை எண்ணங்களில் எது உண்மையான விசுவாசிக்கு ஏற்றது என்று சிந்திப்போம்.

நாம் உண்மையான விசுவாசியா, பெயரளவுக்குதான் விசுவாசியா. என்பது நமக்குப் புரியும்.

உண்மையான விசுவாசியாக இருந்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்வோம்.

பெயரளவுக்கு மட்டும் விசுவாசியாக இருந்தால் நாம்  நினைப்பது மட்டும்தான் நன்மைக்கு என்று  நம்புவோம்.
கடவுள் நினைப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.

உண்மையான விசுவாசியாக இருப்போம்.

விசுவாசத்தோடு செபிக்கும்போது எது நடந்தாலும் அது நமது நன்மைக்கே.

லூர்து செல்வம்.

Friday, July 1, 2022

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."(மத்.9:9)

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."
(மத்.9:9)

மத்தேயு என்ற ஒருவர் சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு

இயேசு அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.

இயேவைப் பின்சென்ற பின் அவர்இயேசுவின் சீடராக மாறினார் என்பது நமக்கு தெரியும்.

சீடராக மாறி எப்படியெல்லாம் இயேசுவுக்கு சேவை செய்தார் என்பதுவும் நமக்குத் தெரியும்.

ஆனால் ஆண்டவர் அழைக்கு முன் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று நமக்குத் தெரியாது.

அவர் வரி வசூலிப்பவர் என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

வரி வசூலிப்பவர் என்றால் தனது இன மக்களிடமிருந்து வரி வசூலித்து உரோமை அரசுக்குக் கொடுப்பவர்.

பரிசேயர்கள் வரி வசூலித்தவர்களைப் பாவிகளாகக் கருதினர்.

பரிசேயர்களால் பாவியாகக் கருதப் பட்ட மத்தேயுவை இயேசு அழைத்தது மட்டுமல்ல, 

அவர் வீட்டிற்குச் சாப்பிடவும் செல்கிறார்.

இயேசு பந்தியமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.

 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

பரிசேயர்கள் வரி வசூலிப்பவர்களை பாவிகள் என கருதினார்கள்.

உண்மையில் பரிசேயர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பாவிகள்.

அவர்களால் பாவிகள் என்று நினைக்கப்பட்டவர்கள் தாங்கள் பாவிகள் என்பதை மறுக்கவில்லை.

தங்களை சுகம் இல்லாதவர்கள் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் மருத்துவரை பார்த்து சுகம் பெறுவர்.

சுகம் இல்லாமலிருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மருத்துவரையும் பார்க்க மாட்டார்கள், சுகமும் பெற மாட்டார்கள்.

பாவிகள் என கருதப்பட்டு அதை ஏற்றுக் கொண்டவர்கள் தாங்கள் மனம் திரும்பி வாழ்வதற்காக இயேசுவுடனேயே சென்றார்கள்.

தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்கள் இயேசுவை கொல்வதற்கு திட்டம் போடுவதற்காகவே அவர் பின்னால் சென்றார்கள்.

இயேசு எல்லா பாவிகளையும்தான் தேடி வந்தார்.

ஆயக்காரர்கள் வீட்டில் உணவு உண்டதுபோலவே, பரிசேயர்கள் வீட்டிலும் உணவு உண்டிருக்கிறார்.

தங்கள் நிலையை ஏற்றுக் கொண்ட பாவிகள்தான் பயன் பெற்றிருக்கிறார்கள்.

மத்தேயு இயேசு தன்னை அழைத்தவுடனே

அவர் வரி வசூலிப்பதை விட்டு விட்டு எழுந்து அவரைப் பின்சென்றார்.

இப்பொழுது பக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தேவ அழைத்தல் வரும் என்ற கருத்து நிலவுகிறது.

குருமடத்தில் நிறைய படிக்க வேண்டியதிருப்பதால் படிக்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

நாம் நினைப்பது போல இயேசு நினைத்திருந்தால் வரி வசூலிப்பவரையும், மீன்பிடிப்பவர் களையும்  தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்.

இயேசு யாரைத் தேர்ந்தெடுக்க விரும்பினாரோ அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

யூதாசைக்கூட அவர்தான் தேர்ந்தெடுத்தார், தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்திருந்தும்.

பன்னிருவரும் அவரது பொதுவாழ்வு முழுவதும் அவருடன்தான் இருந்தார்கள், அவர் போதனையையெல்லாம் கேட்டார்கள்.

மூன்று ஆண்டுகள் முடிந்தபின் இன்று தேர்வு வைப்பது போல் 
பதினொருவருக்கும் ஒரு தேர்வு வைத்திருந்தால் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள்?

இயேசு மரித்த மூன்றாம் நாள் காலையில் ஒரு தேர்வு, ஒரே ஒரு கேள்வி.

இயேசு உயிர்த்து விட்டாரா?

எல்லோரும் ஒரே பதில்தான் எழுதியிருப்பார்கள்:

"தெரியாது."

மதிப்பெண்கள்: 0

நாமாக இருந்திருந்தால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியிருப்போம்.

ஆனால் இயேசு?

இயேசு உயிர்த்து விட்டதாக மதலேன்மரியாள் கூறியதை நம்பாத அப்போஸ்தலர்களின்

விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டு 

 அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.
(மாற்கு, 16:14-16)

யாராவது பரிட்சையில் fail ஆகி விட்டால் வேலை கொடுப்பார்களா?

அவர் உயிர்த்ததை நம்பாதவர்களைக் கடிந்து மட்டும் செய்து கொண்டு,

நற்செய்தி அறிவிக்கும் பெரிய பணியைக் கொடுத்தார்.

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, 

அவரது வல்லமையைப் பெற்று,

 யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்.''

பரிசுத்த ஆவி அவரது வல்லமையை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை வழி நடத்துவார்.

இப்போது மிக முக்கியமான மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

 பரிசுத்த ஆவியும், இயேசுவும் ஒரே கடவுள்தான்.

பரிசுத்த ஆவியின் வல்லமை என்றாலே அது தந்தையின் வல்லமை தான், மகனின் வல்லமையும் தான்.

 மூவருக்கும் ஒரே வல்லமை தான்

 மூவரும் அப்போஸ்தலர்களுடனும், அவர்களது வாரிசுகளுடனும் எப்போதும் கூடவே இருப்பார்கள்.

உலகம் முடியுமட்டும் இயேசுவின் சீடர்கள் எதைச் செய்தாலும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் செய்வார்கள்.

அவர்களது மறை பரப்புப் பணிக்கு வெற்றியைக் கொடுப்பது அவர்களது படிப்போ, குருமடத்தில் பெற்ற பயிற்சியோ அல்ல,

தந்தை, மகன், தூய ஆவியின் வல்லமை தான்.

அதனால்தான் இயேசு வரிதண்டுபவரையும், மீன்பிடிப்பவர்களையும், படிக்காதவர்களையும் அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இதுவரை திருச்சபையை வழி நடத்தியது, இன்னும் நடத்தப்போவது பரிசுத்த தம திரித்துவம்தான்.

இப்படி சொல்லும் போது நமது குருக்களை நாம் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை.

அவர்கள் எப்போதும் கடவுளின் கண்காணிப்பில் இருக்கிறார்கள், ஆகவே அவர்களால் வழி நடத்தப் படும்போது இறைவனால் வழிநடத்தப் படுகிறோம்,

ஆகவே அவர்களை நூற்றுக்கு நூறு நம்பி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

நமது குருக்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது நாம் மூவொரு தேவனுக்குக் கீழ்ப்படிந்து  நடக்கிறோம்,

ஏனெனில் அவர் அவர்கள் மூலமாகவே செயல்புரிகிறார்.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்து, நமது பாவங்களை மன்னிப்பது இயேசுதான்.

"இது என் சரீரம், இது என் இரத்தம்" எனக் கூறித் திருப்பலி நிறைவேற்றி, தன்னையே நமது உணவாகத் தருபவர் இயேசு தான்.

நாம் நமது குருக்களைப் பார்க்கும் போது எப்போதும் அவர்களோடு இருந்து செயல் படுகின்ற இயேசுவைப் பார்ப்போம்.

திவ்ய நற்கருணை மூலம் நமது உணவாக நம்மிடம் வருவதால் இயேசு நம்மோடும் இருக்கிறார்.

குருக்கள் நிறைவேற்றுகின்ற தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் இயேசு தனது அருள் வரங்களோடு நம்மிடம் வருகின்றார்.

கிறிஸ்துவையும், நம்மையும் இணைக்கும் பாலம் போல் குருவானவர் செயல்படுகிறார்.

பாலத்தைப் பயன்படுத்துவோம் இயேசுவோடு இணைவதற்கு.

இயேசு நம்மை நோக்கி,

"என்னைப் பின்செல்" என்றால்

துணிந்து பின்செல்வோம்.

ஏனெனில் அவர் நம்மோடுதான் இருப்பார்.
 
லூர்து செல்வம்.