Thursday, July 7, 2022

" என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

" என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."
(மத்.10:22)

"தாத்தா, இயேசு தனது அப்போஸ்தலர்களை பயிற்சியின் நிமித்தம் நற்செய்தி அறிவிக்க அனுப்பிய போது அவர்களிடம் 

"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள்."
என்று சொன்னாரே.

அவர் உலகைப் படைத்து, மனுக்குலத்தையே ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வரும் 
கடவுளின் மகன்தானே.

அவருடைய பெயரை யார் வெறுப்பார்கள்?"

", ஒருவரை யார் வெறுப்பார்கள்?"

"அவருடைய விரோதி."

" , கடவுளுடைய விரோதி யார்?"

"சாத்தானாகத்தான் இருக்க வேண்டும். அவன்தானே கடவுளால் படைக்கப்பட்ட மனிதனை அவருக்கு விரோதமாக பாவம் செய்ய தூண்டியவன்."

",எதற்காக மனிதனை சாத்தான் பாவம் செய்ய தூண்டினான்?"

"மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்ட லூசிபர் என்ற சம்மனசு கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ததால் மோட்சத்தை இழந்தான்.

தான் இழந்த மோட்சத்திற்குள் மனிதன் நுழைந்துவிடக் கூடாதே என்பதற்காக அவனை பாவம் செய்ய தூண்டினான்.

பாவம் செய்த மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக கடவுளுடைய மகன் மனிதனாக பிறந்தார்.

தான் கெடுத்த மனிதரை மீட்பதற்காக கடவுளுடைய மகன் மனிதராக பிறந்ததால் சாத்தான் அவரை வெறுத்தான்.

யாரெல்லாம் சாத்தானைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் எல்லாம் 

இறைமகன் இயேசுவை  பின்பற்றுகிறவர்களை வெறுக்கிறார்கள்.

சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் இறைமகனைப் பின்பற்றுவதில்லை.

அவர்களுக்குத்தான் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியிருக்கிறது.

ஆகவே அவர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பவர்களை வெறுக்கிறார்கள்."

",உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நீ ஏன் தெரியாதவன் போல் என்னிடம் கேட்கிறாய்?"

",நீங்கள் ஆசிரியர் தானே. தேர்வின்போது உங்களுக்கு தெரிந்த விஷயத்தைத்தானே மாணவர்களிடம் கேட்கிறீர்கள்!"

".ஆசிரியர் தான் சொல்லிக் கொடுத்த பாடத்தை மாணவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறானா என்பதை பரிசோதிப்பதற்காக கேள்வி கேட்கிறார். நீ ஏன் கேட்கிறாய்?"

"நீங்கள் பணி ஓய்வு பெற்று 26 ஆண்டுகள் ஆகின்றன.

உங்களுடைய ஞாபக சக்தியை பரிசோதிக்கத்தான் நான், ஆசிரியருடைய பேரன், கேள்வி கேட்கிறேன்.

இயேசுவின் பெயரைக் குறித்து அப்போஸ்தலர்களை எல்லாரும் வெறுத்தால், 

அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

",தாங்கள் இறை மகனின் சீடர்கள் என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்."

"மகிழ்ச்சி அடைந்து?"

",தங்கள் மகிழ்ச்சியை வாழ் நாளெல்லாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது,

இறுதிவரை இறையன்பில் நிலைத்து நிற்க வேண்டும்.


இறுதிவரை இறையன்பில் நிலைத்து நிற்பவன்தான் மீட்புப் பெறுவான்."

"ஏன்?"

", மீட்பு பாவத்திலிருந்து விடுதலை பெற்று விண்ணக வாழ்வை அடைவதில் அடங்கி இருக்கிறது.

இவ்வுலகில் வாழும்போது பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட வேண்டும்.

ஆனால் இறந்தபின்புதான் விண்ணக வாழ்வை முடியும்.

ஆகவே பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நிலை நமது மரணம் வரை நீடிக்க வேண்டும்.

 மரணம் அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு சாவானபாவ நிலைக்குத் திரும்பினால் மீட்புப் பெற முடியாது.

மரணம் அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்புவரை சாவானபாவ நிலையில் இருந்தவர்கள் கடைசி வினாடியில் மனம் திரும்பி விட்டால் மீட்புப் பெறுவர்.

இறுதிநிலை மிக முக்கியம். இதுதான் மீட்பை உறுதி செய்யும் நிலை."

"இதை ஏன் இயேசு அப்போஸ்தலர்களிடம் கூறினார்?"

",அவர்கள்தானே நற்செய்தியை அறிவிக்க வேண்டியவர்கள்.

நற்செய்தியை அறிவிக்கிற அவைவருக்கும் இது பொருந்தும்.


நற்செய்தியை அறிவிக்கிறவர்களும் அதை இறுதி வரை கடைப் பிடிக்க வேண்டும்.

போதிப்பவர்கள் அனுசரிப்பதை பார்த்தே மற்றவர்கள் மனம் திரும்புவர்.

வாய்ச் சொல்லை விட செயலுக்கே சக்தி அதிகம்.

நமது சொல்லும் செயலும் ஒன்றாக இல்லா விட்டால் நம்மை யாரும் நம்ப மாட்டார்கள்."


"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள்.

 இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."

இந்த இரண்டு உண்மைகளையும் ஆண்டவர் ஒரே வசனத்தில் கூறியிருக்கிறாரே, இரண்டுக்கும் ஏதாவது உள் சம்பந்தம் (Internal relationship) உண்டா?"

", நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும், 

கிறிஸ்துவை நேசிப்பதையும் அவர் சொற்படி நடப்பதையும் நாம் இறுதிவரை கைவிடக் கூடாது.

நற்செய்தி வாழ்வில் இறுதி வரை நிலைத்து நின்றால் மீட்பு பெறுவோம்.

நாம் நற்செய்தியை வாழ்வது இயேசுவின் அன்புக்காக,

 மற்றவர்களது விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல.''

"அதாவது, எந்த சூழ்நிலையிலும் நாம் இயேசுவின் கரத்தை விட்டு விடக்கூடாது. 

ஏனெனில் அவர்தான் நமது மீட்பர்.

மீட்பு பெறுவது நமது வாழ்வின் இலட்சியம்."

", இறுதிவரை இயேசுவின் அன்பில் நிலைத்து நிற்போம், மீட்பு பெறுவோம்.''

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment