"தாத்தா, நீங்கள் யாருக்காவது பயப்படுகிறீர்களா?"
", 'கடவுள் ஒருவருக்கே பயப்படுங்கள், வேறு யாருக்கும் பயப்பட வேண்டாம்' என்று நம் ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
நமது ஆண்டவருடைய சீடர்கள் நாம். அவர் சொற்படி தான் நாம் நடக்க வேண்டும்.
ஆகவே கடவுளுக்கு மட்டும்தான் பயப்படுகின்றேன்."
"கடவுள் நம்மீது அளவு கடந்த அன்பு உள்ளவர். அன்பு உள்ளவரைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?"
", கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு அளவு கடந்தது.
நாம் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிக்கிறோம்.
எப்போதும் கடவுளை நேசித்துக் கொண்டேயிருக்க
விரும்புகிறோம்.
இந்த நேசத்துக்கு எதிராக குறுக்கே ஏதாவது வந்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.
இந்த அச்சத்திற்கு பெயர் தான் தெய்வ பயம்."
"சொல்வதை புரியும் படியாக சொல்லுங்கள்.
இறை நேசத்துக்கு எதிராக குறுக்கே எது வரும்?"
", வாய்பாடு புரிந்தவனுக்குதான் கணக்கு புரியும்.
உறவு என்றால் என்ன என்பது புரிந்தவருக்குத்தான் உறவின் குறுக்கே வருவது என்ன என்பது புரியும்.
உறவு என்றால் என்ன என்று கூறு பார்ப்போம்.''
"இரண்டு நண்பர்களுக்கு இடையே நிலவும் அன்பைத்தான் உறவு என்கிறோம்."
",உறவு தொடர்ந்து நீடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?"
"தொடர்ந்து அன்பு செய்ய வேண்டும்."
",அன்புக்கு குறுக்காக ஏதாவது வந்தால் என்ன நிகழும்?"
"அன்புக்கு குறுக்காக ஏதாவது வந்தால் அன்பு முறியும்."
",கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.
நாம் கடவுளை அன்பு செய்கிறோம்.
கடவுளின் அன்புக்கு குறுக்காக எதுவும் வர முடியாது, ஏனெனில் கடவுள் மாறாதவர்.
நித்திய காலமாக அன்பு செய்கிறார்.
கடவுளால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
அன்பு செய்வது அவருடைய சுபாவம். (Nature)
யாருடைய அன்புக்கு குறுக்காக எதுவும் வரலாம்?"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது அன்புக்கு குறுக்காக தான் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறது."
",நமது அன்புக்கு குறுக்காக எது வந்தால் நமது அன்பு முறியும்?"
"நமது அன்புக்கு குறுக்காக பாவம்
வந்தால் நமது அன்பு முறியும்."
", அதாவது?"
" ஒளியும், இருளும் சேர்ந்து இருக்க முடியாது.
அன்பும், பாவமும் சேர்ந்து இருக்க முடியாது.
நமது அன்புக்கு குறுக்காக பாவம் நுழைந்தால் நம்மால் அன்பு செய்ய முடியாது.
நம்மால் அன்பு செய்ய முடியா விட்டால் நமது அன்பு முறிந்து விட்டது என்று அர்த்தம்."
",கடவுளால் பாவம் செய்ய முடியாது.
நம்மால்?"
"முடியும்."
",பாவம் என்றால் என்ன?"
"கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது பாவம்."
",நாம் பாவம் செய்தால் என்ன நிகழும்?"
" இறைவனோடு நமக்கு உள்ள உறவு முறியும்."
",இறைவனோடு நமக்கு உள்ள உறவு முறியக் கூடாது என்றால் நாம் என்ன செய்யக்கூடாது?"
"பாவம் செய்யக்கூடாது."
",பாவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறதா?
விருப்பமாக இருக்கிறதா?"
"பயமாக இருக்கிறது. எங்கே பாவம் செய்து இறைவனோடு உள்ள உறவை இழந்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது."
",எங்கே பாவத்தினால் இறை உறவை இழந்து விடுவோமோ என்று பயம்தான் இறை பயம்.
ஒரு ஒப்புமை சொல்கிறேன். உனது மனைவிக்கு நீ சினிமா பார்ப்பது பிடிக்காது...':
"தாத்தா, 'நான் சின்ன பையன் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது."
", Sorry. உனது அப்பாவுக்கு நீ சினிமா பார்ப்பது பிடிக்காது.
கீழ்ப்படிதலுள்ள மகன்.
நீ சினிமா பார்க்க போவாயா?"
"போக மாட்டேன்."
", ஏன்?"
"நான் சினிமா பார்க்க போனால் எனது அப்பா வருத்தப்படுவார்.
அவரை வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை.
அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை சந்தோசப்படுத்தவே விரும்புகிறேன்."
",நல்ல பையன்.
"தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன்.
இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம்நொந்து மெத்த மனஸ்தாபப் படுகிறேன்."
என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?"
"எனது பாவங்களை நினைத்து மனஸ்தாபப் படும்போதெல்லாம் சொல்லியிருக்கிறேன்."
",இப்போது சொல்லு,
தெய்வ பயம் என்றால் என்ன."
"நமது பாவத்தினால் அன்பு நிறைந்த கடவுளை எங்கே
நோகச் செய்து விடுவோமோ
என்ற பயம்தான் தெய்வ பயம்."
",தெய்வ பயத்துக்கு அடிப்படை எது?"
"கடவுள் மேல் நமக்கு இருக்கும் அன்பு.
அன்பு இல்லாதவர்கள் பாவம் செய்ய பயப்பட மாட்டார்கள்.
கடவுள் மேல் அன்பு உள்ளவர்கள் பாவம் என்றாலே பயப்படுவார்கள்.
அப்படியானால் தெய்வம் என்றால் என்ன?"
"உண்மையை சொல்வதால் இறைவன் மீது நான் கொண்டுள்ள அன்பு தான் தெய்வ பயம்,
அதாவது பாவத்தினால் இறையன்பை இழந்து விடுவோமோ என்ற பயம்.
இறைவன் மீது அன்பு இல்லாதவர்களுக்கு
அதை இழந்து விடுவோமோ என்ற பயமும் இருக்காது."
",ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள்.
உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்."
என்றால் என்ன என்று கூறு பார்ப்போம்."
"யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தால் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ முடியாதோ
அவருக்கு எதிராகப் பாவம் செய்ய அஞ்சுங்கள்.
கடவுளோடு நித்திய பேரின்பத்தில் வாழ முடியாத நிலைதான் நரக நிலை.
யாராவது ''கடவுளுக்காக வாழாதீர்கள்|
வாழ்ந்தால் கொன்று போடுவேன்'' என்று சொன்னால், அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
அவர்களால் அதிகபட்சம் நமது ஆன்மாலை விட்டு உடலை வேண்டுமானால் பிரிக்கலாம்,
நமது ஆன்மாவை ஒன்றும் செய்ய முடியாது.
ஆன்மா கடவுளின் அன்புக்கே கட்டுப்பட்டது.
அவர்கள் உலக ரீதியில் நம்மைக் கொன்றாலும்,
ஆன்மீக ரீதியில் இறைவனோடு என்றென்றும் வாழ்வோம்."
", இன்னொரு முக்கியமான ஆன்மீக உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது உடல் ஒரு சடப் பொருள். மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.
உடல் உயிரோடு இருக்கிறது என்றால் நமது ஆன்மா அதோடு இருக்கிறது என்று அர்த்தம்.
ஆன்மா உடலை விட்டு பிரிந்து விட்டால் உடல் மண்ணுக்கே திரும்பி விடும்.
நமது ஆன்மா உயிரோடு இருக்கிறது என்றால் அது இறைவனோடு அன்புறவில் இருக்கிறது என்று அர்த்தம்.
நாம் உலகில் வாழும்போது
பாவத்தின் காரணமாக அது இறைவனின் அன்புறவிலிருந்து பிரிந்து விட்டால் அதை இறந்து விட்டது என்போம்.
நாம் செய்த பாவத்திற்காக வருந்தி பாவமன்னிப்பு பெற்று விட்டால் இறந்த ஆன்மா உயிர் பெற்று விட்டது என்போம்.
பாவம் செய்யவும், மன்னிப்பு பெறவும் நாம் இவ்வுலகில் வாழும்போது மட்டுமே முடியும்.
நாம் இறக்கும் போது நமது ஆன்மா என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் தான் அதற்கு பின் என்றென்றும் இருக்கும்.
நாம் இறந்தபின் பாவம் செய்யவும் முடியாது, மன்னிப்பு பெறவும் முடியாது.
ஆகவே நாம் உயிரோடு இருக்கும்போதே நமது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு பெற்று விட வேண்டும்.
நாம் இறக்கும்போது நமது ஆன்மா இறைவனின் அன்புறவில் இருக்க வேண்டும்.
நமது ஆன்மா இறைவனின் அன்புறவில் இருப்பதுதான் முக்கியம்.
நாம் நாம் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசித்தால் நமது ஆன்மா எப்போதும் அன்புறவில் இருக்கும்.
நமது உடல் உயிரோடு இருப்பதை விட நமது ஆன்மா உயிரோடு இருப்பது தான் நமக்கு முக்கியம்.
ஆகவே எப்போதும் தெய்வ பயத்துடன், இறை உறவோடு வாழ்வோம்.
நாம் உலக ரீதியாக இறந்த பின்னும் ஆன்மீக ரீதியில் இறை உறவுடன் என்றென்றும் வாழ்வதுதான் மோட்சம்.
இறை உறவுடன் வாழ்வோம், இன்றும், என்றும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment