(மத்.13:44)
நாம் ஆயிரக் கணக்கில் செலவழித்து படிக்கிறோமே எதற்காக?
லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தானே.
லட்சக்கணக்கில் செலவழித்து ஏன் வியாபாரம் பார்க்கிறார்கள்?
கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தானே.
நிலம் ஒன்று குறைந்த விலைக்கு வியாபாரத்திற்கு வருகிறது.
அதற்குள் கோடிக்கணக்கான ரூபாய்மதிப்புள்ள புதையல் ஒன்று இருக்கிறது என்று நமக்குத் தெரியும்.
நமக்கு அந்த புதையல் மேல் ஆசை இருந்தால் நமக்கு உள்ளதை எல்லாம் விற்று அந்த நிலத்தை விலைக்கு வாங்கி விடுவோம்.
குறைந்ததை இழந்தால் நிறைய கிடைக்கும் என்றால் குறைந்ததை இழக்க தயாராக இருக்கிறது நமது மனித சுபாவம்.
இந்த நமது லௌகீக சுபாவத்தை அப்படியே ஆன்மீக மயமாக்க ஆசைப்படுகிறார் நமது ஆண்டவர்.
அதனால்தான் விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பிடுகிறார்.
குறைந்ததை இழந்தால் நிறைந்தது கிடைக்கும் என்றால்
குறைந்ததை இழக்க தயாராக இருக்கும் நாம்,
முடிவுள்ள சிற்றின்பத்தை இழந்தால் முடிவில்லாத பேரின்பம் கிடைக்கும் என்றால்,
முடிவுள்ள சிற்றின்பத்தை இழக்க ஏன் தயங்க வேண்டும்?
உலகியல் வாழ்வு நிரந்தரம் அற்றது என்று நமக்குத் தெரியும்.
ஆன்மீக வாழ்வு நிரந்தரமானது என்றும் நமக்குத் தெரியும்.
நிரந்தரமான ஆன்மீக வாழ்வை வாழ்வதற்காக, நிரந்தரம் அற்ற உலகியல் வாழ்வை இழக்க ஏன் தயங்க வேண்டும்?
நமது உடல் என்றாவது ஒரு நாள் மண்ணிற்குள் போவது உறுதி என்பது நமக்கு தெரியும்.
ஆன்மா அழியாமல் வாழக்கூடியது என்பதும் நமக்குத் தெரியும்.
தெரிந்தும் ஏன் ஆன்மீக வாழ்வுக்காக உலகை தியாகம் செய்ய தயங்குகிறோம்?
விண்ணக வாழ்வுக்காக படைக்கப்பட்ட நாம் மண்ணக வாழ்வையே விரும்பி வாழும்போது
நாம் நமக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் எல்லோரும்
மூச்சு விடுகிறோம்,
உண்கிறோம்,
குடிக்கிறோம்,
உடுத்துகிறோம்,
வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம்,
செலவழிக்கிறோம்.
இவற்றையெல்லாம் நமக்காகச் செய்தால் நாம் உலகியல் வாதிகள்.
ஆண்டவருக்காகச் செய்தால் ஆன்மீகவாதிகள்.
நமக்காக செய்யும்போது ஏதோ ஒரு சிறு இன்பம் கிடைக்கிறது.
ஆண்டவருக்காக செய்யும்போது நமக்காக நித்திய பேரின்ப வாழ்வு காத்திருக்கிறது.
ஒரே செயலை நமக்காகச் செய்யும்போது கிடைப்பது சிற்றின்பம், ஆண்டவருக்காகச் செய்யும்போது கிடைப்பது பேரின்பம்.
நமக்காக செய்யும்போது பாவம் உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது.
ஆண்டவருக்காக செய்யும்போது பாவம் பக்கத்திலேயே வராது.
நமக்காக உண்ணும்போது பெருந்தீனி (Gluttony) என்ற தலையான பாவம் நுழைய வாய்ப்பு இருக்கிறது.
ஆண்டவருக்காக உண்ணும்போது
'மட்டசனம்' என்னும் புண்ணியத்தை ஈட்ட வாய்ப்புக் கிடைக்கிறது.
அலுவலகத்தில் தங்களுக்காக மட்டும் உழைப்பவர்கள்தான் இலஞ்சம் வாங்குபவர்கள்.
இலஞ்சம் வாங்குவது பாவம்.
ஆண்டவருக்காக உழைப்பவர்கள் அந்த பாவத்தைச் செய்ய மாட்டார்கள்.
"இதோ ஆண்டவருடைய அடிமை"என்ற நம் அன்னையின் சொற்கள் நமக்கு புரிய வைக்கும் உண்மை,
ஆண்டவருடைய அடிமையாக, அவருக்காகவே வாழ்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.
பாவம் ஆன்மீக வாழ்வின் எதிரி.
கடவுளுக்காக வாழ்பவர்கள் மட்டுமே உண்மையாக ஆன்மீகவாதிகள்.
கடவுளுக்காக வாழ்பவர்கள் மட்டுமே தங்கள் ஆன்மாவின் நலனுக்காக வாழ்கின்றார்கள்.
தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் தங்களது உடலில் நலனுக்காக வாழ்கின்றார்கள்.
அழிந்து போகும் உடலுக்காக வாழ்பவர்களால் அழியாத ஆன்மாவை காப்பாற்ற முடியாது.
விண்ணரசில் நிரந்தரமாக வாழ விரும்புகிறவர்கள்
நிரந்தரமற்ற உடலியலை விட்டு விட்டு
நிரந்தரமான ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும்.
அதற்கு ஒரே வழி தங்களுக்காக வாழாமல் ஆண்டவருக்காக வாழ்வது மட்டுமே.
நிலத்தில் புதையல் மறைந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்தவன்
தனக்குள்ளதெல்லாம் விற்று விட்டு அந்நிலத்தை வாங்கிக்கொள்வதுபோல,
நாமும் நமக்குள்ளதை எல்லாம் விட்டு விட்டு இறையரசை மட்டும் தேடுவோம்.
வாழ்வோம் ஆண்டவருக்காக மட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment