Thursday, July 21, 2022

"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே."(மத்.13:22)

"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே."
(மத்.13:22)

ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே ஒரு குட்டி உரையாடல்.

", பிரசங்கம். எப்படி இருந்தது ?''

"நல்லா இருந்தது, அப்பா."

",இன்றைக்கு எதைப் பற்றி பிரசங்கம் வைத்தார்?"

"அப்பா, நாளைக்கு University Exam.. 
காலையில் எழுந்த நேரத்திலிருந்தே நான் Exam mood லதான் இருக்கிறேன்.

கோவிலுக்கு வந்தேன் உங்களோடு.

ஆனால் இருந்தது என்னோடும் என்னுடைய Exam mood டோடும் தான்."

",அப்போ திருப்பலி காணவில்லையா?"

"காண்பது வேறு, கலந்து கொள்வது வேறு.

அப்பா, மனது முழுவதும் நாளைய தேர்வைப் பற்றிய எண்ணங்களாலேயே நிறைந்திருந்தது.

முன்னால் நடப்பது கண்ணுக்குத் தெரியும். அவ்வளவுதான். மனதுக்குள் செல்லாது."

",அப்போ நீ குருவானவர் கொடுத்த பிரசங்கத்தை கேட்கவில்லை."

"காதுகள் இருந்ததால் கேட்டேன். ஆனால் கேட்டது எதுவும் மனதில் தங்க வில்லை."

",உனது மனது முள் செடிகள் நிறைந்த நிலம். அதில் விதைகள் விழுந்தாலும் பலன் இல்லை."

"புரியவில்லை."

",முள் செடிகள் நிறைந்த நிலத்தில் விதைகள் விழுந்து முளைத்தாலும் அவற்றால் வளர்ந்து பலன் தர முடியாது. 

கற்பாறை மேல் விவசாயம் செய்ய முடியுமா?"

"முடியாது. பயிர் எதுவும் வேர் ஊன்ற முடியாது.''

",முள் செடிகளும், புல்லும் நிறைந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியுமா?"

"முள் செடிகளையும், புல்லையும் அகற்றிவிட்டு நல்ல நிலமாக மாற்றினால் முடியும்."


",பங்கு சுவாமியாரை ஒரு ஆன்மீக விவசாயியாக கற்பனை செய்து கொள். விசுவாசிகளுடைய மனம் அவர் விவசாயம் செய்யும் நிலம்.

விசுவாசிகளுடைய மனம் எப்படிப் பட்டதாய் இருந்தால் அவரால் அதில் இறைவாக்கு என்ற விதையை விதைக்க முடியும்?"

"நல்ல மனதாய்."

",இறைவாக்கு விண்ணக வாழ்வுக்கு வழி காட்டக் கூடியது.

மனம் எப்படி பட்டதாய் இருந்தால் அங்கு இறைவாக்கு பயன் தரும்?"

"மனதில் விண்ணக வாழ்வுக்கு எதிரான எண்ணங்கள் இல்லாதிருந்தால்.

உலகைச் சார்ந்த கவலைகள் இல்லாதிருந்தால்.''

",உலக கவலைகள் நிறைந்த மனதைத்தான் முள் செடிகளும், புல்லும் நிறைந்த மனம் என்கிறோம்.

அப்படிப்பட்ட இடத்தில் இறைவாக்காகிய விதையை விதைத்தால் அது பலன் தராது.

 இறைவனை வழிபடவும் இறைவாக்கிற்கு செவிமடுக்கவுமே கோவிலுக்கு வருகிறோம்.

உலக கவலைகளோடு கோவிலுக்கு வந்தால் அவற்றைச்  சரிவர செய்ய முடியாது.

சாப்பிட போகும்போது பசியோடு போக வேண்டும்.

பசி இல்லாவிட்டால் சாப்பிட முடியாது.

இறைவனை வழிபடவும் இறைவாக்கைக் கேட்கவும் வரும் போது உலக கவலைகளை மனதை விட்டு அகற்றி விட்டு வர வேண்டும்.

அப்போதுதான் இறைவாக்கு நம்மில் செயல் புரியும்."

"உலகில் வாழும் நாம் எப்படி உலக கவலைகளே இல்லாமல் இருக்க முடியும்?"

", அர்த்தமற்ற பயத்தைத் தான் கவலை என்கிறோம்.

Worry means meaningless fear.

உலகத்திற்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டும் உலகில் வாழ்பவன் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவான்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் அவனை கண்காணித்துக் கொள்வார்.

இறைவனின் பாதுகாப்பில் வாழ்பவன் எதற்காகப் பயப்பட வேண்டும்?

இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அவன் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காக செய்தால் போதும்.

விளைவு இறைவன் கையில்,

நாளைக்கு தேர்வு என்கிறாய்.

ஆண்டு முழுவதும் கடமை தவறாமல் உனது பாடங்களை படித்திருந்தால் எதற்காக தேர்வைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

துறவிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே இறைவனுக்காகத் தான் வாழ்கிறோம்,

 இறைவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம், தியாகம் செய்யலாம்.

 ஆனால் எதற்காகவும் இறைவனை விட்டுக் கொடுக்கவும் கூடாது,

 தியாகம் செய்யவும் முடியாது.

ஒரு ஊர்ல ஒரு கணவனும் மனைவியும் இருந்தாங்களாம்."

"அப்பா, கதையா? நாளைத் தேர்வு."

", சரி. போய்ப் படி. தேர்வு முடிந்த பின் கதையைச் சொல்லிக் கொள்கிறேன்."

".பரவாயில்லை. சொல்லுங்கள் , கதை முடிந்தவுடன் பாடத்தை படித்துக் கொள்கிறேன்."

"முதல் திருமண நாளன்று (First wedding anniversary) ஒருவர்க்கொருவர் பரிசுகள் வாங்க தீர்மானித்தார்கள்.

கணவன் கையில் இருந்த கைக் கடிகாரத்திற்கு Gold strap வாங்க மனைவி தீர்மானித்தாள்.

மனைவியின் தலைமுடியில் மாட்ட
தங்கச் சடை மாட்டி வாங்க கணவன்  தீர்மானித்தான். 

தீர்மானித்தபடி வாங்கியும் விட்டார்கள்.

திருமண நாளன்று காலையில் மனைவி கணவனைப் பார்த்து கையை காண்பியுங்கள் என்றாள்.

காண்பித்தான்.

ஆனால் கையில் கடிகாரம் இல்லை.

"கடிகாரத்தை எங்கே?"

"அதை விற்று தான் உனது தலைக்கு சடைமாட்டி வாங்கினேன்."

"நான் எனது தலைமுடியை விற்று தான் உங்களது கடிகாரத்திற்கு gold strap. வாங்கினேன்."

ஆக இருவர் வாங்கிய பரிசுகளும் இருவருக்குமே பயன்படவில்லை.

 இந்த கதையை உன்னிடம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்பது புரிகிறதா?''

" மனைவி அழகாய்ப் பார்க்க விரும்பிய கடிகாரத்தை கணவன் விற்று விட்டான்.

 கணவன் அழகாய்ப் பார்க்க விரும்பிய சடையை மனைவி விற்று விட்டாள்.

கடவுள் அழகாய் பார்க்க விரும்பும் ஞாயிற்றுக்கிழமையை நான் விற்றுவிடக் கூடாது.

சரியா?"

", Super சரி."

"சரி. ஞாயிற்றுக்கிழமை இறைவனுக்கான நாள். அதை அவருக்காகவே பயன்படுத்தப் போகிறேன்.

என்னுடைய தேர்வை அவர் பார்த்துக் கொள்வார்."

",இறைவனுக்குரியதை இறைவனுக்கே கொடுக்கும் மனதில்தான் இறைவாக்கு வேலை செய்யும்.

நாம் உலகில் வாழ்வதே இறைவனுக்காகத்தான்.

ஆகவே நமது வாழ்வின் அனைத்து கடமைகளையும் அவரது மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

அவர் தரும் அவரது வாக்கு  இதற்கு வேண்டிய அருள் வரங்களை நமக்குப் பெற்று தரும்.

இறைவாக்குப்படி நாம் வாழ்ந்தால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் இறைவனைச் சார்ந்ததாகவே இருக்கும்.

நமது வாழ்வே இறைவனை நோக்கி நாம் சொல்லும் செபமாக மாறிவிடும்.

உலக கவலைகளை நீக்குவோம்.

உன்னத தேவனுக்காக வாழ்வோம்.

இறைவாக்கு நம்மை நிலை வாழ்வை நோக்கி வழி நடத்தும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment