Sunday, July 10, 2022

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"தாத்தா, நேரத்துக்கும், தூரத்துக்கும் அளவுகோல்கள் இருக்கின்றன.

அன்புக்கு அளவுகோல் இருக்கிறதா?"

", ஏன் இந்த திடீர் சந்தேகம்?"

"தாத்தா, கடவுளுடைய அன்புக்கு அளவு இல்லை. ஆகவே நம்மால் அதை அளக்க முடியாது.

ஆனால் நாம் அளவு உள்ளவர்கள்.

 சிலரை குறைவாக அன்பு செய்கிறோம்.

 சிலரை அதிகமாக அன்பு செய்கிறோம்.

 சிலரை மிக அதிகமாக அன்பு செய்கிறோம்.

 கடவுளை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்கிறோம்.

அளவுள்ள நமது அன்பை அளப்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?"

",நீ  உனது அப்பாவை அதிகமாக அன்பு செய்கிறாயா?

 அல்லது,

 அம்மாவை அதிகமாக அன்பு செய்கிறாயா?"

"என்னை வம்பில் மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.

நான் இருவரையுமே அதிகமாக அன்பு செய்கிறேன்."

",இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். 

உனக்கு தகவலும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறது.

 நீ யாரை முதலில் பார்க்கப் போவாய்?''

"அது பிரச்சனையைப் பொறுத்தது."

",ஒரே மாதிரியான பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம்."

"அம்மாவைத்தான் முதலில் பார்க்கப் போவேன். அப்பாவை விட அம்மாவுக்குதான் அதிக உதவி தேவைப்படும்.

உடனே அப்பாவை விட அம்மாவைத்தான் அதிகம் நேசிக்கிறேன் என்று சொல்லி விடாதீர்கள். இருவரையும் நேசிக்கிறேன்."

", நீ கடவுளை அதிகம் நேசிக்கிறாயா அல்லது உன்னுடைய பெற்றோரை அதிகம் நேசிக்கிறாயா?"

"தாத்தா, அன்பை அளக்க அளவுகோல் இல்லை என்று நான் முதலிலேயே கூறிவிட்டேன்.

ஆனாலும் கடவுளைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும்."

",அளவுகோல்தான் இல்லையே. எப்படி அதிகம் என்று கண்டுபிடிப்பாய்?"

"தாத்தா, சில பதில்கள் பிரச்சனைகள் வரும்போதுதான் தெரியும். 

ஆனால் கடவுளை பொறுத்த மட்டில் அவரைத்தான் மற்றவர்களை விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

இது அவருடைய கட்டளை.

படைத்தவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டியது படைக்கப்பட்ட நமது கடமை.

ஆகவே நான் என்னுடைய பெற்றோரை விட கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறேன்."

", ஞானோபதேச வகுப்பில் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போல் சொல்கிறாயா?

உண்மையிலேயே உணர்ந்து சொல்கிறாயா?"

"உணர்ந்துதான் சொல்கிறேன்."

", கடவுளை நேசிப்பவன் ஞாயிற்றுக்கிழமை காலையில் திவ்ய பலி பூசைக்கு செல்ல வேண்டும். இது அவருடைய திருச்சபையின் கட்டளை.

நீ பூசைக்கு புறப்பட்டு கொண்டிருக்கும் போது உனது அப்பா மயங்கி விழுந்து விட்டார்.

 நீ திருச்சபையின் கட்டளைப் படி பூசைக்குப் போவாயா?

அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாயா?"

"தாத்தா, நீ உனது அயலானுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்கிறாய் என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

 நான் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது நான் கடவுளுக்குதான் சேவை செய்கிறேன்.

 ஆகவே இந்த சூழ்நிலையில் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன்.

அது தான் கடவுளின் விருப்பம்." 

",அப்படியானால், என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."

என்ற இயேசுவின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

''தாத்தா, ஒருவன் அவனுடைய நண்பனிடம் 10 ரூபாய் உதவியாக கேட்டானாம்.

அவன் கேட்டவனுடைய பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுத்து அவனிடமே கொடுத்து விட்டானாம்.

உங்கள் கதை அப்படித்தான் இருக்கிறது.

சந்தேகம் கேட்க வந்தது நான்.

என்னிடமிருந்தே பதிலைப் பிடுங்குகிறீர்கள்."

", ஆசிரியருடைய வேலையே அதுதானே.

Education என்ற ஆங்கில வார்த்தையின் Latin root 'Educere'.
Lead out.

மாணவனின் உள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளியே கொண்டு வருபவர்தான் ஆசிரியர்.

உனது சந்தேகத்திற்கு பதில் உன்னிடமே இருக்கிறது.

அதைத்தான் வெளியே கொண்டு வருகிறேன்.

இப்போ பதில் சொல்லு.


", என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."

என்ற இயேசுவின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

"தாத்தா, 'தந்தையும், தாயும் நம்மை பெறுவதற்கு முன்பே நித்திய காலமாக நம்மை தன்னுடைய மனதில் சுமந்து கொண்டிருப்பவர் நம்மை படைத்த இறைவன்.

யார் வயிற்றிலிருந்து நாம் பிறக்க வேண்டும் என்பதை திட்டமிட்டவர் அவர்தான்.

உண்மையில் நம்மைப் படைத்து பெற்றவர் அவர்தான்.

நாம் பெற்றோர் என்று அழைப்பவர்கள் அவர் பயன்படுத்திய கருவிகளே.
(Instruments)

நாம் அதிகமாக  நேசிக்க வேண்டியது நம்மை படைத்த கடவுளையே.

தாத்தா, வள வள என்று விளக்குவதற்குப் பதில் ஒரு ஒப்புமை சொல்கிறேன்,

புரிந்து கொள்வது எளிது.

உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது.

எனது வீடு பாவூர்ச் சத்திரத்தில் இருக்கிறது.

ஒரு மாதம் உங்கள் வீட்டில் தங்கியிருந்தேன்.

வீட்டுக்கு வர கையில் காசில்லை.

நீங்கள் ஒரு பேருந்தில் ticket book செய்து என்னை அனுப்பி வைத்தீர்கள்.

அனுப்பியது நீங்கள். நான் வந்தது 
பேருந்தில்.

இப்போ நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும், உங்களுக்கா, பேருந்துக்கா?"

", அனுப்பியது நான். பேருந்து கருவி மட்டுமே. அனுப்பிய எனக்குதான் நன்றி சொல்ல வேண்டும்."

"கரெக்ட். என்னை அன்பு என்ற பண்போடு படைத்து, பெற்றோர் என்ற கருவி மூலம் உலகிற்கு அனுப்பி வைத்தவர் கடவுள்.

அவர் தந்த அன்பு என்ற பண்புடன் அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமா, கருவியாக மட்டும் செயல்பட்ட பெற்றோரை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமா?"

", கடவுளைத்தான் அதிகமாக அன்பு செய்ய வேண்டும்."

"கடவுள் பெற்றோரையும் அன்பு செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

 அந்த கட்டளைக்கு இணங்க அவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.

 ஆனாலும் இறைவனைத்தான் அதிகமாக அன்பு செய்ய வேண்டும்."

",கடவுளை கண்ணால் பார்த்திருக்கிறாயா?"

" உலகில் வாழும்போது கடவுளை கண்ணால் பார்க்க முடியாது."

",பார்க்க முடியாத கடவுளை எப்படி அன்பு செய்வாய்?"

"அன்பு செய்ய கண்ணால் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்பு செய்ய வேண்டியது ஆன்மாவின் வேலை. நமது ஆன்மாவையே நமது கண்களால் பார்க்க முடியாது.

ஆனாலும் அன்பினால் நாம் செய்யும் செயல்களை கண்ணால் பார்க்க முடியும்."

", செயல்களை என்றால்? பார்க்க முடியாத கடவுளிடம் என்ன செய்வாய்?"

"அதற்காகத்தான் கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்ற கட்டளையோடு

 நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்திருக்கிறார்.

இறைவன் மேல் நாம் கொண்டுள்ள அன்பு பிறர் அன்பு செயல்களில் வெளிப்பட வேண்டும்.

கடவுளை நேசிக்கும் நாம் நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

கடவுளை நேசிக்காதவனால் பிறனை நேசிக்க முடியாது.

பிறனை நேசிக்காதவனால் கடவுளை நேசிக்க முடியாது.

  இறையன்பும், பிறரன்பும் பிரிக்க. முடியாதவை.

கடவுளை நேசிப்பவன் கட்டாயம் பிறனையும் நேசிப்பா ன்.

பிறனை நேசிப்பவன் கட்டாயம் கடவுளை நேசிப்பான்."

",கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் பிறனை நேசிக்கின்றார்களே!"

"தாத்தா, 
பள்ளிக்கூடத்தில் சேர்ந்து,
 பாடங்கள் படித்து,
 தேர்வு எழுதி 
வெற்றி பெற்றவர்களுக்கு 
அரசு சான்றிதழ் கொடுக்கிறது..

 அதை வைத்து வேலைக்கு விண்ணம்பிக்கலாம்.

பள்ளிக்கூடத்திற்கு போகாமல் நீங்கள் எத்தனை புத்தகங்களை படித்திருந்தாலும் நீங்கள் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாது.


பள்ளிக்கூடத்தில் திருக்குறளை படித்து அதற்கான தேர்வில் வெற்றி பெற்றால் திருக்குறள் போதிக்கும் ஆசிரியராக வேலை செய்யலாம்.

ஆனால் அந்த திருக்குறளை எழுதிய வள்ளுவரால் அவரது குறளை விளக்கும் வேலைக்குப் போக முடியாது,

 ஏனென்றால் அவர் பள்ளிக்கூடம் போகவில்லை.

அதுபோல, கடவுள் நம்பிக்கை உள்ளவன் செய்யும் அன்புக்கு தான் விண்ணகத்தில் பலன் உண்டு.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் 
செய்யும் அன்புக்கு விண்ணகத்தில் பலன் இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர் எந்த நோக்கத்தோடு அன்பைப் பகிர்ந்து கொண்டாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

இறைவன் பகிர்ந்து கொண்ட அன்பை தங்களது சொந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினால் அது எப்படி இறைவன் முன் பலன் உள்ளதாக இருக்கும்?"

",கடவுள் எந்த நோக்கோடு தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்?"

"தாத்தா, அன்பே உருவானவர் கடவுள்.

நித்திய காலத்திலிருந்தே தன்னைத் தானேயும், நம்மையும் அளவில்லாத விதமாய் அன்பு செய்து கொண்டிருப்பவர்.

அவரை அன்பு செய்வதற்கும்,

 நம்மை நாமே அன்பு செய்வதற்கும்,

நம்மை நாமே அன்பு செய்வதுபோல நமது பிறனையும் அன்பு செய்வதற்கும்

நம்மைப் படைத்தார்.

நன்றாகக் கவனியுங்கள்,

கடவுள் தான் படைத்த மனிதரோடு தனது அன்பை பகிர்ந்து கொண்டதின் நோக்கம்,

எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்பு செய்வது,

நம்மை நாமே அன்பு செய்வது போல நமது பிறனையும் அன்பு செய்வது.

அதாவது,

அவரையும், அவருக்காக அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்வது.

 நமக்கு கடவுள் மீது இருக்க வேண்டிய அன்பையும், பிறன் மீது இருக்க வேண்டிய அன்பையும் பிரிக்க முடியாது.

கடவுள் மீது அன்பு இருக்க வேண்டுமென்றால் முதலில் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிறன் மீது அன்பு இருக்க வேண்டும் என்றால் பிறன் அவரால் படைக்கப்பட்ட நமது சகோதரன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளுக்காகவும், அவரது மகிமைக்காகவுமே நமது அன்பை பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ன செய்தாலும் அதற்கு ஆன்மீக பயன் ஒன்றும் இல்லை."

", கரெக்ட். எதை செய்தாலும் கடவுளுக்காகவே செய்கின்றவர்கள் கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கடவுளுக்காகவே தங்கள் பெற்றோரையும், பிள்ளைகளையும், மற்றவர்களையும் நேசிப்பவர்கள் கடவுளையே அதிகமாக நேசிக்கிறார்கள்.

கடவுளையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பவர்களே அவருக்கு ஏற்றவர்கள்.

நாம் கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

கடவுளையும், அவரது மகிமைக்காக நமது அயலானையும் நேசிப்போம்.

நிலையான பேரின்ப வாழ்வை பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment